'திருமணப் பொருத்தம்' - ஒருவர் வாழ்வில் தவிர்க்கப்பட முடியாதது!

முகூர்த்தமும், நிமித்தமும் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கங்கள். அவற்றைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்துடனும்...
'திருமணப் பொருத்தம்' - ஒருவர் வாழ்வில் தவிர்க்கப்பட முடியாதது!

முகூர்த்தமும், நிமித்தமும் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கங்கள். அவற்றைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்துடனும், அவற்றைப் பற்றி விரிவாகப் பின்னால் காணலாம் என்ற குறிப்புடனும் முந்தைய அத்தியாயத்தை முடித்திருந்தேன்.

எந்த ஒரு விஷயத்திலும் உண்மையைத் தேடும் யாரும், பொய்யின் நிழலில் இளைப்பாற விரும்பமாட்டார்கள். இதுபோன்ற உணர்தல்கள்தான், என் வாழ்வே என்றாகிப்போன ஜோதிடத்தில் அடுத்தகட்ட ஆய்வுக்கு என்னைத் தயார்படுத்தின.

அந்த ஆய்வில் எனக்கு மிக்க உறுதுணையாக இருந்தது குமாரசுவாமியம். அதாவது, ஜோதிடத்தை சரியாக அணுகுவதற்கு குமாரசுவாமியம் என்ற ஜோதிட ஆதி நூலின் பங்கு தவிர்க்கவே முடியாது என்பது என் கருத்து. நானும் அந்த நூலை அடிப்படையாகக் கொண்டே ஆய்வுகளை மேற்கொண்டேன்.

ஜாதகத்தில், மேலோட்டமான கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்து, ஒருவரின் தனித்தன்மையை கண்டறிந்து சொல்வதில் கவனம் செலுத்தினேன். என்னைப் பொறுத்தவரை, ஜாதகத்தில் ஒருவரின் தனித்தன்மையை உணர்வதுதான் அடிப்படை. அதைத் தெரிந்துகொண்டால், தன் வாழ்க்கையை சரியான முறையில் அமைத்துக்கொள்ள முடியும் என்ற புரிதல் அவருக்கு ஏற்படும். எனக்கும், அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களே அமைந்தனர். அவர்கள் எனக்குக் கொடுத்த மரியாதையும், மதிப்பும் என் மனதில் ஒருவித நெகிழ்ச்சியையும், ஜோதிட ஆய்வில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ள ஒருவித தைரியத்தையும் வைராக்கியத்தையும் கொடுத்தது.

சூழ்நிலைகளைப் பொறுத்தே இன்பமும் துன்பமும். அந்த வகையில், இன்பத்துக்கான சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்வதும், துன்பத்துக்கான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதும் மனிதனின் பொறுப்பு. அதே நேரத்தில், தாய், தந்தை, சகோதர உறவுகளுக்கு நாம் பொறுப்பாக முடியாது. அது இறைவன் நேரடியாக வழங்கிய உறவுகள். இங்கு மனித அறிவுக்கு வேலை இல்லை. ஆனால், திருமண உறவு என்பது வேறானது. அந்த உறவு சரியாக அமைந்தாலும், சரியாக அமையாவிட்டாலும், அதைத் தேடிக்கொண்டதில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. அதனால்தான், இரு மனங்களை இணைக்கும் திருமணப் பொருத்தம் என்பது மிகவும் அவசியம் என்பதை ஜோதிடம் வலியுறுத்துகிறது.

