ஜாதகம் பார்த்துச் சொல்லப்படும் பொதுவான பலன்களை எந்த அளவுக்கு நம்பலாம்?

பிரச்னைகள் உருவாவதற்கான காரணங்களையும், அவற்றை சரி செய்யும் வழிமுறைகளையும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம்.
ஜாதகம் பார்த்துச் சொல்லப்படும் பொதுவான பலன்களை எந்த அளவுக்கு நம்பலாம்?

பிரச்னைகள் உருவாவதற்கான காரணங்களையும், அவற்றை சரி செய்யும் வழிமுறைகளையும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். எதிர்காலத்தை தெரிந்துகொண்டு, தற்போது நடக்கும் நிகழ்வுகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அனைவரும் ஜாதகத்துடன் நாடிச் செல்வது ஜோதிடர்களைத்தான்.

பிறந்த நேரம் முக்கியம்

பிறந்த நேரம் என்பது ஜாதகத்தில் மிக முக்கியமான ஒன்று. இதை வைத்தே ராசிக் கட்டம் மற்றும் கிரகங்களின் நிலை கணிக்கப்படுகிறது. ஆனால், பிறந்த நேரத்தைக் கணிப்பதில் பல்வேறு வகையான குழப்பங்கள் நிலவி வருகிறது. அதாவது, குழந்தை பிறந்த நேரம் என்பது தலை வெளி வந்த நேரமா, முதல் அழுகுரல் சத்தம் கேட்ட நேரமா, குழந்தை முழுவதுமாக பூமியில் விழுந்த நேரமா, மருத்துவர் உரைத்த நேரமா என்பது போன்ற விஷயங்களைக் கவனிக்கவேண்டி உள்ளது. மேற்கூறிய நேரங்களில், எந்த நேரத்தை மையமாகக் கொண்டு ஜாதகம் கணிக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான கேள்வி இங்கே எழுகிறது.

ஒரு விதை எந்த நேரத்தில் மண்ணில் விதைக்கப்படுகிறதோ அதைப் பொருத்தே அதன் வளர்ச்சியும், விளைச்சலும் இருக்கும். அது செடியாக முளைத்து வெளி வரும் நேரம் என்பது இரண்டாம்பட்சமாகிறது. இதன் அடிப்படையில், குழந்தை பிறந்த நேரத்தைவிட, குழந்தைக்கான கரு உருவான நேரமே முக்கியமானதாகக் கருதப்படவேண்டி உள்ளது. ஜோதிடத்தின் மூல நூல்கள் அனைத்திலும், கரு உருவான நேரத்தை அடிப்படையாக வைத்துத்தான் பலன்கள் சொல்லப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சரி, அப்படியென்றால் கரு உருவான நேரத்தைக் கணக்கிடுவது எவ்வாறு என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே. இதன் கடினத்தன்மையை அறிந்தே, பிறந்த நேரத்தை அடிப்படையாக வைத்து கரு உருவான நேரத்தைக் கணக்கிடும் கணித முறை, ஜோதிடத்தின் மூல நூல்களின் சூட்சமங்களில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்று நாம் குறித்து வைத்திருக்கும் பிறந்த நேரத்தை வைத்து கரு உருவான நேரத்தையும், அதற்கேற்ப பிறந்த நேரத்தில் ஏதேனும் நிமிட வித்தியாசம் இருப்பின் அதை துல்லியமாகக் கணித்து சரியான பலன்களைப் பெற முடியும். ஆனால், இன்று நம்மில் எத்தனை பேர் பிறந்த நேரத்தை துல்லியமாகக் கணித்து வைத்துள்ளோம்?

பஞ்சாங்களில் வேறுபாடு

ஜாதகம் கணித்தலுக்கு முக்கிய அடித்தளமாக அமைவது பஞ்சாங்கம். பிறந்த நேரத்துக்கு ஏற்ப ஜாதகத்தில் குறிக்கப்படும் கிரகங்கள், ராசிகள், லக்னம், நட்சத்திரம் ஆகிய அனைத்தும் பஞ்சாங்கக் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. பஞ்சாங்கக் கணிதங்களைப் பார்ப்பதற்கு முன்னால், பஞ்சாங்கங்களுக்கு இடையே உள்ள குழப்பங்களைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. தமிழகத்தில், உள்ள பஞ்சாங்கங்களின் எண்ணிக்கை, வண்ணங்களின் அளவைவிட அதிகமாக உள்ளது. இவற்றில் உள்ள கணிதங்கள் ஒன்றுக்கொன்று வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மாதத்தில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம். அந்த மாதத்தில், குரு பகவான் மிதுனத்தில் இருப்பதாக ஒரு பஞ்சாங்கமும், மற்றொரு பஞ்சாங்கம் கடகத்துக்கு மாறிவிட்டதாகவும் கூறுகிறது. இங்கு, எதை அடிப்படையாகக் கொண்டு கோட்சாரப் பலன்களைக் கூறுவது என்பதில் பெருத்த சந்தேகம் எழக்கூடும்.

