கொள்ளம்பூதூரில் இன்று இரவு தீபாவளி அர்த்தஜாம பூஜை மற்றும் ஓடத் திருவிழா

தீபாவளி அமாவாசை நாளில் இங்கு நடைபெறும் ஓடத் திருவிழாவில் கலந்துகொண்டால், இப்பிறவியின் வாழ்க்கை ஓட்டத்துக்கான அனைத்து நற்பலன்களையும் தப்பாமல் பெற்று பிறவிப் பெருங்கடலையும் எளிதில் கடக்கலாம்.

திருக்கொள்ளம்பூதூர் (திருக்களம்பூர்) சௌந்தர்யநாயகி உடனுறை வில்வவனநாதர் திருக்கோயிலில் தீபாவளி அர்த்தஜாம பூஜையும் ஓடத் திருவிழாவும், அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

சிவபெருமானின் பஞ்சாரண்யத் தலங்கள் ஐந்து. ‘ஆரண்யம்’ என்றால் ‘காடு’. ‘பஞ்சாரண்யம்’ என்றால் ஐந்து வகை வனங்கள் என்று பொருள்படும். ஈசன், முல்லை வனத்தில் அருளும் திருக்கருகாவூர், பாதிரி வனத்தில் அருளும் திருஅவளிவநல்லூர், வன்னி வனத்தில் அருளும் திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்), பூளை வனத்தில் அருளும் திருஇரும்பூளை (ஆலங்குடி), வில்வ வனத்தில் அருளும் திருக்கொள்ளம்பூதூர் (திருக்களம்பூர்) ஆகிய தலங்களே பஞ்சாரண்யத் தலங்களாகும். ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் தரிசித்தால் திருக்கயிலையை தரிசித்த பெரும்பேறு கிட்டும்.

இதில் முதலாவதாகத் தரிசிக்க வேண்டிய ஆலயம் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை மாதவிவனேஸ்வரர் திருக்கோயில். இங்கு உஷத் காலமாகிய காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபட வேண்டும். இரண்டாவது அவளிவநல்லூர் சௌந்தர்யநாயகி உடனுறை சாட்சிநாதர் திருக்கோயில். இங்கு காலசந்தியில் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வழிபாடு செய்ய வேண்டும். மூன்றாவது, அரித்துவாரமங்கலம் அலங்காரவல்லி உடனுறை பாதாளேஸ்வரர் திருக்கோயில். இந்த தலத்தில் உச்சிகாலத்தில் பகல் 11 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் தரிசனம் செய்ய வேண்டும். நான்காவதாக ஆலங்குடி ஏலவார்குழலி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில். இங்கு சாயரட்சையில் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வழிபாடு முடிக்க வேண்டும். ஐந்தாவதாக திருக்களம்பூர் சௌந்தர்யநாயகி உடனுறை வில்வவனநாதர் திருக்கோயில். இங்கு அர்த்தஜாமத்தில் இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணிக்குள் வழிபட வேண்டும்.

இந்த ஐந்து ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசித்து வாழ்வில் பெறுதற்கரிய பேறுகளையும், சகல வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது நம் முன்னோர்களின் திருவாக்கு ஆகும். கூடவே, வாழ்வில் எத்தகைய கிரக தோஷங்களுக்கு ஒருவர் ஆட்பட்டிருந்தாலும், ஒரே நாளில் குறிப்பிட்ட நேரத்தில் முறைப்படி இந்த ஐந்து சிவாலயங்களிலும் வழிபட்டால் எத்தகைய கிரக தோஷங்களும் அகன்றுவிடும் என்கிறார்கள்.

இந்த தலங்களில் ஒன்றான திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருக்களம்பூரில், திருஞானசம்பந்தருக்காக தீபாவளி அன்று நடுஇரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜையை, சிவபெருமான் மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் ஏற்று அருள்புரிந்துள்ளார். இது என்ன விந்தையான கதை! வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

ஒரு தீபாவளி நன்னாளில் ஐப்பசி மாத அமாவாசை அன்று பஞ்சாரண்ய தலங்களில் முதல் நான்கு தலங்களை தரிசித்த திருஞானசம்பந்தர், அன்று அர்த்தஜாம பூஜைக்கு திருக்களம்பூர் ஈசனைக் காண வந்தார். சம்பந்தர் வருவதை அறிந்த மக்கள், ஊரெங்கும் வீடுகளிலும், வெளியிலும் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து சம்பந்தரின் வருகைக்காகக் காத்திருந்தனர். ஆனால் சம்பந்தர் வரும் வழியில் கடும்மழை. இதனால் வழியில் குறுக்கிடும் அகத்திய காவிரி (முள்ளியாறு) என்னும் வெட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனால், திருஞானசம்பந்தரால் அந்த ஆற்றைக் கடந்து ஊருக்குள் வரமுடியாத நிலை.

