இன்று இவரை வழிபட்டால் வாழ்வில் அனைத்துத் தடைகளும் விலகுமாம்!

இன்று சங்கடஹர சதுர்த்தி. விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடங்கள் நீக்கிடும்...
இன்று இவரை வழிபட்டால் வாழ்வில் அனைத்துத் தடைகளும் விலகுமாம்!

இன்று சங்கடஹர சதுர்த்தி. விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடங்கள் நீக்கிடும் சங்கடஹர சதுர்த்தி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. 

சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தைப் பெற்று சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம். பிரதி மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லாக் காரியங்களும் வெற்றியடையும்.

சதுர்த்தி புராணக் கதை
விநாயகர் ஒரு முறை கைலாயத்தில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்துவிட்டுப் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.

அப்போது விநாயகர் சந்திரனிடம், இன்று முதல் சுக்கில பட்ச சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும் எனவும், அதைப் போக்கிக் கொள்ள சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்! எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப்படுகிறது.

விரதம் இருப்பது எப்படி?
சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொள்ள வேண்டும்.

அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்துப் பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். விநாயகருக்கு நிவேதனம் செய்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாகக் கொள்வது சிறப்பு.

விநாயகருக்கான பாடல்களையும், துதிகளையும் பாடி போற்றி வழிபட்டால் வாழ்வில் அனைத்துத் தடைகளும் நீங்கும் என்பது நிதர்சனம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com