நெல்லையில் பார்க்க வேண்டிய முக்கிய கோயில்கள்.....

இந்தியாவின் பழமையான நகரங்களில் திருநெல்வேலி மாவட்டமும் ஒன்றாகும்.
நெல்லையில் பார்க்க வேண்டிய முக்கிய கோயில்கள்.....

இந்தியாவின் பழமையான நகரங்களில் திருநெல்வேலி மாவட்டமும் ஒன்றாகும். இது தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆற்காடு நவாப் மற்றும் நாயக்கர்கள் காலத்தில் இது முக்கிய வர்த்தக நகரமாக இருந்தது. அவர்கள் திருநெல்வேலியை நெல்லைச் சீமை என்றே அழைத்தனர். திருநெல்வேலி அல்வா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எனவே, இதை அல்வா நகரம் என்றும் அழைக்கப்பட்டது. இவ்வாறு, பல பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது நெல்லை மாநகரம்.

நெல்லை என்று எடுத்துக்கொண்டால் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில், நாம் தரிசிக்க வேண்டிய முக்கிய கோயில்கள்...

• திருநெல்வேலி என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலாகும். இந்தக் கோயில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள தெப்பகுளம், இசைத்தூண்கள், ஆயிரங்கால் மண்டபம் ஆகியவை பார்க்ககூடியனவாகும். இந்தக் கோயிலில் 2 கோபுரங்கள் உள்ளன. இந்தக் கோபுரங்கள் ஆகமவிதிப்படி ராமபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. கோயிலின் மத்தியில் அழகான நந்தவனம் அமைக்கப்பட்டு, அதன் நடுவில் நூறு துண்களுடன் கூடிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட பெரியதாக உள்ளதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.  

• நெல்லையில் இருந்து 54 கி.மீ தொலைவில் உள்ளது சங்கரன் கோயில். சிவன் பெரிதா விஷ்ணு பெரிதா என்ற சர்ச்சை எழுந்த போது பார்வதி தேவிக்கு ஒருவித குழப்பம் உண்டாயிற்று. ஒருபக்கம் அண்ணன், மறுபக்கம் கணவர் இதில் யார் பெரியவர் என்று அறியும் பொருட்டு ஈசனை நோக்கி அன்னை ஒற்றைக் காலில் தவம் இருந்தாள். பின்பு, அன்னையின் சந்தேகம் நீக்க சிவனும் நானே, விஷ்ணுவும் நானே என்று காட்சி தந்தர். மிகவும் சிறப்பு வாய்ந்த ஆடித்தபசு திருநாளில் இறைவன் மாலையில் சங்கர நாராயணனாகவும், இரவில் சங்கர லிங்கமாகவும் காட்சி தருகிறார்.

• இங்குள்ள கோமதியம்மன் தலத்தில் தரப்படும் புற்றுமண்ணை நாள்தோறும் பூசி அணிபவருக்கு குன்ம நோய், வயிற்றுவலி முதலியன தீர்கின்றன என்பது மக்களின் நம்பிக்கை.

• நெல்லையில் இருந்து 12 கி.மீ தொலைவில் கிருஷ்ணாபுரம் கிராமம். இங்குள்ள வெங்கடாச்சலபதி கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இக்கோயிலில் உள்ள சிற்பங்கள், சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

• திருநெல்வேலி புது பஸ் ஸ்டான்ட் செல்லும் வழியில் உள்ள அருள்மிகு பேராத்துச்செல்வி கோயில், வண்ணார்பேட்டை. இங்கு அம்மன் ஆற்றில் கிடைத்தது சிறப்பு.

• அருள்மிகு தீப்பாச்சியம்மன் கோயில். பாளையங்கோட்டை ரோட்டில் வண்ணார்பேட்டை பஸ்ஸ்டாப் அருகில். அம்மன் கண்ணகி அம்சமாக உள்ள கோயில்.

• அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் கோயில், பிட்டாபுரம். திருநெல்வேலி வடக்குரத வீதியும், மேல ரதவீதியும் சந்திக்கும் தெருவில் இக்கோயில் உள்ளது. ஆறடி உயரத்தில் நான்கடி அகலத்தில் அம்மன் காட்சி தருவது சிறப்பு.

• திருநெல்வேலியிலிருந்து திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் 5 கி.மீ தூரத்தில் உள்ளது சங்காணி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் பெருமாளின் வலது கரத்தில் தன ஆகார்ஷன ரேகை இருப்பது சிறப்பு.

• அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயில், பாளையங்கோட்டை. இக்கோயில் தமிழக சிற்பக்கலை பாணியுடன், மதுரா கிருஷ்ணர் கோயில் பாணியும் இணைந்து காணப்படும்.

• திருநெல்வேலி, அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில். மூலவர் வீரராகவர் முன்புறம் அஞ்சலி ஹஸ்த கோலத்தில் ஆஞ்சநேயர் சிறப்பு.

• நெல்லை பைபாஸ் ரோட்டில் மேகலிங்கபுரம் அருகே உள்ளது அருள்மிகு உச்சிஷ்ட கணபதி கோயில். ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது.

• மேலமாட வீதியில் அமைந்துள்ளது அருள்மிகு நரசிங்கப்பெருமாள் கோயில். தனது இடது மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை பெருமாள் இடது கையால் அரவணைத்தபடி இருக்கும் லட்சுமி நரசிம்மரை பல இடங்களில் பார்த்திருக்கலாம். ஆனால், இங்குப் பெருமாளின் இடது மடியில் அமர்ந்த மகாலட்சுமி பெருமாளின் தோளில் கைபோட்டபடி இருக்கும் காட்சி இக்கோயிலின் சிறப்பு.

• நவ திருப்பதிகள் - நெல்லை

1. அருள்மிகு கள்ளர்பிரான் ஸ்வாமி திருக்கோயில் (ஸ்ரீ வைகுண்டம்) 2. அருள்மிகு ஸ்ரீ பூமிபாலப் பெருமாள் திருக்கோயில் (திருப்புளியங்குடி) 3. அருள்மிகு வைத்தமாநிதிப் பெருமாள் திருக்கோயில் (திருக்கோளூர்) 4. அருள்மிகு வேங்கடவாணன் திருக்கோயில் (திருக்குளந்தை) 5. அருள்மிகு தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி) 6. அருள்மிகு ஆதிநாதப் பெருமாள் திருக்கோயில் (ஆழ்வார் திருநகரி) 7. அருள்மிகு செந்தாமரைக் கண்ணன் திருக்கோயில் (இரட்டை திருப்பதி) 8. அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில் (தென் திருப்பேரை) 9. அருள்மிகு ஸ்ரீ வெற்றிருக்கைப் பெருமாள் திருக்கோயில் (ஸ்ரீவரகுணமங்கை - நத்தம்)

• நவ கயிலாயங்கள் - நெல்லை

1.அருள்மிகு அம்மைநாதர் திருக்கோயில் (சேரன்மகா தேவி) 2. அருள்மிகு பாபநாச ஸ்வாமி திருக்கோயில் (பாபநாசம்) 3 .அருள்மிகு கைலாசநாசர் திருக்கோயில் (கோடகநல்லூர்) 4. அருள்மிகு கைலாசநாசர் திருக்கோயில் (கீழ்த் திருவேங்கடநாதபுரம்) 5. அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் (முறப்பநாடு) 6. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (தென் திருப்பேரை) 7. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (ஸ்ரீ வைகுண்டம்) 8. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (சேர்ந்த பூ மங்கலம்) 9. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (ராஜபதி)

இங்குள்ள ஒவ்வொரு கோயில்களிலும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நெல்லைக்குச் சுற்றுலா செல்லும் ஆன்மிக பக்தர்கள் இந்தக் கோயில்களை பார்க்கத் தவறாதீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com