காளஹஸ்தியில் சர்ப்ப சாந்தி செய்வோரின் கவனத்திற்கு......

காளஹஸ்திக்குச் செல்லும் முன் திருப்பதிக்குச் சென்று ஸ்ரீ வேங்கடாசலபதியை வழிபட்டு....
காளஹஸ்தியில் சர்ப்ப சாந்தி செய்வோரின் கவனத்திற்கு......

திருப்பதியில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீ காளஹஸ்தி திருக்கோயில் இங்கு, ராகு, கேது தோஷம் காரணமாக, திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் நாகப் பிரதிஷ்டை பூஜை செய்வது வழக்கம். இதைச் செய்வதால், நீண்ட காலமாக தடைப்பட்டு வரும் திருமணம் உடனடியாக நடந்தேறும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும். 

காளஹஸ்தியில் முறையாக சர்ப்ப சாந்தி செய்யும் முறை

காளஹஸ்திக்குச் செல்லும் முன் திருப்பதிக்குச் சென்று ஸ்ரீ வேங்கடாசலபதியை வழிபட்டு வணங்கி விட்டுப் பின் காளஹஸ்திக்கு திரும்ப வேண்டும். அங்கு வந்து 2 வெள்ளி நாகங்கள் வாங்க வேண்டும். இது கோயிலுக்கு முன்புறம் விற்கப்படும். ஒரு கறுப்பு நாகம். ஒரு வெள்ளை நாகம் என இரு நாகங்கள் வாங்க வேண்டும். 

ஆறு, கருப்பு ரவிக்கை துண்டு(பிளவுஸ்), ஆறு, சிவப்பு ரவிக்கை துண்டு வாங்க வேண்டும், ஆறு புளியோதரை, ஆறு தயிர் சாதம் வாங்கிக் கொள்ள வேண்டும். பின் தேங்காய், பழம், புஷ்பம், கற்பூரம், ஊதுபத்தி இவைகளை வாங்கிக் கொண்டு பணம் கட்டி அர்ச்சனை டிக்கெட் பெற்றுக் கொண்டு கோயிலினுள் செல்ல வேண்டும். 

கோயிலினுள் சென்று ஸ்ரீ காளஹஸ்தி நாதர் இருக்கும் சன்னதிக்கு எதிரில் பரிகார பூஜை செய்யும் இடத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் அருகில் இருக்கும் புரோகிதரிடம் இரு நாகங்களையும், பூஜைப் பொருட்களையும் கொடுக்க வேண்டும். அங்குப் புரோகிதர் உங்களை அமரச் செய்து கையில் இரு நாகங்களையும் வைத்து குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் சர்ப்ப சாந்திக்கான ஸ்லோகங்களை சொல்வார். அதை காதில் வாங்கி அவர் சொல்ல சொல்ல நாம் பரிகார ஸ்லோகங்களையும், பூஜைகளையும் செய்ய வேண்டும். 

கடைசியாக அந்த நாகங்களை கையில் எடுத்துக்கொண்டு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி சன்னதிக்கு வந்து சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள உண்டியலில் இரண்டு நாகங்களையும் தலையை சுற்றிப் போட வேண்டும். பின்பு ஞானப்பிரசுன்னாம்பிகையை தரிசனம் செய்துவிட்டு வெளியேற வேண்டும். 

அங்கிருந்து வெளியே வந்து ரவிக்கைத் துணிகளை சுமங்கலிப் பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும். பின்பு 12 தயிர், புளியோதரை சாதப் பொட்டலங்களையும் அங்குக் கோயிலின் முன் வீற்றிருக்கும் ஊனமுற்றோர்களுக்குத் தானமாக கொடுக்க வேண்டும். 

பின்னர், அங்கு உள்ள சத்திரத்தில் அறை எடுத்துத் தங்கி விட்டு காலையில் எழுந்து மறுபடியும் காளஹஸ்தி நாதர் கோயில் இருக்கும் திசையை நோக்கி வணங்கிவிட்டு ஊர் திரும்ப வேண்டும் இதுவே முறையான சர்ப்ப சாந்தி செய்யும் முறையாகும். இது நடைமுறையில் நல்ல பலனை அளிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com