மருத்துவம், விஞ்ஞானத்தால் கண்டறிய முடியாத பல விஷயங்களுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் தீர்வு உண்டு..

வராஹமிஹிரரின் ஸ்லோகங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அது பொருளற்றதாகக்கூட தோன்றலாம். ஆனால், அதனுள் பொதிந்திருக்கும் ரகசியங்களை உணர ஆழ்ந்த அறிவும், அனுபவமும், காலமும் தேவைப்படும்

ஆம், அடுத்த பத்து ஆண்டுகள் கற்றலையே வேள்வியாக்கினேன். கற்றல், கற்றல், கற்றலே என் வாழ்க்கையானது. இதனால், என்னால் ஜோதிட சாஸ்திரத்தில் புதிய உயரங்களைத் தொடமுடிந்தது.

ஆசிரியருக்கு ஒரு மாணவன் செலுத்தும் நன்றியின் நல்ல அடையாளம், அந்த ஆசிரியரைவிட அனைத்து வகையிலும் தான் சிறந்து விளங்குவதுதான். இதையே என் நெஞ்சில் பதிய வைத்துக்கொண்டேன். அதற்கேற்பவே என் ஆய்வுகளும் தொடர்ந்தன.

ஒவ்வொரு நிறையிலும் நம் கண்களுக்குப் புலப்படாமல் ஒரு குறை மறைந்திருக்கும். அதேபோல், ஒவ்வொரு குறையிலும் ஒரு நிறை மறைந்திருக்கும். இந்த உண்மையைத்தான் வராஹமிஹிரரின் ஹோரா சாஸ்திரத்தில் வியோனி ஸம்ஞ்யாயம் என்னும் அத்தியாயம் எனக்கு உணர்த்தியது. ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு புதிய கோணத்தை இது எனக்குக் காட்டியது.

ஸ்லோகத்துக்கும் அதன் விளக்க உரைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் உயரங்களை அந்த அத்தியாயத்தில்தான் புரிந்துகொள்ள முடிந்தது.

சந்த்ரோபகத்விரஸபாகஸமானரூபம் என்பது ஸ்லோகத்தில் ஒரு வாக்கியம்.

சந்த்ர உபகத் த்விரஸமான ஸமான ரூபம் என்று பிரித்துப் படித்தால், சந்திரன் உபமிக்கின்ற (நிற்கின்ற) த்விரஸ பாகத்துக்கு சமமான ரூபத்தை அடைவான் என்பது பொருளாகும்.

அதாவது, த்விரஸ பாகம் என்பதை இரண்டு விதத்தில் பொருள் விளங்கிக்கொள்ளலாம்.

த்வியான ரஸ பாகம். அதாவது, த்வி என்றால்  இரண்டு, ரஸம் என்றால் ஆறு.

2 X 1/6 (ஆறில் ஒரு பாகம்). அதாவது, மூன்றில் ஒரு பாகம். இதை த்ரேக்காண ரூபம் என்று சொல்வார்கள்.

த்விரஸமான பாகம் என்பது 2 X 6-ல் ஒரு பாகம். அதாவது, பன்னிரெண்டில் ஒரு பாகம். இதை, த்வாதசாம்ச ரூபம் என்று சொல்வார்கள்.

ஆக, சந்திரன் அடைந்த த்ரேக்காணத்துக்குச் சமமான ரூபம் என்ற ஒரு பொருளும், சந்திரன் அடைந்த த்வாதஸாம்சத்துக்குச் சமமான ரூபம் என ஒரு பொருளும் கிடைக்கிறது. இதில், எது சரியானது என்பதை அனுபவத்தின் அடிப்படையில்தான் உணரவேண்டி உள்ளது.

இதுபோன்ற நுணுக்கமான விஷயங்களை, விளக்க உரைகளைப் படிப்பதன் மூலம் உணர்ந்தறிய முடியாது. ஏனெனில், விளக்க உரை என்பது அதை எழுதியவரின் புரிதலுடன்தான் அமைந்திருக்கும்.

