உங்கள் ராசிப்படி ஜனவரி மாதம் எப்படி அமையப் போகிறது? 

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் 12 ராசிக்காரர்களுக்குமான ஜனவரி மாத பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.
உங்கள் ராசிப்படி ஜனவரி மாதம் எப்படி அமையப் போகிறது? 

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் 12 ராசிக்காரர்களுக்குமான ஜனவரி மாத பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயன்பெறுங்கள். 

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) 

பிறர் குற்றங்களை எளிதில் மன்னிக்கும் குணமுடைய மேஷ ராசிக்காரர்களே இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். ராசியாதிபதி செவ்வாய் 7ல் சஞ்சாரம் செய்வதால் மனதில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். முக்கியமான பணிகள் துரிதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது.

குருவின் பார்வை ராசியின் மீது படிவதால் உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிøடேய நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

பெண்களுக்கு:முக்கியமான  வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. 

அரசியல்வாதிகள் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். உங்கள் கட்சி பிரச்சனைகள் குடும்ப சந்தோஷத்தை கெடுக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். 

மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அஸ்வினி:
இந்த மாதம் வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.

பரணி:
இந்த மாதம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

கார்த்திகை:
இந்த மாதம் தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

அதிர்ஷ்ட கிழமை: திங்கள், செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 2, 6, 9

அதிர்ஷ்ட திசை: கிழக்கு, வடமேற்கு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை, வெள்ளை

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

தனது நேர்மையான உணர்வுகளால் வாழ்வில் வெற்றி பெறும் ரிஷப ராசிக்காரர்களே இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. ராசியாதிபதி 7ல் குரு உடன் சேர்க்கை பெறுவது எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. 

அரசியல்வாதிகள் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேசி சில காரியங்களைச் சாதிக்க முற்படுவீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.

கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். செய்து கொண்டிருக்கும் வேலைகள் மிகச் சிறப்பாக நடந்து முடியும். 

மாணவர்களுக்கு: வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

கார்த்திகை:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களி டம் கவனமாக பேசுவது நல்லது.

ரோகினி:
இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும்  திறமை அதிகப்படும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமையில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்.

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26

அதிர்ஷ்ட கிழமை: புதன், வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 5, 6

அதிர்ஷ்ட திசை: தெற்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை

{pagination-pagination}
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

எந்த ஒரு சிறிய  விஷயத்தையும் கவனமாக  கிரகித்துக் கொள்ளும் தன்மை உடைய மிதுன ராசிக்காரர்களே இந்த மாதம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 6ல் செவ்வாய் வீட்டில்  சஞ்சரிக்கிறார். இதனால் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம்  கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம்  காண்பீர்கள். புதிய கிளைகள்  தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.

குடும்பத்தில்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக  பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும்.  வாகனத்தை  ஓட்டும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம்  எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. 

அரசியல்வாதிகளுக்கு பணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக நடந்து முடியும். தனது பேச்சுத் திறமையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மேலிடத்தில் மதிப்பு இருக்கும்.

கலைத்துறையினருக்கு அலைச்சல் குறையும். ஓய்வு கிடைக்கும். பயணங்கள் சந்தோஷமானதாக இருக்கும். நிம்மதியான காலகட்டமாக இருக்கும்.

மாணவர்களுக்கு: பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.

திருவாதிரை:
இந்த மாதம் உயர் பதவிகளும் கிடைக்க கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும்.

புனர்பூசம்:
இந்த மாதம் தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 27, 28

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, புதன்

அதிர்ஷ்ட எண்: 1, 5

அதிர்ஷ்ட திசை: மேற்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

நிறைய யோசிக்கும் திறமையுடைய கடக ராசிக்காரர்களே நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும். குரு கேந்திரம் பெற்றிருப்பதால் உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான  பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும்.

திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள்  உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும்.

பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். தொகுதி மக்களைச் சந்திப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்களில் கையெழுத்திடுவீர்கள் பெரிய அளவிலான ஒப்பந்தகளும் கையெழுத்தாகும்.

மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

புனர்பூசம்:
இந்த மாதம் எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.

பூசம்:
இந்த மாதம் பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.


ஆயில்யம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.  புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும்.

பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 29, 30

அதிர்ஷ்ட கிழமை: திங்கள், வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 2, 6

அதிர்ஷ்ட திசை: வடக்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

அதிகார தோரணையும் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாத  குணமுடைய சிம்மராசியினரே இந்த மாதம் சின்ன விஷயத்துக் கூட  கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் பணவரத்தை தரும். வேற்று மொழி பேசும் நபரால்  நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால்  எதையும் சமாளிப்பீர்கள்.  வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். வியாபார  விரிவாக்கம் தொடர்பான  பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.

பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு நிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உல்லாச பயணமாகவும் அது அமையும். பேசும் போது மட்டும் கவனமுடன் இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு அதிக ஆர்டர்கள் கைக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் பலவற்றில் கையெழுத்திடுவீர்கள். ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற விஷயங்களைச் செய்து ரசிகர்களை கவர்வீர்கள்.

மாணவர்களுக்கு: திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.
மகம்:
இந்த மாதம் குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

பூரம்:
இந்த மாதம் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும்.

உத்திரம்:
இந்த மாதம் அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பண வரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும். 

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வதும் செம்பருத்தி, அரளிமலர்களால் சூரியனை  அர்ச்சனை செய்வதும் வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 5, 31

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, திங்கள்

அதிர்ஷ்ட எண்: 1, 2

அதிர்ஷ்ட திசை: கிழக்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல்  உடனே முடிவு காண துடிக்கும் குணமுடைய கன்னி ராசிக்காரர்ளே  இந்த மாதம் தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.

திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை  சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக் கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரிய படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணவிஷயங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். மேலிடத்திலிருந்தும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களை வந்தடையும்.

கலைத்துறையினருக்கு புகழ் சேர்க்கும் விதமாக வேலைகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பணத்தை எதிர்பார்த்ததை விட புகழ் சேர்க்கும் விதமாக அமையும்.

மாணவர்களுக்கு: படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.

உத்திரம்:
இந்த மாதம் எடுத்த காரியங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியும். மனதில் போட்டு வைத்திருந்த திட்டங்களைச் செயல்படுத்த முனைவீர்கள்.

ஹஸ்தம்:
இந்த மாதம் பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.  அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

சித்திரை:
இந்த மாதம் குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும்.  கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாராயணம் செய்து வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

அதிர்ஷ்ட கிழமை: புதன், வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3, 5

அதிர்ஷ்ட திசை: தெற்கு, தென்கிழக்கு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

எவரையும் தம்பால் இழுத்துக் கொள்ளும் வசீகர சக்தி படைத்த துலா ராசியினரே இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். ராசியாதிபதி சுக்ரன் ராசிக்கு 3ல் சுய சாரம் பெற்று சஞ்சாரம் செய்வது சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.

தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில்  இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம்.

வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சூரியன் ராகு சஞ்சாரத்தால் குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.

பெண்களுக்கு சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும்.

அரசியல்துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமான பணிகளை உங்களுக்கு கொடுப்பார்கள்.

கலைத்துறையினருக்கு சற்று மந்தமான சூழ்நிலை காணப்படும், இந்த காலகட்டத்தை ஓய்வெடுக்க பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலைகள் சற்று தாமதமாக வந்து சேரும். கவலை வேண்டும். 

மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

சித்திரை:
இந்த மாதம் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

ஸ்வாதி:
இந்த மாதம் காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும். காரியதடை தாமதம் நீங்கும்.  வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

விசாகம்:
இந்த மாதம் வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது.  வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் ராஜராஜேஸ்வரியை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

அதிர்ஷ்ட கிழமை: புதன், வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 5, 6

அதிர்ஷ்ட திசை: மேற்கு, வடமேற்கு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

முன்கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்ட பாதையில் முன்னேற்றங்கள் பல காணும் விருச்சிக ராசிக்காரர்களே இந்த மாதம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரத்தால் முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.

பெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில்  சாதகமான பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு நன்மை தரும் காலமிது. குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியங்கள் நடந்து முடியும்.

கலைத்துறையினருக்கு வேலைகள் கிடைப்பதுபோல் இருந்து பின் நழுவிச் செல்லும் சூழல் உருவாகும். கவலை வேண்டாம். உங்கள் அயராத முயற்சியால் வெற்றி காண்பீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம்  செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

விசாகம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள்  சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

அனுஷம்:
இந்த மாதம் வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும்.