பெருவெள்ளத்தின் காரணமாக, ஆற்றில் ஓடத்தை செலுத்த முடியாததால் ஓடங்கள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேரமும் அந்திசாய்ந்து, இரவு பூத்து நள்ளிரவும் வந்தது. ஈசனை தரிசிக்காமல் செல்லக் கூடாது என்பதில் திருஞானசம்பந்தர் உறுதியாக இருந்தார். எனவே ஆற்றின் கரையில் நிறுத்தியிருந்த ஓடம் ஒன்றில், அந்த நள்ளிரவிலும் தன் அடியவர்களுடன் ஏறினார் சம்பந்தர். ஓடத்தை ஆற்று நீரில் செலுத்த துடுப்பு இல்லை. ஆனாலும் ஓடம் சென்றது! ஆம், சம்பந்தர் கூறிய பஞ்சாட்சரமும், அவர் பாடிய பதிகமும், வெள்ளத்தின் ஊடேவும் துடுப்பு இன்றி ஓடம் பயணிக்கத் துணை நின்றன.

‘கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்

நாட்டம் ஆடிய நம்பனை யுள்கச்

செல்ல வுந்துக சிந்தையார் தொழ

நல்குமாறு அருள் நம்பனே’

என்ற பதிகம்தான் சம்பந்தரால் பாடப்பட்டது. அந்தப் பாடல் ஈசனை உருக்க, ஈசனின் அருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அதிகாலையில் அடைந்தது. ஆற்றின் கரையிலேயே ஈசன் உமையுடன் ரிஷப வாகனத்தில் சம்பந்தருக்கும், அவரது அடியார்களுக்கும் அந்த அதிகாலையில் காட்சி கொடுத்தார். பின்பு சம்பந்தர் மீதி பதிகத்தை பாடியபடியே திருக்கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்தார்.

அந்த ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் தீபாவளி அமாவாசை நாளில் ஏற்றிய அகல் விளக்குகளை அணையவிடாமல், சம்பந்தர் மறுநாள் அதிகாலை தங்கள் ஊர் வரும்வரை ஏற்றிவைத்து காத்திருந்தனர். சம்பந்தர் அவர்கள் அனைவரையும் ஆசிர்வதித்து, திருக்கொள்ளம்பூதூர் ஆலயத்தினுள் சென்றார். ஆலய அர்ச்சகர்களும் தீபாவளி அமாவாசை நாளில் சம்பந்தரின் வருகையை அறிந்து இரவில் காத்திருக்க நேரம் செல்ல செல்ல சம்பந்தர் வராததால் கலக்கமுற்றனர். ஆனால் சம்பந்தர் வரும்வரை காத்திருக்குமாறு ஈசன் அவர்களுக்கு அசரீரியில் கூறியதால், தீபாவளி அமாவாசை அர்த்தஜாம பூஜைக்கான நள்ளிரவு நேரம் கடந்துவிட்டபோதிலும், பூஜையை தள்ளிவைத்திருந்தனர் அர்ச்சகர்கள்.

திருஞானசம்பந்தர் வருவதற்குள் மறுநாள் அதிகாலை ஆகிவிட்டதால், சம்பந்தருக்காக தீபாவளி அமாவாசை அர்த்தஜாம பூஜையானது, மறுநாள் அதிகாலையில் நடந்தேறியது. இன்றும்கூட தீபாவளி அமாவாசை திருநாள் இரவில் நடக்க வேண்டிய அர்த்த ஜாமபூஜை, இந்த ஆலயத்தில் மறுநாள் காலையில்தான் நடத்தப்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தர் திருக்கொள்ளம்பூதூருக்கு எழுந்தருளிய சம்பவத்தை நினைவுகூறும்விதமாக, தீபாவளி அமாவாசையில் ‘ஓடத் திருவிழா’ இங்கு நடத்தப்பட்டு வருகிறது.

