கே.சி.எஸ்.ஐயர் கணித்த 12 ராசிகளுக்குமான குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் 12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நமக்கு கணித்து...
கே.சி.எஸ்.ஐயர் கணித்த 12 ராசிகளுக்குமான குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017

2017-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்  மற்றும் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் உள்பட தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் 12 ராசிகளுக்கான பலன்களை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நமக்கு கணித்து வழங்கியுள்ளார். 

இந்த ஹேவிளம்பி ஆண்டு, ஆவணி மாதம்,  24 ஆம் தேதி (9.9.2017) தேய்பிறை சதுர்த்தி, சனிக்கிழமை இரவு 8.41 (ஐ.எஸ்.டி) மணிக்கு சனிபகவான் ஹோரையில் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ராகு- கேது பகவான்கள் சிம்ம, கும்ப ராசிகளிலிருந்து முறையே கடக, மகர ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். 

இங்கு, 22.3.2019 வரை சஞ்சரித்துவிட்டு,  23.3.2019 அன்று மாலை 4.14 (ஐ.எஸ்.டி) மணிக்கு மிதுன தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். 

குருபகவான் இந்த ஹேவிளம்பி ஆண்டு, ஆவணி மாதம், 27 ஆம் தேதி (12.9.2017) , தேய்பிறை சப்தமி, கிருத்திகை நட்சத்திரம்,  செவ்வாய்க்கிழமை காலை 7.00 (ஐ.எஸ்.டி) மணிக்கு செவ்வாய் ஹோரையில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 9.3.2018 அன்று குருபகவான் துலாம் ராசியில் ஸ்தம்பித்து 10.3.2018 அன்று துலாம் ராசியிலேயே வக்கிர நிவர்த்தி ஆகி, 11.10.2018 வியாழக்கிழமை இரவு 7.20  (ஐ.எஸ்.டி) மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 

***

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் அனைவரையும் நீங்கள் அனுசரித்துச் சென்று வளைந்து கொடுத்து உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்வீர்கள். கடினமாக உழைத்து பெரிய அளவுக்கு வருமானத்தை ஈட்டுவீர்கள். சுயநலத்தைத் துறந்து பொதுநல நோக்கில் செயல்படுவீர்கள். நண்பர்கள், உற்றார் உறவினர்கள் உங்களை மதித்து நடப்பீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சுற்றுப்புறத்தில் தேவையற்ற பிரச்னைகள் உண்டானாலும் பட்டும் படாமலும் ஒதுங்கிச் சென்று விடுவீர்கள். 

மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்க இறைவழிபாட்டில் முழுக்கவனம் செலுத்துவீர்கள். யோகா, பிராணாயாமத்தை குருவின் மூலம் கற்றுக்கொள்வீர்கள். தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். புதிய முயற்சிகளிலும் ஈடுபட வாய்ப்புகள் தேடி வரும். அனைத்துச் செயல்களிலும் உங்கள் புத்திச்சாலித்தனம் வெளிப்படும். எக்காலத்திலும் உங்களின் தனித்தன்மையை இழக்கமாட்டீர்கள். சகோதர சகோதரிகளுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்து அவர்களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். 

10.3.2018 முதல் 11.7.2018 வரை வருமானம் சிறிது மந்தமாகக் காணப்படும். செலவுகளை ஈடுகட்ட ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் கசப்பான அனுபவங்களையும் வெளியில் காட்டாமல் ஜீரணித்து விடுவீர்கள். புதிய கடன்கள் எதையும் வாங்க வேண்டாம். முக்கியமான விஷயங்களைப் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். மற்றபடி செய்தொழிலில் இலக்குகளை சுலபமாக எட்டி விடுவீர்கள். உங்கள் ஆன்மிக சக்தி வெளிப்படும். மனிதாபிமானமும் அதிகரிக்கும். 

12.7.2018 முதல் 11.10.2018 வரை குடும்பத்தில் சௌக்கியத்தைக் காண்பீர்கள். குடும்பத்தினரிடையே ஒற்றுமை ஓங்கும். உடன்பிறந்தோரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கைளுக்கும் சென்று வருவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். செய்யும் தொழிலில் லாபத்தைக் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். எதிர்கால சிறப்பான வாழ்க்கைக்கு நல்ல அறிகுறிகள் தென்படும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்கள் முகத்தில் பொலிவு கூடும். 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்ப்புகள் கைகூடும். எதிர்ப்புகள் குறையும். மேலதிகாரிகளிடமும் சக ஊழியர்களிடமும் இணக்கமான சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த பதவி  உயர்வு தேடிவரும். சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பணவரவிற்கு எந்த தடையும் ஏற்படாது. வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தைத் தங்கு தடையின்றி நடத்துவீர்கள். சமுதாயத்தில் உங்கள் நிலைமை உயரும். புதிய பொருள்களை வியாபாரம் செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். சொந்தமான புது இடத்திற்கு வியாபாரத்தை மாற்றி அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கக் காண்பீர்கள். வருமானம் சிறப்பாகவே இருக்கும்.

விவசாயிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். புதிய குத்தகைகள் தேடாமலேயே கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவீர்கள். புதிய பயிர் உற்பத்தியில் இறங்குவீர்கள். பயிர் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் மந்தமான நிலையிலிருந்து விடுபடுவீர்கள். பல வழிகளிலும் முன்னேறுவீர்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு உள்ளதால் உங்களின் செயல்களை தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனாலும் எதிர்பார்த்த பெயரும் புகழும் கிடைப்பதால் தாமதம் ஏற்படும். பொறுமையுடனும் கவனத்துடனும் வேலைகளைச் செய்வீர்கள். வருமானத்திற்கு குறைவு வராது. சிலருக்கு விருதுகளும் கிடைக்கும். சக கலைஞர்களுக்கு தேவையான நேரத்தில் உதவி செய்வீர்கள். 

பெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சி நிறையும். கணவரின் அன்பும் பாசமும் கிடைக்கும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவமணிகள் சிறுசிறு குழப்பங்களைச் சந்திப்பீர்கள். நண்பர்களுடன் வம்பு சண்டைகளில் ஈடுபட வேண்டாம். படிப்பில் முழு அக்கறை காட்டினால்தான் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறமுடியும்.