என்னைப் பொறுத்தவரை, ஜோதிடம் வலியுறுத்தும் திருமணப் பொருத்தங்களையே, ஜோதிட சாஸ்திரப் பயன்பாட்டின் மையப்புள்ளியாக நான் கருதுகிறேன். இங்கு இரு மனங்கள் இணைவது, இரு வேறு குடும்பங்கள் இணைவது மட்டுமல்ல, இரு வேறு பாரம்பரிய குணங்களும் ஒன்று கலக்கின்றன. இரு வேறு உறவுகள் இணைந்து புதிய உறவுகளை உருவாக்குகின்றன. அதுவே, இரு வேறு உறவுகளிலும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்பதாலேயே, திருமணப் பொருத்தத்தின் அவசியத்தை ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

முகூர்த்தங்கள், நிமித்தங்கள் மூலம் ஒருவரது வாழ்வில் நிகழ்வுகளில் சரியான மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியும் எனும்போது, ஒருவரின் வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமன் செய்து, தனக்கேற்ற வாழ்வை சரி செய்துகொள்வதற்குத் திருமணப் பொருத்தம் மிகவும் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகிறது. 

நினைக்கும்போதெல்லாம் என்னை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று –

உறவு முறை மட்டுமல்ல, காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஒரு ஜோடி. அவர்களுடைய ஜாதகங்களைப் பொருத்தம் பார்த்த ஜோதிடர்கள், பொருத்தம் இல்லை என்றே சொல்லிவிட்டனர். இருவர் ஜாதகங்களிலும் பொருத்தங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. மிக முக்கியமாக, ரஜ்ஜு தட்டியது. ரஜ்ஜு தட்டினால், இரு ஜாதகங்களையும் சேர்க்கக்கூடாது என்பது ஜோதிடத்தில் பொது விதி. கிரக நிலைகளின் அடிப்படையில் புத்திர தோஷமும் மற்ற தோஷங்களும்கூட இருந்தன.

கடைசியாக, அந்த இருவரின் ஜாதகங்களும் பொருத்தம் பார்ப்பதற்காக என்னிடம் வந்தன. அப்போது என் வயது 27. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நான் அந்த ஜாதகங்களை அலசினேன். ஜாதங்களின் உள்ளார்ந்த கட்டமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. நீங்கள் பயப்படும் எதுவும் அவர்கள் வாழ்க்கையை பாதிக்காது. மிகச் சிறந்த திருமண வாழ்க்கை அமையும் என்று உறுதியாகச் சொல்லி அனுப்பினேன். இன்று அவர்கள் திருமணம் நடந்தேறி 21 ஆண்டுகள் ஓடிவிட்டன. திருமணத்துக்கு முந்தைய அவர்களுடைய வாழ்க்கையுடன் ஒப்பீடு செய்ய முடியாத அளவில் மிகச்சிறந்த திருமண வாழ்க்கையை அவர்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பொருத்தங்கள், தோஷங்களைத் தாண்டி, இரு ஜாதகங்களின் உள் கட்டமைப்புகளின் நிறை குறைகளை சமனம் செய்து, மண வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். இதில்தான் ஒரு ஜோதிடரின் தனித்தன்மை இருக்கிறது. அதுபோல், எனக்கும் ஒரு சில வழிமுறைகள் உள்ளன. அதில் நின்றுதான் திருமணப் பொருத்தங்களை உறுதி செய்கிறேன். இன்றளவும், திருமணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் விஷயத்தில் எவ்வித சமரசத்துக்கும் நான் உட்படுவதில்லை.

இருவரின் ஜாதகங்களையும் பொருத்திப் பார்த்து, சரியான முறையில் மண வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தால், அந்த இரு குடும்பங்களின் வாழ்க்கைச் சக்கரமே மாற்றம் கொண்டுவிடும் என்பதை என் அனுபவங்களில் நான் பார்த்துவருகிறேன்.

ஒரு ஜாதகத்தின் உள் கட்டமைப்பு வரை சென்று பலன்கள் சொல்வதன் மூலம், என்னுடைய ஜோதிட ஆய்வுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், ஜோதிட சாஸ்திரத்தில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் என்பது என் வாழ்வில் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. அதே நேரத்தில், அதை எப்படியாவது கண்டுணர வேண்டும் என்ற தெளிவும் இருந்தது.

