பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?

ஜோதிடத்தின் அறிவியலைப் புரிந்துகொள்ளும்முன், ஜோதிடத்தின் தற்போதை நிலை குறித்தும்....
பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?

ஜோதிடத்தின் அறிவியலைப் புரிந்துகொள்ளும்முன், ஜோதிடத்தின் தற்போதை நிலை குறித்தும், ஒரு ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடர் சொல்லும் பலன்கள் சரியா என்பது குறித்தும் நமக்குள் எழும் சில ஐயப்பாடுகள் முதலில் களையப்பட வேண்டும் என்று முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். வாருங்கள் தொடர்ந்து பார்ப்போம்.

பிறந்த நேரம்

இன்றைய நவீன உலகில், ஒரு குழந்தையை எந்த நாளில் எந்த நேரத்தில் வெளியே எடுத்தால் அந்தக் குழந்தையின் வாழ்வு சிறப்பாக அமையும் என்ற அளவில், காலத்தை முன்பே தீர்மானித்து சுகப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்புள்ள குழந்தையைக்கூட அறுவைச் சிகிச்சை (சிசேரியன்) மூலம் வெளியே எடுத்துவிடுகின்றனர். அந்த அளவுக்கு, ஜோதிடத்தில் உள்ள விஞ்ஞானத்தை மக்கள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

ஆனால், அரை நூற்றாண்டுகளுக்கு முன், தோராயமாகக் குறிக்கப்பட்ட பிறந்த நேரத்தை வைத்து, ஒரு ஜோதிடர் தன் திறமையின் அடிப்படையில் கணித்துக் கொடுத்த ஜாதகத்தைக் கொண்டுதான் எதிர்காலப் பலன்கள் பார்க்கப்பட்டன. அதில், கால நிர்ணயத்திலும் ஜோதிடரின் கணிப்பிலும் பிழைகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் இன்று, நிமிட துல்லியமாக கணினி முறையில் ஒரு ஜாதகத்தின் முழுக் கணிதத்தையும் உடனடியாக எடுத்துவைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

ஒருகாலத்தில் அரசகுடிப் பிறப்புகள், பெரிய மனிதர்கள் போன்றவர்களுக்குத்தான் ஜாதகம் கணிப்பது என்பது இருந்து வந்தது. சுமார் கடந்த அறுபது, எழுபது ஆண்டுகளாகத்தான் சாதாரண மனிதர்களுக்கும் ஜாதகம் கணிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

*

மனிதனுக்கும் ராசி மண்டலத்துக்கும் உள்ள தொடர்பை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். ஜோதிடத்தில் சஷ்டியாம்சம் என்ற ஒரு பிரிவு உள்ளது. இது ஒரு ராசியை 60 ஆகப் பிரிக்கிறது. அதாவது,

1 ராசி = 120 நிமிடம்

2 நிமிடம் = 1 சஷ்டியாம்சம்

ஆக, ஒரு ராசி என்பது 60 சஷ்டியாம்சம் கொண்டது. இதை வைத்துப் பார்க்கும்போது, 2 நிமிட வித்தியாசத்தில்கூட ஒரு மனிதனுடைய ஜாதகக் கணிப்பில் தவறு நேர்ந்து, எதிர்கால வாழ்வில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய அளவுக்கு ஜோதிடத்தில் கணிதத் துல்லியம் இருக்கிறது.

இந்த அளவுக்கு கணிதத் துல்லியம் இருக்கும் நிலையில், மனித சுவாசத்துக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள தொடர்பு, சஷ்டியாம்சத்தைவிட விநாடி துல்லியத்தைக் கொண்டதாக இருக்கிறது.

பஞ்ச பூதங்கள் என நாம் குறிப்பிடுவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும்தான். இதில், நிலம் (ப்ருத்வி) - 75 கலை அளவு நீளம் கொண்டது. நீர் (அப்பு) - 60 கலை அளவும், நெருப்பு (தேயு) – 45 கலை அளவும், காற்று - 30 கலை அளவும், ஆகாயம் – 15 கலை அளவும் கொண்டவை.

