குருப் பெயர்ச்சி - 2017: கே.சி.எஸ். ஐயர் கணித்த பலன்கள் (சிம்மம் முதல் விருச்சிகம் வரை)

2017-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் உள்பட தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் முதல் நான்கு ராசிகளுக்கான....
குருப் பெயர்ச்சி - 2017: கே.சி.எஸ். ஐயர் கணித்த பலன்கள் (சிம்மம் முதல் விருச்சிகம் வரை)


2017-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் உள்பட தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் முதல் நான்கு ராசிகளுக்கான பலன்களை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நமக்ககு கணித்து வழங்கியுள்ளார்.

இந்த ஹேவிளம்பி ஆண்டு, ஆவணி மாதம், 24-ம் தேதி (9.9.2017) தேய்பிறை சதுர்த்தி, சனிக்கிழமை இரவு 8.41 (ஐ.எஸ்.டி) மணிக்கு சனிபகவான் ஹோரையில் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ராகு-கேது பகவான்கள் சிம்ம, கும்ப ராசிகளிலிருந்து முறையே கடக, மகர ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இங்கு, 22.3.2019 வரை சஞ்சரித்துவிட்டு, 23.3.2019 அன்று மாலை 4.14 (ஐ.எஸ்.டி) மணிக்கு மிதுன தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

குருபகவான் இந்த ஹேவிளம்பி ஆண்டு, ஆவணி மாதம், 27-ம் தேதி (12.9.2017) , தேய்பிறை சப்தமி, கிருத்திகை நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை காலை 7.00 (ஐ.எஸ்.டி) மணிக்கு செவ்வாய் ஹோரையில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 9.3.2018 அன்று குருபகவான் துலாம் ராசியில் ஸ்தம்பித்து 10.3.2018 அன்று துலாம் ராசியிலேயே வக்கிர நிவர்த்தி ஆகி, 11.10.2018 வியாழக்கிழமை இரவு 7.20 (ஐ.எஸ்.டி) மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

***

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் உங்களைச் சார்ந்தவர்களிடம் இணக்கமாகப் பழகுவீர்கள். செய்தொழிலில் இருந்த நெருக்கடிகள் குறையும். வசதி வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்வீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களின் தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம். தொய்வாக நடந்த காரியங்கள் விறுப்பாக நடக்கும். வருமானம் முன்பைவிட  நன்றாக இருக்கும். விரும்பிய வாய்ப்புகள் வாசற்கதவைத் தட்டும். சில அதிர்ஷ்டகரமான திருப்பங்களும் உண்டாகும்.  

ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். பகட்டு இல்லாமல் இன்முகத்துடன் வலம் வருவீர்கள். குடும்பத்தாருடன் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். ஆத்மார்த்தமான நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் சமூகசேவைகளிலும் ஈடுபடுவீர்கள்.  முக்கியமான தருணங்களில் முடிவெடுக்க பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். உடன்பிறந்தோருக்கு அவர்கள் கேட்காமலேயே தேவைக்கேற்ப உதவிகளைச் செய்வீர்கள்.

10.3.2018 முதல் 11.7.2018 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் குடும்ப நலன் மேம்படும். சுப காரியங்களும் நிகழும். சொத்து விஷயமாக இருந்த வழக்குகள்சாதகமாக முடியும். உங்கள் தன்னம்பிக்கையினால் தடைக்கற்களையும் படிகற்களாக மாற்றிக்கொண்டு விடுவீர்கள். உங்கள் நடத்தையில் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்திலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். கடுமையான வேலைகளுக்கு நடுவே தக்க ஓய்வை எடுத்துக்கொள்ளவும். உடன்பிறந்தோர் தக்க நேத்தில் பக்கபலமாக இருப்பார்கள். எந்தப் பிரச்னையையும் நேர்மையான முறையில் தீர்த்து வைப்பீர்கள். 

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். அவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பார்கள். அரசாங்க வழியிலும் ஆதரவு கிடைக்கும். எதிர்ப்புகளும் கட்டுக்குள் இருக்கும். உங்களின் பேச்சாற்றல் கூடும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.  எதிலும் வேகத்தைக் குறைத்து விவேகத்தைக் கூட்டிக்கொள்ளுங்கள். அசையாச் சொத்துக்கள் மூலம் வருமானம் வரும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். உற்றார் உறவினர்களுடன் சுமூகம் தேவை.  வெளித்தோற்றத்தில் மனதில் காரணம் புரியாத பயம் சிலருக்கு இருக்கும் காலகட்டமாக இது அமைகிறது. 

உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் பணவரவைக் காண்பீர்கள். அலுவலகத்தில் இருக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாவிட்டாலும் தற்காலிகத் தீர்வைக் காண்பீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். அவநம்பிக்கைகள் அகலும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு சரிவுகள் என்பது இருக்காது. விற்பனையில் வளர்ச்சி காண்பீர்கள். எதிர்ப்புகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். தீட்டிய திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபம் அதிகரிக்கும். விளைபொருள்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். புதிய குத்தகைகளை நாடிப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள்அதிர்ஷ்டகரமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சியில் உயர்ந்த பதவிக்கு மாறுவீர்கள். சுதந்திரமாகக் கட்சிப்பணியாற்றுவீர்கள். தொண்டர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். வருமானம்  நன்றாக இருப்பதால் புதிய அசையும் அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். கலைத்துறையினர் தாங்கள் ஈடுபட்டுள்ள துறைகளிலுள்ள நுணுக்கங்களை நன்றாகப் புரிந்து கொண்டு சரியான நேரத்தில் உபயோகப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். சிந்தனைகள் தெளிவாக இருப்பதால் எத்தகைய கடினமான சூழ்நிலைகளையும் சரியாக உள்வாங்கிச் செயல்படுவீர்கள். 

பெண்மணிகள் தேவையற்ற விஷயங்களைத் தள்ளிவைத்துவிட்டு, முக்கியமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தின் புகழ் ஓங்கும். கணவரிடம் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். உங்கள் காரியங்களை பதற்றப்படாமல் செய்து முடிப்பீர்கள். மாணவமணிகள் நன்றாக உழைத்துப்படித்து நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கல்வி ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். சக மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

***

கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் சமுதாயத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயர்ந்து காணப்படும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த வழக்குகள் தீர்ந்துவிடும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உங்கள் வாழ்க்கையில் திருப்திகரமான சம்பவங்கள் தங்கு தடையின்றி நடக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்து வந்த தொந்தரவுகள் மறையும். அனைவரும் உங்கள் பேச்சுக்கு செவிசாய்ப்பார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 

குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நன்மையாகவே முடியும். சிலருக்கு அரசு வழியில் விருதுகளும் கிடைக்கும். சிறு பயணங்களை மேற்கொண்டு நன்மைகளை அடைவீர்கள். சோம்பேறித்தனத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். வாழ்க்கையில் அவநம்பிக்கைகள் அகன்று நம்பிக்கை துளிர்விடும். கற்பனை ஆற்றல் மிகும். எதிர்காலம் மேம்பட திட்டங்களைத் தீட்டுவீர்கள். முக்கியமான முடிவுகளை இந்த காலகட்டத்தில் எடுப்பீர்கள்.

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் பூர்வீகச் சொத்துகளில் இருந்த சிக்கல்கள் விலகும். வருமானம் சீராகும். முக்கிய முடிவுகளை அனைவரையும் கலந்தாலோசித்த பிறகே எடுக்கவும். புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். உடலாரோக்கியம் பிரச்னை இல்லாமல் இருக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களையும் நண்பர்களையும் அலட்சியப் படுத்தாமல் அரவணைத்துச் சென்று ஆதரவு பெற வேண்டிய காலகட்டமிது.

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் நெடுநாள்களாக மனதில் அரித்து வந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். குழந்தைகளாலும் பெருமை அடைவீர்கள். விரும்பிய கல்விச்சாலைகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆன்மிக விஷயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்திலும் சிறு லாபங்களைக் காண்பீர்கள். மனக்குழப்பங்களிலிருந்து விடுபட யோகா, தியானம் செய்வீர்கள். வீண்பேச்சுகள் மற்றும் வாய்ச்சண்டைகளையும் தவிர்க்கவும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு என்று எதுவும் ஏற்படாது. உங்கள்சமயோசித
புத்தி தக்க சமயத்தில் கைகொடுக்கும். சொல், வாக்கு மேம்பட செல்வாக்கு அதிகரிக்கும். செல்வாக்கு மேம்பட செல்வம் அதிகரிக்கும் என்கிற வழக்கு உங்களுக்குப் பொருத்தமாக அமையும் காலகட்டமாக அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் படிப்படியாக முன்னேற்றத்தை அடைவீர்கள். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கப் படுவார்கள். வேலை மாற்றம் செய்ய விரும்புவோர் அதை இந்த மாதத்தில் செய்யலாம். செல்வாக்கான பதவிகளில் அமர்ந்து உயர்வடைவீர்கள். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு நல்ல லாபத்தைக் காண்பீர்கள். எதையும் யோசித்துச் செயல்படுத்தவும்.  புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். விவசாயிகள் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். கையிருப்பு பொருகள்கள் மீது அக்கறை காட்டவும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைவந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவும் கிடைக்கும். ஆனாலும் அவற்றை முழுமையாக அனுபவிக்க விடாமல் அவ்வப்போது குறுக்கீடுகள் ஏற்படும். மனம் தளராமல் அதை எதிர்த்து வெற்றியடைவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்களைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அந்தஸ்தான பொறுப்புகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடமிருந்து சிறப்பான உதவிகள் கிடைக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். புதிய வாய்ப்புகள் தேடிவரும்.   