ஹோரா சாஸ்திரத்தில் வியோனி ஸம்ஞ்யாயம் என்ற இந்த அத்தியாயம் முழுவதும், மனித ஜனனம் நீங்கலாக தாவர வர்க்கம் தொடங்கி, ஐந்தறிவு ஜீவராசிகள் வரை உள்ள அனைத்துவகையான ஜனனங்களைப் பற்றியே கூறுகிறது. இவற்றை மேலோட்டமாகப் பார்த்தறிந்தால், நமக்கு இதன் விஷயங்கள் தேவையற்ற ஒன்றாகத்தான் தோன்றும். ஆனால், ஆழமாக ஆய்ந்தறிந்து உணரும்போதுதான் அதன் பயன்பாடுகள், கணக்கில் அடங்கா விஷயங்களுக்குப் பொருளாக அமைந்திருப்பதை புரிந்துணர முடியும்.

வராஹமிஹிரரின் ஸ்லோகங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அது பொருளற்றதாகக்கூட தோன்றலாம். ஆனால், அதனுள் பொதிந்திருக்கும் ரகசியங்களை உணர ஆழ்ந்த அறிவும், அனுபவமும், காலமும் தேவைப்படும் என்பதை அனுபவத்தினால் என்னால் உணர முடிகிறது.

என்னைப் பொருத்தவரையில், வராஹமிஹிரரின் ஸ்லோகங்களில் ஒவ்வொரு வார்த்தையும் மந்தர வார்த்தை என்றுதான் சொல்லுவேன். அதில் ஒரு எழுத்தைக்கூட மாற்றியமைக்க முடியாத அளவு வலுவான இலக்கணக் கட்டமைப்புகொண்ட விருத்தங்களாக எழுதப்பட்டுள்ளது.

எனக்கு ஜோதிட சாஸ்திரம் கற்றுத் தந்த குருமார்கள், ஹோரா சாஸ்திரத்தை நாங்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்வார்கள். ஆம், அதைக் கற்றுக்கொண்டுதான் இருக்க முடியுமே தவிர, கற்று முடிக்க முடியாது. அந்த அளவுக்கு அதில் ஆழமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு விதையானது ஆல விருட்சத்தையே உள்ளடக்கி வைத்திருப்பதற்கு ஒப்பானது, ஒரு ஸ்லோகத்தில் உள்ள விஷயங்களும் ரகசியங்களும். இது மிகையே இல்லை.

ஜோதிட சாஸ்திரம் மூன்று ஸ்கந்தங்களை உள்ளடக்கியது. அவை – கணித ஸ்கந்தம், ஜாதக ஸ்கந்தம், சாகா ஸ்கந்தம்.

  • சூரியன் முதலான கிரகங்களின் சஞ்சாரத்தைப் பற்றிக் கூறுவது கணித ஸ்கந்தம்.
  • கிரகங்கள் மூலம் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளை அறிய உதவுவது ஜாதக ஸ்கந்தம்.
  • சாகா ஸ்கந்தம் என்பது ப்ரச்ன ஸ்கந்தம்.

மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்களைப் போன்ற வேதரூபப் பிரமாணமாக ஆகிறது. ஜோதிட சாஸ்திரமானது சிக்ஷா, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்ற ஆறு அங்கங்களுள் ஒன்றாக இருப்பதால், வேத அதிகாரி என்று அறியப்படும் ப்ராமணன், இதை அவசியம் படிக்க வேண்டும் என்றாகிறது.

யாகங்களுக்காகவே வேதங்கள் ஏற்பட்டன. காலத்தின் முறைப்படியே யாகங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஜோதிடம் என்பது காலத்தையே உபயோகிப்பதால், ஜோதிடம் வேதாங்கமாகக் கூறப்பட்டதோடு மட்டுமல்லாமல், வேத புருஷனின் ஆறு அங்கங்களில் கண்ணாகவும் ஆகிறது.

எனவே, எவன் ஒருவன் ஜோதிட சாஸ்திரத்தை நன்கு அறிவானோ, அவன் அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு புருஷார்த்தங்களை அடைவதுடன், இம்மையில் நல்ல கீர்த்தியையும் அடைவான் என்று சொல்லப்பட்டிருப்பதால், மற்ற வேதங்களுள் ஜோதிடமே சிறந்தது என்று உபதேசிக்கப்படுகிறது.

மற்றொரு வகையில், ஜோதிட சாஸ்திரத்தை ஆறு அங்கங்களாக நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். அவை – ஜாதகம், கோளம், நிமித்தம், ப்ரச்னம், முகூர்த்தம், கணிதம். இதில், ப்ரச்னம் பற்றி பலவிதமான கருத்துகள் நம்மிடையே நிலவி வருகிறது.

