கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 4

திருப்பேரூர் திருக்கோயிலில் கனக சபையை திருமலைநாயக்க மன்னனின் சகோதரன் அளகாத்திரி நாயக்கன் என்பவன் கட்டினான்.
கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 4

திருப்பேரூர் திருக்கோயிலில் கனக சபையை திருமலைநாயக்க மன்னனின் சகோதரன் அளகாத்திரி நாயக்கன் என்பவன் கட்டினான். 1625 முதல் 1659 வரை முப்பத்து நான்கு வருடங்களாகக் கட்டப்பட்டு வந்தன. கனகசபையில் பிரம்மா, திருமால், அதிஉக்ரகாளி, சுந்தரர் ஆகியோருக்காகவும் நந்தியின் தவத்திற்காகவும் சிதம்பரத்தில் நடனமாடியது போலவே இங்கும் ஆனந்த நடனமாடினார் இறைவன். அதனால்தான் இத்தலம் "மேலைச்சிதம்பரம்" என்று அழைக்கப்படுகிறது.  

இன்றும் நடராஜரின் நுழைவு வாயிலில் இரண்டாவது பஞ்சாட்சர படியினை தாண்டும்போது கோமுனி, பட்டிமுனி என்னும் பெயரில் பிரம்மாவும், திருமாலும் இருப்பதாக ஐதீகம். கனகசபையின் முதல் பஞ்சாட்சர படிகளைத் தாண்டினால் இரண்டு பக்கமும் பிரம்மாண்டமான எட்டு சிலைகள், கல்சங்கிலி, சுழல்தாமரை போன்ற அற்புதங்கள் அமைந்துள்ளன. இதைத் தாண்டினால் இரண்டாவது பஞ்சாட்சரப்படியின் அருகே யாளியின் வாயும், யானையின் துதிக்கையும் ஒன்றாக இணைவது போன்ற சிலை, அதற்கும் அடுத்தாற்போல குதிரை வீரன்சிலை ஒருபக்கத்தில் முழுதானதாகவும், மற்றொரு பக்கம் உடைந்தனவாகவும் காணப்படுகின்றது.

இதற்கடுத்து தாண்டினால் சந்தன சிற்பங்களும் மூன்றாவது பஞ்சாட்சரப் படிகளை தாண்டினால் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் அழகான நடராஜரும், அவரோடு சிவகாமியம்மையுடன் அழகு அருளாகக் காட்சி அளிக்கின்றனர். நடராஜரின் மண்டபத்தை நான்கு வேதங்களே நான்கு தூண்களாக மாறி தாங்குவதாக ஐதீகம். இங்குள்ள தூண்களை சற்று நன்றாகக் கவனித்துப் பார்த்தோமானால், அத்தூண்கள் யாவும் இறைவனுக்கு பணிந்த நிலையில், தூண்கள் சற்றே சாய்ந்த நிலையிலும் அமைந்திருப்பதைக் காணலாம்.

ஆனந்த தாண்டவமாடும் இறைவன் இடதுகையில் அக்னி, வீசுகிற ஹஸ்தம், வலதுகையில் உடுக்கை, அபயஹஸ்தம், ஆடி அடங்கப்போகும் நிலையில் தூக்கிய திருவடியை சற்றே தாழ்ந்த நிலையில் காட்டியருள்கிறார். சடையும் தாழ் சடையாக காணப்படுகின்றது. கன்னங்கள் கதுப்புக் கன்னங்களாகவும், அக்கன்னங்களைக் வணங்கி கிள்ளிப் பணியத் தோன்றும் நமக்கு. ஆனால், அது நம்மால் முடியாது! ஒரு வேளை எம்பெருமானை அனுதினமும் ஆராதித்து பூசை புணர்மானம் செய்யும் அர்ச்சகருக்கு வேனுமானால் இது அருளாகலாம் எனத் தோன்றுகிறது.