இதேபோல், ஒரு பஞ்சாங்கத்தில் ஒரு நட்சத்திரம் 12 மணியோடு முடிவதாக இருக்கும். மற்றொரு பஞ்சாங்கத்தில் அதே நட்சத்திரம் 2 மணியோடு முடிவதாக இருக்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன நட்சத்திரத்தை குறிப்பது? பொதுவாக, நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே நல்ல நேரம், கெட்ட நேரம், கோவில்களில் அர்ச்சனை, வழிபாடு ஆகிய அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது. பஞ்சாங்கங்களுக்கு இடையே இவ்வளவு வேறுபாடுகள் வரக் காரணம் என்ன?

சூரியனின் நிலை

சூரியன் மாறாத நிலைத்தன்மை உடையது என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு கோளும் தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனை மையமாகக் கொண்டே கோள்களின் நகர்வைக் கணித்து, ஒவ்வொரு கிரகமும் எங்கு உள்ளது என்ற அடிப்படையில் ஜாதகக் கட்டம் தயார் செய்யப்படுகிறது. ஆனால், சூரியனும் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட கலை நகர்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சூரியனின் நகர்வின் அடிப்படையில், கலி பிறந்து தற்போது வரை உள்ள ஆண்டுகளைக் கணக்கிட்டு, சூரியன் எவ்வளவு தூரம் நகர்ந்துள்ளது என்பதைக் கணக்கில் கொண்டு, பஞ்சாங்கத்தின் மற்ற கணிதங்களும் கணிக்கப்படுகின்றன. சூரியனின் நகர்வைக் கணிப்பதில் உள்ள வித்தியாசமே பஞ்சாங்கங்களுக்கான வேறுபாடுகளை தெளிவாகக் காட்டுகிறது. இதையே அயனாம்ச வேறுபாடு என்கிறோம்.

பஞ்சாங்கக் கணிதத்தில், சூரிய உதயம் என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்தே, லக்னம், நட்சத்திரம் ஆகியவை கணிக்கப்படுகின்றன. லக்னத்தை மையமாகக் கொண்டே தனித்துவப் பலன்கள் சொல்லப்படுகின்றன. ஏனெனில், ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல குறிப்பிட்ட காலத்தை எடுத்துக்கொள்கிறது. உதாரணமாக, குரு, சனி, ராகு போன்றவை வருடக்கணக்கிலும், சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் போன்றவை மாதக் கணக்கிலும் இடம்பெயர்கின்றன. ஆனால், சந்திரனானது 2.25 நாட்கள் மட்டுமே ஒரு ராசியில் இருப்பு கொள்கிறது. இந்த இரண்டு நாட்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், கிரக நிலைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், மாறக்கூடியது லக்னம் மட்டுமே.

