துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புரிவது சிரிப்பு - கலைவாணர் பிறந்த தின சிறப்பு ஜோதிடக் கட்டுரை

இன்றைய சூழ்நிலையில் எந்திரகதியான வாழ்க்கை முறையின் காரணமாக பலரும் மன அழுத்தத்தால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புரிவது சிரிப்பு - கலைவாணர் பிறந்த தின சிறப்பு ஜோதிடக் கட்டுரை

இன்றைய சூழ்நிலையில் எந்திரகதியான வாழ்க்கை முறையின் காரணமாக பலரும் மன அழுத்தத்தால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வதுகூட குறைந்து வருகிறது எனலாம். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது பழமொழி. சிரிப்பு, மன அழுத்தத்தைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நல்ல மனநிலையோடு நாள் முழுவதும் மகிழ்ச்சியோடு வைத்திருக்கும். கடினமான நேரங்களிலும் பாசிட்டிவான மனநிலையைக் கொடுத்து உற்சாகத்தோடு செயல்பட வைக்கும். சிரிப்பு ஒரு ஆரோக்கியமான தொற்றும் தன்மை கொண்டதாகும். ஒருவர் சிரித்தால் உடன் இருப்பவரும் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே

நமது பொறுப்பு

கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்

கண்ணாடி சிரிப்பு - மனம்

கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்

கண்ணாடி சிரிப்பு - இது

களையை நீக்கி கவலையைப் போக்கி

மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு

மேற்கண்ட பாடல் வரிகளை அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை யாரலும் மறக்க முடியாது. தமிழ்த் திரைப்படத் துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துகளை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்குச் சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே கலைவாணரின் நகைச்சுவை கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாண்ட அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின்போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர்.

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழைமை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வைத் துவங்கினார். பின்னர் நாடகத் துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்தக் குரலில் பல பாடல்களைப் பாடியுள்ளார். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர் என்பது இவரது சிறப்பம்சம் ஆகும்.

சிரிப்புக்கும் ஜோதிடத்துக்கும் உள்ள தொடர்பு

ஜோதிடரான என் மனதில், நம் வாழ்வில் முக்கியமான ஒன்றான சிரிப்புக்கும் ஜோதிடத்துக்கும் தொடர்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. அப்படி எந்த கிரகம் சிரிப்புக்குக் காரணமாக இருக்கும் என ஆராய்ந்தால், ஜோதிடத்துக்கும் சிரிப்புக்கும் மிக முக்கியத் தொடர்பு இருப்பது தெரிந்தது. ஜோதிடத்தின் காரகரும் சிரிப்பின் காரகரும் இன்றைய தின நாயகர் புத பகவான்தாங்க!

சிரிப்பை அடுத்தவருக்குத் தெரிவிப்பவை நமது வாயும் முகமும்தான். ஒருவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டால், தாமாகவே முகத்தில் ஒரு மலர்ச்சியும் புன்முறுவலும் தோன்றுவது இயல்பு. முகமலர்ச்சி மற்றும் சிரிப்பை தெரிவிக்கும் பாவம் காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான மற்றும் சுக்கிரனின் வீடான ரிஷபம் ஆகும்.

ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு தோன்றுவது என்பது மூளையில் ஏற்படும் ஒரு மாற்றமாகும். மூளை மற்றும் சிந்திக்கும் திறனின் காரகர் புத பகவானும் அவருடைய வீடான மிதுன ராசியும் ஆகும். மேலும், மிதுனம் காற்று ராசி என்பதால், ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு ஏற்பட்டால் அது மற்றவர்களையும் உடனே சென்று தொற்றிக்கொள்கிறது.

ஒருவருக்கு ஹாஸ்ய உணர்வு தோன்றவும் அதை அனுபவிக்கவும், மனது நல்ல நிலையில் இருக்க வேண்டும். மனது சரியில்லாத நிலையில் எத்தனைதான் நகைச்சுவை உணர்வோடு பேசினாலும் எடுபடாது. சந்திரனை மனோகாரகன் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். “சந்த்ரமா மனஸோ ஜாத:” என்கிறது வேதத்தின் அங்கமான புருஷ சூக்தம்.

புதன், சுக்கிரன், சந்திரன் இவர்களுடைய சுப தொடர்புகள், ஒருவரை எப்போதும் மகிழ்ச்சியாகவும் நகைச்சுவை உணர்வோடும் வைத்திருக்கும்.

நகைச்சுவை உணர்வு யாருக்கு அதிகம்?