முயலகன் மீது ஊன்றிய திருவடிவில் வார்க்கப்பட்ட நிலையில் சலங்கை மிளிர்ந்து அழகு சேர்க்கிறது. சபாபதி, அழகிய திருச்சிற்றம்பலநாதர், கூத்தப்பிரான் என்பவை நடராஜரின் வேறு பெயர்களாகும். சிவகாமி அம்மையார் வலது கையில் நீலோத்பவ மலரோடு இடதுகை டோலஹஸ்தம் கொண்டு் நின்ற நிலையில் காட்சியளிக்கின்றாள். திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படும் தலங்களில், இத்தலமும் ஒன்று. 

இந்த கனகசபையின் நடராஜர் சந்நிதி விசேஷமாக அமைந்துள்ள தலமாக இருப்பதால், சிறப்புத்தாண்டவ தலங்களில் இதுவும் ஒன்றாகவும் கூறப்படுகிறது. இச்சபையிலுள்ள பெரும்பாலான தெய்வங்களும், ஏனைய சிற்பங்களும் பெரும்பாலும் நடனமாடும் நிலையிலேயே இருப்பதை கூர்ந்து நோக்கத் தக்கது. சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய இந்த கனக சபையை உருவாக்க மருதமலையிலிருந்து கற்களை கொண்டு வந்து சிற்பங்களை இருபத்தெட்டு வருடங்களாக அரும் பாடுபட்டு செய்தவர் கம்பனாச்சாரி ஆவார்.

திருக்கோயில் திருப்பணிகளுக்குண்டான சிற்ப வேலைப்பாடுகள் இருபத்தெட்டு வருடங்களாக நடந்து வந்தது. கும்பாபிஷேக நாள் குறிக்க வேண்டியதிருப்பதால் திருப்பணிகள் கட்டிட சிற்பங்களின் பணிகள் விரைவாக முடுக்கி விட்டிருந்தனர். இதற்காக செய்விக்கப்பட்டிருந்த சிற்பங்களை பார்வையிட மன்னன் கம்பனாச்சாரியாரோடு ஏராளமான ஊர் பொது மக்களும் வரிசையாகப் பார்வையிட்டு வந்தனர். வரிசையாக ஒவ்வொரு சிலையின் கலை நயத்தையும் பார்வையிட்டு வந்து கொண்டிருந்த போது...........

அந்தச் சமயத்தில்தான் ஒரு இளைஞன் கத்தினான். சத்தமான குரலொன்று கேட்கிறதே? என்னவென்று சிலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் பார்வை தடை ஏற்பட்டு, அனைவரும் குரல் வந்த திசையை நோக்கினார்கள். அப்போது, இவர்களை நோக்கி நடுத்தர வயதுடைய இளைஞனொருவன் வந்தான். வந்தவன் இங்கேயிருக்கும் இரண்டுபக்க குதிரை வீரன் தூண்களின் ஒன்றில் ஒரு பக்கத்தில் குறையொன்று உள்ளது என்றான். எனவே இத்தூணை நிர்மாணத்திற்கு எடுத்துக் கொள்ளுதல் கூடாதென்றான்.

"நீ யார்?..... இக்குதிரை வீரன் சிலையில் குறையுள்ளதென உனக்கெப்படித் தெரியும். அந்தக் குறையை உன்னால உணர்த்திக் காட்ட முடியுமா? 

நான் சிற்ப சாஸ்திரத்தை முழுமையாக கற்றுத் தேர்ந்தவன். என் வாழ்நாளில் சிற்பங்களில் குறைகொண்ட சிலை ஒன்றேனும் வடித்ததில்லை என்று கம்பனாச்சாரியார் கூறினார். "குறையுளது!...குறையுளது!" வீரன் அமர்ந்திருக்கும் குதிரைவீரன் சிலையில் குறை உள்ளது. அந்தக் குறையை நான் நிரூபித்துக் காட்டுகிறேன் என ஆவேசப்பட்டான் அவ்விளைஞன். 

