சகலவிதமான வாத நோய்களையும் களையும் திருவாதவூர் திருத்தலம்

வேதநாயகி (ஆரணவல்லி) அம்மன் உடனுறை திருமறைநாதர் திருக்கோயில். இங்கு பைரவர் பூஜை செய்திட சனி தோஷம் அகலும்.
சகலவிதமான வாத நோய்களையும் களையும் திருவாதவூர் திருத்தலம்

வேதநாயகி (ஆரணவல்லி) அம்மன் உடனுறை திருமறைநாதர் திருக்கோயில். இங்கு பைரவர் பூஜை செய்திட சனி தோஷம் அகலும். முடக்கு வாதம், பக்க வாதம், கை, கால் தொடர் வலி முதலிய சகல விதமான வாத நோய்களையும் களையும் திருவாதவூர் திருத்தலம். சனி பகவானின் முடக்கு வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத்தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது.

மாணிக்கவாசகர் திருஅவதாரத் திருத்தலம். இதனால்தான் "திருவாதவூரர்" என்று மாணிக்கவாசகர் போற்றப்படுகிறார். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடைபெற்றது. அந்தப் போரில் தோல்வி அடைந்த தேவர்கள் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். மகாவிஷ்ணுவும் தேவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். இதனை அறிந்த அசுரர்கள் தங்கள் குல குருவான சுக்கிராச்சாரியாரின் பெற்றோரான பிருகு முனிவர், காவ்யமாதாவிடம் சரண் புகுந்தனர். 

மனம் இரங்கிய காவ்யமாதா அசுரர்களுக்கு தனது பாதுகாப்பில் அடைக்கலம் கொடுத்தார். மகாவிஷ்ணு காவ்ய மாதாவிடம் அசுரர்களை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்க, காவ்யமாதா மறுத்தார். கோபமடைந்த மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் காவ்ய மாதாவின் தலையைக் கொய்தார். தனது மனைவியைப் பரந்தாமன் தண்டித்ததை அறிந்த பிருகு முனிவர் மகாவிஷ்ணுவைப் பார்த்து, 'பரந்தாமா! நீ பல்வேறு பிறவிகள் எடுப்பாய். அதில் ஒரு பிறவியில் உன் மனைவியை பிரிந்து தவிப்பாய்' எனச் சாபமிட்டார். 

சாப விமோசனம் தேடி, பூலோகத்தில் பல சிவதலங்களில் சிவ பூஜை செய்து வந்தார் மகாவிஷ்ணு. மதுரை அருகே வேகவதி நதியில் வடக்கு எல்லையில் சிவ பூஜை செய்ய நினைத்து சிவலிங்கத்தைத் தேடினார். அப்போது பசு ஒன்று தடாகத்தில் தாமரை மலர் மீது பாலை சுரந்தது. அந்தத் தாமரை மலர்ந்து அதிலிருந்து சிவலிங்கம் தோன்றியது. அந்த சிவலிங்கத்தை கொண்டு சிவ பூஜை செய்யத் தொடங்கினார் மகாவிஷ்ணு. பூஜைக்கு மகிழ்ந்து சிவபெருமான் தோன்றி, மகாவிஷ்ணுவுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்தார். நான்கு வேதங்களின் சாரமான பஞ்சாட்சர மந்திரத்தை மகாவிஷ்ணுவுக்கு போதித்தால் இத்தல இறைவன் திருமறைநாதர் என்று அழைக்கப்படுகிறார். அந்தத்தலம் வேதபுரி என்று பெயர் பெற்றது.

