ஜோதிடத்தில் தவிர்க்கமுடியாத கேள்விகளும், நமக்கான பதில்களும் - ஒரு கண்ணோட்டம்! 

மாறிவரும் நவீன உலகில் வேர் பிடித்து வளர்ந்த கலைகள் உண்டு; வேர் இழந்து அழிந்த கலைகளும் உண்டு.
ஜோதிடத்தில் தவிர்க்கமுடியாத கேள்விகளும், நமக்கான பதில்களும் - ஒரு கண்ணோட்டம்! 

மாறிவரும் நவீன உலகில் வேர் பிடித்து வளர்ந்த கலைகள் உண்டு; வேர் இழந்து அழிந்த கலைகளும் உண்டு. இன்றளவும், மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்திய முதன்மையான கலைகளில் ஒன்றாக இருப்பது ஜோதிட சாஸ்திரம். தனது எதிர்காலம் எப்படி அமையும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பாதவர் யாருமே இல்லை என்பதும், அதற்கு அவர்கள் முதலாவதாகவும் உறுதியாகவும் நம்புவது ஜோதிட சாஸ்திரத்தையே என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

விக்கிரமாதித்தன் காலத்திய குப்தப் பேரரசில், சமூக நீதிக்கான சரியான கருவியாக ஜோதிட சாஸ்திரம், அரசவையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தது. ஜோதிடத்துக்கு அது ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். ஆனால், வேகமாக மாறிவரும் இன்றைய உலகில், ஜோதிட சாஸ்திரம் போன்ற பழமைகள், தனது நூற்றாண்டுகால அடிப்படை சாரத்தை இழந்து வருவது கண்கூடு. அந்தப் பழமைகளின் துண்டு துணுக்குகளே இன்று நம் பயன்பாட்டில் இருக்கின்றன. அது வருந்தத்தக்கதும்கூட. 

எந்த ஒன்றையும் அதைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தாமல் போனால், அது வீணாகிவிடும், அல்லது வேறு பிரச்னைகள் உருவாகலாம். இன்றைய ஜோதிட சாஸ்திரத்தின் துயரமும் அதுவே. நம் துயரங்களுக்கான தீர்வு ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது என்று நம்புவதில் தவறில்லை. நிழலை உணர வெய்யில் தேவை. மழையை உணர வறட்சி தேவை. இன்பத்தை உணர துன்பம் தேவை. அதுபோல், ஜோதிட சாஸ்திரத்தை உணர நமக்கு சில அடிப்படைகள் தேவை. 

நமது அனைத்து துயரங்களையும் துடைக்கும் ஒரு கருவி என்றால் அது ஜோதிட சாஸ்திரம்தான். இதுதான் உண்மை. ஆனால், அத்தகைய ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையை உணர நம்மில் எத்தனைப் பேர் தயாராக இருக்கிறோம்? தெளிவாகச் சொன்னால், அதை உணர மறுக்கிறோம் என்பதே உண்மை. அது ஏன்? 

இந்த உலகில் பிறந்த அனைவருமே துன்பமில்லா இன்பமான வாழ்வு வாழவே ஆசைப்படுகிறோம். அத்தகைய வாழ்க்கையை ஜோதிட சாஸ்திரத்தைப் பயன்படுத்தி முறையாக அமைத்துக்கொள்ள முடியும். மானுட வாழ்வில் ஜோதிடம் தவிர்க்கவே முடியாத ஒன்று. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பாதையை ஜோதிட சாஸ்திரம்தான் செப்பனிட்டு ஒழுங்குபடுத்துகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜோதிட சாஸ்திரத்தின் பயன்பாடுகளை உணர நம்பிக்கை மட்டும் வைத்தால் போதாது. அதன் அடிப்படையை உணர வேண்டும் என்பதை உணர்த்தவே இதைச் சொல்கிறேன். 