லக்னத்தின் முக்கியத்துவம்

லக்னமானது, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குத் தோராயமாக 2 மணி நேரத்தில் இடம் பெயர்கிறது. நாம் பிறந்த நேரத்தில் லக்னம் எந்த ராசியில் உள்ளது என்பது, பிறந்த இடம் / ஊரின் சூரிய உதய நேரத்தைப் பொருத்து அமையும். பூமியானது, சூரியனைத் தொடர்ந்து சுற்றி வருவதால், சூரிய உதயமானது அட்ச, தீர்க்க ரேகைகளைப் பொருத்து, இடத்துக்கு இடம், நாளுக்கு நாள் வேறுபடுகிறது. உதாரணமாக, கார்த்திகை முதல் தேதியில் சென்னையில் சூரிய உதயம் 6.9 எனும்பொழுது, கோவையில் 6.18-ஆக இருக்கும். ஒரு மாநிலத்துக்குள்ளேயே கிட்டத்தட்ட பத்து நிமிட வித்தியாசங்கள் உள்ளபோது, நாடுகளுக்குள்ளேயும், கண்டங்களுக்கு இடையேயும் உள்ள வேறுபாடு எந்த அளவில் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சூரிய உதய நேரத்தைக் கணக்கில் கொள்ளாமல், தோராயமாகக் கணிக்கும்பொழுது, லக்னத்தில் பிழைகள் ஏற்பட்டு, தவறான பலன்களைச் சொல்லிவிட வாய்ப்பு உண்டு. ஏனெனில், பெரும்பாலும் லக்னத்தைப் பொருத்தே பலன்கள் சொல்லப்படுகின்றன. உதாரணமாக, லக்னம் மேஷமாக உள்ளபோது, கடகம் 4-ம் இடம் கொண்டு தாய், வீடு, வாகனங்கள் குறித்த பலன்கள் சொல்லப்படுகின்றன. மேஷத்துக்கு அடுத்த லக்னம் ரிஷபத்துக்கு வரும்போது, கடகம் 3-ம் இடம் கொண்டு, சகோதரப் பலன்கள் சொல்லப்படுகின்றன. எனவே, லக்னம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் தருவாயில், ஒரு குழந்தை பிறக்கும்பொழுது, அதன் சரியான லக்னத்தை அறிய, அவ்விடத்தின் சூரிய உதயத்தைக் கணக்கில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

நட்சத்திரம்

லக்னத்துக்கு அடுத்தபடியாகக் கவனிக்க வேண்டியது நட்சத்திரம். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு ராசியும் ஒன்பது பாதங்களை உள்ளடக்கியுள்ளது. பிறந்த நேரத்துக்கும், அந்நாளின் சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட கால வித்தியாசத்தைக் கணக்கிட்டு, அந்நேரத்தில் சந்திரனானது எந்த ராசியில் எந்தப் பாதத்தில் உள்ளது என்பதை வைத்து நட்சத்திரம் கணிக்கப்படுகிறது. இதற்கும் அடிப்படையாக அமைவது சூரிய உதயமே.

இன்று நம்மில் எத்தனை பேர், பிறந்த நாளின் சரியான சூரிய உதயத்தைக் கையில் எடுத்து ஜாதகத்தை கணித்து வைத்திருக்கிறோம்?

பஞ்சாங்கம்

ஜாதகம் கணித்தலில் இவ்வளவு துல்லியம் இருக்கும்பொழுது, நாம் பயன்படுத்தும் பஞ்சாங்கங்களைப் பற்றிய தெளிவைப் பெற வேண்டியது அவசியமாகிறது. உலகில் உள்ள பொது பஞ்சாங்கங்களில், மிகத் துல்லிய கணிதத்தைக் கொண்டது எபிமெரிஸ் பஞ்சாங்கம். தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள திருக்கணித பஞ்சாங்கம், எபிமெரிஸுக்கு இணையான துல்லியம் கொண்டது. தமிழகத்தில், ஜாதகக் கணிதத்துக்கு இதுதான் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.

இது தவிர, ஆற்காடு, பாம்பு பஞ்சாங்கள் போன்ற பல பஞ்சாங்கங்கள் உள்ளன. இவை அயனாம்ச வேறுபாட்டை தோராயமாகக் கொண்டு கணிக்கப்படுவதால், அவற்றை கணிதத்துக்கு எடுத்துக்கொள்வதில்லை. பொதுவான விஷயத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல், எபிமெரிஸுக்கு துல்லியமில்லாத எண்ணற்ற பஞ்சாங்கங்கள் உலகில் உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஜோதிடர் பலன் கணிக்கும்பொழுது, பெயர்ச்சிக் காலங்களின் தேதியும், ஜாதகத்தில் உள்ள துல்லியத்தன்மையும் மாறிவிடுகிறது. இதேபோல், கணினியின் மூலம் ஜாதகம் கணிக்கும்பொழுது, அதன் மென்பொருள்கள் தோராயமான அயனாம்ச வேறுபாடு உடையதாக அமைந்ததுவிட்டால், அதில் உள்ள கணிதங்களும் மாறிவிடும்.

