கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் - பகுதி 1

இறைவன் பட்டீசுவரசுவாமி, இறைவிக்குப் பச்சைநாயகி என்று தமிழிலும், மரகதவல்லி என்று வடமொழியிலும்....
கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் - பகுதி 1

இறைவன் பட்டீசுவரசுவாமி, இறைவிக்குப் பச்சைநாயகி என்று தமிழிலும், மரகதவல்லி என்று வடமொழியிலும் திருப்பெயர்கள் வழங்கப்படுகிறது. சிவன்கோயில் என்றாலும் சிற்பங்களில் வைணவமும் ஏராளமாக இணைந்துள்ளது.

தலவிருட்சம்: இறவாப்பனை, பிறவாப் புளி, பன்னீர் மரம்

தீர்த்தம்: சிருங்கக் கிணறு. (இதைச் சிங்க தீர்த்தம் என்று தவறாகச் சொல்கின்றனர். அதற்குத் தகுந்தாற்போல் கற்சிலை சிங்கத்தையும் வைத்திருக்கிறார்கள்.) இங்கிருக்கும் திருக்குளத்தினுள் உள்ளார ஐந்து தீர்த்தங்கள் உண்டு எனவும் சொல்லப்படுகிறது.

மாதேசுவ கோயில் அழகிய சிற்றம்பலம்: ஆதிபெயர், பின்பு இடங்கை நாயக ஈஸ்வரமுடையார் என்பர்.

கனக சபை: நடராஜப் பெருமான் இருப்பிடம்

அம்பலவாணர் சந்நிதி: இதை சின்ன கோயில் என்பர். இதுதான் காலேசுவரம். இங்கு சுவாமியும் அம்பாளும் உண்டு. இங்குதான் நடராஜர் திருநடனம் செய்த புராதனமான பெரிய அரசமரம் உள்ளது. வாயில் முன்பு பெரிய உருவில் ரிஷபம் இருக்கிறது.

பட்டி விநாயகர்: சந்நிதி இதன் கீழ்தான் நச்சுப் பொய்கை இருந்ததாகக் கூறுவர்.

வட கைலாசம்: இங்குதான் பிரம்ம தீர்த்தம் என்றும் குண்டிகை தீர்த்தம் என்றும் கூறப்படும் கிணறு இருந்தது.

பட்டி சுற்றும் மேடை: இங்கு ஆதி அரசமரம், பிறவாப் புளியமரம், ஈசன் பள்ளன் உருவக் கோயில் இருந்த இடம்.

தென் கைலாசம்: இது பேரூரின் தென்மேற்கு பக்கத்தில் இருக்கிறது.

சோழன் துறை: அரசமரம் பெரியது. ஆதி அரசமரம் விழுந்துவிட்டது. இங்கு கணபதி, நாகர்கள் மற்றும் காஞ்சிமா நதிக்கரை உள்ள இடம்.

திருநீற்று மேடு: இப்பொழுது பாழ்பட்டு புதர்கள் சூழக் கிடக்கிறது.

சாந்தலிங்க சுவாமி சந்நிதி: திருக்கோயிலின் கிழக்குத் திசையில் இருக்கிறது.

மேற்கண்ட பழமையானவைகளில், திருக்கோயில் பனை, புளியமரம் மற்றும், தெப்பக்குளம் தவிர பெரும்பாலானவற்றைக் காணமுடியவில்லை.

***

கோவை திருப்பேரூர் ஆலயம் தொன்மையும் பழமையும் கொண்டது. இத்திருக்கோயிலின் கற்பக்கிருஹத்தை கரிகால் சோழன் அமைத்தான். ஆறாம் நூற்றாண்டில், அப்பர் பெருமான் இவ்வாலயத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் ஒரு பாண்டிய மன்னன், வைணவ ஆலயம் ஒன்றை இங்கே நிறுவினான்.

ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இவ்வாலயம் வந்து பாடியதை தேவாரம் எடுத்துக் காட்டுகிறது. இவ்வாலயத்துள் அமைந்திருக்கும் புகழ்வாய்ந்த கனகசபை, மதுரை அளாகத்ரி நாயக்கரால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலின் தெப்பக்குளம் மிக அழகானது. பதினாறு வளைவுகளைக் கொண்டது.

