குழப்பமும் அகங்காரமும் நீங்கி தெளிவு கிடைக்கனுமா? தலைவாழை விருந்து சாப்பிடுங்க!

மகாபெரியவா மடத்துல இருக்கிற சமயத்தில் அடிக்கடி வித்வத் பரீட்சைகள் நடக்கும். அதாவது பலரும் வந்து தாங்கள் கத்துண்ட விஷயங்களைக் குறித்து பெரியவா முன்னிலையில் விவாதம் பண்ணுவா.
குழப்பமும் அகங்காரமும் நீங்கி தெளிவு கிடைக்கனுமா? தலைவாழை விருந்து சாப்பிடுங்க!

மகாபெரியவா மடத்துல இருக்கிற சமயத்தில் அடிக்கடி வித்வத் பரீட்சைகள் நடக்கும். அதாவது பலரும் வந்து தாங்கள் கத்துண்ட விஷயங்களைக் குறித்து பெரியவா முன்னிலையில் விவாதம் பண்ணுவா. அந்த சமயத்துல பலருக்கும் தெரியாத புதுப்புது விஷயங்கள், தத்துவங்கள் மகாபெரியவா திருவாக்குலேர்ந்து வெளிப்படும். அந்த மாதிரியான விளக்கத்தை அதுவரைக்கும் எந்த வேத புராணத்துலயும் சொல்லியிருக்க மாட்டா. அப்படி ஒரு தெய்வீகமான வாக்கு. கேட்கறதுக்கு ரொம்பவே புண்ணியம் பண்ணியிருக்கணும்னு எல்லாருமே சொல்வா.

ஒரு சமயம் அப்படித்தான் வேதம், சாஸ்திரம், புராணம்னு எல்லாத்தையும் மையமா வைச்சு நடந்துண்டு இருந்த ஒரு விவாதம், திடீர்னு சாப்பாட்டைப் பத்தி திசை திரும்பித்து. 

"குழம்புக்கும், ரசத்துக்கும் என்ன வித்தியாசம்?" இப்படி ஒரு கேள்வியை எழுப்பினார் ஒருத்தர். "ரெண்டுலயுமே பருப்பு, மஞ்ச பொடி, புளி, சாம்பார் பொடி, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாம் சேர்க்கறா. ஒரே ஒரு வித்யாசம், குழம்பு கெட்டியாய் இருக்கும். ரசம் தீர்க்க இருக்கும்!" இந்த மாதிரி ஆளாளுக்கு ஒவ்வொண்ணை சொல்லிண்டு இருந்தா.

எல்லாத்தையும் கேட்டு ரசிச்சுண்டு இருந்தார் மகாபெரியவா. ஒரு கட்டத்துல, யார் சொன்ன விளக்கம் சரின்னு கேள்வி வந்து, தீர்ப்பு மகாபெரியவாதான் சொல்லணும்னு எல்லோரும் கேட்டுண்டா.

அமைதியா சிரிச்ச பரமாசார்யா, "எல்லாரோட விளக்கத்தையும் கேட்டேன் என்னோடதைக் கேட்கலையே.!". அப்படின்னார்.

எல்லாரும் ரொம்ப ஆர்வமா.. "மன்னிச்சுக்குங்கோ பெரியவா.. உங்க விளக்கத்தை எங்களுக்கு சொல்லி அருளுங்கோ!"ன்னு வேண்டிண்டா. 

புன்னகைச்ச பரமாசார்யா, "குழம்புல தான் இருக்கும். ரசத்துல தான் இருக்காது!" அப்படின்னு சொல்லி கொஞ்சம் நிறுத்தினார். 

"குழம்புல போடற காய்கறியை, 'தான்'னு சொல்றது வழக்கம். ரசத்துல காய்கறி எதுவும் போடறதில்லை..!' அதைத்தான் சொல்றார் பெரியவாள்னு விஷயம் புரியாதவா நினைச்சுண்டா.