பரிகாரம்: ஸ்ரீ சீதா ராமரை வழிபட்டு வரவும்.

***

ரிஷபம் (கார்த்திகை 2-ஆம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடலில் இருந்த நோய் நொடிகள் படிப்படியாகக் குணமடையும். தேவையான உடற்பயிற்சிகளை விரும்பி மேற்கொள்வீர்கள். உங்கள் காரியங்களைத் திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் முயற்சிகள் நல்ல அங்கீகாரத்தைப் பெறும். உற்றார் உறவினர்கள் தக்க நேரத்தில் உதவி செய்வார்கள். பங்காளிகளுடன் நடந்து வந்த சொத்து சம்பந்தமான பிரச்னைகளும் தீர்ந்துவிடும். குழந்தைகளாலும் மகிழ்ச்சி உண்டாகும். 

திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்த முயற்சி செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வருமானத்திற்கு எந்தக் குறைவுமிராது. வெளியூர் பயணங்களைச் சற்று சிரமத்துடன் மேற்கொள்ள வேண்டிவரும். தீயோர்களை இனம் கண்டு விலக்கி விடுவீர்கள். எவரையும் முழுவதுமாக நம்ப வேண்டாம். நீங்கள் யாதார்த்தமாகப் பேசினாலும் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.  அதனால் சமூகத்தில் உயர்தோரை நாடிச் சென்று அவர்களின் ஆதரவினால் முக்கிய வேலைகளை முடிக்க முயலுங்கள். 

10.3.2018 முதல் 11.7.2018 வரை சமூகத்தில் உங்கள் பெயர் புகழ் கூடும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு உண்டாகும். சிக்கனமாக இருந்து சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். யாருக்கும் கடன் கொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ கூடாது. மற்றபடி கடினமாகப் பேசினாலும் இடமறிந்து பேசி போட்டியாளர்களையும் நண்பர்களையும் உங்கள் வசம் இழுத்து விடும் காலகட்டமாக இது அமைகிறது.

12.7.2018 முதல் 11.10.2018 வரை உங்களின் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். எதையும் பொறுமையுடன் சிந்தித்துச் செயல்பட்டால் வேகமாக முன்னேறுவீர்கள். பெரியோர்களை மதித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை ஊக்கப்படுத்துவீர்கள். தொழில் ரீதியாக புதிய பயணங்களைச் செய்து புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய வீட்டுக்கு மாறிச் செல்லும் யோகம் உண்டாகும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்கிடைத்து செய்தொழிலில் வளர்ச்சியைக் காணும் காலகட்டமாக அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க நேரிடும். உழைப்புக்கு மேல் வருமானம் வரும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் உண்டாகும். மேலதிகாரிகள் உங்களின் திறமையை பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறைந்து சிறப்பான சூழ்நிலை ஏற்படக் காண்பீர்கள். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள்  இந்த காலகட்டத்தில் சில முடிவுகளை தனித்தே எடுக்கவும். 

எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வராது என்று நினைத்திருந்த பணம் உங்கள் கை வந்து சேரும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய பயிர்களைப் பயிர் செய்வீர்கள். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அதிக முதலீடு செய்து புதிய விளைநிலங்களை வாங்கிப் பராமரிப்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் உயரும். செயல்களில் வெற்றி காண்பீர்கள். கவனத்துடன் செயல்பட்டு கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கட்சி மேலிடத்தின் உத்தரவுக்குப்பிறகே மக்களின் முக்கியப் பிரச்னைகளில் கருத்தைத் தெரிவிக்கவும். தொண்டர்களின் ஆதரவு உண்டு. கலைத்துறையினர் புதிய உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். துறை ரீதியான பயணங்கள் செய்வீர்கள்.  

பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷமடைவீர்கள். பழைய கசப்புகளை மறந்து உறவினர்களுடன் இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவார்கள். கல்வியில் இருந்த தேக்க நிலைமை மாறி வளர்ச்சியைக் காண்பீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கும்
வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்: திருவேங்கடவனை வழிபட்டு நலம் கூட்டிக் கொள்ளுங்கள்.

***

மிதுனம் (மிருகசீரிஷம்3ஆம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பார்த்ததற்கும் அதிகமான லாபம் கிடைக்கும். புதிய யுக்திகளுடன் காரியங்கள் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளை எப்பாடு பட்டேனும் செயல்படுத்தி விடுவீர்கள். உங்கள் மனதில் ஆன்மிகத் தேடல் அதிகரிக்கும். மனவளத்தைப் பெருக்கிக் கொள்ள தியானம், பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன் வந்தாலும் ஏதோ ஒரு பிரதி உதவியை எதிர்பார்த்தபடி இருப்பார்கள். 

குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எதிரிகளைச் சலபமாக வெற்றி கொள்வீர்கள். தன்னம்பிக்கை பலப்படும். செய்தொழிலில் தன்னிச்சையாகச் செயல்படுவீர்கள். சிறிய அளவு முயற்சியில் பெரிய லாபங்களைப் பார்ப்பீர்கள். நண்பர்களும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். சிறிது தாமதமானாலும் வழக்கு விவகாரங்களில் வெற்றி உண்டாகும். குழந்தைகளால் சிறு சிறு செலவினங்கள் ஏற்பட்டாலும் அதை பெரிது படுத்த மாட்டீர்கள்.

10.3.2018 முதல் 11.7.2018 வரை குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெற நல்ல சந்தர்ப்பங்கள் கூடிவரும். அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். குழந்தைகளின் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்வவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். இடமாற்றம் செய்ய நினைத்திருப்போர் அதை இந்த காலகட்டத்தில் செய்வார்கள். குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். பிரிந்து சென்றிருந்த உறவினர்களும் திரும்ப வந்து சேருவார்கள். உடன்பிறந்தோர் வகையில் இருந்த அதிருப்தியான சூழ்நிலை மாறி மகிழ்ச்சி பொங்கும். எதிரிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் காலகட்டமாக இது அமைகிறது. 