பூர்வஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் சுக, துக்கங்களை நாம் அனுபவிக்கிறோம். இதை ஜாதகத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது எனும்போது, ப்ரச்னம் என்ற சாஸ்திரத்தின் பயன் என்ன என்ற கேள்வி எழுவது நியாயமே.

நேரடியாகச் சொல்லப்போனால், இன்று நாம் அனுபவிக்கும் சுக, துக்கங்களுக்குக் காரணம் நாம் சேர்த்து வைத்த பூர்வஜென்மப் பயன்களா, அல்லது இந்த ஜென்மத்தில் இதுவரை நாம் செய்த செயல்களா என்ற அளவில் கேள்வி எழுவதால், இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் செயல்களை ஜாதகத்தை மட்டும் வைத்து கண்டுணர முடியாது என்ற அளவில் ப்ரச்னம் பயன்பாட்டுக்கு வருகிறது.

சரி, பிரச்னம் என்பது என்ன? அதை நாம் எவ்வாறு புரிந்துவைத்துள்ளோம்?

ப்ரச்னம் என்றால் கேள்வி. ஒரு கேள்வி கேட்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கேள்வி கேட்கப்பட்ட நேரத்தில் அமைந்துள்ள கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டோ, சோழிகளை உருட்டி ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்து அதை ஆரூடமாக (லக்னம்) கொண்டோ, அன்று அமைந்த கிரக நிலையை வைத்து, அந்தக் கேள்விக்குப் பதில் உரைத்தல் என்பது ப்ரச்னத்தில் பொதுவான ஒன்று.

ப்ரச்னம் என்பது, ஒரு குடும்பப் பாரம்பரியத்தின் கடந்த கால வினைப் பதிவுகளையும், அதற்குரிய சரியான காரணங்களையும் தெளிவாகக் கண்டுணர ப்ரச்னத்தை மையமாகக் கொண்டு ஜாதகம், முகூர்த்தம், நிமித்தம் போன்ற பிரிவுகளோடு, கணிதத் துல்லியத்தையும் பயன்படுத்தி, அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் முழுத் தீர்வாக எதிர்காலச் சந்ததிக்கும் பயன்படுமாறு செய்துகொடுப்பதாகும்.

இதற்கு, ஜோதிட சாஸ்திரத்தில் ப்ரச்னத்தைக் கையாள மிகத் தெளிவான ஞானம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தக்க சூழ்நிலைக்கு ஏற்ப யூகிக்கும் திறனும் வாய்க்கப்பெற வேண்டும். இதற்கு, ஒட்டுமொத்தமான ஒருங்கிணைந்த பார்வை தேவைப்படுகிறது. இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு –

அகத்திய மாமுனிக்கு உதவியாக தேரைச் சித்தர் என்பவர் இருந்தார். ஒரு சமயம், மன்னருக்குத் தீராத தலைவலி. ராஜ வைத்தியர்கள் எவ்வளவு முயன்றும் மன்னரின் தலைவலியைக் குணப்படுத்த முடியவில்லை. முடிவில் அகத்திய முனியைத் தேடிவந்தார் மன்னர். அகத்தியர் தனது ஞான அறிவால், மன்னரின் தலைவலிக்கான காரணத்தை உணர்ந்துகொண்டார்.

மன்னரின் மூக்குத் துவாரத்தின் வழியே ஒரு சிறு தேரை உள் சென்று, கபாலத்தை அடைந்து, மூளையில் வளர்ந்து வந்திருக்கிறது. சிகிச்சையின்போது, கபால சாஸ்திர முறைப்படி கபாலத்தை நீக்கிப் பார்த்தபோது, அதன் மேல்பாகத்தில் தேரை இருந்தது தெரிந்தது. ஆனால், வெளிக்காற்று பட்டவுடன் அந்தத் தேரை குறுக்கும் நெடுக்குமாக கபாலத்துக்குள் நகரும்பட்சத்தில், மூளை சிதைந்துவிடும். அது மன்னருக்குப் பெரும் ஆபத்தாக முடிந்துவிடும். என்ன செய்வது என்று அகத்தியருக்குப் புரியவில்லை. அப்போது தேரைச் சித்தர், நீர் நிறைந்த ஒரு வாளியை தேரையின் கண்ணில் படும்படி வைத்தார். விநாடிக்கும் குறைவான நேரத்தில் வாளித் தண்ணீரில் தேரை குதித்துவிட்டது. மன்னருக்கு ஏற்பட இருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது, அவரது நீண்ட நாள் தலைவலியும் குணமானது.