இளைஞன் குரலை உயர்த்த ஆவேசமாகப் பேசியது, கம்பனாச்சாரியாருக்கு என்னவோ போலாகி விட்டது. என்னடா இவன் என் அனுபவம் இவனுக்கு வயசாகக் கூட இருக்காது! இவன் என் சிற்பத்தில் என்ன குறையைக் கண்டிருப்பான் அதையும் பார்த்துவிடலாமென நினைத்து,...........

'சரி! குறையை நீ நிரூபித்துக் காட்ட வேண்டும்!.. தவறினால் உன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நான் விளைவேன் என்று சொன்னார்.

"தாரளமாக! இதோ நிரூபிக்கிறேன்! எனச் சொன்னவன், சந்தனத்தையும் உளியையும் கொண்டு வரச்செய்தான். சந்தனத்தை எடுத்து குதிரை வீரன் சிலையில் பூசி மெழுகினான். சிறிது நேரம் பொறுத்திருக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டான். குதிரைவீரன் சிலையின் மீது பூசிய சந்தனமனைத்தும் சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தவிர, மற்ற இடத்திலுள்ள சந்தனம் அனைத்தும் உலர்ந்து போயிருந்தது.

உலராத சந்தனம் இருந்த இடத்தினை மட்டும் விலக்கிவிட்டு, மற்ற இடங்களிலிருந்த சந்தனத்தை நீக்கிய அந்த இளைஞன், உளியை எடுத்து கம்பனாச்சாரியாரின் கைகளில் கொடுத்தவன், 'இதோ! இந்த உலரா நிலையிலுள்ள இடத்தில்தான் குறையுள்ளது. உளியினால் இவ்விடம் கொண்டு  உடையுங்களென்றான் இளைஞன்.

கம்பனாச்சாரியாரும் இளைஞன் சுட்டிய இடத்தில் ஓங்கித் தட்டினார்.

பொதக்க்க்.........க்

அதிகமாக உளிக்கு வேலையில்லை. இரு அடிகள் வாங்கிய அத்தூணின்கண் உள்ள அவ்விடத்திலிருந்து கொட்டாங்கச்சி அளவில் கல் பெயர்ந்து விழுந்தது. அதே சமயம் கல்தூணின் உள்ளிருந்து குபுக்-கென தேரையொன்று வெளியே குதித்தோடிப் போனது. 

(இதுதான் கல்லுக்குள் தேரை. சிற்ப வல்லுநர்களுக்கு சிற்ப சிலைகள் வடிக்க எப்படிப்பட்ட கற்பாறைகள் தேவையென அவர்கள் அறிவார்கள். அதுபோலவே தேரையிருக்கும் கற்பாறையையும் அச்சிற்ப வல்லுநர்கள் அறிவார்கள்.)

முழுமையாக சிற்ப சாஸ்திரம் கற்றுவிட்டோமென்றிருந்த கம்பனாச்சாரியாரின் ஆளுமை பணிந்தன. முகம் இறுக முன்னின்றிருந்த யாரையும் காண மறுத்து தலை கவிழ்ந்தார் கம்பனாச்சாரியார். அவர் கைகளிலிருந்த உளி விடுதலைப் பெற்று நிலத்தில் கல்லில் பொத்தென விழுந்து சிணுங்கியது. கம்பனாச்சாரியாரின் மனதெல்லாம் வலி! நடுக்கம்! உளி நீங்கப் பெற்ற கைகளால் சட்டென பக்கத்திலிருந்த வாளை எடுத்து தன் கைகளைத் தானே வெட்டிக் கொண்டார் கம்பனாச்சாரியார். 

இச்சம்பவம் நடந்ததை மெய்ப்பிக்கும் வகையில் இன்றளவும் நடராஜர் சந்நிதிக்கு இடது புறம் சந்தனம் அரைக்கும் இடத்திற்கு அருகே உடைந்த குதிரை வீரன் சிலையின் மிச்சத்தினை, நாம் சென்றால் காணலாம். இதுதான் தேரை குதித்தோடிய குதிரை மீதமர்ந்த வீரன் சிலை பாதியளவு உள்ள தூணாகும். பின்பு விசாரணையில், தூணில் குறை கண்டு சொன்ன இளைஞன், கம்பனாச்சாரியாரின் உறவானவர்களில் ஒருவனெனத் தெரிந்தது.