12.7.2018 முதல் 11.10.2018 வரை உங்களின் கடினமான உழைப்பிற்கு ஏற்ற வருமானம் இரட்டிப்பாகக் கிடைக்கும். உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்று பூர்த்தியாகும். செய்தொழிலில் லாபங்களைப் பார்ப்பீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்ய தேவையான பயணங்களை மேற்கொள்வீர்கள். தடைபட்டிருந்த காரியங்களும் சிறப்பாக நடந்தேறி விடும். தொழில் வட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடற்பயிற்சிகளால் உடலில் ஒரு புதுப் பொலிவு உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டுமே கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலகத்திற்கு மிடுக்குடன் வலம் வருவீர்கள். சக ஊழியர்கள் உங்களிடம் பகைமை மறந்து நட்பு பாராட்டுவார்கள்.  ஆனாலும் புதிய பொறுப்புகளில் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராக நடக்குமென்றாலும் எந்த அதிரடி மாற்றத்தையும் அவசரப்பட்டுச் செய்ய வேண்டாம். கூட்டாளிகளையும் அனாவசியமாகச் சந்தேகப்பட வேண்டாம். பழைய எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். எனினும்
கவனமாகவே இருக்கவும். இந்த காலகட்டத்தில் சிறிது கூடுதல் அலைச்சல்கள் உண்டாகும். 

விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள். கொள்முதலிலும் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளில் விளைச்சல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும்.  உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொண்டு நன்மை அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். மாற்றுக் கட்சியினரின் தொல்லைகள் அகலும். மகிழ்ச்சியுடன் கட்சிப்பணிகளில் ஈடுபடுவீர்கள். பொதுச்சேவையில் பெயரும். புகழும் பெறுவீர்கள். தொண்டர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் கடமைகளை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்களிடம் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெறுவீர்கள். கிடைக்கும் சில ஒப்பந்தங்கள் நிறைவு தருவதாக இராது. ஆடை ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தோர் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். 

மாணவமணிகளுக்கு பயிற்சியும் முயற்சியும் வெற்றியை நோக்கி அழைத்துச்  செல்லும். 

பரிகாரம்:  குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

***

கடகம் (புனர்பூசம்4-ஆம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

12.9.2017 முதல் 09.3.2018 வரை உடல் ஆரோக்கியம், மனவளம் ஆகியவை மேன்மையாக இருக்கும். குழந்தைகளால் பெருமிதமடைவீர்கள். உங்களின் நம்பகத்தன்மை உயரும். நண்பர்கள் உங்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். செயலில் தாமதம் ஏற்பட்டாலும் சரியாக முடித்துக் காட்டுவீர்கள். அவ்வப்போது சிறிய தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவால் நீங்கள் திடீரென்று வெளிநாட்டிற்குப் பயணப்பட நேரிடலாம்.   சில வீண் விரயங்களையும் சந்திக்க நேரிடலாம்.  உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். அவர்களுடன் நேர்மையாகவும் நடந்து கொள்வீர்கள். பெற்றோரும் உங்களை அனுசரித்து நடந்து கொள்ளும் காலக்கட்டமாகும்.

10.3.2018 முதல் 11.7.2018 வரை நீங்கள் சவால்களைத் தைரியமாக எதிர்கொள்வீர்கள். விடாப்பிடியாக முயற்சி செய்து வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்கி விடுவீர்கள். பொதுச் சேவையில் பங்கு கொள்வீர்கள். வேலைகளை ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்துத் திட்டமிட்டுச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களின் பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். குடும்பத்தில் நிலவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறையும் காலக்கட்டமாக இது அமைகிறது. 

12.7.2018 முதல் 11.10.2018 வரை குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். தேக ஆரோக்கியத்தில் குறைவு உண்டாகாது. நண்பர்களிடமும், உடன்பிறந்தோரிடமும் அன்பு காட்டுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். புதிய முயற்சிகளைச் செயல்படுத்த முனைவீர்கள். பொருளாதாரம் சீராகவே தொடரும். புதிய கடன்களை வாங்க நேரிடாது.  நண்பர்கள்போல் பழகும் விரோதிகளை இனம் கண்டு கொள்வீர்கள்.  தொலைதூரத்திலிருந்து சுபச் செய்திகள் வந்து சேரும். 

உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்வார்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வேலையில் புதுப்புது பிரச்னைகள் தோன்றினாலும் அவை எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். பயணங்களால் நன்மைகளைக் காண்பீர்கள். வியாபாரிகள் சுக சௌகர்யங்களை எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள். முக்கியமான விஷயங்களை மட்டும் உடனே  செய்யவும். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளைச் சந்திப்பீர்கள். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே சிரத்தையுடன் உழைக்க வேண்டி வரும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் இந்தக்காலக்கட்டத்தில் சிறப்பாகவே இருக்கும். 

விவசாயிகள் மகிழ்ச்சியான சூழ்நிலையைக் காண்பார்கள். கொள்முதலில் அதிக லாபத்தைக் காண்பீர்கள். விவசாயத் தொழிலாளர்கள் உங்களின் மனமறிந்து நடப்பார்கள். அலைச்சல்கள் எதுவும் ஏற்படாது. புதிய குத்தகைகள் வந்து சேரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். கருப்பு நிற பயிர்களின் விற்பனையால் கூடுதல் வருமானம் வரக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் வளர்ச்சியடைவீர்கள். தொண்டர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான தொண்டுகளில் மட்டுமே ஈடுபடுவீர்கள். எதிரிகள் உங்களின் செயலாற்றும் திறமையைக் கண்டு அதிசயிப்பார்கள். கலைத்துறையினர் கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களைத் திறம்படச் செய்வீர்கள். கலைகளில் நிபுணத்துவம் பெறுவீர்கள். வருமானம் சீராக இருக்கும்.  நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பெண்மணிகள் குடும்பத்தில் நற்பெயர் வாங்குவீர்கள். கணவருடன் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் கல்வியில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவர். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.  உடல் நலம் சிறப்பாக இருக்கும் காலக்கட்டமாக இது அமைகிறது.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

***

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் உங்களைச் சார்ந்தவர்களிடம் இணக்கமாகப் பழகுவீர்கள். செய்தொழிலில் இருந்த நெருக்கடிகள் குறையும். வசதி வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்வீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களின் தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம். தொய்வாக நடந்த காரியங்கள் விறுப்பாக நடக்கும். வருமானம் முன்பைவிட  நன்றாக இருக்கும். விரும்பிய வாய்ப்புகள் வாசற்கதவைத் தட்டும். சில அதிர்ஷ்டகரமான திருப்பங்களும் உண்டாகும்.  

ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். பகட்டு இல்லாமல் இன்முகத்துடன் வலம் வருவீர்கள். குடும்பத்தாருடன் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். ஆத்மார்த்தமான நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் சமூகசேவைகளிலும் ஈடுபடுவீர்கள்.  முக்கியமான தருணங்களில் முடிவெடுக்க பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். உடன்பிறந்தோருக்கு அவர்கள் கேட்காமலேயே தேவைக்கேற்ப உதவிகளைச் செய்வீர்கள்.

10.3.2018 முதல் 11.7.2018 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் குடும்ப நலன் மேம்படும். சுப காரியங்களும் நிகழும். சொத்து விஷயமாக இருந்த வழக்குகள்சாதகமாக முடியும். உங்கள் தன்னம்பிக்கையினால் தடைக்கற்களையும் படிகற்களாக மாற்றிக்கொண்டு விடுவீர்கள். உங்கள் நடத்தையில் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்திலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். கடுமையான வேலைகளுக்கு நடுவே தக்க ஓய்வை எடுத்துக்கொள்ளவும். உடன்பிறந்தோர் தக்க நேத்தில் பக்கபலமாக இருப்பார்கள். எந்தப் பிரச்னையையும் நேர்மையான முறையில் தீர்த்து வைப்பீர்கள். 

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். அவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பார்கள். அரசாங்க வழியிலும் ஆதரவு கிடைக்கும். எதிர்ப்புகளும் கட்டுக்குள் இருக்கும். உங்களின் பேச்சாற்றல் கூடும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.  எதிலும் வேகத்தைக் குறைத்து விவேகத்தைக் கூட்டிக்கொள்ளுங்கள். அசையாச் சொத்துக்கள் மூலம் வருமானம் வரும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். உற்றார் உறவினர்களுடன் சுமூகம் தேவை.  வெளித்தோற்றத்தில் மனதில் காரணம் புரியாத பயம் சிலருக்கு இருக்கும் காலகட்டமாக இது அமைகிறது. 

உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் பணவரவைக் காண்பீர்கள். அலுவலகத்தில் இருக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாவிட்டாலும் தற்காலிகத் தீர்வைக் காண்பீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். அவநம்பிக்கைகள் அகலும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு சரிவுகள் என்பது இருக்காது. விற்பனையில் வளர்ச்சி காண்பீர்கள். எதிர்ப்புகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். தீட்டிய திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபம் அதிகரிக்கும். விளைபொருள்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். புதிய குத்தகைகளை நாடிப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள்அதிர்ஷ்டகரமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சியில் உயர்ந்த பதவிக்கு மாறுவீர்கள். சுதந்திரமாகக் கட்சிப்பணியாற்றுவீர்கள். தொண்டர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். வருமானம்  நன்றாக இருப்பதால் புதிய அசையும் அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். கலைத்துறையினர் தாங்கள் ஈடுபட்டுள்ள துறைகளிலுள்ள நுணுக்கங்களை நன்றாகப் புரிந்து கொண்டு சரியான நேரத்தில் உபயோகப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். சிந்தனைகள் தெளிவாக இருப்பதால் எத்தகைய கடினமான சூழ்நிலைகளையும் சரியாக உள்வாங்கிச் செயல்படுவீர்கள். 

பெண்மணிகள் தேவையற்ற விஷயங்களைத் தள்ளிவைத்துவிட்டு, முக்கியமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தின் புகழ் ஓங்கும். கணவரிடம் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். உங்கள் காரியங்களை பதற்றப்படாமல் செய்து முடிப்பீர்கள். மாணவமணிகள் நன்றாக உழைத்துப்படித்து நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கல்வி ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். சக மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

***

கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் சமுதாயத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயர்ந்து காணப்படும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த வழக்குகள் தீர்ந்துவிடும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உங்கள் வாழ்க்கையில் திருப்திகரமான சம்பவங்கள் தங்கு தடையின்றி நடக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்து வந்த தொந்தரவுகள் மறையும். அனைவரும் உங்கள் பேச்சுக்கு செவிசாய்ப்பார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 

குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நன்மையாகவே முடியும். சிலருக்கு அரசு வழியில் விருதுகளும் கிடைக்கும். சிறு பயணங்களை மேற்கொண்டு நன்மைகளை அடைவீர்கள். சோம்பேறித்தனத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். வாழ்க்கையில் அவநம்பிக்கைகள் அகன்று நம்பிக்கை துளிர்விடும். கற்பனை ஆற்றல் மிகும். எதிர்காலம் மேம்பட திட்டங்களைத் தீட்டுவீர்கள். முக்கியமான முடிவுகளை இந்த காலகட்டத்தில் எடுப்பீர்கள்.

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் பூர்வீகச் சொத்துகளில் இருந்த சிக்கல்கள் விலகும். வருமானம் சீராகும். முக்கிய முடிவுகளை அனைவரையும் கலந்தாலோசித்த பிறகே எடுக்கவும். புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். உடலாரோக்கியம் பிரச்னை இல்லாமல் இருக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களையும் நண்பர்களையும் அலட்சியப் படுத்தாமல் அரவணைத்துச் சென்று ஆதரவு பெற வேண்டிய காலகட்டமிது.