என்னுடைய 25 ஆண்டுகால ஜோதிட ஆய்வில், மனித குலத்துக்கு ஜோதிடத்தின் தேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை என்னால் ஆழ்ந்து அறிய முடிகிறது. எனது நீண்ட நெடிய ஜோதிட ஆய்வால் எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அதன் வழி என் மனதில் உருவான பயன்பாடுமிக்க புதிய கண்ணோட்டங்களை எனக்குள்ளேயே புதைத்துக்கொள்ளாமல், இத் தொடர் மூலம் தினமணி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

ஜோதிட சாஸ்திரம் குறித்து எனக்குள் இருந்த குழப்பங்களும், புரியாத புதிர்களும் என் மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டிருந்தன என்பதை முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். குமாரசுவாமியம், பகவத் கீதை போன்ற நூல்களின் அனுபவம் பெற்றிருந்தபோதும், ஜோதிட சாஸ்திரத்தை புரிந்தமட்டில் அப்படியே ஏற்க என் மனம் இடம் தரவில்லை. சமய சந்தர்ப்பங்களும், அதில் பெறும் அனுபவங்களுமே அறிவாகிறது; அதுவே மனப்பதிவுகளாகிறது. எனக்கும் அப்படிப்பட்ட ஓர் அனுபவமே. எனது இளமைக்காலத்தில் இருந்த அரசியல், சமூக சீர்திருத்த நடைமுறைகள் என் மனதில் எதிர்மறையான சிந்தனைகளையே தோற்றுவித்தன. அதன்காரணமாக, எந்த ஒரு விஷயத்திலும் புரிதல்கள் வரும்வரை என் மனம் தேடலிலேயே இருந்தது. ஜோதிடம் குறித்த புரிதலிலும் அதுதான். அதனால், தேவை உணர்ந்து அடுத்தடுத்த தேடுதல்களில் இறங்கினேன். 

என் மனதில் உருவான சில கேள்விகள் எளிமையாகத் தோன்றலாம். ஆனால், இவை ஒவ்வொன்றும் மிக ஆழமாக விவாதிக்கவும், புரிந்துகொள்ளப்படவும் வேண்டியது மட்டுமல்லாமல், உண்மையில் நம் ஒவ்வொருவராலும் சிந்திக்கப்பட வேண்டியவையும்கூட என்பதால், அவற்றை உங்கள் முன் கேள்விகளாகவே வைக்கிறேன். 

பரிகாரங்கள் – வழிபாடுகள் எதற்காக? 

இங்கு இந்த உலகில் வாழும் 600 கோடி பேரும் 600 கோடி விதமானவர்கள்தான். கை விரல் ரேகை அளவில்கூட ஒத்த நபர்கள் இல்லாத அளவில் அனைவரும் தனித்தன்மையுடன் இருப்பவர்களே. அதாவது, ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை, தனிவாழ்வு இருக்கிறது என்பதன் குறியீடே கை விரல் ரேகைகள். 

ஜாதகத்தைப் பொறுத்தவரை, ஒரு குழந்தை பிறந்த நேரம் மிக முக்கியம். பிறந்த நேரத்தை நிமிட நேர வித்தியாசம் இல்லாமல் குறித்துக்கொள்வதே அரிதாக இருக்கிறது. ஆனால், நான்கு விநாடி நேர வித்தியாசத்தில்கூட பலன்களில் நிகழும் மாறுதல்களைச் சொல்லும் அளவுக்கு கணிதத்துக்கான முக்கியத்துவம் இதில் அடங்கியுள்ளது எனும்போது, சில நிமிட வித்தியாசமாக தவறுதலாகக் குறித்துவைக்கும் பிறந்த நேரம், ஒருவரது வாழ்வில் பலன்களில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்துவதற்குப் போதுமானது. 

நிமிடத்துக்கும் குறைவான நேர வித்தியாசத்தில் பிறந்த மனிதர்களுக்கு இடையே அவர்களது வாழ்வில் மிகப்பெரிய வேறுபாடுகள் நிகழ சாத்தியம் இருக்கும்போது, சரியான காரணங்களைக் கண்டறியாமல் சொல்லும் பொதுவான வழிபாடுகள், பரிகாரங்கள் ஒருவருடைய வாழ்வில் ஏற்படும் துயரங்களுக்கு எந்த அளவில் தீர்வாகும்? 

இறைவழிபாடு என்பது உணர்தலில்தான் சாத்தியமாகிறது. அந்த உணர்தலுக்குத்தான் வழிபாடுகளும், பரிகாரங்களும். இதற்கு கண்ணப்பநாயனாரின் வாழ்வே ஓர் எடுத்துக்காட்டு. அவரது வழிபாட்டில் வழிமுறைகள் மீறப்பட்டிருந்தது. ஆனால், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அவரது வழிபாடு, இதயத்தில் தொடங்கி கண்ணில் முடிகிறது. இதைத்தான் மெய்ஞானமும் நமக்கு உணர்த்துகிறது. இதுபோன்ற தெளிவான புரிதல் இருந்ததால்தான், நான் அன்று யாருக்கும் வழிபாடுகளோ, பரிகாரங்களோ எடுத்துச் சொல்லவில்லை. 

