ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம் மாறும் கருவறை மண்!

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகராஜர் கோவிலிலும் சில அதிசயங்கள் உள்ளது. அப்படி என்ன அதிசயம் இந்தக் கோயிலில்  என்று பார்ப்போம். 
ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம் மாறும் கருவறை மண்!

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகராஜர் கோவிலிலும் சில அதிசயங்கள் உள்ளது. அப்படி என்ன அதிசயம் இந்தக் கோயிலில்  என்று பார்ப்போம். 

தமிழகத்தில் நாகர் வழிபாட்டிற்கென பல கோயில்கள் உள்ளது. அதில் சிறப்பு வாய்ந்த மற்றும் பெரிய கோயிலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோவில் ஆகும். இக்கோவிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோயில் ஆகும்.

மூலஸ்தானத்தில் நாகராஜர், ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். இக்கோவிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்னும் பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளன. நாகராஜாவிற்காக அமைந்த தலம் என்பதால், நாகங்களையே துவாரபாலர்களாக அமைத்துள்ளனர். 

நாகராஜர் சன்னதி எதிரிலுள்ள தூணில், நாககன்னி சிற்ப வடிவில் இருக்கிறாள். தற்போதும் இங்கு நாகங்கள் வசிப்பதாகவும், இவையே இக்கோவிலைப் பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள். நாகங்கள் வசிப்பதற்கேற்ப மூலஸ்தானத்தை ஓலைக்கூரையால் வேய்ந்துள்ளனர். ஆடி மாதத்தில் இதைப் பிரித்து, புதிய கூரை வேய்கின்றனர். நாகராஜருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே கூரை கட்டும் பணியைச் செய்கின்றனர். இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். 

மூலஸ்தானத்தில் நாகராஜர் இருக்குமிடம் மணல் திட்டாக இருக்கிறது. வயல் இருந்த இடம் என்பதால், இவ்விடத்தில் நீர் ஊறிக் கொண்டிருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே பிரசாதமாகத் தருகிறார்கள். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் நிறம் மாறுகிறது. 

தட்சிணாயன புண்ணிய காலத்தில் (ஆடி முதல் மார்கழி மாதம் வரை) இந்த மணல் கருப்பு நிறத்திலும், உத்தராயண புண்ணிய காலத்தில் (தை முதல் ஆனி வரை) வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்பு.

இந்தக் கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுமாம். காரணம் ஆவணி மாதம் மழைக்காலம் என்பதால் இக்காலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக ஆவணியில் மக்கள் தங்கள் குடும்பங்களோடு வந்து செல்கின்றனர். 

நாகராஜர் சுயம்பு மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார். இத்தலம் நாகதோஷம் உள்ளவர்களுக்குச் சிறந்த பிரார்த்தனை தலமாக அமைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com