தீபாவளி அமாவாசை அன்று இரவு 10 மணிக்கு சம்பந்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து, ஓதுவார்கள் தேவாரப் பதிகம் ஓத, வெட்டாற்றின் இக்கரையில் இருந்து அக்கரையில் உள்ள கோயிலுக்குப் படகில் கொண்டு செல்வார்கள். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பாக சம்பந்தரின் படகு கரைக்கு வந்து சேரும். அங்கே ஆற்றின் கரையில் ரிஷப வாகனத்தில் கயிலைவாசன், சம்பந்தரையும் அவரது அடியார்களையும் எதிர்கொண்டு அழைப்பார். பிறகு அனைவரும் கொள்ளம்பூதூர் கோவிலுக்குள் செல்வார்கள். அதற்குப் பிறகுதான் முந்தைய நாள் நள்ளிரவு நடைபெற வேண்டிய அர்த்தஜாம பூஜை நடைபெறும். தீபாவளி அமாவாசையின் மறுநாள் மட்டுமே, அர்த்தஜாம பூஜை காலம் தாழ்ந்து இங்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஓடத் திருவிழாவில் கலந்துகொண்டால், வாழ்வில் அனைத்து ஐஸ்வரியங்களும் நமக்குத் தவறாமல் கிடைக்கும் என்பது ஐதீகம். திருக்கொள்ளம்பூதூரில் இறப்பவர்களுக்கு, சிவபெருமானே பஞ்சாட்சர மந்திரத்தை வலது செவியில் ஓதி முக்தி அளிப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது. எனவே, இத்தலத்துக்கு ‘பஞ்சாட்சரபுரம்’ என்ற பெயரும் உண்டு.

அகத்தியர், பிரம்மா, வாமனர், ஆதிசேஷன், இடைக்காடர், பிருகு, காசிபர், கன்வர், வசிஷ்டர், அர்ஜுனன், வரகுண பாண்டியன் போன்றவர்களும், கங்கையும், காவிரியும் இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்தையும், தலமரமாக வில்வமரத்தையும், தல விநாயகராக காரியசித்தி விநாயகரையும் கொண்ட திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருக்களம்பூரில் அருளும் ஈசனின் திருநாமம் ‘வில்வவனநாதர்’ என்பதாகும். அவரது உடனுறை சக்தியாக 'சௌந்திரநாயகி' அம்பாள் அருள்கிறாள். கூவிளம்பூதூர் என்ற பெயரே மருவி கொள்ளம்பூதூர் என்று ஆனதாகக் கூறப்படுகிறது. ‘கூவிளம்’ என்றால் ‘வில்வம்’ என்று பொருள்.

ஆலய வலம் வரும்போது வலம்புரி கணபதி, பொய்யா கணபதி, தண்டாயுதபாணி, முருகர், கஜமுக்தீஸர், முல்லைவனநாதர், ஆதிவில்வநாதர், சாட்சிநாதர், பாதாள வரதர், மகாலிங்கர், கங்கையம்மன், கஜலட்சுமி, விசாலாட்சி, சரஸ்வதி, பைரவர், சூரியன், சனி பகவான், லிங்கோத்பவர், பிட்சாடனர், நவகிரக சன்னதிகளையும் தரிசிக்கலாம். திருஞானசம்பந்தர் தம் அடியவர்களுடன் ஓடம் செலுத்தும் திருக்காட்சி, இத்தல தூணில் செதுக்கப்பட்டு உள்ளது. சம்பந்தரின் பாடல் பெற்ற இவ்வாலயம், நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டது. பக்தர்கள் தங்கி வழிபட வசதியாக ஆலயம் அருகில் நகரத்தார் சத்திரம் உள்ளது. ஓடத் திருவிழா ஐப்பசி பிரதமை திதியைக் கணக்கிட்டே இங்கு கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் தீபாவளி அமாவாசை ஓடத் திருவிழா வருகிற 19.10.17அன்று இரவு 10 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை 9 மணி அளவில் நிறைவு பெறுகிறது.

''ஓடம் வந்தணையும் கொள்ளம்பூதூர்

ஆடல் பேணிய அடிகளை உள்கச்

செல்ல உந்துக சிந்தையார் தொழ

நல்குமாறு அருள் நம்பனே''

எனும் சம்பந்தரின் இத்தல பதிகத்தைத் தொடர்ந்து, காலை மாலை பாராயணம் செய்து, தீபாவளி அமாவாசை நாளில் இங்கு நடைபெறும் ஓடத் திருவிழாவில் கலந்துகொண்டால், இப்பிறவியின் வாழ்க்கை ஓட்டத்துக்கான அனைத்து நற்பலன்களையும் தப்பாமல் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து, பிறவிப் பெருங்கடலையும் எளிதில் கடக்கலாம் என்கிறார்கள்.

ஆம்! சம்பந்தரும் இத்தல பதிகத்தை ''ஞானசம்பந்தன் இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார் போய் என்றும் வானவரோடு இருப்பாரே'' என்று பாடி நிறைவு செய்வதன் மூலமும் அறியமுடிகிறது. கும்பகோணத்தில் இருந்து தெற்கே கொரடாச்சேரி வழியாக 20 கிலோமீட்டர் சென்றால் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருக்களம்பூரை அடையலாம். ஆலய தொடர்புக்கு 04366-262239.

- சிவ அ. விஜய் பெரியசுவாமி (தொடர்புக்கு – 9787443462)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com