ஒரே கருவில் உதித்த இரட்டையர்களின் வாழ்க்கை முறை… 

இரண்டு அல்லது மூன்று நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளின் ஜாதகக் கட்டங்களை பார்க்கும்போது, பெரும்பாலும் ஒரே மாதிரியான கிரக அமைப்புகள்தான் அமைகிறது. இந்த ஜாதக அமைப்பைக்கொண்டு பலன் சொல்ல வேண்டுமானால், இருவருக்கும் ஒரே மாதிரியான பலன்களைத்தான் சொல்ல முடியும். ஆனால், அவர்களது நடைமுறை வாழ்க்கையைக் கவனித்தால், பெரும்பாலும் இருவரும் நேர் எதிரான வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். 

அதே நேரத்தில், இரட்டையர்களில் ஒரு ஆண், ஒரு பெண் என்று இருந்தால், ஆயுள் பாவங்களிலேயேகூட மிகப்பெரிய வித்தியாசம் வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அதாவது, ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருப்பார். இன்னொருவருக்கு வாழ்வு சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடுகிறது. 

உங்களைக் குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். தங்கம் போன்ற விலை உயர்ந்த ஒரு பொருள் குழந்தை கையில் இருந்தால், அதன் அருமை அந்தக் குழந்தைக்குத் தெரியாததுபோலவே, நம்மில் பெரும்பாலானவர்கள் ஜோதிட சாஸ்திரம் பற்றிப் புரிந்துவைத்திருப்பதும் அப்படியே. 

ஜோதிட சாஸ்திரத்தில் நம் ஆவல்கள் என்ன? 

என் வாழ்க்கை எப்படி இருக்கும்? நல்ல காலம் எப்போது வரும்? எப்போது நல்லது நடக்கும்? நினைத்தது எப்போது நடக்கும்? என்னைப் பொறுத்தவரை, இதெல்லாம் ஜோதிட சாஸ்திரத்தில் மூன்றாம்தரமான கேள்விகள்; மிகவும் மேலோட்டமானதும்கூட. ஜோதிட சாஸ்திரத்தில் இதைத் தாண்டி பல பயனுள்ள பகுதிகள் உள்ளன. அவற்றை நாம் சரியாக உணராமலும், பயன்படுத்திக்கொள்ளாமலும் இருக்கிறோம். மேலோட்டமான விஷயங்களைத் தெரிந்துகொள்வதிலேயே நம் ஆவல்கள் இருக்கும்வரை, குழப்பமான பதில்கள் மட்டுமே நம்மை வந்தடையும். இத்தகைய கேள்விகளுக்குப் பெறக்கூடிய பதில்களால், உங்களது அடிப்படை வாழ்க்கை முறையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவே முடியாது. 

உதாரணமாக – 
கல்வி, மருத்துவம், அறிவியல் வளர்ச்சி, நுகர்வு கலாசாரம் போன்றவை, கால மாற்றங்களுக்கு ஏற்ப மனிதப் பயன்பாட்டுக்கு வந்து சேர்கின்றன. ஒருகாலத்தில் அரிதாக பணக்காரர்களுக்கு மட்டுமே இருந்தவை இன்று சாதாரண மக்களும் பயன்படுத்தும் அளவுக்கு வழக்கத்தில் வந்துவிட்டன. அதற்கேற்றார்போல், மனிதனின் வாழ்வியல் முறையும், அவனது குணநலன்களும் மாறுதல் அடைகின்றன. இவற்றை, ஜோதிடத்துடன் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொண்டிருப்பது அறியாமையே. 

அதேபோல் உறவு முறைகள், வழிபாட்டு முறைகள், பொருளாதாரக் கட்டமைப்புகள், தொழில் முறைகள் போன்றவை, சாதி, மத, இன, மொழி, கலாசாரம் போன்ற காரணிகளால் மனிதர்களுக்கிடையே உண்டான வேறுபாடுகளை நாம் ஜோதிடத்துடன் தொடர்புபடுத்திக்கொண்டிருக்கிறோம். இது, இல்லாத ஊருக்குப் போகாத வழிதான். 