நேரம் என்பது இறைவனின் நிர்ணயம். என் வாழ்வின் புதிய தொடக்கத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது அந்த நிகழ்வுதான். எனது நெருங்கிய நண்பர் மூலம் ஒரு ஜோதிடரை நான் சந்திக்க நேர்ந்தது. ஜோதிடம் பற்றி விஷயங்களைத் தெரிந்துவைத்திருக்கிறேன் என்ற அளவில் அவரிடம் பேச்சை தொடங்கினேன். எனக்கிருந்த சில சந்தேகங்களையும் அவரிடம் முன்வைத்தேன். அவரைச் சந்தித்தது தற்செயல்தான் என்றாலும், என் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கான முக்கிய நகர்வாக அந்தச் சந்திப்பு இருந்தது. ஜோதிடத்தைக் கற்றுணர சம்ஸ்கிருதப் புலமையும், விஷய ஞானம் உள்ள குருவும் அவசியம் என்பதை அவர் எனக்கு விளக்கினார்.

அவர் விளக்க விளக்க, எனக்குள் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள். இறந்த காலத்தை புரிந்துணர்ந்து, நிகழ்காலச் செயல்களில் சில மாற்றங்கள் கொண்டுவரும்போது, எதிர்காலத்தில் நிகழ இருக்கும் விளைவுகளில் நல்லமாற்றங்களைக் கொண்டுவர முடியும். ஆனால், வாழ்க்கை என்பது ஏதோ அவிழ்க்கப்பட வேண்டிய புதிர் என்ற அளவிலேயே ஜோதிடத்தை நாம் அணுகிக்கொண்டிருக்கிறோம். அதில் என்ன நடக்கும், எப்போது நடக்கும், என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற மேம்போக்கான கேள்விகளுக்குள்ளேயே நாம் சுழல்கிறோம். இப்போது நீ என்னவாக இருக்கிறாய், உன்னிடத்தில் இருந்து சரியான வெளிப்பாடுகள் வெளிப்பட நீ எவ்வாறு உருமாற வேண்டும் என்பதில்தான் ஜோதிடம் நமக்குப் பயனுள்ளதாகிறது. இந்த உண்மையை புரிந்துணர முடியும் என்ற நம்பிக்கையை அவரது பேச்சின் மூலம் என்னால் உணர முடிந்தது. ஜோதிடம் குறித்து அதுவரை நான் கொண்டிருந்த கர்வம் அடியோடு கரைந்தது.

நான் வாமனனாக குறுகி நிற்க, அவர் திருமாலாக என் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றார். ஜோதிட சாஸ்திரத்தில் அவருக்கிருந்த அறிவும் ஆற்றலும் அனுபவமும், வைரம் பாய்ந்த மரமாக, கற்பக விருட்சமாக இருந்த அவருடைய சொல்லாடல் என் சிந்தனை நரம்புகளை முறுக்கேற்றியது.

ஞானிகளும் யோகிகளும் கண்டுணர்ந்த ஜோதிட வாழ்வியல் ரகசியங்களை அவர்களின் மூலங்களில் இருந்துதான் பெற வேண்டும். அப்போதுதான், அதன் முழுப் பயன்பாட்டையும் உணர முடியும் என்பதில் நான் நம்பிக்கை உள்ளவன்.

மூல நூல்களில் உள்ள ஸ்லோகங்களுக்கான விளக்கங்களில், எழுதுபவரின் குற்றம் வந்து சேரலாம். அந்த விளக்கங்களைப் புரிந்துகொள்வதில் படிப்பவரின் குற்றம் வந்து சேரலாம். காலப்போக்கில், ஒவ்வொருவரும் தங்களது புத்தி, தெளிவு கொண்டு விளக்கங்கள் எழுதிவருவதில், மூல நூல்களில் உள் பொதிந்திருக்கும் சூட்சுமங்கள் வெளிப்படாமல் போய், அதன் பயன்பாட்டில் சிக்கல் உருவாகிவிடலாம். இதனால், யாருக்கும் எந்தப் பலனும் கிடைக்காமல் போகலாம்.