பெண்மணிகள் எந்த வாக்குவாதத்திலும் சிக்கிக்கொள்ளாமல் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். வருமானம் சீராக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். விளையாட்டுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். 

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும்.

***

துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களை அடைத்துவிட்டு வருங்காலத்திற்கான சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். உங்கள் விஷயங்களில் அனாவசியமாகத் தலையிடுபவர்களைசாதுர்யமாக ஒதுக்கி விடுவீர்கள். எதிரிகளும் உங்களுக்கு எதிரில் பேசத் தயங்குவார்கள். பெற்றோர்களுக்கு உதவிகள் செய்து அவர்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். 

குழந்தைகளுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். அவர்களுக்கு புத்திர பாக்கியங்கள் கிடைக்கும். கௌரவத்தையோ சௌகர்யத்தையோ பார்க்காமல் கடினமாக உழைப்பீர்கள்.  

சோதனைகளை வென்று சாதனைகளைச் செய்ய முடியும். வாக்குச் சாதுர்யத்தினால் சுற்றியுள்ளவர்களை உங்கள் வாக்குக்கு கட்டுப்பட்டவர் களாக மாற்றிக் கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உழைப்பின்மீது நம்பிக்கை வைத்து முன்னேற வேண்டிய காலகட்டமாக இது அமைகிறது. 

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் ஸ்திரத் தன்மையை காண்பீர்கள். தொலைதூரத்திலிருந்து நற்செய்திகள் வரும். புதிய முயற்சிகளை அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டப்பிறகே செயல்படுத்துவீர்கள். புதிய தொழில்கள் துவங்க இணக்கமான சூழ்நிலை உருவாகும். செலவுகள் இருந்தாலும் அதற்கேற்றபடி வருமானம் வந்துகொண்டிருக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் செய்யும் வாய்ப்புகள் உண்டாகும்.  மூடிவிட்ட தொழிலை மீண்டும் தொடங்க முயற்சி எடுப்பீர்கள்.  பலருக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்து சமூகத்தில் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய ஆலயங்களுக்குச் சென்று மனஅமைதியைப் பெறுவீர்கள்.  

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வேலைகளை துணிச்சலுடன் செய்து முன்னதாகவே முடித்து விடுவீர்கள். நேரத்தையும் உழைப்பையும் சரியாகப் பயன்படுத்துவீர்கள். அன்பான அணுகுமுறையால் சுற்றத்தினரை கவருவீர்கள்.  புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகி அவைகள் கைவந்து சேரும். புறம்பேசுபவர்களை கண்டறிந்து விலக்கவும். ரகசியங்களை எவரிடமும் பேசவேண்டாம்.  தேடி வரும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். அவற்றை திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். தேவையான ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். சக ஊழியர்களை கனிவான அணுகுமுறையால் கவருவீர்கள். சுற்றுலா பயணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். வியாபாரிகளுக்கு சீரான வியாபாரம் தொடரும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்மையாகவே முடியும். வரவேண்டிய தொகை கைவந்து சேரும்.  வியாபாரத்தை மேலும் விரிவு படுத்த நினைக்க வேண்டாம். கூட்டாளிகளிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உதவுவதாக சொல்பவர்கள் தாமதம் செய்வார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். 