பஞ்ச பூதங்களின் முழுச் சுற்று (ஒரு முழு வட்டம்) என்பது, 75 + 60 + 45 + 30 + 15 = 225 கலை அளவு.

ஒரு ராசி என்பது 30 பாகைகளும் 60 கலைகளும் கொண்டது என்று ஏற்கெனவே பார்த்தோம். ஆக, ஒரு ராசியில் 1800 கலை உள்ளது. இதை, 1800 கலை / 225 (பஞ்ச பூதங்களின் கலை அளவு) என்று கணக்கிட்டால் விடை 8 என்று வரும். இது, 1 பொழுது. விடையாக வந்த 8 என்பது 1 யாமம். ஒரு நாளைக்கு இரவு, பகல் என்று 2 பொழுதுகள் என்றால், 2 X 8 = 16 (யாமம்) என்பது ஒரு முழு நாள் கணக்கு.

ஒரு பொழுது என்பது யாமம் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஒரு யாமம் என்பது ஒன்றரை மணி நேரம். முகூர்த்த நேரம் என்று இன்று குறிக்கப்படுவது இந்த ஒன்றரை மணி நேரத்தையே. எனவே, ஒரு நாளில் பகலில் 8 யாமங்களும், இரவில் 8 யாமங்களும் வருகின்றன. இவற்றைப் பற்றிய விவரத்தைப் பின்னர் பார்ப்போம்.

*

சூரியனைப் பூமி சுற்றிவரும் காலம் 24 மணி நேரம். இதையே ராசி மண்டலம் என்கிறோம். அதாவது, 1 ராசியைக் கடக்க 2 மணி நேரம் ஆகிறது.

120 நிமிடம் = 1 ராசி = 1800 கலை

1 நிமிடம் = 1800/120 = 15 கலை

60 விநாடி = 15 கலை

1 கலை = 4 விநாடி

ஆக, ஒரு கலை என்பது 4 விநாடி. இந்தக் கணக்கீட்டின்படி, 4 விநாடிகளில்கூட பஞ்சபூதங்களில் ஒன்று மாறுபட வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில், ஜோதிடக் கணிதத்தில் பஞ்ச பூதங்களை உட்படுத்திப் பார்க்கும்போது, 4 விநாடிகளில்கூட மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லக்கூடிய அளவுக்கு கணிதத் துல்லியம் கொண்டது ஜோதிட சாஸ்திரம் என்பதை நான் சொல்லாமலே நீங்கள் விளங்கிக்கொள்ளலாம்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, சரியான பிறந்த நேரத்தைக் குறிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. இது பற்றி பின்வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த நேரத்தில், நம் மனதில் எழும் கேள்வி என்னவெனில், இன்றைய காலத்தில் ஜோதிடத்தை முழு விஞ்ஞானமாக ஏற்று, கணிதத் துல்லியம் கொண்டு பார்க்கும் அளவுக்கு வசதிகள் இருந்தும், ஜோதிடத்தின் முழுப் பரிமாணம் பற்றிய தெளிவு பெரும்பாலான மக்களிடம் ஏற்படாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

மேலும், ஒரு ஜாதகத்தை வைத்து எதிர்காலப் பலன்கள் பார்க்கிறோம் எனில், ஜாதகத்தைப் பற்றிய முழுமையான புரிதல் இருந்தால்தான், அந்த ஜாதகத்தில் உள்ள அறிய முடியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதா என்பதைப் பற்றி யோசிக்கவே முடியும். அதே நேரத்தில், இன்று எந்த அளவுக்கு ஜோதிடத்தை நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்?

