பிரம்மன் வழிபட்டு பேறு பெற்ற உடையார்கோயில் 

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில்...
பிரம்மன் வழிபட்டு பேறு பெற்ற உடையார்கோயில் 

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் ஒரு அலங்கார வளைவு உள்ளது அதில் நுழைந்து தெற்கில் சென்றால் உடையார் கோயில் சிவாலயம் உள்ளது. இத்திருக்கோயிலைச் சுற்றி அகழி உள்ளது. இதற்கு திரிபுவனமாதேவிப் பேரேரி என்று பெயர்.

திருவிறையான்குடி என்பது இவ்வூரின் பழமையான பெயர் ஆகும். கி.பி.1014 முதல் 1042 வரை சோழநாட்டை ஆண்ட முதலாம் இராஜேந்திரன் என்ற கங்கைகொண்ட சோழ மன்னரின் கல்வெட்டுக்கள் இத்திருக்கோயிலில் உள்ளன. இதன்மூலம் இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகவும் சீரோடும் சிறப்போடும் விளங்கியுள்ளது தெரியவருகின்றது.
 
பிரம்மன், இந்திரன், பூமாதேவி, மலயத்துவச அரசன், சுவரதன், வீரசோழன் முதலியோர் இவ்விறைவரை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
 

ஐந்து நிலை முதன்மை கோபுரம் உள்ளது. மூன்று பிரகாரங்களுடன் இக்கோயில் உள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் வரிசையாக முக்குருணி அரிசி விநாயகர், பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தபுரீஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், வேதபுரீஸ்வரர், சதுர்வேதபுரீஸ்வரர், பூலோகநாதர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர்.
 
பிரதான விநாயகர் சன்னதி தனியாக உள்ளது. அச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி அனுராதா க்ரமன சரஸ்வதி உள்ளார். கருவறையின் பின்புறம் முறையே விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அருகில் கோயிலின் தலவிருட்சமான களாச்செடி உள்ளது. முன்மண்டபத்தில் பள்ளியறை உள்ளது. அதனைத் தொடரந்து பைரவர், திருமறைக்கோயில், சேக்கிழார், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர், அனுமார், சூரியன், சந்திரன் காணப்படுகின்றனர். நவக்கிரகச் சன்னதியும் உள்ளது.
 

இறைவன் கரவந்தீஸ்வரர் எனப்படுகிறார். இவர் திருக்களாவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையின் முன்புறம் வலது புறம் ஆட்கொண்டாரும், இடது புறம் உய்யக்கொண்டாரும் உள்ளனர். கருவறையின் முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அங்குள்ள இறைவி தர்மவல்லி என்றழைக்கப்படுகிறார். அம்மன் சன்னதி அருகே நர்த்தன விநாயகர் உள்ளார்.
 

இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் காலத்தால் முந்தியது முதலாம் இராசேந்திரனின் 31-ம் ஆட்சியாண்டு (கி.பி.1045) கல்வெட்டாகும். இம்மன்னனின் கல்வெட்டில் ‘நம்மூர் திரிபுவன மாதேவிப் பேரேரி உள்ளால் எழுந்தருளியிருந்த திருக்கிளா உடையார் மகாதேவர் கோயிலில்‘ என்று குறிப்பிடுவதிலிருந்து ஏரியின் நடுவில் இக்கோயில் அமைந்திருந்தது என்பதும், ஏரியின் பெயர் திரிபுவன மாதேவிப் பேரேரி என்றும் அறியமுடிகிறது.
 

பாறைகள், மலைகள் இல்லாத தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் கற்றளிகளை உருவாக்க புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த நொடியூர்ப்பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்ததற்கான சான்று இக்கோயிலில் உள்ளதாக வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் என்ற நூலில் கூறுகிறார்.
 

“தஞ்சைக்கு அருகேயுள்ள உடையார் கோயில் சிவாலயத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (18-ம் ஆட்சியாண்டு, கி.பி.1196) கல் எங்கிருந்து கொணரப்பெற்றது என்பதனை, நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்தும் சிலை கொண்டு வந்து... என்ற கல்வெட்டுக்குறிப்பால் அறியலாம். நொடியூர் எனும் ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்னாண்டார் கோயில் பகுதியில் உள்ளதாகும். அனைத்தையும் நோக்கும்போது தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் நொடியூர்ப்பட்டணத்துக் கிள்ளியூர் மலைப்பகுதியிலிருந்து கற்கள் வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com