கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 2 

பிரம்மதேவரின் படைப்புத் தொழிலின்போது அவர் சோர்வுற்றிருந்தார், இதனால் படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டன.
கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 2 


பிரம்மதேவரின் படைப்புத் தொழிலின்போது அவர் சோர்வுற்றிருந்தார், இதனால் படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டன. இதை அறிந்த மகாவிஷ்ணு, காமதேனுவை அழைத்து "நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக" என்று கட்டளையிட்டார்.

அதன்படி காமதேனுவும் இமயமலைக்குச் சென்று அருந்தவமிருந்தது. ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை. அச்சமயம் நாரத முனிவர் தாம் வழிபட்ட தசஷிண கைலாயத்தைப் பற்றி காமதேனுவிடம் சொன்னார். காமதேனுவும் கன்றுடன் நாரதர் கூறிய இடத்தை அடைந்து அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சிமா நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலைச் சொரிந்து வழிபட்டுத் தவமிருந்தது.

ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, மேய்ச்சலின்போது, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை, மேயலில் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவவெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்தன. இதைக் கண்டு பதறிப்போனது தாய் காமதேனு. காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபெருமான் தோன்றினார். பார்வதி தேவியின் வளைத்தழும்மை என் மார்பகத்தில் ஏற்றுக்கொண்டதுபோல், உன் கன்றின் குளம்படித் தழும்பையும்  நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன் என்று ஆறுதல் கூறினார் காமதேனுவிடம். 

இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டிய சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலேயே உனக்கு அருளுகிறேன். அதுவரை இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காண்பாயாக! மேலும் உன் நினைவாக இத்தலம் பட்டிபுரி, காமதேனுபுரம் என்று வழங்கப்படும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும் என்று அருளினார்.

சுந்தரரும், தில்லையந்தணர்களும்
பாரூரும் அரவல்குல் உமைநங்கை
அவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊருரன் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்
றம்பலத்தே பெற்றா மன்றே 

என சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச் செய்தார். 

சுந்தரர் சிதம்பரத்தில் இருந்து கொண்டு, பேரூரிலுள்ள நடராஜரின் அழகை மானசீகமாக கண்டு இப்பதிகத்தைப் பாடினார். அதைக் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் "தில்லையில் இருந்து கொண்டு பேரூரைப் பற்றி பாடும் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு சுந்தரர் அந்த அழகைக் காண கோடி கண்களும் போதாது. அந்தப் பரவசத்தை அனுபவித்து உணர்ந்தால்தான் பாடமுடியும்" என்றார். உடனே திருப்பேரூருக்கு புறப்பட்டு வந்த தில்லைவாழ் அந்தணர்கள் நடராஜரின் அழகைப் பார்த்து மயங்கிப் போனார்கள். சுந்தரர் பாடிச் சொன்னது உண்மையென உணர்ந்து, சிதம்பரத்தில் இருப்பது "திருச்சிற்றம்பலம்" இங்கிருப்பதோ "அழகிய திருச்சிற்றம்பலம்" என்று கூறி வணங்கிவிட்டு திரும்ப தில்லைக்குப் புறப்பட்டு போனார்கள்.

மேலைச் சிதம்பரம்
இங்கிருக்கும் கனக சபையை முப்பத்து நான்கு வருடங்களாக, திருமலை நாயக்க மன்னனின் சகோதரன் அளகாத்திரி நாயக்கன் என்பவன் கட்டினான். முப்பத்து நான்கு வருடங்களாக கட்டப்பட்ட கனகசபையில் பிரம்மா, திருமால், அதி உக்ரகாளி, சுந்தரர் ஆகியோருக்காகவும், நந்தியின் தவத்திற்காகவும், சிதம்பரத்தில் நடனமாடியது போலவே இங்கும் ஆனந்த நடனமாடினார் நடராஜர். அதனால்தான் இத்தலம் "மேலைச்சிதம்பரம்" என்று அழைக்கப்படுகிறது.

இன்றும் நடராஜரின் நுழைவு வாயிலில் இரண்டாவது பஞ்சாட்சர படியினை தாண்டும்போது கோமுனி, பட்டிமுனி என்னும் பெயரில் பிரம்மாவும், திருமாலும் இருப்பதாக ஐதீகம். கனகசபையின் முதல் பஞ்சாட்சர படிகளைத் தாண்டினால் இரண்டு பக்கமும் பிரமாண்டமான எட்டு சிலைகள், கல்சங்கிலி, சுழல்தாமரை போன்ற அற்புதமானவைகளைக் கண்டு ஆச்சரியப்படுவோம். இதைத் தாண்டினால் இரண்டாவது பஞ்சாட்சரப்படியின் அருகே யாளியின் வாயும், யானையின் துதிக்கையும் ஒன்றாக பிணைந்தது போன்ற சிலை இருக்கிறது. இதைத் தாண்டினால் குதிரை வீரன் சிலை ஒரு பக்கத்தில் முழுதாகவும், மற்றொரு பக்கம் உடைந்தும் காணப்படும். இதன் வரலாறு அடுத்து வரும் நான்காவது தொடரில் வாசிக்கலாம்.