ஜாதகக் கணிதம், திசா புத்தி, பலன்கள் என்ற குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாமல், பொதுவான ராசிபலன், பெயர்ச்சிப் பலன், கோச்சாரப் பலன் அவற்றுக்கான பரிகாரங்கள் என்ற அளவில் ஜோதிடத்தை நாம் அணுகிக்கொண்டிருப்பது, ஜோதிடக் கலைக்கு நாம் செய்யும் துரோகமே.

நம்முடைய வாழ்வையே மாற்றக்கூடிய சக்தி படைத்த ஜோதிடக் கலையை, இந்த அளவுக்குப் புரிதல் இல்லாமல், அதன் பலனை உணராமல், வைரக் கல்லை கண்ணாடிக் கல்லாகப் பார்க்கும் நிலையில் வைத்துப் பார்ப்பது என்பது ஜோதிடக் கலையை அழிக்கும் செயலே தவிர வேறு இல்லை.

புரிதல் இல்லாத மனிதர்களாலும், அந்த மனிதர்களின் இறந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்வுகளைக் கணித்துக் கூறும் ‘சக்தி பெற்றவர்களாக’ கருதிக்கொள்ளும், இன்றைய ‘சராசரி’ ஜோதிடர்களால் ஜோதிடக் கலை இன்று தனது ஈனசுரத்தை மீட்டிக்கொண்டிருக்கிறது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், குழந்தை கையில் இருக்கும் விலைமதிப்பில்லாத பொருள் மதிப்பற்றுப் போய்விடுவதுபோல், அரிய பொக்கிஷமான ஜோதிடத்தின் உண்மையான பயன்பாடு பலவீனமாகி, கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையாகப் போய்விட்டது. இத்தகைய நிலைக்கான காரணத்தை நாம் முதலில் தெரிந்துகொண்டால்தான், அதன் உண்மையான பயன்பாட்டின் மதிப்பை நாம் உணர முடியும்.

அதற்கு, கற்காலம் மறைந்து நாகரிகக் காலம் தொடங்கியதிலிருந்து, இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் ஜோதிடக் கலை எவ்வாறு உருவாகி வளர்ச்சிபெற்றது என்பதற்கான வரலாற்று உண்மைகளையும், சான்றுகளையும் நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். என் அளவில், எனக்குத் தெரிந்து நான் இங்கு குறிப்பிடும் தகவல்கள், இத் தொடரைப் படிக்கும் வாசர்களுக்கும் பயனுள்ளதாக இருந்து, ஜோதிடக் கலையை சரியாகப் புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

*

ஜோதிடக் கலையின் வரலாற்றில், அடிப்படை அம்சங்களாக உள்ள மூன்று கூறுகள் -

1. காலக் கணக்கு (காலண்டர்)

2. கடவுள் என்ற உருவகமும், நம்பிக்கையும்

3. வானவியல் (அஸ்ட்ரானமி)

கற்காலம் மறைந்த பிறகு, உலகில் தோன்றிய மிகத் தொன்மையான பழமையான நாகரிகம் சுமேரிய நாகரிகம். இது, மெசபடோமியோ என்றும் அழைக்கப்பட்டது (இன்றைய இரான், இராக் நாடுகளை உள்ளடக்கிய பகுதி). இதன் தலைநகரம் பாபிலோன். முதன் முதலில் நாகரிகம் வளர்ந்தது பாபிலோனில்தான். நாகரிகத்தின் தொட்டில் என்றும் அழைக்கப்பட்டது. சரித்திர காலத்துக்கு முன்பே ஜோதிடம் என்ற குழந்தை இங்குதான் முதன் முதலில் பிறந்து வளர்ந்தது.

