தாமதமாக திருமணம் நடைபெறுவது ஏன்?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. நம்மில் பலருக்குச் சொர்க்கம் இருக்கும் திசை கிழக்கா, மேற்கா, தெற்கா, வடக்கா தெரியாது.
தாமதமாக திருமணம் நடைபெறுவது ஏன்?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. நம்மில் பலருக்குச் சொர்க்கம் இருக்கும் திசை கிழக்கா, மேற்கா, தெற்கா, வடக்கா தெரியாது.

பெண்ணுக்கு 18ம், ஆணுக்கு 21 வயதும் திருமணம் செய்யலாம் என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இவ்வயதுகளைத் தாண்டியும் நவக்கிரக நாயகர்களின் கருணை கிட்டாமல் கனவுகளோடு காத்திருப்போர் ஆயிரமாயிரம் பேர்.

ஏன் இந்த நிலை?

காரணங்கள் பல. இருக்கட்டும், சில தலைமுறைகளுக்கு முன்பு வரை பால்ய திருமணம் என்ற வழக்கம் இருந்தது. ஆணோ, பெண்ணோ சின்னஞ்சிறார்களாய் இருக்கும்போதே, இவனுக்கு இவன் என்று நிச்சயித்து வைத்துவிட்டுப் பின்னால் அதற்குரிய தகுதி பெறும் காலகட்டத்தில் திருமணம் செய்த பழக்கம் உண்டு.

இன்றோ முப்பது வயதைத் தாண்டியும் முதிர்கன்னிகளாய் இருக்கிறார்கள். நாற்பதைக் கடந்து நரை தட்டிய ஆண்களும் இருக்கிறார்கள். கல்யாணம் என்பது கானல் நீராக இருக்கிறது.

காரணமென்ன?

அன்று இருந்ததும் அதே ஒன்பது கிரகங்கள். இன்று இருப்பதும் அதே ஒன்பது கிரகங்கள். அன்று இளமைத் திருமணத்திற்கு வழிவிட்ட கிரகங்கள், இன்று நந்தி மாதிரி குறுக்கே நிற்கிறதே - ஏன்?

கேள்வி எழுகிறதா.

அன்று திருமணம் என்பது ஒரு சடங்கு. தன் சொந்த பந்தங்கள் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகவும், சொத்து சுகம் கைமாறி போய்விடக்கூடாது என்பதற்காகவும் பெரியவர்கள் கூடி இச்சடங்கை நடத்தினார்கள்.

பின்பும் அவர்கள் வாழ்வால் இணைந்து இல்லறத்தில் நல்லறம் கண்டார்களா? பெயர் சொல்ல வம்சம் விளங்க பிள்ளைகளை ஈன்றெடுத்தார்களா? என்பதெல்லாம் கேள்விக்குறி - போகட்டும்.

இளமைத் திருமணம் என்பது பெண்ணுக்கு 25ம், ஆணுக்கும் முப்பதிலும் நடந்தால் கூட போதுமானது.

சிலருக்குத் திருமணம் நடக்கும் பெண்ணின் தகப்பனார், ஜோதிடரிடம் ஜாதகத்தைக் கொண்டு போனால் சுக்கிரன் அங்கே பார்க்கிறான், சனி இங்கே பார்க்கிறான். ராகுவும் கேதுவும் அங்கே இருக்கிறார்கள், இங்கே இருக்கிறார்கள் என்று ஜோதிடர் சரடு விட்டுக் கொண்டிருப்பார். பெண்ணோ எதிர்த்த வீட்டுப் பையனைப் பார்த்து அழைத்துக் கொண்டு போய்விடும், காதல் என்ற பெயரில். சரி விடுங்கள்.

மனிதனின் வாழ்க்கையில் எது நடக்க வேண்டும் என்றாலும் கிரகங்களின் அனுசரணை இல்லாமல் முடியாது. ஒருவருக்குக் குறிப்பிட்ட தசா புத்தியில் கெட்டது நடக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.

பாதகத்தைச் செய்ய வேண்டிய கிரகம் நேரில் வந்து “டேய் மானிடா உன்னை என்ன செய்கிறேன் பார். ஹாஹாஹா” என்று பி.எஸ். வீரப்பா மாதிரி கர்ஜிக்கும்? அல்லவே.

அந்த நேரத்திற்கு அந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி, குணாதிசயத்தோடு கூடியவரின் நட்பை நமக்கு ஏற்படுத்தித் தரும். அவர் சொல்வதே நமக்கு வேத வாக்காகத் தெரியும்.