மேலும் இங்கு கம்பனாச்சாரியார் வடித்த சிற்பத் தூண்கள் அணைத்தும் சிற்பத் துறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய நுன்னுற்பங்கள் நிறைந்து அழகு தருவனவாகும். அவை கனகசபை நடராஜரின் சந்நிதி முன் எட்டு அழகிய சிற்பங்களாக உள்ளன. திருக்கோயில் வந்து தூண்களை பார்வையிடும் பக்தர்கள், அதனின் கலை நுன் வேலைப்பாடுகளைக் கண்டு வியந்து அச்சிலைகளை, தொடுவன அதிகரித்த வண்ணமிருந்தது. இதனால், ஆலய நிர்வாகம் இதைப் பாதுகாக்கும் பொருட்டு, பொக்கிஷமாக பாதுகாத்திட எட்டுசிலைகளுக்கும் சன்னக்கம்பி வேலியமைத்து பார்வைக்குத் தெரியுமாறும் அழகுறச் செய்து வைத்திருக்கிறார்கள்.

இக்கனக சபையை எத்தனை முறை சென்று பார்த்தாலும் பார்த்த பரவசம் நீங்கப் பெறாது. அத்தனை அழகுநுனி வேலைப்பாடுகள் அமைந்தவை. திரும்ப திரும்பச் சென்று பார்க்க ஆவலுண்டாகும். அத்தனை நேர்த்தியானவை! பேரூரைப் பற்றிய நூல்களில் தலையாயது கச்சியப்ப முனிவர் பாடிய பேரூர் புராணமாகும். இவர் முப்பத்தாறு தத்துவங்களைக் கொண்டே நூலை யாத்துள்ளார்.

இவர் இயற்றிய தலபுராண நூலில் முப்பத்தாறு படலமாக காட்டியுள்ளார். இம்முப்பத்தாறு படலமும் விரிவாக விளக்கமாக இத்தொடரில் கொடுக்க நாள்கள் போதாது என்பதால், முக்கிய படலங்கள் மட்டுமே வரும். நடராசப்பெருமான் கோயில் மண்டபத்திலும் முப்பத்தாறு தூண்கள் இருக்கின்றன. புராணப் படலத்திலுள்ள முப்பத்தாறும், மண்டபத்திலுள்ள தூண்கள் முப்பத்தாறும் இவ்விரண்டுக்கும் ஏதோ தத்துவத் தொடர்புடைவன போலும். 

'கங்கையும் பணிவெண்டிங்களும்' எனத் தொடக்கமாகும் விநாயகர் வாழ்த்தில் கூட முப்பத்தாறு சொற்கள்தான் இருக்கிறது. கனக சபையில் "கோமுனி" "பட்டிமுனி" என இருவருக்காக ஆடிய பாதத்தோடு விளங்கும் நடராஜர் வடிவம் மிக அழகோ அழகு. விமானம், வடிக்கப்பட்ட தாமரை மலர், கல்லாலான சங்கிலிகள், நம்மை ஆச்சரியமூட்டுகின்றன. சிற்பிகளின் உளிகள் கல்லை இழக்கிக் கரைந்துருக்கி கல்சங்கிலியாக உருவாக்கியிருப்பது நம்மை ஆச்சர்யமாகப் பார்க்க வைக்கின்றன.

மாமறை முனிவர் வாழ்க மரகத வல்லி யோடும்
பாமலி புலவர் போற்றும் பட்டிநா யகனார் வாழ்க
காமரு வெள்ளி மன்றிற் கண்ணுத னடனம் வாழ்க
கோமனு நீதி வாழ்க குவலய முழுதும் வாழ்க.

- படங்கள் ச.பாலாகிருஷ்ணன், கோவை

- கோவை கு. கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com