காசி விசுவநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-1

இத்திருக்கோயிலினுள் உள்ள சிறப்பான சிற்பம் தென்காசி திருக்கோயில், உலகத்திலேயே மிகச் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லுமளவுக்கு ஆலயம்....
காசி விசுவநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-1

முக்கட் சோதி தென்காசி முன்னோன் கதை
மிக்க வேதவியாசன் விரித்ததை 
தக்கவாய் தமிழால் சொலச் சண்பகக்
களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம்.

இத்தலத்து இறைவன்: அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி

இத்தலத்து இறைவி: அருள்தரும் உலகம்மன்

இத்தலத்துத் தீர்த்தம்: சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்

இத்தலத்தின் விருட்சம்: செண்பக மரம்

ஆலயப்பூஜை ஆகமம்: காரண ஆகம முறைப்படி செய்விக்கப்படுகிறது. 

இத்திருக்கோயிலினுள் உள்ள சிறப்பான சிற்பம் தென்காசி திருக்கோயில், உலகத்திலேயே மிகச் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லுமளவுக்கு ஆலயம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து கிடக்கிறது. காசிவிசுவநாதர் திருக்கோயிலினுள் முதலில் நாம் நுழையும்போது, திரு ஓலக்க மண்டபத்தில் எட்டு பெரியதான தூண்கள் நம்மைப் பிரமிக்க வைத்து நிற்கின்றன. இவைகளில், தென்திசையில் அணிவகுத்து நிற்பது, அக்னி, வீரபத்திரர், மன்மதன், மகாவிஷ்ணு, பத்ரகாளியம்மன் ஆகிய சிற்பங்கள், நமக்குக் கண்கள் நன்றாகத் தெரிந்தாலும், நம் விழியை மேலும் விரித்தும் பார்த்து திகைக்கும்படி இருக்கிறது.

இதேபோல வடவரிசையில் வீரபத்திர சட்டைநாதர், ரதி, பதஞ்சலி வியாக்ரபாத இருக்கும் மகா தாண்டவ மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆகிய சிற்பங்களும் அதேபோல் நம் விழியின் புருவத்தை திருத்திப் பார்க்க வைக்கிறது. மேல் வரிசையில் பேரழகு பொருந்திய இச்சிலைகள் ஒவ்வொன்றும் தூணுடன் சேர்ந்து தனித்தனியாக ஒரே கல்லில் உருவாகி நின்று ஊமை ஜாடையாக நம்மிடம் பேசின. அடுத்து, பாலமுருகன் சந்நிதியில் பஞ்சபாண்டவர்கள் சிற்பங்கள் ஐந்தும், யாழி சிற்பங்கள் நான்கும், துவாரபாலகர்கள் இரண்டும், கர்ணன் சிற்பம் ஒன்றும் ஆக மொத்தம் பன்னிரண்டு சிற்பங்கள் இருக்கின்றன. இச்சிற்பங்களின் மேன்மை என்னவென்றால், இக்கல் சிலைகளில் இருக்கும் நுட்பமான வேலைப்பாடுகளை மரத்தில் கூட செதுக்க முடிவது மிகக் கடினம். ஆனால் அதையெல்லாம் தாண்டி மரத்தில் இழைக்க முடியாததைக் கல்லில் உருக்கி வடித்தது நிறுத்தி வைத்திருந்தான் அந்த சிற்பி. இங்கிருக்கும் காசி தீர்த்தம், வட இந்தியாவில் உள்ள காசியின் தீர்த்தத்திற்கு நிகரானது என்று போற்றப்படுகிறது. 

வழிபட்டவர்கள்

இந்திரன், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்வ முனிவர் போன்றோர்கள் வழிபட்ட தலம். மேலும் நந்தியின் அவதாரத் தலமாகவும் இத்தலம் போற்றப்படுகிறது. சிலாகித முனிவர் குழந்தை வரம் வேண்டிப் பயன் அடைந்ததாக தலவரலாற்றில் உள்ளன. திருக்கோயிலைக் கட்டிய பராக்கிரமப் பாண்டிய மன்னனின் உற்சவர் சிலை சுவாமி சந்நிதியில் உள்ளது. திருக்கோயில் விழாக்களுக்கு தலைவராக அம்மன்னன் மதிக்கப்பட்டு, மன்னனுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு வருவது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இராஜகோபுரம்

அரிய பெருமை வாய்ந்த இத்திருத்தலத்தில், மாங்குயில் தூண் பதினொன்றும், ஓங்குநிலை என்பதும் கொண்ட கவின்மிகு கலையழகுடன் கி.பி. ஆயிரத்து நானூற்று அறுபத்து மூன்றாம் ஆண்டில், மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட ராஜகோபுரம் சுமாராக இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னமே சிதைந்து போனது. பின் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூறாம் ஆண்டில் ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் திருப்பணி முழுமையடைந்து குடமுழுக்கு சிறப்பாக நடந்தேறியது.

சிற்றாறு

இயற்கை கொஞ்சும் இடங்களில் எல்லாம் தவழ்ந்து வரும் இச்சிற்றாற்றிற்கு "சிவமது கங்கை" என்ற பெயரும் உண்டு. இவ்விபரம் திருக்குற்றாலத் தலபுராணத்தை வாசித்தால் பார்க்கலாம். வடக்கே கங்கைக் கரையில் வாரணாசி இருப்பது போல், சிவமது கங்கை என்ற பெயரைப் பெற்ற சிற்றாற்றின் கரையில் தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோயில், குற்றால ஈரச் சாரலை ஈர்த்து அமைந்துள்ளது. 