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் நெடுநாள்களாக மனதில் அரித்து வந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். குழந்தைகளாலும் பெருமை அடைவீர்கள். விரும்பிய கல்விச்சாலைகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆன்மிக விஷயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்திலும் சிறு லாபங்களைக் காண்பீர்கள். மனக்குழப்பங்களிலிருந்து விடுபட யோகா, தியானம் செய்வீர்கள். வீண்பேச்சுகள் மற்றும் வாய்ச்சண்டைகளையும் தவிர்க்கவும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு என்று எதுவும் ஏற்படாது. உங்கள்சமயோசித
புத்தி தக்க சமயத்தில் கைகொடுக்கும். சொல், வாக்கு மேம்பட செல்வாக்கு அதிகரிக்கும். செல்வாக்கு மேம்பட செல்வம் அதிகரிக்கும் என்கிற வழக்கு உங்களுக்குப் பொருத்தமாக அமையும் காலகட்டமாக அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் படிப்படியாக முன்னேற்றத்தை அடைவீர்கள். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கப் படுவார்கள். வேலை மாற்றம் செய்ய விரும்புவோர் அதை இந்த மாதத்தில் செய்யலாம். செல்வாக்கான பதவிகளில் அமர்ந்து உயர்வடைவீர்கள். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு நல்ல லாபத்தைக் காண்பீர்கள். எதையும் யோசித்துச் செயல்படுத்தவும்.  புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். விவசாயிகள் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். கையிருப்பு பொருகள்கள் மீது அக்கறை காட்டவும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைவந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவும் கிடைக்கும். ஆனாலும் அவற்றை முழுமையாக அனுபவிக்க விடாமல் அவ்வப்போது குறுக்கீடுகள் ஏற்படும். மனம் தளராமல் அதை எதிர்த்து வெற்றியடைவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்களைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அந்தஸ்தான பொறுப்புகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடமிருந்து சிறப்பான உதவிகள் கிடைக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். புதிய வாய்ப்புகள் தேடிவரும்.   

பெண்மணிகள் எந்த வாக்குவாதத்திலும் சிக்கிக்கொள்ளாமல் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். வருமானம் சீராக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். விளையாட்டுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். 

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும்.

***

துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களை அடைத்துவிட்டு வருங்காலத்திற்கான சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். உங்கள் விஷயங்களில் அனாவசியமாகத் தலையிடுபவர்களைசாதுர்யமாக ஒதுக்கி விடுவீர்கள். எதிரிகளும் உங்களுக்கு எதிரில் பேசத் தயங்குவார்கள். பெற்றோர்களுக்கு உதவிகள் செய்து அவர்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். 

குழந்தைகளுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். அவர்களுக்கு புத்திர பாக்கியங்கள் கிடைக்கும். கௌரவத்தையோ சௌகர்யத்தையோ பார்க்காமல் கடினமாக உழைப்பீர்கள்.  

சோதனைகளை வென்று சாதனைகளைச் செய்ய முடியும். வாக்குச் சாதுர்யத்தினால் சுற்றியுள்ளவர்களை உங்கள் வாக்குக்கு கட்டுப்பட்டவர் களாக மாற்றிக் கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உழைப்பின்மீது நம்பிக்கை வைத்து முன்னேற வேண்டிய காலகட்டமாக இது அமைகிறது. 

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் ஸ்திரத் தன்மையை காண்பீர்கள். தொலைதூரத்திலிருந்து நற்செய்திகள் வரும். புதிய முயற்சிகளை அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டப்பிறகே செயல்படுத்துவீர்கள். புதிய தொழில்கள் துவங்க இணக்கமான சூழ்நிலை உருவாகும். செலவுகள் இருந்தாலும் அதற்கேற்றபடி வருமானம் வந்துகொண்டிருக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் செய்யும் வாய்ப்புகள் உண்டாகும்.  மூடிவிட்ட தொழிலை மீண்டும் தொடங்க முயற்சி எடுப்பீர்கள்.  பலருக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்து சமூகத்தில் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய ஆலயங்களுக்குச் சென்று மனஅமைதியைப் பெறுவீர்கள்.  

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வேலைகளை துணிச்சலுடன் செய்து முன்னதாகவே முடித்து விடுவீர்கள். நேரத்தையும் உழைப்பையும் சரியாகப் பயன்படுத்துவீர்கள். அன்பான அணுகுமுறையால் சுற்றத்தினரை கவருவீர்கள்.  புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகி அவைகள் கைவந்து சேரும். புறம்பேசுபவர்களை கண்டறிந்து விலக்கவும். ரகசியங்களை எவரிடமும் பேசவேண்டாம்.  தேடி வரும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். அவற்றை திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். தேவையான ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். சக ஊழியர்களை கனிவான அணுகுமுறையால் கவருவீர்கள். சுற்றுலா பயணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். வியாபாரிகளுக்கு சீரான வியாபாரம் தொடரும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்மையாகவே முடியும். வரவேண்டிய தொகை கைவந்து சேரும்.  வியாபாரத்தை மேலும் விரிவு படுத்த நினைக்க வேண்டாம். கூட்டாளிகளிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உதவுவதாக சொல்பவர்கள் தாமதம் செய்வார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். 

இடைத்தரகர்களைத் தவிர்த்து பொருள்களை நல்ல விலைக்கு விற்பீர்கள். வருமானம் பெருகும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு இந்த காலகட்டத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பணவருவாய் நன்றாக இருக்கும். தொண்டர்களை அனுசரித்துச் சென்றால் அவமதிப்பிலிருந்து தப்பிக்கலாம். கட்சி மேலிடத்தைக் கலந்தாலோசித்தப்பறகே புதிய முயற்சிளை எடுக்கவும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைப் பெரும் காலகட்டமாக இது அமைகிறது.சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தினர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். மருத்துவச் செலவுகள் குறையும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான மனநிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் நலம் பெற எளிமையான சில பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும்.

***

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் மன அழுத்தங்கள் மறையும். உங்களின் உறுதியும் குடும்பத்தினரின் ஊக்கமும் உங்களை வெற்றியின் கதவுகளைத் தட்டச் செய்யும். வேலைகளை சுதந்திரமாக இருந்து செய்து முடிப்பீர்கள். புதிய அனுபவங்கள் கிடைக்கும்.  விரும்பிய இலக்குகளை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி சூழும். உற்றார் உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். நண்பர்களிடம் இருந்த பழைய பிணக்குகளை மறக்க முயல்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு மரியாதைகள் சீராகவே இருக்கும். அண்டை அயலார்கள் உங்களை மதித்து நடந்து கொள்வார்கள்.  புதிய முதலீடுகளைத் தவிர்த்திடுங்கள். கடன் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருக்கவும். தீயோரை இனம் கண்டு விலக்கி விடுங்கள். உங்கள் திறமைகளை மற்றவர்கள் பெரிதாக பயன்படுத்தும் காலகட்டமாக இது அமைகிறது. 

