ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?

திருமணம்....! ஆயிரம் காலத்து பயிராம். நான் சொல்லலை. பெயர் தெரியாத யாரோ ஒரு பெரியவர் சொன்னது.
ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?

திருமணம்....! ஆயிரம் காலத்து பயிராம். நான் சொல்லலை. பெயர் தெரியாத யாரோ ஒரு பெரியவர் சொன்னது.

திருமணம்...! இருமனம் ஒன்றிணையும் ஒப்பந்த விழா. தேவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும், கிண்ணர்கள், கிம்புருடர்கள் பூமாரி பொழிய, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பெற்றோர் பெரியோர் ஆசியுடன் வாழ்க்கை படிகளில் கால் வைக்கும் இனிய பொன்னாள். இதற்கு பின் தான், இனிய இல்லறம் பிறக்க வேண்டும்.

தம்பதிகளுக்கு இடையே சந்தோசம் திளைக்க வேண்டும். வம்சம் தழைக்க வாரிசுகள் பிறக்க வேண்டும். அது வாழையடி வாழையாக வளர வேண்டும்.

இன்னார் பையன், இன்னாரது குடும்பம், இன்னாரது பரம்பரை என்றெல்லாம் பெயரெடுக்க, இருமனம் கலக்கும் திருமணம் தான் முதல் படி.

திருமணம் செய்ய என்ன வேணும்? ஒரு திருமணம் நடக்க, ஒரு ஆணும், பெண்ணும் அவசியம். அதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்பது முற்போக்கு சிந்தனை. மறுக்கவில்லை. இந்த இருவர் மட்டும் இருந்து விட்டால் கல்யாண கதவு திறந்து விடுமா?

முடியாது ராஜா முடியாது. அதற்கு மகத்தான கிரக பலம் வேண்டும். கிரக பலம் என்பது கால நேரம். அந்தக் கால நேரம் ஒத்துழைத்தால் மாலை சூடலாம், மணமேடை ஏறலாம்.

என்ன ஒய்... உம்ம பாஷையில் கால நேரம் என்பது திருமண திசையாக்கும். 

ஜாதகத்தில் திருமண திசை நடப்பில் இருக்க வேண்டும். இல்லை என்றால் திருமண யோகம் வராது.

சரிங்க... திருமண திசைதான் நடப்பில் இருக்கிறது. பொண்ணு மாப்பிள்ளை ரெடி. திருமணம் செய்து விடலாமா?

அதெப்படி... .... குருபலம் எப்படி என்பதையும் பார்க்க வேண்டாமா?

அதை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். .
சாரி. நாம் அதை பற்றி வேறு ஒரு தலைப்பில் பார்ப்போம். இப்போ சனி பகவானின் ஓரப் பார்வையாவது உங்கள் மீது விழுகிறதா என்று பார்ப்போம்.

சனி பார்வையா... ஏன் நல்லா தானே போய்கிட்டு இருக்கு.
டோன்ட் ஒர்ரி. சூரிய புத்திரன், கர்ம வினை கிரகம், உழைப்பை அதிகமாக்கி ஊதியத்தை குறைத்து கொடுப்பவர் என்று சொல்லப்பட்டாலும், அவர் தர்மத்தின் தவ புதல்வன். தர்ம தேவனின் மறுவடிவம். அவர் சாதகமான இடத்தில் சஞ்சாரம் செய்தால் காலம் உங்கள் காலடியில் இருக்கும்.

சாதகமான இடம் என்றால் மூன்று, ஆறு, பதினொன்றா?
கரெக்ட்.

ஆனாலும் ஏழரை சனி நடக்கும் போதும் மாலையும் கழுத்துமா மணமேடை ஏறலாம் தெரியுமோ.

சரி.. விளக்கமா சொல்லுங்க ஜோசியரே.

பொதுவா.... சாமானிய மக்கள் என்றில்லை. ஜோதிடத்தில் கரை கண்ட பெரியவா கூட, ஏழரை சனி என்றால் எட்டிக்காயை கடித்த மாதிரி தான் ஃபீல் பண்ணுவா.

உக்கார்ற இடத்திலே முள்ளு வச்ச மாதிரி உறுத்துகிற நேரத்திலே... நல்லது நடக்குமா? சனி அதற்கு வழி விடுவாரா? என்ற சந்தேகம் எல்லாருக்கும் வரும். அது அனுபவம் தந்த பாடம். ஆனாலும் சுருக்கமா சொல்லப் போனா, சுயம்வரம் செய்ய எந்தத் தடையும் தர மாட்டார். சிலர் சொல்லலாம்.. வேணாம் தம்பி இந்த விஷப் பரிட்சைன்னு... கொஞ்சம் .பொறுங்கோ.

