ஷஷ்டியப்த பூர்த்தியா? திருப்பைஞீலியில் ஆயுஷ்ய ஹோமம் செய்யுங்க: ஆயுள் பலம் கூடும்

ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். நவகிரகங்களில் ஆயுள்காரகன் சனி பகவனாவார்.
ஷஷ்டியப்த பூர்த்தியா? திருப்பைஞீலியில் ஆயுஷ்ய ஹோமம் செய்யுங்க: ஆயுள் பலம் கூடும்


ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். நவகிரகங்களில் ஆயுள்காரகன் சனி பகவனாவார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் பாவ அதிபதியும் சனி பகவானும் பலம் பெற்று அமைந்து விட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அதுவே எட்டாம் பாவம் பலமிழந்து சனி பகவானும் எட்டாம் அதிபதியும் வக்ரம், பகை, நீசம் பாவ கிரக பார்வை பெற்றிருந்தால் இளம் வயதிலேயே கண்டங்களை எதிர் கொள்ளக்கூடிய அமைப்பு ஏற்படுகிறது. அது போல பலமிழந்த மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள்
உண்டாகிறது

ஒருவருடைய ஆயுள் தன்மையை எப்படி அறிவது?
லக்னாதிபதி மற்றும் அஷ்டமாதிபதி இந்த ராசியில் உள்ளார்கள் என்பதைக் கொண்டு அறியலாம். இவர்கள் இருவரும் சர ராசியில் இருந்தால் தீர்காயுள். ஸ்திர ராசியில் இருந்தால் அற்ப ஆயுள். உபய ராசியில் இருந்தால் மத்திம ஆயுள் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னமும் ஆயுள் பாவம் மற்றும் ஆயுள் காரகன் சனைச்சர பகவான் ஆகிய மூவரும் கெட்டிருந்தால் அவர்களுக்கு அடிக்கடி மரண பயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற ஜாதக அமைப்புள்ளவர்கள் திருச்சி திருப்பைஞ்ஞீலி சென்று ஆயுஷ்ய ஹோமம் செய்தால் மரண பயம் நீங்கும் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

குழந்தைகளுக்கு ஆயுஷ்ய ஹோமம்
குழந்தை பிறந்து பன்னிரெண்டு மாதங்கள் முடிந்து 13வது மாதம் குழந்தை பிறந்த அதே தமிழ் மாதமாகும்.

அந்த மாதத்தில் குழந்தை பிறந்த அதே நக்ஷத்திரம் வரும் தினத்தில் சுபவேளையில் அப்தபூர்த்தி ஆயுஷ்யஹோமம் செய்யப்படுகிறது. அப்த என்றால் ஒன்று, பூர்த்தி என்றால் நிறைவு. எனவே அப்த பூர்த்தி என்பதை 'ஆண்டு நிறைவு” என்றும் சொல்வார்கள்.  

ஜன்ம நக்ஷத்திரத்தில் குழந்தைக்கு புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு ஸ்நானம் செய்து வைத்து, புது ஆடைகள் அணிவித்து, ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வித்து, குழந்தையின் அம்மான் குழந்தையைத் தோளில் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். பின்னர் ஹோமம் வளர்த்து, 'ஆயுஷ்ய சூக்தம்” என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு தடவை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். 'மிருத்யூ” பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்” என்று இது பெயர் பெற்றது.

ஆயுள் வளர்க்கும் ஆயுஷ்ய ஹோமங்கள்
ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்து நக்ஷத்திர சூக்தம் எனும் 27 நக்ஷத்திரங்களை போற்றும் மந்திரங்களைச் ஜெபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு ஸ்நானம் செய்வித்து தீர்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். ஹோமம் செய்த நெய்யின் மிச்சத்தில் அன்னத்தைக் கலந்து அதை மந்திர பூர்வமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

இந்த ஆண்டுநிறைவு, நடப்பு மாதத்தில் இரு நக்ஷத்திரங்கள் வருமானால் பின் வருகிற (இரண்டாவதாக வருகின்ற) நக்ஷத்திரத்திலேயே இதைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. சில சமயம் ஒரே நக்ஷத்திரம் இரண்டு தினங்களில் வரும். இதனால் என்று அனுஷ்டிப்பது என்ற குழப்பமும் வரும். அன்றைய தினத்தில் சூரிய உதயத்திலிருந்து உச்சிப் பொழுதுக்குள் குறைந்தது 12 நாழிகை அதாவது 4 மணி 48 நிமிட நேரம் என்று நக்ஷத்திரம் இருக்கிறதோ அன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டும்.