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல ஆற்றலும் வாய்ப்புகளும் கிடைக்கும். வருமானம் நன்றாக இருப்பதால் இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். புதிய வாய்ப்புகளாலும் வருமானம் வரக்காண்பீர்கள். இதனால் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைப்பீர்கள். வழக்கு பிரச்னைகள் இந்த காலகட்டத்தில் முடிவுக்கு வர வாய்ப்பில்லாததால் பொறுமையுடன் செயலாற்றவும்.  தேவைக்கேற்ற வரவுகளை வெளிவட்டாரத்திலிருந்து பெறமுடியும். எவருக்கும் முன் ஜாமீன் போடுவதோ உங்கள் பெயரில் கடன் வாங்கிக்கொடுப்பதோ வேண்டாம்.  

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் தேவைக்கேற்ற உதவிகளை வெளிவட்டாரத்திலிருந்து பெற முடியும். முக்கியமான சில கடன்களை எப்படியும் அடைத்துவிடுவீர்கள்.தெய்வபலம் கூடும்.  புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்ப குழப்பங்களைத் தீர்க்க திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பயன்படும். பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வீர்கள்.  கௌரவம் அதிகாரம் அந்தஸ்து  ஆகியவை உயரும்.  ரகசியங்களை எவரிடத்திலும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடினாலும் அதை கடின உழைப்பால் சமாளிப்பீர்கள். செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அதை இந்த காலகட்டத்தில் பெறுவர். அலுவலக ரீதியான பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சீராகவே முடியும். கூட்டாளிகள் சுமுகமாகப் பழகுவார்கள். வியாபார யுக்திகள் சரியான இலக்குகளைச் சென்றடையும்.  கடன்பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகள் பயிர்விளைச்சலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அலைச்சல் சற்று அதிகமானாலும் விவசாயப் பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். பழைய பயிர்கடன்களை அடைத்துவிடுவீர்கள்.  விவசாயிகள் மத்தியில் மதிப்பு
மரியாதை உயரும்.

அரசியல்வாதிகள் பெரும் சாதனை செய்வதற்கு முயற்சி செய்வீர்கள். பதவிகள் தேடி  வரும். நீங்கள் தீட்டும் ரகசியத் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். எதிரிகளின் பலம் குறையும். உங்கள் மீதுள்ள வழக்குகள் சாதகமாக முடிவடையும். அரசு அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியை நன்றாகச் செய்து நற்பெயரெடுப்பீர்கள் சக கலைஞர்கள் பகைமை மறந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும்.  

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாருடன் மகிழ்ச்சி தரும் பயணங்கள் செய்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றமடைவீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவீர்கள். உடல் வலிமையும் மனவளமையும் கூடும். ஆசிரியர், பெற்றோர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். 

பரிகாரம்: ராதா-கிருஷ்ணரை வழிபட்டு வரவும். "ராதே கிருஷ்ணா' என்றும் ஜபித்து வரவும்.

***

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் அனைத்துச் செயல்களிலும் மனோதைரியமும் உறுதியான சிந்தனைகளும் உண்டாகும். சமூகத்தில் உங்களுக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள பலர் முன்வருவார்கள்.  நண்பர்களுடன் சேர்ந்து புதிய வாய்ப்புகளைச் செயல்படுத்துவீர்கள் . அதிர்ஷ்ட வாய்ப்பொன்று உங்கள் வாசல் கதவைத் தட்டும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் பணிவாக இருப்பார்கள். 

சுதந்திரமாக மற்றவர்கள் தூண்டுதல் இல்லாமல் பணியாற்றுவீர்கள். நல்ல வருமானமும் அந்தஸ்தும் உண்டாகும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முயல்வீர்கள். சமூகத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தில் இருப்பீர்கள். புதிய மொழிகளைக் கற்றுதேர்ச்சியடைவீர்கள். முகத்தில் பொலிவும் பேச்சில் தெளிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு செயலாற்றினால் மேலும் உயர்வடையலாம்.

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் குதூகலம் நீடிக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். அனைவரையும் அனுசரித்துச் சென்று சுமுக உறவை காத்துக் கொள்வீர்கள். உங்கள் செல்வாக்குக்கும் கௌரவத்திற்கும் எந்த பங்கமும் வராது.செய்யும் தொழிலில் சிறு இடையூறுகள் வந்தாலும் உங்களின் விடா முயற்சிகளால் அவைகளை முறியடித்து விடுவீர்கள். பங்கு வர்த்தகங்களின் மூலம் அதிக லாபங்களை எதிர்பார்க்க முடியாது. எதிரிகள் வகையிலும் ஓர் எச்சரிக்கை உணர்வு தேவை. 

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். தொழில் விருத்திக்காக உழைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் பாதிப்பு எதுவும் இல்லாமல் சீராக இருக்கும். உடல்நலத்தையும் மனவளத்தையும்  கூட்ட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் உதவி கிடைத்து வேலைகள் துரிதமாக நடக்கத் தொடங்கும். களவு போயிருந்த பொருள்கள் திரும்பக் கிடைக்கும். முரட்டுச் சுபாவம் மாறி சாந்தகுணம் மேலோங்கும். மற்றபடி நானே ராஜா, நானே மந்திரி என்கிற ரீதியில் மகிழ்ச்சியுடன் செயலாற்றும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நிலவும் இறுக்கமான சூழ்நிலைகளில் சிக்கிக் தவித்தாலும் உங்களின் அசாத்திய துணிச்சல் வேலைகளில் வெற்றியைத் தேடித்தரும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்களும் உண்டாகலாம். பயணங்கள் மனநிம்மதியைத் தரும். கோபத்தைக் குறைத்துக்கொண்டு சச்சரவுகள் இல்லாமல் பணியாற்றி உங்கள் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளவும். 

வியாபாரிகள் நல்ல முறையில் வியாபாரம் செய்து முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வீண் பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் நல்ல லாபம் காண்பார்கள். நண்பர்களும் கூட்டாளிகளும் நல்லவிதமாக உதவிகள் செய்வார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய கழனிகளை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். தரமான விதைகளைப் பயிரிடுவீர்கள். சிலர் குறுகிய காலப்பயிர்களை உற்பத்தி  செய்து இரட்டிப்பு லாபத்தை அடைவீர்கள். பழைய கடன்கள் தீரும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்கள் மதிப்பு மரியாதை உயரும். அனைவரும் உங்களைப் பாராட்டுவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.  தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். 