விஷயம் புரிஞ்சவா,"ஆஹா..ஆஹா...அற்புதமான விளக்கம்!"னு குரல் எழுப்பினா.

எல்லா விஷயமும் எல்லாருக்கும் தெரியணும்னு நினைக்கற மகாபெரியவா தான் சொன்ன விளக்கத்தை எல்லாருக்கும் புரியறமாதிரி விளக்க ஆரம்பித்தார். "தான் அப்படிங்கற ஆணவம் வந்துட்டா, எல்லாமே குழப்பமாயிடும். அதை அகற்றினாத்தான் தெளிவு பிறக்கும்".

"குழப்புத்துல தான் இருக்கும்னு உணர்த்தறது குழம்பு. தெளிவுல தான் இருக்காதுன்னு உணர்த்தறது ரசம்!" கொஞ்சம் விளக்கமா சொன்ன பெரியவா, சுத்தி இருந்தவாளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

"எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"

"மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம், பட்சணம், கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?" கேட்ட மகாபெரியவா, யாரும் பதில் சொல்லாத்தால் தானே அதற்கு விடை சொல்ல ஆரம்பிச்சார்.

"மொதல்ல குழம்பு. இதுல, 'தான்' இருக்கு. பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே தான்கற அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம குழம்பிப் போயிடறோம். அந்தத் தானை கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்தகட்டத்துக்குப் போறோம். அப்போ தான் இல்லாததால் ஒரு தெளிவு வந்துடறது. அதாவது ரசமான மனநிலை. அதான் ரசம். தான் இல்லாம தெளிவா இருக்கற மனசுல ரசமான எண்ணம் வருது. அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் இருக்கு.

கடேசியா மோர். பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய் வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது. அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை. நாமளும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு, யாருக்கும் எந்த உபத்ரவமும் பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது "நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம் பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப் பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான் அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார் மகாபெரியவா.

இன்று வாழ்க்கையில் பலபேர் வேலையில் மேலதிகாரிகளுடன் பிரச்னை, கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்னை, சக பணியாளர்களுடன் பிரச்னை, திருமண வாழ்வில் கணவன் மனைவியிடத்தில் பிரச்னை, வியாபாரத்தில் பிரச்னை, விளையாட்டில் பிரச்னை, காதலில் பிரச்னை, தகப்பன் மகன் உறவில் பிரச்னை, ஆன்மீகத்தில் பிரச்னை, அரசியலில் பிரச்னை என எல்லா இடங்களிலும் ஏதோ ஒருவித பிரச்னையோடு வாழ்ந்துவருகிறார்கள்.

பொதுவாக மனிதரிடையே காணப்படும் அகவிருளாகக் கோபம் பொறாமை பொறுமையின்மை பேராசை சுயநலப் போக்கு அகங்காரம் மமகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஒவ்வொருவருடைய மனத்திலிருந்தும் குறிப்பிட்ட இவ்வழுக்குகள் நீங்கினால் வீட்டிலும் நாட்டிலும் அமைதி சாந்தி சமாதானம் போன்றவை துலக்கமுடன் ஒளிவீசும் எனலாம்.

அகங்காரம், மமகாரம் ஆகிய இவ்விரண்டும் அக்ஞானத்தினின்று உதிப்பவைகளாம். மமகாரம் என்பது என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை என்பனவாம். அகங்காரம் என்பது நான் செய்தேன், நான் சாதித்தேன், என்னைத் தவிர வேறு யாராலும் முடியாது போன்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும்.

நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற ஒரு நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நடக்கின்ற சண்டைதான் வாழ்க்கை.

வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் மமகாரத்தினால் உருவாக்கப்படுபவை.

ஜோதிடத்தில் அகங்காரமும் மமகாரமும்

ஜோதிடத்தில் அகங்காரத்தையும் மமகாரத்தையும் குறிக்கும் கிரகம் சூரியன் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அகங்காரத்தையும் மமகாரத்தையும் குறிக்கும் பாவம் லக்னபாவம் எனக் குறிப்பிடுகிறது. 