இதே முறையில்தான் ஒவ்வொரு பிறந்தநாளையும் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால் முதல் பிறந்த நாளோடு நிறுத்திவிட்டு பிறகு ஷஷ்டியப்த பூர்த்தி (60 வயது நிறைவு) பீமரத சாந்தி (70 வயது நிறைவு) சதாபிஷேகம் (என்பது வயது நிறைவு) சஹஸ்ராபிஷேகம் (ஆயிரம் பிறை கண்டவர்கள்) என முக்கிய நிகழ்வுகளை மட்டும் கொண்டாடுகின்றனர்.

திருப்பைஞ்ஞீலி
திருச்சி அடுத்த மண்ணச்சநல்லூருக்கு அருகில் திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் ஞீலிவனநாதர் கோயில் உள்ளது. ஞீலி என்பது ஒரு வகை கல்வாழை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை. பசுமையான ஞீலி வாழையை தல விருட்சமாக பெற்றதால் திருப்பபைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி எனும் வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞிலி என்று இத்தலம் பெயர் பெற்றது. 

ஞீலி வன நாதர்
இரண்டாவது கோபுரம் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவன நாதர் சன்னதியை அடையலாம். இங்குள்ள லிங்கமூர்த்தி சுயம்பாகும். எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலை செய்து வர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லவபர் என்றும் அழைக்கப்படுகிறார். பங்குனி, புரட்டாசி மாதங்களில் மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர் விழுகிறது.

எமன் சன்னதி
இரண்டாவது கோபுர வாயில் வெளி சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சன்னதியைக் காணலாம். திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்பபூர்த்தி, ஆயுள் விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.

திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமி தேவி சிவபெருமானிடம் முறையிட்டாள். மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்து தருமாறு முறையிட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.

ஆயுள் காரகனின் அதிதேவதை
சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளதாலும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவேனேஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் ஒன்பது குழியில் விளக்குத் தீபங்களாக வழிபடப்படுகின்றன. இங்கு ராவணன் திருவாயில் கோபுரம் ஒன்று உள்ளது. ராவணன், நவக்கிரகங்களையும் அடக்கி, ஒன்பது படிகளாக மாற்றி வைத்திருந்தான். இத்தல ராவணன் வாசல் கோபுரத்தைக் கடந்து வந்தால், ஒருவருடைய நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் விலகும் என்பது ஐதீகம்.

சோற்றுடை ஈஸ்வரர்
திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞிலி தலம் வரை கூட்டிவந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது.

அந்த லிங்க உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இச்சந்நிதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது.

திருமணம் கைகூட வாழை பரிகார பூஜை
இக்கோவிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள். அத்தகைய பெருமைபெற்ற வாழைக்கு பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும்

ஆயுள் பலம் தரும் திருப்பைஞ்ஞீலி
ஜாதகத்தில் ஆயுள் தோஷம் உள்ளவர்கள் ஆயுள் நீடிக்க திருப்பைஞீலியில் அருள்மிகு ஞீலிவன நாதரிடமும் எமனிடமும் வேண்டிக் கொள்ள மரண பயம் நீங்கும்.

எமன் சன்னதியில் ஆயுள் ஹோமங்கள் செய்கிறார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு பாலரிஷ்ட தோஷம், மாரகாதிபதிகளின் தசை, சனியும் ராகுவும் சேர்ந்து தசா புத்தியை நடத்துவது, சனியும் செவ்வாயும் தசா புத்தியை
நடத்துவது போன்ற ஜாதக அமைப்புள்ளவர்கள் இத்திருக்கோவிலுக்கு வந்து "ஆயுஷ்ஹோமம்" செய்து எமனை தரிசித்து சென்றால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. 

எமனுக்கு இழந்த பதவியை மீண்டும் அளித்ததாள் இழந்த பணிவாய்ப்புகள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, திருமண தடை நீங்க இத்தலத்தில் வேண்டிகொண்டால் நிறைவேரும் என்பது நம்பிக்கை.

இத்தலம் திருச்சிக்கு அருகில் சுமார் 12 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலி செல்ல நகரப் பேருந்து வசதிகள் உண்டு. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவெள்ளரை என்ற திவ்யதேச ஸ்தலம் இங்கிருந்து சுமார் 4 கி.மி. தொலைவில் இருக்கிறது.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com