இத்திருக்கோயிலுக்குப் பெருமை சேர்ப்பவை - காஞ்சிமாநதி என்னும் நொய்யல் நதியாகும். (இப்போது இந்த நதியின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பை மற்றும் பாலித்தீன் கழிவுகளால் மாசுபட்டு மறைந்துள்ளது. பெரிய மழை ஒன்று பெய்தாலொழிய இந்நதி வழித்தடத்தைக் காண முடியாது.) அடுத்து சோழன் துறை, இதனருகில் பட்டிவிநாயக ஆலயம், வடகைலாசம், தென்கைலாசம் ஆலயங்கள்.

புராணம்

புராணம் என்பது பழஞ்சரிதங்கள் ஆகும். புராணங்கள் என்றால் பொய்யாகிய கட்டுக்கதை என்று சிலர் உரைப்பர். இவர்கள் அப்படி உரைப்பது அவர்களின் அறிவீனம். இவர்களின் அறிவீனம், ஆணவம், மடமை ஆகியவற்றை பேரூரார், இவர்களைப் பணிவிலும் நன்னெறியிற் இட்டுச்செல்ல அருள்வாராக! காமதேனு முக்தி அடைந்த தலம் இது. சுந்தரமூர்த்தி நாயனார் இக்கொங்கு நாட்டுக்கு எழுந்தருளி, இத்திருப்போரூர் வந்து பாடியதை பெரிய புராணத்திலும் பிற சரித ஆதாரங்களிலும் அறியலாம்.

"ஆரூரார் பேரூரார்" எனவும், "பேரூர் பிரமபுரம் பேராவூரும்" எனவும் அப்பர் சுவாமிகள் தனது ஷேத்திரக் கோவையில் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறார். ஆக சுமார் கி.பி. 650-க்கு முன்னரே திருப்பேரூர் பட்டீசுவரர் ஆலயம் கட்டப்பட்டிருப்பதென்று தெரியவருகிறது.  (பேரூர் பற்றிய தனி தேவாரம் மறைந்து போய்விட்டதாக கருத்துண்டு). பல தேவர்களும் பல அரசர்களும் பல முனிவர்களும் இவ்விறைவனை வழிபட்டு உய்தி பெற்றார்கள் என்பதற்கு இப்பேரூர் புராண படலங்களில் தெரியும்.

பற்பல தேவர்கள் முனிவர் அரசர் போன்றோர்கள் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டது புராணச் சரிதத் சான்றில் உள்ளன. இத்தலத்தின் மூர்த்தியாகிய பட்டிநாதர், பட்டீசர் என்ற பெயர், பசுவாகிய காமதேனுவினால் பட்டியிட்டுப் பூசிக்கப்பெற்ற வரலாறு ஆகும். குழகன் குளப்புச் சுவடுற்ற படலத்தில் கூறிய அடையாளங்களாகிய கன்றுக்குட்டியின் கால்குளம்புச் சுவடுகள் மூன்றும் சுவாமி திருமேனியில் இன்றும் உள்ளன. 

தானேதோன்றி (சுயம்பு) முளைத்து கிளைத்தெழுந்த இவ்விறைவனின் திருமேனியில், ஐந்துதலை நாகப்படம், பாம்புப் பூணூல், திருமுடியில் சுற்றப்பட்டிருக்கும் சடைக்கற்றை, இச்சடைக்கற்றையை கரைபோல இருக்கப் பெற்றதாகிய கங்கைக்கு ஏற்ற நீர் நிலை, பிரம்ம விட்டணுக்கள் அன்னமும் பன்றியுமாகத் தேடிய அடையாளங்கள் போன்ற அடையாளங்களை மக்கள் வழிபட்ட தரிசனத்தின்போது கண்டு களித்திருக்கிறார்கள். 

திருப்பேரூரின் வளமும் புண்ணியமும் பெருமையுமேயன்றி, இத்தலத்தினைச் சூழ்ந்துள்ள மலைகளின் பெருமையும் மிக மேம்பட்டவையாகும். ஐந்து பெருந் தேவர்களுக்கு இடமாகிய ஐந்து மலைகள் இதனைச் சுற்றி விளங்குகின்றன. அவை -

1.சிவமயமாகிய வெள்ளிமலை (இப்பொழுது நீலிமலை எனப்படுகிறது)
2.உமாதேவியார் மலை (ஐயாசாமி மலை)
3.பிரம்மன் மலை (பெருமாள்முடி மலை)
4.விட்டுணுமலை 
5.முருகக் கடவுளாகிய மருதமலை ஆகியவை.