கேட்டை:
இந்த மாதம் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

பரிகாரம்: சஷ்டிக் கவசம், சண்முக கவசம் பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், புதன்

அதிர்ஷ்ட எண்: 6, 9

அதிர்ஷ்ட திசை: கிழக்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

மனசாட்சிக்கு கட்டுபட்டு செயல்படும் தனுசு ராசியினரே இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக் கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் வீண் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும்.  பழைய பாக்கிகளை  வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால்  செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சில விஷயங்களை அமைதியாக இருப்பதன் மூலம் சாதித்துக் கொள்வீர்கள்.

கலைத்துறையினர் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நன்மை தரும். அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

மாணவர்களுக்கு எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது.

மூலம்:
இந்த மாதம் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும்.  வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

பூராடம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.

உத்திராடம்:
இந்த மாதம் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் முல்லை மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம் சேரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14

அதிர்ஷ்ட கிழமை: புதன், வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

அதிர்ஷ்ட திசை: கிழக்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

தோல்விகளை வெற்றியின் படிகளாக கருதி எதை பற்றியும் கவலைப்படாமல் செயல்படும் மன உறுதி கொண்ட மகர ராசிக்காரர்களே இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்குவன்மையால் லாபம் உண்டாகும். ராசியில் கேது சஞ்சாரம் செய்வதால் வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை.

பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும்.

அரசியல்வாதிகள் தொகுதி பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அக்கறை காட்டுவீர்கள். இதனால் தொகுதி மக்களிடம் நற்பெயர் கிட்டும்.

கலைத்துறையினருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தூக்கமில்லாமல் வேலை செய்ய வேண்டி வரும்.

மாணவர்களுக்கு கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.

உத்திராடம்:
இந்த மாதம் உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மெத்தனமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

திருவோணம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. 

அவிட்டம்:
இந்த மாதம் பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட கிழமை: திங்கள், செவ்வாய், வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 2, 6, 9

அதிர்ஷ்ட திசை: தெற்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

{pagination-pagination}

கும்பம்  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்) 

ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் குணமுடைய கும்ப ராசிக்காரர்களே இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ராசியைப் பார்க்கும் குரு புதிய தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். ஆனால் ராசிக்கு 12ல் சஞ்சாரம் செய்யும் கேது  பயணங்களை ஏற்படுத்துவார்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். 11ல் சஞ்சாரம் செய்யும் செவ்வாய், புதன் மூலம்  வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்  நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்துறையினர் வீட்டைவிட்டு வெளியில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும். பணிச்சுமை அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வாய்ப்புக்கு காத்திருந்தவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அவிட்டம்:
இந்த மாதம் விரும்பாத இடமாற்றம்  உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில்  எதிர்பாராத தடங்கல்கள் வரலாம்.

ஸதயம்:
இந்த மாதம் பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். அவர்களால்  நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்.  சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

பூரட்டாதி:
இந்த மாதம்  சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தி தேவரையும், சிவனையும் வணங்கி சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19

அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3, 9

அதிர்ஷ்ட திசை: கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சல்

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

தம்மை போலவே மற்றவர்களும்  காலத்தை வீணாக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மீன ராசியினரே  இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து  இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். ராசிக்கு 10ல் சூரியன், சனி, சுக்கிரன் சஞ்சாரம் செய்வது எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.  கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண் டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும் பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.

பெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்.

அரசியல்துறையினருக்கு மனம் மகிழும்படியான செய்திகள் வந்து சேரும். மேலிடத்திலிருந்து பணி நிமித்தமாக முக்கிய செய்திகள் வந்து சேரும். 

கலைத்துறையினர் திறம்பட செயல்பட்டு அனைவரிடமும் பாராட்டு பெறுவீர்கள். அதன் மூலம் புதிய ஆர்டர்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் வந்துசேரும்.

மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.  கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

பூரட்டாதி:
இந்த மாதம்  அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல்  கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

உத்திரட்டாதி:
இந்த மாதம் எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும். புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் ஏற்படும். மீன எனினும் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை.

ரேவதி:
இந்த மாதம் மற்றவர்கள் செய்கைகளால்  மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த  பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.

பரிகாரம்: ருத்ர ஜெபம் செய்வதும் குருவுக்கு வியாழக்கிழமையில் கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 10, 11

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், புதன், வியாழன்

அதிர்ஷ்ட எண்: 5, 6, 9

அதிர்ஷ்ட திசை: வடக்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை, மஞ்சள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com