பஞ்சாட்சரத்தை கொண்டு சிவபெருமானை பூஜித்து வந்தார் மகாவிஷ்ணு. மீண்டும் அவர் முன்பு தோன்றிய சிவபெருமான், 'பரந்தாமா! பிருகு முனிவரின் சாபத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம். அவரது சாபத்தின்படி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அவதாரமும் அசுரர்களை அழிக்கவும், தர்மத்தைக் காக்கவும் பயன்படும் என்று அருளினார். வேதபுரியில் பிரம்மதேவர் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, ஈசனை அபிஷேகித்தார். அந்தத் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மதேவர் நடத்திய ஆரணகேத வேள்வியில் நீலதிருமேனியளாய் அம்பிகை இங்குத் தோன்றினாள். இதனால் இத்தல அம்பிகை, ஆரணவல்லி என்று பெயர் பெற்றாள். ஒரு முறை மாண்டவ்ய மகரிஷி கடும் தவம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு சனி ஜென்மத்தில் இருந்தார். அதே நேரம் மகத நாட்டை ஆண்ட மன்னனின் அணிகலன்கள் திருடு போயின. திருடர்களை அரண்மனைக் காவலர்கள் விரட்டிச் சென்றனர். தாங்கள் பிடிபட்டு விடுவோமோ என்று பயந்த கள்வர்கள், தவம் செய்து கொண்டிருந்த மாண்டவ்ய மகரிஷியின் அருகில் நகைகளைப் போட்டு விட்டு ஓடிவிட்டனர்.

காவலர்கள் மாண்டவ்ய மகரிஷிதான் கள்வர் எனக்கருதி, தவ நிலையிலேயே அவரை அரண்மனைக்குத் தூக்கிச் சென்றனர். அப்போதும் அவரது தவம் கலையவில்லை. 'நடிக்கிறார்' என்று கருதிய மன்னன், அவரைக் கழுமரம் ஏற்ற உத்தரவிட்டான். கழுமரம் மாண்டவ்யரின் உடலை துளைத்தபோதுதான் அவரது தவம் கலைந்தது. அப்போது தனக்கு இந்த கதி ஏற்பட காரணம் சனிதான் என எண்ணினார். பின் சனி பகவானுக்கு முடக்கு வாதம் ஏற்படும்படி சாபம் கொடுத்தார் மகரிஷி. வாத நோயால் அவதியுற்ற சனிபகவான், மனம் வருந்தி சாப விமோசனம் கேட்டார். மதுரை அருகே உள்ள வேதபுரி சென்று திருமறைநாதரை வழிபட சாபம் தீரும் என்று வழி சொன்னார்

மகரிஷி அதன்படி சனி பகவான் வேதபுரி வந்து திருமறை நாதரை வழிபட்டார். சனியின் வாதநோய் நீங்கியது. அப்போது சனியிடம் ஈசன், 'தன்னை இத்தலம் வந்து வழிபடுவோரை சனி அண்டக் கூடாது' என்று உரைத்தார். அதனைச் சனி பகவானும் ஏற்றுக்கொண்டார். சனி பகவானின் வாத நோயை தீர்த்த தலம் என்பதால், இந்தத்தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது. இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது. 

ஒரு சமயம் திருக்கயிலையில் பைரவரின் வாகனமான சுவானத்தை (நாய்) மறைக்கச் செய்தார். சிவபெருமான். இதனால் பைரவர், ஈசனிடம் வேண்டினார். 'திருவாதவூர் சென்று வழிபடத் தொலைந்த வாகனம் கிடைக்கும்' என்று அருளினார். கயிலாய மலையில் இருந்து திருவாதவூர் வந்த பைரவர் இங்கு ஒரு தீர்த்தம் அமைத்தார். அது பைரவர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பின்பு பைரவர் தீர்த்தத்தில் நீராடி திருமறை நாதரை வழிபட்டு தனது நாய் வாகனத்தை மீட்டார். இத்தல பைரவரை தொடர்ந்து 8 அஷ்டமி தினங்களில் வழிபட்டு வந்தால் தொலைந்த வாகனங்கள் மீண்டும் கிடைக்கும். 