வடக்கில் உள்ள காசியை விட தெற்கில் உள்ள இத்தென்காசி புனிதமானதென்று அனேக புராணங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள காசியில் "இறந்தால் தான் முக்தி" ஆனால், தென்காசியில், பிறந்தாலும் முக்தி, இருந்தாலும் முக்தி, இறந்தாலும் முக்தி, இதில் ஐயமில்லை. தென்காசியில் இருப்பாருக்கும் தலத்தைக் கண்டாருக்கும் முக்தி என்று புராணங்கள் பல உறைக்கிறது. இத்தகைய பெருமையைக் கொண்ட தென்காசி நகரில் சிற்றாற்றங்கரையில் முதன் முதலில் "காவேரி கங்கை" அம்மனுக்குக் கோயிலமைத்தான் மாமன்னன் பராக்கிரம பாண்டியன்.

அசையாத ஆனைமுகன் 

கங்கையம்மன் கோயிலுக்கு முன்புறம் விநாயகரையும் மன்னன் எழுந்தருளிச் செய்வித்திருந்தான். சிற்றாற்றில் எழுந்தருளியிருக்கும் இவ்விநாயகர் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்பட்டு வந்தார். ஒரு சமயம், சிற்றாற்றில் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று இரண்டாம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இப்பெருவெள்ளம் அங்கிருக்கும் பாலத்தையே மூழ்கடித்து பாய்ந்தோடின. வெள்ளத்தில் பெரும் பெரும் பாறைகள் உருண்டு ஓடியது. முழு முழு மரங்கள் ஆணிவேருடன் வெள்ளத்தில் நீந்தின.

விநாயகர் அமர்ந்திருந்த சுற்றுப் பகுதிகளில், கற்களும் மணற்திட்டுகளும் ஆழ அழுந்திக் கரைந்தொழுகி வெள்ளத்தில் காணாது போயின. இவ்வெள்ளத்தில் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டதை அப்போதைய மக்கள் பார்த்திருக்கவும் செய்தனர். ஆனால், இந்த விநாயகரை மட்டும் வெள்ளம் அசைக்கக்கூட முடியவில்லை. சுற்றிலும் முற்றாக அழிந்துபோக, இந்த விநாயகர் மட்டும் முழுமையாக இருந்தார். அப்படியான அந்த ஆனைமுகன் இன்றும் அப்படியே இருந்து அருள் பாலிக்கிறார்.

இவ்வானைமுகனருகில் திருக்கோயில் தீர்த்தவாரி என்ற மண்டபம் இருக்கிறது. முன்பு இங்கிருந்துதான் காசிவிசுவநாதரின் அபிஷேகத்திற்கு தீர்த்தம் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. மாமன்னன் அமைத்த இத்திருக்கோயில் ஏறத்தாழ இருபது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மற்றத் திருக்கோயில்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு இத்திருக்கோயிலுக்கு உண்டு. இரண்டு பெரிய யானைகள், பெரும் தேர் ஒன்றை இழுத்துச் செல்லும் வண்ணம் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலின் இராஜகோபுரத்திற்கு முன்புறம் அழகான திறந்தவெளித்திடல் அமைந்திருக்கின்றன.

கோபுரத்தின் வடக்குப் பகுதியில் மகிஷாசுரமர்த்தினி நின்று அருள்பாலிக்கிறாள். கிழக்கு நோக்கி இருந்தருளும் இத்தேவி கைகுவித்து சேவிப்போரின் கண்ணீரை துடைத்து அருள் செய்யும் சக்தியாய் இருக்கிறாள்.

செவ்வாடை உடுத்தி குங்குமம் பொலிந்து மகிடனை காலடியில் கிடத்தி, சூலத்தைத் தாங்கி நிற்கும் இச்சூழலைப் பார்க்கும்போது, சூழ்ச்சிக்காரர்களையும், சூனியம் செய்வோர்களையும், ஆணவத்தை  அழித்தொழிப்பேன் என அருள் செய்கிறாள். கோபக்கணலோடு, எட்டுக் கரங்களுடன் மகிடனின் தலைமீது நின்றுகொண்டு, மங்கையரின் மாங்கல்யம் காக்கும் தாயாக அருளாட்சி புரிந்து வருகிறாள் இவள்.

முன்காலத்தில் இவள் இரவில் ஆலயத்துக்குள் நடமாடும் கோலம் நிகழ்ந்த வண்ணம் இருந்து வந்ததாக ஆலயம் பாதுகாவலர்கள் கண்ட சாட்சி இருந்தது. இதைப் பாதுகாவலரான பக்தர்கள் பலர் கண்டும் உணர்ந்தும் வெளியில் கூறியிருக்கிறார்கள். திருக்கோயிலுக்கும், திருக்கோபுரத்துக்கும் இடையில் பரந்து விரிந்த வெளிப்பரப்புள்ள இடம் இருக்கிறது. இப்போதையுள்ள இவ்வெளிப்பரப்பு, முன்னாளில் தெப்ப குளமாக இருந்ததாம்.

அந்நாளில் அக்குளத்தை "ஆனந்த தீர்த்தக் கட்டம்" எனப் போற்றி வழங்கி வந்திருக்கின்றனர். திறந்த வெளிப் பரப்பில் கோபுரத்தின் தெற்குப் பகுதியில் மேற்கு பார்த்த வண்ணம் துர்க்கை நின்ற கோலத்தில் இருக்கிறாள். துர்க்கையை வணங்கிக் கொண்டோம். ஆலய வணக்கத்தைத் தொடங்க, மீண்டும் அடுத்தப்பகுதியில் திருக்கோயிலுக்குள் செல்லலாம்! தயாராக இருங்கள்!!

- கோவை கு. கருப்பசாமி 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com