ஒருவர் ஜாதகத்தில் சூரியனது வீடு லக்னமாகவோ, ராசியாகவோ அமைந்து ஆட்சி உச்சம் பெற்றுவிட்டாலும் சூரியன் ஆத்மகாரகனாக அமைந்துவிட்டாலும் லக்னத்திற்கு சூரியன் பார்வை பெற்றுவிட்டாலும் அவர்களுக்கு எப்போதும் ஏதோ ஒரு அகங்காரம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் சூரியனை குரு பார்த்துவிட்டாலும் குருவை சூரியன் பார்த்துவிட்டாலும் அகங்காரம் தகர்ந்துவிடும்.

சூரியன் எந்தக் கிரகத்தில் நிற்கிறது என்பதைப் பொருத்தும் எந்தக் கிரகத்தோடு சேர்க்கை பெறுகிறது என்பதைப் பொறுத்தும் அகங்காரம் அமைந்துவிடுகிறது. சூரியன் புதன் சுக்கிரன் இம்மூன்றும் முக்கூட்டு கிரகங்கள் எனப்படும். இவை மூன்றும் குறிப்பிட்ட பாகையில் இடைவிடாமல் ஒன்றைஒன்று தொடர்ந்து இணைந்தே செல்லும்.

ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்து புத ஆதித்ய யோகம் பெற்றுவிட்டால் அவர்களுக்கு அறிவு சார்ந்த கர்வம் மற்றும் அகங்காரம் ஏற்பட்டுவிடும். உலகில் உள்ள 95% பேருக்கு இந்த புத ஆதித்ய யோகம் அமைந்துவிடும். அனைவருக்கும் கல்வியறிவு பெறவேண்டும் எனும் இறைவனின் கருனையால் ஏற்பட்ட இந்த யோகம் உலகில் பலரையும் அகங்காரத்தோடு விளங்க காரணமாகிவிடுகிறது.

புத ஆதித்ய யோகத்தினால் அனைவருக்கும் அகங்காரம் ஏற்பட்டாலும் சூரியனுக்கு முன்னும் பின்னும் புதன் நிற்கும் நிலையைப் பொறுத்து அங்காரத்தின் விளைவுகள் மாறுபட்டு அமைந்துவிடும். இன்று சமூகத்தில் கல்வியில் சிறந்தவர்கள், ஆசிரியர்கள், ஜோதிடர்கள் இவர்களுக்குள் எப்போதும் ஒரு கர்வ நிலை இருப்பதற்கு இதுவே ஒரு காரணமாகிவிடுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு செல்வ செழிப்பினால் கர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. சூரியனை கடந்து சுக்கிரன் நின்று சுப வெசி யோகம் ஏற்படும்போது அவர்களுக்கு செல்வ உயர்வு நிலை ஏற்படுவதோடு செல்வத்தால் சிறிது செறுக்கு ஏற்படவும் தவறுவதில்லை.

சூரியனுடன் சேரும் கிரகத்தைப் பொருத்து அமையும் அகங்காரத்தின் தன்மை: 
சூரியன் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்ற தன்மை அரசியல், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றால் அகங்காரம் ஏற்படும். சூரியன் சந்திரன் சேர்க்கையால் ஏற்படும் அமாவாசை யோகமும் பௌர்னமி யோகமும் பல பதவிகளை தந்து உயர்வை ஏற்படுத்தினாலும் பதிவியினால் சிறிது அகங்காரத்தையும் தந்துவிடுகிறது. சூரியன்-செவ்வாய் சேர்க்கை நிலம் சொத்து ரியல் எஸ்டேட் ஆகிய  விஷயங்களில் அகங்காரம் மற்றும் மமகாரத்தை ஏற்படுத்திவிடுகிறது.