இத்தல சனி, பைரவர் மற்றும் திருமறை நாதரை 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் அகன்றுவிடும். கபில முனிவர் இங்குள்ள இறைவனை வழிபட்டு, தனது வீரஹத்தி தோஷத்தை அகற்றிக் கொண்டுள்ளார். பாண்டவர்களின் ராஜசூய யாகத்திற்கு உதவிபுரிந்து, பிறகு மகாவிஷ்ணுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புஷா மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. ஆலயத்தின் கிழக்கே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.

இங்கு தான் சிவபெருமான் தனது கால் சிலம்பொலியை மாணிக்கவாசகர் கேட்கச்செய்தார். இந்த மண்டபத்தை அமைத்தவர் மாணிக்கவாசகர் ஆவார். இங்கு மாணிக்கவாசகருக்குத் தனி சன்னிதி உள்ளது. கரத்தில் திருவாசக சுவடி ஏந்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சிவசர்மா என்னும் அந்தணர், நெறி தவறி வாழ்ந்து வந்தார். இறுதியில் திருவாதவூர் வந்தடைந்து 'சிவ சிவ' என பலமுறை கூறித் துதித்தார். அவர் இறந்ததும் எம தூதர்கள் அவரது உயிரைக் கொண்டு செல்ல வந்தனர். அவர்களை ஈசன் தடுத்துவிட்டார். பின்னர் ஈசனின் கட்டளைப்படி சிவகணங்கள் வந்து சிவசர்மாவை சிவலோகம் அழைத்துச் சென்றன. இதைக் கண்டு எமதர்மன் திகைத்து நிற்க, 'எவனொருவன் தன் வாழ்நாளில் திருவாதவூர் வந்து எம்மை தரிசிக்கிறானோ, அவனை எமன் அண்ட அனுமதி இல்லை' எனக்கூறி மறைந்தார் ஈசன். 

ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் கருவறையில் திருமறைநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தலமரம் மகிழ மரமாகும். சனி பகவான் தனிச் சன்னிதியில் ஒரு காலை மடக்கி, தனது வாகனத்தில் பைரவர் அருகில் உள்ளார். மதுரைக்கு அருகில் உள்ள மேலூரில் இருந்து தெற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் திருவாதவூர் உள்ளது. அதன் அருகிலேயே யானைமலை, திருமோகூர் ஆகிய திருத்தலங்களும் அமைந்துள்ளன. 

"தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது, தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது".....ஆம்! நன்கு ஓடி ஆடி வேலை செய்யும் ஒருவர் திடீர் என வீட்டில் நடக்க முடியாமல் முடங்கிவிட்டால் அவர்நிலை என்ன?! வாத நோய் வந்து விட்டது. தென்றல் போல இருந்த அவர் வாழ்வு புயல் தானே....அவர் குடும்பத்தை நினைத்துப் பாருங்கள். ஆனால், எதற்கும் கவலைபடாதீர்கள். 

முடக்கு வாதமா, பக்க வாதமா, கை கால் வலியா?...வாருங்கள் திருவாதவூர் திருத்தலம். (பழனி திருத்தலமும் வாதநோய் தீர்க்கும்). திருவாதவூர் வந்து மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக எண்ணெய்யை வாங்கி 48 நாட்கள் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளில் "சிவாயநம" சொல்லித் தேய்த்து வாருங்கள், நிச்சயம் குணமாகும். 

திருவாதவூர் மூலவர் ஈசனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்ய அடியவர்கள் தாங்கள் ஆலயம் வரும் போதே ஒரு லிட்டர் நல்லெண்ணெய் வாங்கி வந்துவிடவும். சரியாக காலை 7 மணிக்குள் ஆலயம் வந்துவிடுங்கள். அங்கு உள்ள பைரவர் தீர்த்தத்தில் நீராடி, ஈசனை வழிபடுங்கள். 

"சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட, 
அத்தனெனக் கருளியவாறார்பெறுவார் அச்சோவே"..
"வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் நின் அருளை". 
"நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண்"

- சிவ.அ.விஜய் 

பெரியசுவாமி, கல்பாக்கம், 9787443462

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com