கண் நோய்களை நீக்கும் நிகரற்ற திருத்தலம்

திருமாலின் பஞ்சாயுதங்களில் முதன்மையானது ‘சுதர்சனம்’ என்னும் சக்கரம். ‘ஆயுதங்களின் அரசன்’ என்றும் இதைப் போற்றுவர்.
கண் நோய்களை நீக்கும் நிகரற்ற திருத்தலம்

திருமாலின் பஞ்சாயுதங்களில் முதன்மையானது ‘சுதர்சனம்’ என்னும் சக்கரம். ‘ஆயுதங்களின் அரசன்’ என்றும் இதைப் போற்றுவர். ‘சஹஸ்ரார ஹும்பட்’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தால் ஆராதிக்கப்படுபவது இந்த சக்கராயுதம். யானை கஜேந்திரன், மன்னன் அம்பரீஷன் ஆகியோரைக் காக்க முன்வந்தவரும் இவர்தான். இதை அடையும் பொருட்டு திருமால் சிவனை வழிபட்ட தலம், திருமால்பூர் (திருமாற் பேறு).

குபன் என்னும் அரசனின் விருப்பத்துக்காக ததீசி முனிவரின் மீது தமது சக்ராயுதத்தை ஏவினார் திருமால். அது அவரது வஜ்ர உடலைத் தாக்க முடியாமல் வாய் மடிந்தது. அதனால் திருமால் இத்தலத்தை அடைந்து, சிவனை நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜித்து வந்தார். ஒருநாள் தாமரை மலர்களில் ஒன்றை சிவன் மறைக்க, பூஜை செய்யும்போது அதை உணர்ந்த திருமால், தமது கண்மலரால் இறைவனைப் பூஜித்தார். அதனால் மகிழ்ந்த ஈசன் சக்ராயுதத்தை அளித்தார் என்கிறது.

ஈசன் கருவறையின் முன் நந்தியின் பின்னால் ஈசனை நோக்கி கை கூப்பிய நிலையில் நிலை கொண்டார் என காஞ்சிப்புராணம் கூறுகிறது. ஹரியான திருமால் பேறு பெற்றதால் திருமால்பேறு என்றும், ஹரிசக்ரபுரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. பத்மாக்ஷன் எனும் பெயரும் இதனால் கிடைத்தது. கண் நோய்களை நீக்கும் நிகரற்ற தலம் இது.

பழைமையான இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஐந்து நிலை முதன்மை கோபுரம் வரவேற்கிறது. இரு புறமும் வினாயகர், முருகன் திருக்கோயில்கள் உள்ளன. கோயில் புதிதாய் துடைத்து வைத்தாற்போல் இருக்கின்றது. இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார், தரை மட்டத்தில் இருந்து உயர்ந்து நிற்கும் தளத்திற்கு நமசிவாய எனும் ஐந்தெழுத்து போல் பஞ்சாக்கிர படிகளாய் ஐந்து படிகள் நம்மை உயர்த்துகின்றன. இப்படிகளின் இடது புறம் பதினாறு கால் மண்டபம் ஒன்றும் உற்சவங்களுக்காக காத்து நிற்கிறது.

முகப்பில் உயர்ந்து நிற்கும் செப்புக்கொடிமரமும், ஆளுயர மேடை மீது அமர்ந்து இறைவனை நோக்கும் நந்தியும் அதன் மண்டபத்தின் மேல் திருமால் இறைவனை வணங்கும் சுதைகளும் உள்ளன.

உட்பிராகாரத்தில் நந்திகேசுவரர் நின்ற கோலத்தில் உள்ளார். சோளீஸ்வரர், பாலகணபதி, வள்ளி, தெய்வானையுடன் முருகன், தட்சிணாமூர்த்தி, அஷ்ட துர்க்கை என தரிசிக்கிறோம். அறுபத்துமூவர் அணிவகுத்து நிற்கின்றனர். தென்மேற்கில் இரு வினாயகர்களும் காட்சி தருகின்றனர். இறைவன் சன்னதி வாயிலில் பத்து கரங்களுடன் கூடிய வல்லபை விநாயகரும் மறுபுறம் முருகனும் உள்ளனர்.

சுவாமி தீண்டாத் திருமேனியை உடையவர். குவளை சாத்தியே அபிஷேகம் நடக்கிறது. ‘விருத்தக்ஷீரநதி’ என்னும் பழைய பாலாறு இத்தலத்துக்கு வடக்கு திசையில் உள்ளது.

தமிழ்ப் புத்தாண்டு, ஆனி உத்திரம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை, ஆருத்ரா, மாசிமகப் பெருவிழா, நவராத்திரி என பல பண்டிகைகள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற.

இங்கு வந்து வழிபடுவதால் மகப்பேறு, ரத்தம் தொடர்பான வியாதிகள் குணமாவதாக கூறப்படுகிறது.

தெற்கு நோக்கிய அம்பாள் தனிக்கோயில் கொண்டுள்ளார். முகப்பு மண்டபமாக எட்டு தூண்களுடன் உள்ளது மண்டபம் துவாரபாலகர்கள் பெரிய உருவில் காட்சி தருகின்றனர். அம்பிகையின் திருக்கோயில் அருகில் பெரியதொரு வில்வ மரமும் அதனடியில் லிங்கமும் நாகர்களும் உள்ளனர்.


இறைவன்- மணிகண்டீஸ்வரர் மால்வணங்கீசர்

இறைவி- அஞ்சனாட்சி, கருணை நாயகி

தலமரம்- வில்வம்

‘நீலமணிமிடற்று ஒருவன்’ என்பாள் ஔவைப் பெருமாட்டி. அதே மணிமிடற்றுப் பெருமான் மணிகண்டீஸ்வரராக அருளும் திருமால்பேறு தலத்தை தரிசிப்போமேயானால்திருமால் பெற்ற பேறு நமக்கும் கிட்டும்.

காஞ்சிபுரத்திலிருந்து 12 கி.மீ.. காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com