சூரியன் புதன் சேர்க்கை கல்வியறிவு, வியாபாரம் ஆகியவற்றின் காரணமாக அகங்காரம் அமைந்துவிடுகிறது. சூரியன் குரு சேர்க்கை உயர்நிலை ஆன்மீகத்தை தந்தாலும் இருவரில் ஒருவர் 6, 8, 12 அதிபதிகளாகிவிட்டால் ஆன்மீகத்தில் கர்வம் ஏற்பட காரணமாகிவிடுகிறது.

சூரியன் சுக்கிரன் இணைவு பணம், செல்வ நிலை பெண்கள் ஆகியவற்றில் செழிப்பை ஏற்படுத்தி அகங்காரத்தால் பிரச்னைகளையும் தந்துவிடுகிறது. சூரியன் சுக்கிரனின் வீட்டில் நீசமடைந்துவிடுவதால் சுக்கிரனோடு இணைவு கர்வ பங்கத்தை ஏற்படுத்திவிடும். சூரியனோடு சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் இணைவு சூரியனுக்கு நீச நிலையே ஏற்படுத்தி கர்வ பங்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

அகங்காரம் நீங்க பரிகாரங்கள்

அகங்காரம் ஒழிய ஆன்மீகமும் தண்டனையும் வழிசெய்கிறது. எல்லா நேரங்களில் தண்டனை ஏற்புடையதாக இருக்காது என்பதால் ஆன்மீக வழி சிறந்தது என ஏற்று கொள்ளப்பட்டிருக்கிறது. ஆன்மீக வழியில் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் ஜ்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தையே" என குட்டிக்கொள்வதும் தோபிகரணம் எனும் யோக பயிற்சியும் செய்வது அகங்காரத்தை அழிக்கும் என ஆன்மீகம் தெரிவிக்கிறது. கேதுவிற்கு அதிதேவதை விநாயகர் என்பதும் சூரியனோடு கேது சேர்க்கை கர்வபங்கம் ஏற்படும் என மேலே குறிப்பிட்டிருப்பதை இங்கு ஞாபகபடுத்த விரும்புகிறேன். 

வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். சைவம் மற்றும் வைணவத்தை ஒருங்கிணைக்கும் ஆலயமாக இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் எங்கும் இல்லாத புதுமையாக சிவலிங்கம் இருக்கும் ஆவுடையாரின் மீது பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்தத் திருத்தலம் 108 திவ்ய தேசங்களில், 107-வது தலமாக திகழ்கிறது.

இந்த ஆலயம் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக உள்ளது. ஒருமுறை, சந்திர பகவான் பெற்ற சாபத்தினால் அவரது ஒளியும், அவரது கலைகளும் மறையத் தொடங்கின. இதைக் கண்டு வேதனையடைந்த சந்திரனின் மனைவிகளில் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி, இந்தத் தலம் வந்து பெருமாளை வணங்கி தவம் செய்தாள். இதையடுத்து பெருமாள் நேரில் காட்சி தந்து, சந்திர பகவானுக்கு சாபவிமோசனம் அளித்து அருள்புரிந்தார். அது முதற்கொண்டு இந்தத்தலம், திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக உள்ளது. 

இங்கு தரிசிப்போருக்கு சந்திராஷ்டம தோஷங்கள், மனக் குழப்பங்கள், நட்சத்திர தோஷங்கள், செவ்வாய் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். மேலும் புத்திகாரகரான புதனின் அதிதேவதையான விஷ்னுவின் நக்‌ஷத்திர நாளில் ஸ்ரீ ப்ரஸன்ன வெங்கடேச பெருமாளை தரிசிப்பது அகங்காரம், மமகாரம் நீங்கி புத்தி தெளிவு ஏற்படும் என்பது நிதர்சனம். மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்கி மூன்றடி மண் பெற்ற நாளும் ஒரு திருவோண நாள் தான் என்பது கூடுதல் தகவலாகும்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com