அந்த வகையில், பெரும்பாலும் சம்ஸ்கிருத லிபியில் எழுதப்பட்ட மூல நூல்களில் உள்ள ஸ்லோகங்களை கற்றுணர்ந்து மனதில் நிறுத்தி, அதனுள் தொடர்ந்து ஆழமான பிரயாணம் செய்வதில்தான் அதன் உள்ளார்ந்த சூட்சுமங்களை விளக்கிக்கொள்ள முடியும். அதைவிடுத்து, விளக்க உரைகளையும், அனுபவங்களையும், சொந்த கருத்துகளையும் எழுதுபவர்களின் நூல்களைப் படித்துக்கொண்டு பலன் சொல்வதாலேயே, ஜோதிடம் இன்று தன் ஓடுதளத்தை விட்டு தடம் புரண்டு செல்கிறது.

தூரமும் நேரமும் சுருக்கப்படும்போதுதான் நினைத்த இலக்கை எளிதாக அடைய முடியும் என்பது இன்றைய அறிவியல் நமக்கு உணர்த்தும் உண்மை. அதனால்தான் வராஹமிஹிரர், ஜோதிட சாஸ்திரம் என்னும் சமுத்திரத்தைக் கடக்க, மிக விரிவாகவும், அதன்மூலம் கிடைக்கும் பலன் குறைவாகவும் உள்ள நூல்களைக் கற்றுணர்வது பயனற்றதாகிவிடும் என்பதை உணர்ந்ததால்தான், அதிக விரிவு இல்லாததும், விரிவான பொருள் விளக்கத்தைத் தரக்கூடிய வகையில் நூல்களை எழுதினார்.

வராஹமிஹிரர், குப்தப் பேரரசு காலத்தில் பிறந்தவர். இந்திய வானியலின் தந்தை எனப் போற்றப்படும் ஆரியபட்டரின் சீடர். வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது அவரது காலம் 1700 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிகிறது.

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி என்பதுபோல், அவருடைய ஒவ்வொரு ஸ்லோகமும் பல்வேறு வித்துகளை உள்ளடக்கியிருக்கிறது. விளக்க உரைகள் மூலம் அந்த ஸ்லோகங்களில் இருந்து நாம் எதையும் தெரிந்துகொள்ள முடியாது. அதனை ஆழ்ந்து உணர்ந்துதான் கற்றுக்கொள்ள முடியும்.

சூரியன் முதலாக 18 மகரிஷிகள் செய்த நூல்களின் கருத்துகளை நன்கு உணர்ந்து, அவற்றை ஒழுங்குபடுத்தி, மிகச் சிறப்பான கிரந்தங்களை உருவாக்கியுள்ளார். அவரது கிரந்தங்களின் ஸ்லோகங்கள் சம்ஸ்கிருத லிபியில் உள்ளன. அதை, மலையாள மொழியின் உதவியுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இறைவனின் கொடையே. 

இரண்டாவது முறையாக ஒரு சிறந்த குருவை நான் சந்தித்தது, மேலும் அப்போது எனக்கு ஏற்பட்ட புதிய அனுபவங்கள், ஜோதிட சாஸ்திரத்தைப் பற்றிய புதிய புரிதல்கள் அனைத்தும் எனக்குள் ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்தியது. மனதை அலைக்கழிக்கும் ஆசைகள் நீங்கின. ஜோதிடத்தில் ஒரு முக்தி நிலை என்பது உறுதியானது. ஜோதிடத்தை தொழிலாகப் பார்த்துக்கொண்டிருந்த என் மனநிலை மாறியது. ஜோதிடம் பார்ப்பதை நிறுத்திக்கொண்டேன். கற்றலையே வேள்வியாக்கினேன். 

அடுத்த பத்து ஆண்டுகள்…

தெரிந்துகொள்ள காத்திருங்கள்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com