சரி .... ஏழரை சனின்னா என்ன? பெரிய செலவு காத்திருக்கிறது என்று அர்த்தம். கையில மடில இருக்கிறதை வச்சு கல்யாணம் பண்ணு. கடனை உடனை வாங்கி நிலத்தை வாங்கு. சேர்த்து வச்சதை செலவு செஞ்சு வீடு கட்டு. அப்படி செய்துட்டா.... சனி பகவான் ஒன்னும் செய்யமாட்டார். பொழைச்சு போன்னு விட்டுடுவார். அதை விட்டுட்டு காசை சேர்க்கிறேன் பேர்வழின்னு பேங்குல பணத்தை போட்டா, விருந்துக்கு வச்சு இருக்கிற பணத்தை மருந்துக்கு செலவழிக்க வைப்பார். கண்ட கண்ட செலவுதான் வந்து சேரும் சரியா.

சரிங்க..... இந்த வாதம் சரியா?
சரிதான். ஆனால் எல்லோருக்கும் பொருந்தாது. எப்படி?
ஏழரை சனி, வாழும் காலத்தில் மூன்று முறை வரும். நம் தாத்தா காலத்தில நாலு முறை வந்துச்சு. அதனால 100 வயசு தாண்டியும் வாழ்ந்தாங்க. இப்போ நாம சாபிடுற சாப்பாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு எல்லாம் சேர்ந்து மூன்று சுற்றோடு முடிவுக்கு வருகிறது ஆயுள். முதல் சுற்று மங்கு சனி, இரண்டாவது சுற்று பொங்கு சனி, முன்றாவது சுற்று மரண சனி.

இருக்கட்டும்.... ஏழரை சனி காலத்தில் திருமணம் செய்யலாமா? எப்போதுமே..... அல்லல் படுத்தி ஆனந்தப் படுகிற சனி. கேள்வி கேட்டவரை பதில் சொல்ல வைக்கிற சனி. அடுத்தவங்க கல்யாணத்தைப் பார்த்து ஆனந்த பட வைக்கிற சனி, மாப்பிள்ளையாக மணப்பந்தலில் அமர வேண்டியவரை, மாப்பிள்ளைத் தோழனாக நிற்க வைக்கும் சனி, கல்யாண யோகத்தைத் தருவாரா?

தருவார் என்பது உண்மைதான். அது சுவைக்குமா என்பதுதான் கேள்வி.
ஏழரை சனி என்பது எப்படியும் 20 வயதுக்குள் வந்துவிடும். முதல் சுற்றில் திருமண யோகம் என்பது பெண்களுக்கு சாத்தியமாகலாம். ஆனாலும் பொறுத்தால் நல்லது. இன்னும் கொஞ்சம் சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்.

ஏழரை சனி என்பது ராசிக்கு பனிரெண்டு இருந்தால் விரைய சனி, அவர் பெயர்ச்சியாகி ராசிக்கு வந்தால் ஜென்ம சனி, அடுத்த இரண்டரை ஆண்டில் பெயர்ச்சியாகி ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு போனால் குடும்ப சனி என்பார்கள் சரியா?

இப்போ 12இல் இருந்தால் ஓகே.

ஏழரை சனிதானே. செலவு செய்யும் நேரம் தானே.. என்று ஜென்ம ராசியில் சனி இருக்கும் போது திருமணம் செய்யக் கூடாது. அது முதல் சுற்று என்றில்லை. அது எந்த சுற்று சனியாக இருந்தாலும், சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் போது திருமணம் மட்டும் செய்யக்கூடாது.

செய்தால்?
திருமண வாழ்வில் தீராத குழப்பம் வரும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும். இருவரில் ஒருவருக்கு நோய் பீடித்துக் கொள்ளும். குழந்தை பாக்கியம் இல்லாமல் போகலாம். மாங்கல்ய பலம் குறையலாம். மொத்தத்தில் திருமண வாழ்க்கையில் சந்தோஷம் நீங்கி, சந்தேகம் அதிகரிக்கும். அதனால்... கட்டத்தை பாருங்க. கால நேரத்தை கணிங்க. அப்பறம் திருமணத்தை பற்றி யோசிக்கலாம். சரியா.

- ஜோதிடர் ஸ்ரீ கிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com