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சற்று தாமதம் உண்டாகும். உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் கிடைக்கும். 

பெண்மணிகளின் உடல்நலத்தில் சிறிது பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய மருத்துச் செலவுகள் உண்டாகாது. கணவரிடம் விட்டுக்கொடுத்துச் சென்று செயல்களை நிறைவுடன் செய்து முடிப்பர். கணவர் வழி உறவினர்கள் மத்தியில் உங்கள் புகழ் வளரும். ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். 

மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அதிக மதிப்பெண்கள் பெற பயிற்சிகள் மேற்கொள்ளவும்.  

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

***
மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டு அற்புதமான காரியங்கள் செய்து புகழ் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். இடையூறுகளைக் கண்டு கலக்கமடைய வேண்டாம். குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். உடன்பிறந்தோருக்கு தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் அன்பையும் ஆதரவையும் தக்கவைத்துக்கொள்வீர்கள். புதியவர்களின் நட்புகளைப் பெறுவீர்கள். இதனால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். வெளிநபர்களிடம் அநாவசியமாக பிரச்னைகள் வேண்டாம். புதிய கடனையும் தவிர்க்கவும். மனதில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். சமுதாயத்தில் புகழும் கௌரவமும் கூடும்.  

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் மந்தமான செயல்கள் சுறுசுறுப்பாக நடக்கத் தொடங்கி இலக்குகளை சுலபமாக எட்டுவீர்கள். உடலில் இருந்த ஆயாசமும் பறந்துவிடும்.  சுலபமான முடிவுகளை எடுப்பீர்கள். தயக்கம் காட்டிய முயற்சிகளில் முழுமனதுடன் செயல்படுத்துவீர்கள், உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை சரியான நேரத்தில் கைதூக்கி விடுவீர்கள். செல்வாக்கோடு வலம் வருவீர்கள். புதிய தொழில் நுட்பங்களையும் ஆராய்ந்து கற்பீர்கள். குழந்தைகளாலும் மகிழ்ச்சி உண்டாகும். மனதிற்குப்பிடித்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் தெளிந்த சிந்தனைகளால் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவீர்கள். எதிர்ப்புகளையும் தடைகளையும் தாக்குப்பிடித்து தளராமல் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படாது. எதிர்காலத்தைப் பற்றிய பயம் மறையும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் அனைத்து காரியங்களையும் சரியாகத் திட்டமிட்டு முன்னெச்சரிக்கை உணர்வுடன் செய்து முடிப்பீர்கள். எல்லா விஷயங்களிலும் ஏதேனும் ஒரு குறை ஏற்படலாமென்பதால் முழுதிருப்தியுடன் வெற்றி பெறுவது கடினம் என்கிற நிலையில் இந்த காலகட்டம் அமைகிறது. 

உத்தியோகஸ்தர்கள் வேலையில் கெடுபிடிகள் குறையக் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.  எதிர்பார்த்த பணவரவு உண்டாகி உங்களின் கஷ்டம் குறையும். புதிய பொறுப்புகளைப் பெற்று உங்கள் மதிப்பு உயரும். பதவி உயர்வும் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதில் தாமதமேற்படும். கூட்டாளிகளுடன் குழப்பமான சூழ்நிலை உருவாகலாம். அதனால் அவர்களைக் கலந்தாலோசிக்காமல் எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். வியாபாரத்தைப் பெருக்க புதிய கடன்களை வாங்குவீர்கள்; குறித்த காலத்திற்குள் திரும்பச் செலுத்துவீர்கள். சிலருக்கு வழக்குகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

விவசாயிகள் அமோகமான விளைச்சலைக் காண்பார்கள். சக விவசாயிகளின் உதவிகளை தக்க நேரத்தில் பெறுவீர்கள், வயல்வரப்பு சண்டைகளில் முடிவைக் காண்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். புதிய குத்தகைகளை நாடிப் பெறுவீர்கள். உங்கள் அந்தஸ்து செல்வாக்கு உயரும்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும் செயல்திறனும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமான திருப்பங்களைச் சந்திக்கும். சமூகத்தில் உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெயரும் புகழும் உயரும். 

கலைத்துறையினருக்கு கைநழுவிப்போன நல்ல வாய்ப்புகள் திரும்ப கைவந்து சேரும்.  உங்களின் தோற்றத்தில் கவர்ச்சி உண்டாகும். மிடுக்கான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். தொழிலில் திறமையுடனும் தெளிவுடனும் பணியாற்றி முன்பைவிட வருமானத்தைக் காண்பீர்கள்.  

பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். கணவரிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள்.  சரளமான பணவரவால் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகளுடனும் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். 

மாணவமணிகள் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர்களின் அனுசரணை போக்கால் மகிழ்ச்சி அடைவீர்கள். 

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

***
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில்  தெய்வ பலம் அனுக்கிரகம் முழுமையாகக் கிடைக்கும். அதனால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்கிற ரீதியில் கஷ்டங்கள் மறையும். நேர்த்திக் கடன்களை குடும்பத்துடன் சென்று செலுத்திவிடுவீர்கள்.

பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். வருமானத்தின் ஒரு பகுதியை தரும காரியங்களுக்குச் செலவிடுவீர்கள். வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். பெற்றோர்களின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பயணங்களாலும் நன்மைகள் உண்டாகும். நண்பர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் சுறுசுறுப்பு கூடும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். கடினமான வேலைகளைச் சுலபமாகச் செய்து முடித்து விடுவீர்கள். பொருளாதாரம் ஏற்றமாகவே இருக்கும்.  

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கவலைகள் யாவும் படிப்படியாக குறையும். கல்வியில் முன்னேறுவீர்கள். உடன்பிறந்தோருக்கு குறிப்பாக இளையவர்களுக்குச் சாதகமாக இருப்பீர்கள். முன் கோபத்தைத் தவிர்த்தால் நல்லது. பண விஷயத்திலும் சேமிப்பு விஷயத்திலும் கவனமாக இருக்கவும். நண்பர்களுக்கு கடன் கொடுத்தால் நட்பை இழக்க நேரிடும். நண்பர்களின் குறைகளைப் பெரிது படுத்த வேண்டாம். உடல் ஆரோக்கியத்தைச் சிறப்பாக பராமரிப்பீர்கள்.  