ஜாதகம் கணிப்பதில் துல்லியம்

எனவே, ஜாதகத்தில் பிறந்த நேரம், இடம், சூரிய உதயம், லக்னம், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றைக் கணித்தலில் எவ்வளவு துல்லியம் இருக்க வேண்டும் என்பது இப்பொழுது உங்களுக்குப் புலனாகும். இத்தகைய ஜாதகத்தின் மூலம் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் முக்கியமான சம்பவங்களையும், அதன் நன்மை தீமைகளையும், மேலும் எந்தக் காலங்களில் நாம் அதனை அனுபவிக்கிறோம் என்பதை அறிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாகச் செயல்படவும், அதற்கேற்றார்போல் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளவும், அதற்கான மாற்று வழிகளை உருவாக்கிக்கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுகிறது.

நான்கு விநாடி வித்தியாசத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட ஜாதகத்தில் மாறுபட்ட பலன்களைக் கூறமுடியும் என்ற அளவுக்குத் துல்லியம் இருப்பினும், ஜோதிடரின் திறமையைப் பொருத்தே அதன் சாத்தியக்கூறுகள் அமைகின்றன. ஏனெனில், பலன் கூறும் ஜோதிடருக்கு சாஸ்திரத்தைப் பற்றிய தெளிவு, அதீத ஞானம் மற்றும் பலன் சொல்லும் திறன் ஆகியவை அவசியமாகிறது.

மேலும், ஜாதகம் பார்க்க வரும் மக்கள், வாழ்வின் கடினங்களை மாற்றி, எதிர்பார்க்கும் பலன்களைப் பெறுவதற்காக ஆலய வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களை மேற்கொள்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை, மனஉறுதி மற்றும் பக்தியின் அளவுகளைப் பொருத்தே பலன்கள் அமைகின்றன. இதை ஜாதகர் உணரும்படி ஜோதிடர் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். இல்லையேல், அவர் சரியாகக் கணித்திருந்தாலும்கூட, மேற்கொள்ளும் வழிபாடுகள் மூலம் பலன்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உண்டு.

ஆன்மாவின் தன்மை

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஜோதிடர் நன்றாகக் கணித்து நான்கு விநாடி வித்தியாசத்தில் பலன்களைச் சொன்னாலும், ஒரு விநாடி வித்தியாசத்தில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கைகூட ஒரே மாதிரியாக அமைவதில்லை. காரணம், அக்குழந்தைகளின் ஆன்மாவின் தன்மை என்பது வெவ்வேறானது. கணிதத்தைக் கொண்டு சரியான பலன்களையோ, சரியான காலத்தையோ கூறிவிட முடியும். ஆனால், அவை கட்டாயம் நடைபெறும் என்று உறுதிகொள்ள முடியாது. எனவே, ஜாதகப் பலன்கள் மேலோட்டமான ஒன்றாகிவிடுகின்றன.

இது இவ்வாறு இருக்க, ஜாதகக் கணிதத்தின் கிளைகளாக உள்ள நாள், வார, மாத, ஆண்டுப் பலன்கள், ராசி மற்றும் நட்சத்திரப் பலன்கள், கிரகங்களின் பெயர்ச்சிப் பலன்கள், கிரகங்களின் தன்மையின் அடிப்படையில் அமைந்த எண் கணிதம், நவரத்தினக் கற்கள், பெயர் மாற்றம் போன்றவற்றைக் கொண்டு, வாழ்வின் கடினங்களைச் சரி செய்துகொள்ள முடியும் என்ற அளவில் சொல்லப்படும் பொதுப் பலன்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருப்பது, இன்றைய விஞ்ஞான உலகில் மிகவும் துரதிஷ்டவசமானது.

இங்கு நாம் முக்கியமாகக் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், துல்லியக் கணிதம் கொண்டு கணித்து, கிரகங்களின் சுழற்சியின் மூலம் எதிர்காலப் பலன்களைக் கூறும் ஜாதகம் என்பது ஜோதிடத்தில் ஒரு பரிணாமமே. ஜாதகத்தையும் தாண்டி ஜோதிடத்தில் பல பரிமாணங்கள் உள்ளன. அவை அனைத்தையும் சேர்த்துப் பார்ப்பதையே முழுமையான ஜோதிடம் என்கிறோம்.

தொடர்ந்து பயணிப்போம்.

  • வாழ்வியல் வழிகாட்டி ராஜேஸ் கன்னா (தொடர்புக்கு – 9443436695)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com