பாபிலோனை அசரியர்கள் கைப்பற்றி ஆண்ட காலம், விஞ்ஞானத்தின் பொற்காலமாகவே கருதப்படுகிறது. அது தோராயமாக கி.மு.7-ம் நூற்றாண்டு முதல் கி.மு.5-ம் நூற்றாண்டு எனக் கணக்கிடப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் உருவான கோட்பாடுகளே நவீன ஜோதிடக் கலைக்கும், வானவியலுக்கும் அடித்தளமாக அமைந்தது எனலாம். மேலும், விஞ்ஞானம், கணிதம், மருத்துவம் போன்ற பல துறைகளிலும் மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டது. பாபிலோனில் மட்டும் இருந்த வளர்ச்சிகள், எகிப்துடன் ஏற்பட்ட வாணிபத் தொடர்புகளால் பிற பகுதிகளுக்கும் விரிவடையத் தொடங்கியது.

தனி மனிதர்களுக்கு ஜாதகங்களைக் கணிக்கும் முறை தோன்றியது கி.மு.4-ம் நூற்றாண்டில்தான். அதுவரை, வானவியலுக்கும் ஜோதிடக் கலைக்கும் தாய் வீடாக இருந்தது பாபிலோன்தான்.

கிரேக்கம்

பாபிலோனில் இருந்து ஜோதிடக் கலையை கிரேக்கத்துக்குக் கொண்டு சென்றவர் அலெக்சாண்டர். எகிப்து மற்றும் பாபிலோன் மீது அலெக்சாண்டர் படையெடுத்துக் கைப்பற்றியதன் விளைவாக, அவ்விரு நாடுகளிலும் கிரேக்க வாழ்க்கை முறைகளும் பழக்க வழக்கங்களும் பரவத் தொடங்கின.

கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஆடல், பாடல், சிற்பக் கலை, நுண் கலைகள் மற்றும் இலக்கியங்களில் மிகச் சிறந்த வளர்ச்சியைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன தத்துவ இயலுக்கு அடித்தளமிட்ட சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ மேதைகள் தோன்றியதும் அங்குதான். கி.மு.5-ம் நூற்றாண்டிலேயே கடல் வாணிபத்திலும் கொடிகட்டிப் பறந்ததால், எகிப்து, சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகளுடன் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் வைத்திருந்தனர்.

கி.மு. 331-ல், அலெக்சாண்டரின் ஆலோசகராக இருந்த காலிஸ்தெனிஸ் என்ற விஞ்ஞானிதான், பாபிலோனியர்களின் ஜோதிடம் மற்றும் வானவியல் கலைகளின் உண்மைகளை கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க உத்தரவிட்டார். அவை மூன்றே மாதங்களில் மொழிபெயர்க்கப்பட்டு, கிரேக்க ஜோதிட முறை என்று தனியாக உருவானது. கிரேக்கர்களே வருடத்தின் நாட்களை நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என இனம் பிரித்தனர். ஒரு குழந்தை எந்தத் தேதியில் பிறந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு, அதன் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டது, கி.மு.300 முதல் கி.மு.250 காலகட்டங்களில்தான். கி.மு.250-ல்தான், ராசிக் கட்டத்தின் அடிப்படையில் ஜாதகத்தைக் கணிக்கும் முறை கிரேக்க அறிஞர்களால் உருவாக்கப்பட்டது.

உலக நிலப்பரப்பில் பாதியை தனது ஆளுமையின் கீழ் கொண்டுவந்தவர் அலெக்சாண்டர். அவர் காலத்தில்தான், உலக நாடுகளில் அதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட, எழுதப்பட்ட அனைத்தும் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. பின்னர், விஞ்ஞான மொழியாகவும் கிரேக்க மொழி அங்கீகரிக்கப்பட்டது. கிறிஸ்துவுக்குப் பின் கிரேக்கர்களால் ஜோதிடக் கலை கைவிடப்பட்டது.

இந்தியாவிலும், தமிழகத்திலும் ஜோதிடக் கலையின் வளர்ச்சி பற்றி அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம்.

(தொடரும்)

  • Vவாழ்வியல் வழிகாட்டி ராஜேஸ் கன்னா (தொடர்புக்கு – +91-9443436695; rajeshkanna.astro@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com