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் நெடுநாளைய ஆசை பூர்த்தியாகும். மனதில் திருப்தி உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியமும் உண்டாகும். இல்லத்திற்குத் தேவையான நவீன பொருள்களை வாங்குவீர்கள். சமயத்திற்கு ஏற்றாற்போல் பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள்.

நேர்முக மறைமுக எதிர்ப்புகள் மறைந்து தனிக்காட்டு ராஜாவாக வலம் வருவீர்கள். "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்களே!' அதற்கேற்றாற் போல் உங்களுக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அடுத்தவர்களின் உதவியில்லாமல் காரியங்களைச் செய்யும் ஆற்றல் உண்டாகும். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற வகையில் பிரகாசிப்பீர்கள் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் தொய்வு இல்லாமல் நடந்து முடியும். சரியான பயிற்சிகளை மேற்கொண்டு திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிறுசிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பணவரவிற்குக் குறைவு ஏற்படாது.  

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சீரான நிலையை காண்பார்கள். கடினமான விஷயங்களைச் செய்ய முயற்சிக்க வேண்டாம். கூட்டாளிகள் செய்யும் மறைமுகத் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருக்கவும். எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்கால கனவுகள் பலிக்க ரகசிய திட்டங்கள் திட்டுவீர்கள். விவசாயிகள் குறுகிய காலப்பயிர்களையும் ஊடுபயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்குவீர்கள். புதிய குத்தகைகளை நன்கு யோசித்து எடுக்கவும்.  

அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளைச் சரிவரச் செய்து முடிப்பீர்கள். அனாவசியப் பிரச்னைகளில் நீங்கள் சிக்கிக்கொள்ள நேரிடலாம். உட்கட்சிப் பூசல்களிலிருந்து  ஒதுங்கி " கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் பணியாற்றவும். காரியங்கள் தாமதமானாலும் பிறகு சரியாகிவிடும். 

கலைத்துறையினர் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். சிறிய தடைகளுக்குப்பிறகே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். வெளிவட்டாரத்தில் பழகும் போது கவனமாக இருக்கவும். அனாவசியப் பழிகளுக்கு நீங்கள் ஆளாக நேரிடும். உடன்பிறந்தோர் உங்களுக்கு இணக்கமாக இருப்பார்கள். 

மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்து படிக்கவும். மாநில அளவில் சாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு இருப்பதால் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். 

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.

***

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் அனைத்து காரியங்களிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் உற்றார் உறவினர்களிடம் மிகவும் நெருங்காமலும் பெரிதும் விலகாமலும் இருந்து செயல்படுவீர்கள்.  வழக்கு விஷயங்களில் விட்டுக்கொடுத்து சமரசமாகச் செய்வீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். சிக்கனமாக இருந்து சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். 

எதிர்பார்த்த பயணங்களை மேற்கொள்வீர்கள். இல்லத்தில் சுமுகமான பாகப்பிரிவினை ஏற்பட்டு சொத்துகள் கைவந்து சேரும். தர்ம சிந்தனை மேலோங்கும். சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து சரியான முடிவெடுப்பீர்கள். வேலைகளில் பளு கூடும். இருப்பினும் உற்சாகத்துடன் காரியமாற்றுவீர்கள். சேமிப்பையும் சரியான முறையில் முதலீடு செய்வது அவசியம். பெரியவர்களிடம் பேசும்போது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். எனவே யோசித்துப் பேசவும். 

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் நடக்காது என்று பயந்த காரியங்கள் சுலபமாக நடக்கும். செய்தொழிலில் புதிய  மெருகு கூடும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்வீர்கள். உங்களை விட்டுப்பிரிந்துபோன நண்பர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். உங்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தவர்கள் தானாகவே அடங்கிப்போவார்கள். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். செயல்களில் முக்கிய திருப்புமுனையை காண்பீர்கள். 

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் மனதில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் ஏற்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் குறைவு உண்டாகாது. பழைய கடன்களிலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள். பிரச்னைகளும் முடிவுக்கு வரும்.  நூதன பயிற்சிகளில் சிரமமின்றி வெற்றி பெறுவீர்கள். நினைவாற்றல் கூடும்.  மனதில் தோன்றும் எண்ணங்களை உத்வேகத்துடன் செயல்படுத்துவீர்கள். முன்னேற்றகரமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிற்கால மகத்தான சாதனைகளுக்கு அடித்தளமாக அமையும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் குளறுபடிகள் ஏற்படாது. ஊதியம் சரியாக வந்து கொண்டிருக்கும். புதிய முயற்சிகளில் யோசித்து இறங்கவும். பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. கோபப்பட்டு எவரிடமும் பேச வேண்டாம். மேலதிகாரிகளிடம் அவசரப்பட்டு பேசி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாக நடக்கும்.

வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முதலீடுகள் தவிர்ப்பது உத்தமம். விவசாயிகள் இந்த காலகட்டத்தில் பெரிய மாற்றங்கள் எதையும் சந்திக்க முடியாமல் போகும். பழைய குத்தகைகளை முடித்துக் கொடுத்த பிறகே புதிய குத்தகைகளை எடுக்கவும். தேவைக்கேற்ப வருமானம் வந்துகொண்டிருந்தாலும் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும். 

அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். தொண்டர்களை அனுசரித்து நடந்துகொண்டு செயல்களை முடிப்பீர்கள். கட்சிப்பிரசாரங்களில்  முழுமூச்சுடன் இறங்குவீர்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். நண்பர்களால் ஏற்றம் பெறுவீர்கள். 

கலைத்துறையினருக்கு யோகபாக்கியங்கள் கூடும். புதிய வாழ்க்கை முறையை தேர்தெடுப்பீர்கள். துறையில் புதிய அணுகுமுறைகளைச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள்.சக கலைஞர்களை அரவணைத்துச் செல்லவும்.  

பெண்மணிகளுக்கு பெற்றோர் வழியில் பெருமைகள் வந்து சேரும். பிள்ளைகளாலும் பெயரும் புகழும் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். மூத்த சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். 

மாணவமணிகள் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் படிப்பில் ஈடுபடுவீர்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம்.  நண்பர்களுடன் சேர்ந்து தகாத செயல்களிலும் ஈடுபட வேண்டாம். 

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com