அவர் அழைத்துச் செல்லும் பாதையில் நமக்கு விதிக்கப்பட்ட கர்மவினையின்படி நடக்க வேண்டியது, நடந்தே தீரும். இது காலத்தின் கட்டாயம்.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் தாமத திருமணத்திற்குரிய கிரக நிலைகளை அமையப்பெற்ற ஜாதகரை அவரின் தாய் தந்தையரை சந்தித்தால் அதற்குரிய விளக்கம் தெரிந்துவிடும்.

என் பொண்ணு டிகிரி படிச்சிருக்கு. உத்தியோகம் பார்க்கிற பையனா இருந்தா பரவாயில்லை. இப்படிச் சொல்லியே வரும் நல்ல வரன்களைத் தட்டிக் கழித்துக் கொண்டிருப்பார்.

இன்னொருவர் பொண்ணு சிகப்பா சினிமா ஸ்டார் மாதிரி இருக்கணும். 50 பவுனுக்கு மேலே நகை போடணும். என் புள்ளைக்கு என்ன சிங்கக்குட்டி என்பார்.

ஆக இந்த வசனம் எல்லாம் கிரகங்களின் கைங்கர்யம் தான். ஜாதகப்படி தான் செய்ய வேண்டிய பலனைச் செய்ய ஜாதகரின் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு நடத்தும் லீலா வினோதங்கள்.

இனி தாமதத் திருமணத்திற்கு உரிய கிரக நிலைகளை ஆராய்வோம்.

குடும்பஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்தில் நீச்சம் பெற்ற கிரகங்கள் அமரும்போது குடும்பம் அமைய தடை வரும்.

களத்திர ஸ்தானாதிபதி எனும் 7-க்குடையவன் நீச்சம் பெற்றால் மனைவி அல்லது கணவன் வர கால தாமதம் கண்டிப்பாக உண்டு.

7-ல் நீச்சம் அல்லது வக்கிரம் பெற்ற கிரகம் இருந்தாலும் முன் சொன்னதே.

களத்திரக்காரகன் சுக்கிரன் மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து அசுபர் பார்வை பெற்றால் திருமணம் தாமதமாகும்.

7-ஆம் பாவத்திற்கோ, ஏழாம் அதிபதிக்கோ சனி சேர்க்கை அல்லது பார்வை கிட்டினால் இல்லறம் அமையத் தடை.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆணிற்கோ, பெண்ணிற்கோ பிறந்த ஜாதகத்தில் சனி ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் இருந்தால் திருமணம் தாமதமாகும்.

சுக்கிரன் 2ல், 7ல் கெட்டால் திருமணம் தடையாகும்.

7ஆம் அதிபதியோடு ராகு கேது சேர்க்கை ஏற்பட்டாலும் தாமதத் திருமணமே.
சுக்கிரன் நீச்சம் பெற்று சனி செவ்வாய் பார்வை சேர்க்கை பெற்றாலும், சனி செவ்வாய் 7ல் இருந்து சந்திரனும் சுக்கிரனும் ஒருவருக்கு ஒருவர் மறைவு பெற்றாலும் காலம் கடந்த திருமணம்.

ராகு, கேது 1, 7ல் இருந்து சுக்கிரன் சம்பந்தம் பெறுவது இல்லறத் தடை.

7ஆம் அதிபதி சூரியனோடு சேர்ந்து அஸ்தமனம் பெற்றாலும் அஃதே.

7ஆம் பாவம் பாவ கர்த்தாரி யோகம் பெறுவது குற்றம்.

சனி சந்திரன் 9ல் இருப்பதும் நல்லதல்ல.

மேஷ லக்னமாகி சுக்கிரன் அஸ்வினி நட்சத்திர சாரம் பெறுவதும் தவறு.

7ஆம் அதிபதி நவாம்சத்தில் நவாம்ச லக்னத்திற்கு 12ல் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.

குருவும், சந்திரனும் 6, 8, 12ல் நீச்சம் பெற்றாலும்,

குரு, சூரியன் இணைந்து 1, 7ல் இருப்பதும்,

லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 7ஆம் பாவத்தை சுபர்கள் பார்க்காமல் பாவர்கள் சம்பந்தம் பெறுவதும்,

குரு, சுக்கிரன், சூரியன் இவர்களில் ஒருவர் 1ல் இருந்து சனி, 12ல் இருப்பதும் தாமத திருமணத்திற்குரிய கிரக நிலைகளே.

இங்கே சொன்ன கிரகநிலைகள் உங்களுக்கு இருப்பதாக வைத்துக்கொண்டாலும், எப்போது திருமணம் நடக்கும், எந்த திசா புத்தி அதற்கு வழிவிடும்? என்பதை அறிந்து கொள்ள நல்ல ஜோதிடரை அணுகுவது நலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com