  1. ஒருவருடைய ஜாதகத்தில் ஜனரஞ்ஜக ராசியான சுக்கிரனின் வீடுகளான ரிஷபமும் துலாமும் லக்னமாக அமைந்து லக்னத்தில் சுக்கிரன், சந்திரன், புதன் இணைந்தோ அல்லது திரிகோணஸ்தானங்களில் நிற்பது.

  2. கால புருஷ மூன்றாம் இடமான மிதுன ராசி லக்னமாகி, லக்னத்தில் புதன் ஆட்சி பெற்று திரிகோணஸ்தானமான துலாம் ராசியில் சுக்கிரனும் சந்திரனும் இணைந்து நிற்பது.

  3. காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் லக்னமாகி, இவற்றோடு சந்திரன், புதன், சுக்கிரன் தொடர்பு கொள்வது.

  4. புதன் கன்னி ராசி லக்னமாகி, லக்னத்தில் புதன் உச்சம் பெற்று வாக்கு ஸ்தானத்தில் சந்திரன் நின்று மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று நிற்பது.

  5. பொதுவாகவே, எந்த ராசி லக்னமானாலும் சந்திரன், புதன், சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று தொடர்பில் நிற்பது.

  6. ஜாதகத்தில் புத்திகாரகன் புதனுக்கான பத்ர யோகம் பெற்று நிற்பது, மற்றும் சுக்கிரனின் மாளவியா யோகம் பெற்று நிற்பது.

  7. மிதுனம் மற்றும் துலாம் ராசிகளில் ராகு நின்று தனது திரிகோண பார்வையால் இரண்டு காற்று ராசிகளுக்கு தொடர்பை ஏற்படுத்துவது.

  8. மேற்கண்ட தொடர்புகள் இருந்து அவற்றோடு 6/8/12 தொடர்புகள் இருந்தாலோ அல்லது பாதகாதிபதிகள், திதி சூன்ய ராசி அதிபதிகள் தொடர்பு பெற்றுவிட்டால், அவர்கள் “சிலர் அழுவார், சிலர் சிரிப்பார், நான் அழுதுக்கொண்டே சிரிக்கின்றேன்” என உள்ளுக்குள் அழுது அடுத்தவரை சிரிக்கவைத்துக்கொண்டிருப்பார்.

இன்று திரு கலைவாணர் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்யும்விதமாக அவருடைய ஜாதகத்தை ஆய்வு செய்ய முயற்சித்தோம். துரதிஷ்டவசமாக நமக்கு ஜாதகம் கிடைக்கவில்லை. எனவே அனைவரையும் சிரிக்கவைத்த சார்லி சாப்ளின் அவர்களின் ஜாதகத்தை இங்கு பதிவிடுகிறோம்.

திரு. சார்லி சாப்ளின் அவர்களின் ஜாதகத்தில், ஜெஞ்சக ராசியும் சுக்கிரனின் வீடும் கால புருஷனுக்கு ஏழாம் வீடும் காற்று ராசியுமான துலா ராசியே லக்னமாகி, லக்னத்தில் சந்திரன் நின்று ஏழாம் வீட்டில் நிற்கும் சுக்கிரனையும் புதனையும் சம சப்தம பார்வை பெற்று நிற்கிறது. மேலும், காற்று ராசியாகிய மிதுனத்தில் நிற்கும் ராகு, தனது திரிகோண பார்வையால் துலாம் மற்றும் கும்ப ராசிகளை, அதாவது மற்ற காற்று ராசிகளைத் தொடர்புகொள்வதும் மற்றவர்களைத் தனது சிரிப்பால் மகிழ்விக்கும் கிரக அமைப்பாகும்.

வாழ்வில் தானும் சிரித்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைக்கும் வழிபாடுகள்

  1. வாழ்வில் எத்தனை பெரிய துன்பம் வந்தாலும் அவற்றை மறந்து மகிழ்ச்சியாக வாழ, புதன்கிழமைகளில் புதனின் அதிபதியாகிய ஸ்ரீ விஷ்ணுவின் ஸ்தலங்களுக்கு செல்வது மற்றும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது.

  2. திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் மற்றும் சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயாரை தரிசிப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

  3. சந்திரன், புதன், சுக்கிரனின் காரகம் பெற்ற கலை நிகழ்ச்சிகள், சிரிப்பு மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துக்கொள்வது மனம் லேசாகி நகைச்சுவை உணர்வை அதிகரிக்கச்செய்யும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன் (தொடர்புக்கு - 9498098786; 9841595510 - astrosundararajan@gmail.com; www.astrosundararajan.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com