மேலும், திருமண வயது, திருமண உறவு முறைகள், திருமண வாழ்க்கை முறை, குழந்தைகள் போன்றவையும், கலாசாரம், தேசம், கால மாற்றங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது. இவற்றையெல்லாம் ஜோதிடத்துடன் தொடர்புபடுத்துவதில், நமக்கு நிறைய தெளிவுகள் தேவைப்படுகிறது. 

சாதாரணமாக, எல்லோருடைய மனதிலும் எழும் கேள்வி இதுதான். விமான விபத்து, போர்க்காலம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில், ஒரே சமயத்தில் கொத்துக்கொத்தாக ஏற்படும் இறப்புகளுக்கு ஜோதிட சாஸ்திரம் எவ்விதத்தில் பொறுப்பேற்கிறது? 

இதற்கு நான் சொல்லும் சுருக்கமான பதில் இதுதான்

ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்துக்கும் விதிமுறைகள் உள்ளது. ஆனால், காலத்துக்கு ஏற்ப நம் மனோபாவங்களில் மாற்றங்களைப் புரிந்துணர முடியாத அளவுக்குப் பலவீனப்பட்டிருக்கிறோம். மேலும், ஜோதிட சாஸ்திரத்தின் முழுமையை புரிந்துகொள்ளும் வாய்ப்பும் நமக்கு அரிதாகிவிட்டது. இந்நிலையில், அதில் உள்ள தர்ம நியாயங்கள், விதிவிலக்குகள் நமக்குப் புரியாமல் போய்விடுகிறது என்பதுதான் உண்மை. காரணம், ஒவ்வொரு நாளும் தன்னை புதுப்பித்துக்கொண்டு நவீனமயமாகிக்கொண்டிருக்கும் உலகில், ஜோதிடம் போன்ற பழமைகளைப் புரிந்துகொள்வதில் சிக்கல்கள் வந்துவிட்டது. காலத்துக்கு ஏற்ப புதுப்பிக்கப்படாத எந்த ஒன்றும் பயன்தராமல் போய்விடும். அந்த வகையில், இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப, ஜோதிட சாஸ்திரம் அதன் அடிப்படைத் தன்மை மாறாது புதுப்பிக்கப்பட வேண்டிய ஒன்றாகத்தான் இருக்கிறது. 

விதிப்படிதான் வாழ்க்கை என்று சொல்வார்கள். ஜோதிடர் குறித்த நேரத்தில் எல்லாம் சரியாக நடந்தது என்பார்கள். ஜாதகத்துல என் விதி இப்படிதான் எழுதியிருக்கு; அதுக்கு நான் என்ன பண்ண முடியும் என்பார்கள். அப்படிச் சொல்பவர்களே பரிகாரமும் செய்கிறார்கள், வழிபாடும் நடத்துகிறார்கள். ஆக, இவர்களின் புரிதல்தான் என்ன? 

ஜோதிடத்தில் கூறியபடிதான் ஒவ்வொன்றும் நடக்க வேண்டும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பகுதியை மேம்போக்காகப் பார்த்துக்கொண்டிருக்கும்வரை இது நமக்குப் புரியாது. ஆனால், ஜோதிடத்தின் மற்ற பிரிவுகளையும் இணைத்துப் பார்க்கும்போது சில உண்மைகள் புலப்படும். ஜாதகத்தில் விதி என்று நாம் சொல்லும் விஷயங்கள் உண்மையே. அதனை மாற்றி அமைத்துக்கொள்வதற்கு இறைவன் நமக்கு வாய்ப்பு அளித்திருக்கிறான் என்பதும் அதே அளவு உண்மை. ஆக, விதிக்கப்பட்டது நடந்தே தீரும் என்பதல்ல, எதிர்காலத்தில் நிகழ இருக்கும் பலன்களை மாறுதலுக்கு உட்படுத்த முடியும். 

காலம் கருதினும் கைகூடும் காலம் 
கருதி இடத்தால் செயின் 

அதாவது, காலம் பார்த்துக் காரியம் செய்தால், எல்லாம் கைகூடும் என்கிறார் திருவள்ளுவர். 

