செங்கல்பட்டில் தசரா திருவிழா நிறைவு: கொட்டும் மழையில் விடியவிடிய அம்மன் ஊர்வலம்

செங்கல்பட்டில் தசரா திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் கொட்டும்....
செங்கல்பட்டில் தசரா திருவிழா நிறைவு: கொட்டும் மழையில் விடியவிடிய அம்மன் ஊர்வலம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தசரா திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் கொட்டும் மழையில் விடியவிடிய அம்மன்கள் ஊர்வலம் விமரிசையாகவும், கோலாகமாகவும் ஊர்வலம் நடைபெற்றது.

செங்கல்பட்டில் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்பட்டுவரும் நவராத்திரி விழாவையொட்டி 10 நாள் தசரா திருவிழா 200 ஆண்டுகளுக்கும் மேலாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை வந்த மஹாளய அமாவாசையையடுத்து 3ம் நாள் மூன்றாம் பிறையன்று கலசம் நிறுத்தப்பட்டு பல்வேறு கோயில்களில் இருந்து கரகமும் அம்மன் சிலைகளை கொண்டுவந்து அந்தந்த கோயில்கள், தசரா குழுவினரால் அமைப்புகள் சார்பாக கொண்டாடப்படும், சமூகத்தினர் என செங்கல்பட்டில் 20-க்கும் மேற்பட்ட இடத்தில் 9 நாள்களும் அம்மன் அலங்காரம் நடைபெற்றது. 10ம் நாள் சனிக்கிழமை இரவு வெற்றியைக் கொண்டாடும் வகையில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் மலர்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஊர்வலமாகச் சென்று மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை ஊர்வலத்தின் போது பாரம்பரிய வன்னிமரம் குத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஏராளமான மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். செங்கல்பட்டில் நடைபெறும் பாரம்பரிய தசரா ஊர்வலத்தைக் காண செங்கல்பட்டு மட்டுமின்றி தாம்பரம், காஞ்சிபுரம் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் திருப்போரூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்திர் மற்றும் உறவினர்களுடன் சனிக்கிழமை இரவே செங்கல்பட்டிற்கு வந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வைக்கப்பட்டிருந்த அலங்கார பேன்சி பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், குழந்தைகள் விளையாட்டுப் பொருள்கள் என பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் , வீட்டு அலங்கார பொருள்களை வாங்கியும், மேலும் பொழுதுபோக்கு அம்சங்களான அசுர தாலாட்டு, ராட்சத தாலாட்டு, ராட்டினங்களும், பிரேக் டான்ஸ், ஜெயின்வீல், கப் அண்ட் சாசர் உள்ளிட்ட பெரியபெரிய ராட்டினம், குழந்தைகளுக்கான சிறிய ராட்டிணங்கள், பனிசறுருக்கு உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை பொழுது போக்கு நிகழ்ச்சிகளை கண்டு களித்தும், திண்பண்டங்களை வாங்கி உண்டு மகிழ்ந்து பொழுதை கழித்து விடியற்காலையில் பல்வேறு ரதங்களில் மின்விளக்கு அலங்காரங்களில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக சென்ற அம்மனை தரிசனம் செய்து விட்டு பகல் 12 மணிக்கு மேல் அவரவர் ஊர்களுக்குச் சென்றனர். 

ஏராளமான மக்கள் வருவதை அடுத்து சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நடுப்பகல் வரை கோயில்களிலும் தசரா குழுவினராலும் ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. தசரா திருவிழா இந்த ஆண்டு தொடர்ந்து விடுமுறை நாள்களில் வந்ததால் தசரா ஊர்வலம் நடைபெறும் சாலையை இணைக்கும் அனைத்து இணைப்பு சாலைகளும் அடைக்கப்பட்டதால் பக்கத்தில் உள்ள இடத்திற்குச் செல்வதற்கு கூட சுமார் 1கிமீ சுற்றிவரவேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் தசரா திருவிழா 3 நாள்கள் தொடர்ந்து நடைபெறும்.

விழாவையொட்டி 10 நாள்களும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் எஸ்ஐக்கள் உள்ளிட்ட போலீசார் ஊர்காவல் படையினர் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நவராத்திரி விழா நிறைவைமுன்னிட்டு செங்கல்பட்டு என்ஜிஜிஓ நகர், அண்ணா நகர் எல்லையம்மன் கோயில், ரத்தினவிநாயகர் கோயில், அண்ணாசாலை,ஜிஎஸ்டி கோயில் முத்துமாரியம்மன்  கோயில், ஏகாம்பரேஸ்வரர்  கோயில் அனுமந்தபுத்தேரி செல்வவிநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன்கள் அலங்கரிப்பட்டிருந்தார்.

ஜீவானந்தம் தெரு அங்காளம்மன்கோயில், ஹரோடு பழைய  அங்காள பரமேஸ்வரி கோயில், மேட்டுத்தெரு திரௌபதி அம்மன் கோயில், பெரியநத்தம் ஓசூரம்மன் கோயில், மதுரைவீரன் கோயில், அண்ணாசாலை முத்துமாரியம்மன் கோயில்,  புதுஏரி செல்வகணபதி முத்துமாரியம்மன்கோயில், மார்கெட் சின்னம்மன் கோயில்  கோட்டைவாயில் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள கடம்பாடி முத்துமாரியம்மன் கோயில், உள்ளிட்ட கோயில்கள்,  பலிஜகுலத்தோர் தசராகுழுவினர், ஜவுளிக்கடை தசராகுழுவினர் சின்னக்கடை தசராகுழுவினர், பூக்கடை தசராகுழுவினர்,  மளிகைக்கடை தசராகுழுவினர், என தசரகுழு அமைப்பினர் சார்பிலும் நவராத்திரி தினங்களில் அம்மன்கள் பல்வேறு அலங்காரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் மகிஷாசூரமர்த்தினி, சிவன்பார்வதி, வீரபாஞ்சாலி அலங்காரத்தில் அம்மன்கள் கொட்டும் மழையில் தசரா ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com