இடைத்தரகர்களைத் தவிர்த்து பொருள்களை நல்ல விலைக்கு விற்பீர்கள். வருமானம் பெருகும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு இந்த காலகட்டத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பணவருவாய் நன்றாக இருக்கும். தொண்டர்களை அனுசரித்துச் சென்றால் அவமதிப்பிலிருந்து தப்பிக்கலாம். கட்சி மேலிடத்தைக் கலந்தாலோசித்தப்பறகே புதிய முயற்சிளை எடுக்கவும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைப் பெரும் காலகட்டமாக இது அமைகிறது.சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தினர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். மருத்துவச் செலவுகள் குறையும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான மனநிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் நலம் பெற எளிமையான சில பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும்.

***

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் மன அழுத்தங்கள் மறையும். உங்களின் உறுதியும் குடும்பத்தினரின் ஊக்கமும் உங்களை வெற்றியின் கதவுகளைத் தட்டச் செய்யும். வேலைகளை சுதந்திரமாக இருந்து செய்து முடிப்பீர்கள். புதிய அனுபவங்கள் கிடைக்கும்.  விரும்பிய இலக்குகளை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி சூழும். உற்றார் உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். நண்பர்களிடம் இருந்த பழைய பிணக்குகளை மறக்க முயல்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு மரியாதைகள் சீராகவே இருக்கும். அண்டை அயலார்கள் உங்களை மதித்து நடந்து கொள்வார்கள்.  புதிய முதலீடுகளைத் தவிர்த்திடுங்கள். கடன் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருக்கவும். தீயோரை இனம் கண்டு விலக்கி விடுங்கள். உங்கள் திறமைகளை மற்றவர்கள் பெரிதாக பயன்படுத்தும் காலகட்டமாக இது அமைகிறது. 

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல ஆற்றலும் வாய்ப்புகளும் கிடைக்கும். வருமானம் நன்றாக இருப்பதால் இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். புதிய வாய்ப்புகளாலும் வருமானம் வரக்காண்பீர்கள். இதனால் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைப்பீர்கள். வழக்கு பிரச்னைகள் இந்த காலகட்டத்தில் முடிவுக்கு வர வாய்ப்பில்லாததால் பொறுமையுடன் செயலாற்றவும்.  தேவைக்கேற்ற வரவுகளை வெளிவட்டாரத்திலிருந்து பெறமுடியும். எவருக்கும் முன் ஜாமீன் போடுவதோ உங்கள் பெயரில் கடன் வாங்கிக்கொடுப்பதோ வேண்டாம்.  

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் தேவைக்கேற்ற உதவிகளை வெளிவட்டாரத்திலிருந்து பெற முடியும். முக்கியமான சில கடன்களை எப்படியும் அடைத்துவிடுவீர்கள்.தெய்வபலம் கூடும்.  புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்ப குழப்பங்களைத் தீர்க்க திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பயன்படும். பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வீர்கள்.  கௌரவம் அதிகாரம் அந்தஸ்து  ஆகியவை உயரும்.  ரகசியங்களை எவரிடத்திலும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடினாலும் அதை கடின உழைப்பால் சமாளிப்பீர்கள். செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அதை இந்த காலகட்டத்தில் பெறுவர். அலுவலக ரீதியான பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சீராகவே முடியும். கூட்டாளிகள் சுமுகமாகப் பழகுவார்கள். வியாபார யுக்திகள் சரியான இலக்குகளைச் சென்றடையும்.  கடன்பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகள் பயிர்விளைச்சலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அலைச்சல் சற்று அதிகமானாலும் விவசாயப் பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். பழைய பயிர்கடன்களை அடைத்துவிடுவீர்கள்.  விவசாயிகள் மத்தியில் மதிப்பு
மரியாதை உயரும்.

அரசியல்வாதிகள் பெரும் சாதனை செய்வதற்கு முயற்சி செய்வீர்கள். பதவிகள் தேடி  வரும். நீங்கள் தீட்டும் ரகசியத் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். எதிரிகளின் பலம் குறையும். உங்கள் மீதுள்ள வழக்குகள் சாதகமாக முடிவடையும். அரசு அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியை நன்றாகச் செய்து நற்பெயரெடுப்பீர்கள் சக கலைஞர்கள் பகைமை மறந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும்.  

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாருடன் மகிழ்ச்சி தரும் பயணங்கள் செய்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றமடைவீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவீர்கள். உடல் வலிமையும் மனவளமையும் கூடும். ஆசிரியர், பெற்றோர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். 

பரிகாரம்: ராதா-கிருஷ்ணரை வழிபட்டு வரவும். "ராதே கிருஷ்ணா' என்றும் ஜபித்து வரவும்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய நான்கு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை படிக்க - https://goo.gl/FhWNvb

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com