அடுத்து, சந்தன சிற்பங்களும் மூன்றாவது பஞ்சாட்சரப் படிகளை கடந்தால் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் அழகான நடராஜர், அவரோடு சிவகாமியம்மை காட்சியருளுவதைக் காணலாம். நடராஜரின் மண்டபத்தை நான்கு வேதங்களே நான்கு தூண்களாக மாறி தாங்குவதாக ஐதீகம். இறைவனுக்கு பணிந்த நிலையில் இங்கிருக்கும் தூண்கள், சற்றே சாய்ந்த நிலையில் இருப்பதை நாம் பார்க்கலாம்.

ஆனந்த தாண்டவமாடும் இறைவன், ஆடி அடங்கப் போகும் நிலையில், தூக்கிய திருவடிகூட சற்றே தாழ்த்திய நிலை நளினத்தைக் காணமுடிகிறது. சடையும் தாழ் சடையாக உள்ளது. கன்னங்கள் கதுப்புக் கன்னங்களாக தெரிகிறது. இந்தக் கன்னங்கள் நம்மை கிள்ளிவிடத் தூண்டும். ஆனால் நம்மால் அது முடியாது!, ஒருவேளை குருக்களுக்கு வேண்டுமானால் அந்த தீண்டுதல் பாக்யம் கிடைக்கலாம். திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படும் தலங்களில் இத்தலமும் ஒன்றாகவும், நடராஜர் சந்நிதி விசேஷமாக அமைந்துள்ள தலமாகவும், சிறப்புத் தாண்டவ தலங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது.

இச்சபையிலுள்ள பெரும்பாலான தெய்வங்களும், ஏனைய சிற்பங்களும் பெரும்பாலும் நடனமாடும் நிலையிலேயே இருக்கின்றன. இந்த கனக சபையில் இருக்கும் சிற்பங்களுக்கான கற்களை மருதமலை மலையிலிருந்து கொண்டு வந்து செய்வித்திருக்கின்றனர். கனகசபையில் முப்பத்தாறு தத்துவங்களைக் குறிக்கும் வகையில் மொத்தம் முப்பத்தாறு தூண்கள் உள்ளன.

அபிஷேகம்
நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை மட்டும் அபிஷேகம் செய்யப்படும். ஆனால் கோவை திருப்பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் பத்துமுறை அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. இங்கிருக்கும் இவர் ஆடி முடிக்கும் தருவாயில் உள்ள நடராஜர். இந்த நடராஜரின் குறும்புப் பார்வை மிக அழகாக இருக்கும். சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இத்தலம் கருதப்படுகிறது.

தட்சிண கைலாயம்
கயிலாயத்தில், உமாதேவி சமேதராக சிவபெருமான் இருக்கையில், நந்தி பகவான் ஈசனிடத்தில் சுவாமி! தாங்கள் எழுந்தருளியுள்ள தலங்களுள் இந்தக் கயிலாயத்திற்கு நிகரானது வேறெது? எது? என கேட்டார். அதற்கு பெருமான், பதில் கூறிய போது "உத்தர கயிலாயம், மத்திய கயிலாயம், தட்சிண கயிலாயம்" என மூன்று உள்ளன. அவை ஒத்த சிறப்புடையவையே. ஆனால், எளியோரும் சென்று முக்தி அடையக்கூடிய திருத்தலச் சிறப்பு திருப்பேரூர் என்கிற தட்சிண கயிலாயத்துக்கே உண்டு என்று கூறினாராம்.

நாரதேசுவரம்
இந்த மகிமையைக் கேட்டுக் கொண்டிருந்த முருக பெருமான் அதை நாரதருக்கு உணர்த்தினார். நாரதர் உடனே கொங்கு நாடு சென்று வெள்ளியங்கிரி என்ற மலையில் உமாதேவியுடன் உறையும் சிவபெருமானைத் தரிசித்தாராம். (நாரதர் அன்று தரிசனம் செய்ததாகக் கூறப்படுகின்ற திருக்கோயில் பட்டீசுவரர் ஆலயத்துக்குச் சற்றுத் தொலைவில் அமைந்திருக்கின்றது.) இந்த தரிசனத்தை முடித்துக் கொண்ட நாரத முனிவர், காஞ்சிமா நதிக்கரை ஓரத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, அதன் அபிஷேகத்துக்கென ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கி ஆராதனை செய்தாராம். அதுவே நாரதேசுவரம் என்று இந்த ஆலயத்துக்குப் பெயர் உண்டாயிற்று.

நாரதர் வந்தடைந்த வெள்ளியங்கிரி முதலான ஐந்து மலைகள் அரண் போல் சூழ காஞ்சி நதி அம்புபோல் அவற்றை ஒட்டிப்பாய எழிலான இயற்கைச் சூழலின் மையத்தில் கோயில் கொண்டிருக்கிறார் பட்டீசுவரப் பெருமான்.

மாமறை முனிவர் வாழ்க மரகத வல்லி யோடும்
பாமலி புலவர் போற்றும் பட்டிநா யகனார் வாழ்க
காமரு வெள்ளி மன்றிற் கண்ணுத னடனம் வாழ்க
கோமனு நீதி வாழ்க குவலய முழுதும் வாழ்க.

படங்கள் - ச. பாலகிருஷ்ணன், கோவை

- கோவை கு. கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com