இவ்வைந்து மலைகளும் ஆதிமா பிராகிருதம் திருப்பேரூரைச் சூழ்ந்து கோட்டைபோல அரணாய் உள்ளன. இந்த காஞ்சிமா நதியில் சோழன்துறை என்னும் துறையும் ஒன்றுண்டு. இவ்விடத்தில் காயஸ்து மரபினர்களாகிய லாலாக்கள் மண்டபம் இருந்தது. காலேசுவர சுவாமி உற்சவத்தில் தீர்த்தோத்சவமும் வசந்த காட்சியும் மற்ற விசேஷ காலங்களில் தீர்த்தமும் இந்தச் சோழன்துறையில்தான் நடைபெற்றன.

குட்டநோய், பிரமஹத்தி தோஷம், முயலக நோய், சித்தபிரமை கண்டோர், பைத்தியம் முதலான பெரிய நோய்களை இக்காஞ்சிமா நதியில் நீராடி, பிரம தீர்த்தத்தில் குளித்து, திருமேற்றிடம் வந்து அவ்விடத்து விபூதியினை பூசி நோயொழியப் பெற்றிருக்கிறார்கள். இதற்கானச்  சான்றுகளை இத்தொடரில் வரும் படலத்தில் வாசிக்கலாம். (இத்தொடரில் பின்பு, முக்கிய படலங்கள் விரிவாக வரும்.)

இந்த பேரூர் தல வழிபாட்டியிலே உயிர்கள் இவ்வுலகில் நன்மணம், நன்மக்கள், செல்வம் முதலிய விருப்பங்களை எல்லாம் கைவரப் பெற்றார்கள் என்றும், மறுமையிலே தேவபோகங்களை அடைந்து அனுபவிப்பர் என்றும், இறுதி நேரத்தில் அழிவில்லாத நிலைத்த இன்பமாகிய "முத்தியையும்" பெற்று இறைவன் திருவடிக்கீழ் நீங்காது இருப்பா் என்றும், இப்புராணப் படலத்தில் பயனையடைந்தோர் சாட்சியானதை நாமும் இத்தொடர் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

ஐம்பெரும் அதிசயங்கள்

1. எலும்பு கல்லாகுதல்.
2. இறவாப் பனை, பிறவாப் புளி.
3. புழுக்காத சாணம்.
4. உயிர் பிரியும்போது வலது செவி மேலாக இருத்தல்.
5.செம்பு பொன்னாகுதல்.

1. எலும்பு கல்லாகுதல்

இத்தலத்தை அடைந்தோர்க்கு, அழியா நிலைமையைத் தரும் என்பதின் சான்றே, இங்குள்ள காஞ்சிமா நதியில் (நொய்யல்) இடப்படுகின்ற மனித அஸ்தியின் எலும்புகள் கல்லாக மாற்றப்பட்டு, நிலைபெறுதல்தான் உண்மையான சான்று. இந்நதியில் நீரோட்டம் இருக்கும்போது, கோவையிலுள்ளோரும், கேரளாவினைச் சார்ந்தோரும், இறந்தவர்களின் அஸ்தி எலும்புகளை இந்நதியில் இட்டுச் சடங்கு செய்து வந்தனர். ஆக தன்னை அடைந்தோர்க்கு அழியா நிலையைத் தருவது இதுவே!

2. இறவாப் பனை

இத்தலத்தின் இறவாப் பனையின் வயது எவ்வளவோ ஆண்டுகள். இறப்பே இல்லாது வாழ்வது இப்பனை. பிறப்பும், இறப்பும் உபாதிகள் எல்லாம் இத்தலத்தை அடைந்தோர்க்கு நீக்கம் பெறுவர் என்பதற்குச் சான்றுதான் இந்த இறவாப் பனை. ஆக பிறப்பும் இறப்பும் இல்லாதவர் இறைவனின் அருள் இதனை உணர்த்துவதாகும். (இந்த பனை இறவாத் தன்மை கொண்டது).

பிறவாப் புளி

இந்த பிறவாப் புளியின் விருட்சத்தை, நம் நல்வினைப் பயனின் காரணாத்தினாலே, நாம் இந்த கலியில் இதைக் காணும் பேற்றைப் பெற்றோம். இந்த இறவாப் புளியின் விருட்சமானது, பட்டீசரின் திருக்கோயிலுக்கு எதிரிலேயே இருக்கிறது. இந்தப் புளியமரக் கனியின் விதைகள் முளைப்பதில்லை. நீங்கள் இவ்விதையினை எடுத்துச் சென்று எங்கே ஊன்றினாலும் அது முளைப்பதில்லை. அப்படியே முளைக்க ஊன்றிய விதைகள், முளை வந்ததும் தீய்ந்து போகும். இது அன்றைய நாளிலிருந்து இன்றைக்கும் இது கண்கூடு. ஆக இத்தலம் என்றும் அழியா நிலைபெற்றவை என்பதை நமக்கு காட்டுவதாகும்.