இங்கு, சாஸ்திரத்தின் நுட்பத்தையும் தாண்டி, யூகிக்கும் திறனும் ஒருங்கிணைந்த பார்வையும் சேர்ந்துதான் மன்னரைக் காப்பாற்றியது என்றால் அதில் வியப்பில்லை. இந்த நுட்பம்தான் ப்ரச்னம் பார்த்து பலன் உரைக்கும்போது தேவைப்படுகிறது. அதற்கு, மதிநுட்பமும் அனுபவமும், கடவுளின் அனுக்கிரகமும் கைவரப் பெற்றிருக்க வேண்டும்.

இயற்பியல், வேதியியல் போன்ற அறிவியல் அல்ல ஜோதிடம். ஞானத்தைப் பற்றிய அறிவியலே ஜோதிடம். ஆதிசங்கரர், திருவள்ளுவர், ராமானுஜர், ஔவை போன்றோரும், ராமகிருஷ்ண பரமஹம்சர், வள்ளலார், ரமணர் போன்ற இக்கால அருளாளர்களும், எந்த ஒரு சர்வகலாசாலையிலும் படித்து அறிவை விருத்தி செய்து, அதன்மூலம் தமது கருத்துகளை உலகுக்குச் சொன்னதில்லை. இருந்தும், அவர்களைத்தான் ஞானவான்கள் என்று இந்த உலகம் சொல்கிறது.

ஒன்றை அறிந்துகொண்டால் அறிவாளி என்கிறோம். ஞானம் என்பது அறிந்துகொள்வதல்ல. ஜோதிடம் என்ற ஞானமும் அதுபோல்தான் கைவரப்பட வேண்டும். ஜோதிடம் அறிந்தவன் ஞானவானாவான்.

விஞ்ஞானிகள் இன்று கண்டுபிடிப்பதையெல்லாம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே எளிய ஸ்லோகங்களில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

ஜோதிடம் என்பது புற உலகைப் பற்றியதல்ல. அது ஒவ்வொரு மனிதனின் உள் (அக) உலகைப் பற்றியது. எல்லாவற்றையும் கடந்த, அறியாத, அறிய முடியாத விஷயங்களையும் கண்டுணர்ந்து சரி செய்யும் ஒன்றாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது.

மருத்துவம் மற்றும் விஞ்ஞானத்தால் கண்டறிய முடியாத பல விஷயங்களுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் தீர்வு உண்டு. ஜோதிடம் தெரியாமல் மருத்துவம் பார்க்காதே என்பது ஆயுர்வேதம் படித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

காரணம் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் அடிப்படையில் உடற்கூறில் நோய்கள் ஏற்பட்டாலும், மனதின் நிலையைப் பொறுத்தே அதன் குணம் அமைகிறது. அதிகமான துக்கமோ, அதிகமான ஆசையோகூட மனநோயாகவே கருத்தப்படுகிறது. இது, உடல்கூறுகளையும் பாதித்துவிடுகிறது.

செய்வினை, மருந்திடல், ஆவிகள் தொல்லை, கண் திருஷ்டி போன்றவற்றை மேலை நாடுகளும் இன்று ஏற்றுக்கொண்டுவிட்டன. இதுபோன்ற விஷயங்கள் ஆன்மாவுடன் சம்பந்தப்பட்டது. அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை எந்த மருத்துவமும், விஞ்ஞானமும் குணப்படுத்த இயலாது. கர்ம பலன்களை ஒட்டியே இவை அமைகின்றன. இங்குதான், ஜோதிட சாஸ்திரம் எல்லாவற்றுக்கும் முழுத் தீர்வாகிறது.

அந்த வகையில், ஜோதிட சாஸ்திரத்தைப் பற்றி அடுத்து வரும் அத்தியாயங்களில் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

  • வாழ்வியல் வழிகாட்டி RK (தொடர்புக்கு 9443436695)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com