ஒரு செயல் செய்யப்படும் காலத்திலேயே அந்தச் செயலின் வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. கால நிர்ணயத்தை, ஜோதிடத்தில் முகூர்த்தம் என்ற பிரிவில் இருந்து அறிந்துகொள்ள முடியும். நல்ல நேரம் பார்ப்பது என்பதும் காலம்காலமாக நம் மனத்தில் பதிந்த ஒன்று. நல்ல நேரம் பார்க்காமல் செய்யப்படும் ஒரு காரியம், மோசமான விளைவுகளுக்கு வித்திடும் என்ற அச்சம் அனைவரிடத்திலும் உள்ளது. திருமணத்துக்கு சுபமுகூர்த்தம் பார்ப்பது என்பது இதன் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. 

எதிர்காலப் பலன்களில் மாற்றம் 

காலத்தே பயிர் செய், ஆடிப்பட்டம் தேடி விதை என்பதெல்லாம், பனிக்காலத்தில் ஐஸ் கட்டியையும், காற்றடிக்கும் காலத்தில் மாவையும் வியாபாரம் பண்ண முடியாது என்பதைக் குறிப்பவையே. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், நமக்கு ஏற்படவிருக்கும் நிகழ்வுகளை ஜோதிடத்தில் முகூர்த்தம் என்ற பிரிவைப் பயன்படுத்தி, காலத்தை சரியாக நிர்ணயித்து, எதிர்காலத்தின் பலன்களில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதே. 

பூர்வஜென்ம புண்ணிய பாவங்களால் ஒருவருக்கு ஏற்படும் நன்மை, தீமைகளை ஜோதிட சாஸ்திரம் எடுத்துக்கூறினாலும், அது நடந்தே தீரும் என்ற கட்டாயம் இல்லை என்பதையே முகூர்த்தம் என்ற பிரிவு தெளிவுபடுத்துகிறது. அதேபோல்தான், நிகழ்காலத்திலேயே எதிர்காலத்தில் நிகழவிருக்கும் தவறுகளையும், வாய்ப்புகளையும் சரி செய்துகொண்டு வாழ்வில் வெற்றிபெற முடியும் என்று நிமித்த சாஸ்திரம் நமக்குச் சொல்கிறது. நிமித்தங்கள் என்பது சகுனங்களே. இறைவனின் முன்னறிவிப்பே சகுனங்கள். காரணங்கள் காட்சியிலேயே இருக்கின்றன என்பதையே சகுனங்கள் முன்னறிவிப்பாக நமக்குத் தெரிவிக்கின்றன. 

உதாரணமாக, பெண்ணுக்கு இடது கண் துடித்தால் நல்லது; ஆணுக்கு வலது கண் துடித்தால் நல்லது. ஒன்றை பிராமணனை எதிரே சந்தித்தால் துன்பம்; சலவைத் தொழிலாளியைப் பார்த்தாலே நல்ல சகுனம். எண்ணெய் அமங்கலமானது, பால் புனிதமானது, விறகு சுமை வருவது அமங்கலமானது போன்றவை, காலம்காலமாக நம் முன்னோர்களால் கடத்தப்பட்டு, இன்றும் நம் பயன்பாட்டில் இருந்துவரும் நிமித்தங்களாகும். 

முகூர்த்தம், நிமித்தம் போன்றவை நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கங்கள். இவற்றைப் பற்றிய விளக்கங்களை அடுத்து வரும் கட்டுரைகளில் தெரிந்துகொள்வோம். 

சரி, ஜோதிடத்தில் முகூர்த்தமும் நிமித்தமும் நமக்கு உணர்த்துவது என்ன? 

ஜோதிட சாஸ்திரம் என்பது விதிக்கப்பட்டதை மட்டும் சொல்லும் ஒரு சாட்சிப் பொருள் அல்ல; அது இறந்த காலத்துக்கு ஏற்ப, எதிர்காலத்தைக் காட்டும் கைகாட்டி மரமும் அல்ல. இறந்த காலத்தைத் தோண்டி, நிகழ் காலத்தில் நீர் ஊற்றி எதிர்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி வாழ்க்கைப் பாதையை சீரமைக்கும் ஓர் உன்னத பயன்பாட்டின் அடையாளம். அடுத்து வரும் கட்டுரைகளில் வரும் விளக்கங்களின் மூலம் நீங்கள் இதைப் புரிந்துகொள்ள முடியும். 

காத்திருங்கள்… 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com