3. புழுக்கா சாணம்

இத்தலத்தில் விழும் கோ-வின் சாணங்கள், எவ்வளவு நாளானாலும் அதில் புழு உருவாவதில்லை. (மற்ற எல்லா இடத்திலும் கோ-வின் சாணங்களில் மறுநாளிலே புழக்கள் பிறந்து நெளியும்.) ஆக, இத்தலத்தை அடைந்தோர்க்கு மேலும் பிறப்பில்லை என்பதான சான்று இது.

4. உயிர் பிரியயில் வலது செவி மேலாக இருத்தல்

இந்தத் தலத்தில் இறப்பவர் யாவரும், இறக்கும் சமயம் அவர்களின் வலது செவி மேலாக இருந்தவாறே இறக்கின்றனர். இன்றைக்கும் இது கண்கூடு. இத்தலத்திலே இறப்பு உயிர்கள் எவையாயினும், அவையெல்லாம் அதற்கு முன் எவ்வாறு கிடப்பில் கிடந்து உழன்றலும், உயிர் பிரியும் சமயம், இத்தல இறைவன், அவர்களின் வலது செவியில் திருவைந்தெழுத்தை உபதேசம் செய்து, தன்னடியிற் சேர்த்துக்கொள்கிறான். ஆக, காசியைப்போல பிறவாப் பெருமையை, இத்தலத்தில் இறப்போர்க்கு இத்தல இறைவன் கொடுத்து வருகிறான்.

5. செம்பு (உலோகம்) பொன்னாகுதல்

இந்த பேரூர் தலத்திலே, வடகைலாயம் எனுமிடத்தில் உள்ள திருக்கோயிலிலே, பிரம தீர்த்தம் என்றும், குண்டிகை தீர்த்தம் என்றும் கூறப்படும் கிணறு ஒன்று இருக்கிறது. (இந்த வடகைலாயக் கோயிலின் நந்தவனத்திற்கு அருகில் ஒற்றையாக நிற்கும் பனைமரமே இறவாப் பனை ஆகும்.) இந்த கிணற்றுத் தீர்த்தத்தில் குளித்து வந்தோர், பைத்தியம் மற்றும் பெருநோய்கள் பீடித்தோர், நோய் ஒழியப் பெற்றிருக்கிறார்கள்.

அப்படி இங்கு வந்து குளித்தோர், இக்கிணற்றிலே செப்புக் காசு ஒன்றை இட்டு விடுவர். அதன் பின் இக்கிணற்று நீரை மொண்டு குளிப்பார்கள். (அந்நாளில் செப்புக் காசுகள் வழக்கத்தில் இருந்தது.) இதில் இடப்படும் செப்புக் காசுகள் சிலகாலம் சென்று, செப்புக் காசிலிருக்கும் களிம்புகள் நீங்கித் தங்கமாக ஒளிர்ந்தன. அந்தத் தங்கத்தைப் பார்த்துவிட்டு, "ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளிவீசும் பொன்" என்று தாயுமானாரே கூறியிருக்கிறார். ஒளிவிடும் பொன் என்பதை, இக்காலத்தில் (radium) என்போம்.

1918-ம் வருடத்தில், இந்தக் கிணற்றை சேறு வாரி சுத்தம் செய்தபோது, அந்தச் சேற்றுத் தூர்வையிலே, இந்தக் கிணற்றில் போடப்பட்ட செப்புக் காசுகள், பொன்னாய் மாறி ஒளிர்ந்தன. ஆக, செம்பினில் களிம்பு நீக்கி பொன்னாக்கி இருக்கிறது இந்த குண்டிகை தீர்த்தம். 

இத்தலத்தினைச் சுற்றிச் சூழப்பட்டிருக்கும், எவ்வித நீர் நிலைகளிலும் இவ்விதத் தன்மை இருக்கப் பெறவில்லை என்பது உறுதி. முன் சமயத்தில், குண்டிகை கிணற்றுத் தீர்த்தத்தில் காணப்படும், பெளதீகப் பொருள்களை ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். அதனை ஆய்வு செய்தோர், இது மனித உணர்விற்கு மேற்பட்டவை என கூறினர்.

படங்கள் - ச. பாலகிருஷ்ணன், கோவை

- கோவை கு. கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com