தை அமாவாசை நாளில் தோன்றிய அபிராமி அந்தாதி....

அமாவாசையில் பௌர்ணமியை தோன்றச்செய்த திருக்கடையூர் அபிராமி அம்மன் திருக்கோயிலில் (16.01.2018)அன்று இரவு 8 மணிக்கு அபிராமிபட்டர் விழா மிக விமரிசையாக நடைபெறுகிறது. 
தை அமாவாசை நாளில் தோன்றிய அபிராமி அந்தாதி....

அமாவாசையில் பௌர்ணமியை தோன்றச்செய்த திருக்கடையூர் அபிராமி அம்மன் திருக்கோயிலில் (16.01.2018)அன்று இரவு 8 மணிக்கு அபிராமிபட்டர் விழா மிக விமரிசையாக நடைபெறுகிறது. 

'சொற்கள் மந்திரமாதல் வேண்டும்' என்கிறார் பாரதியார்.

அதாவது, நாம் பகரும் சொற்கள் தெய்வ மந்திரத்துக்கு ஈடானதாக இருக்க வேண்டும் என்கிறார். வாழ்வின் வலிகளால் முடங்கிக் கிடக்கும் எண்ணற்ற எளிய மக்களுக்கு சக்திகொடுத்து அவர்கள் வாழ்வில் வளம், நலன் கொடுக்கும் மந்திர சக்திவாய்ந்த நூலாகத் திகழ்கிறது 'அபிராமி அந்தாதி' எனும் தமிழ் நூல். அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு சொல்லும் மந்திரச் சொற்களாகவே இருக்கின்றன. 

அந்தாதி என்றால் முதல் பாடலின் இறுதிச் சொல்லையோ அல்லது தொடரையோ அடுத்துவரும் பாடலின் தொடக்கமாகக் கொண்டு பாடப்படும் நூலாகும். அதாவது ஒரு பாடலின் அந்தம், அடுத்தப் பாடலுக்கு ஆதியாக வருவது அந்தாதி ஆகும். அபிராமி அந்தாதி திருக்கடையூர் அபிராமி அம்மன் மேல் பாடப் பெற்றதாகும். அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காரியத்தைச் சித்தி செய்யக்கூடிய மந்திரசக்தி படைத்தவையாகும். அபிராமி அந்தாதியின் முதல் பாடல் 'உதிக்கின்ற' என்று தொடங்கி, அதன் நூறாவது பாடல் 'உதிக்கின்றவே' என்று முடிகிறது. அபிராமி அந்தாதியை  நம்பினோர்கள் வாழ்வில் அஸ்தமனமில்லை.

''தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே''

என்கிறது அபிராமி அந்தாதி. அதாவது, மிகுந்த செல்வம், கல்வி, என்றும் சோர்வில்லாத மனம், உடம்பில் தெய்வீக பொலிவைத்தரும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நல்ல அடியவர்களை நட்பாக்கித்தரும், கூடவே இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தன்னுடைய அடியவர்களுக்கு அள்ளித்தரும் திருக்கடையூர் அபிராமியின் கடைக்கண்கள் என்கிறது அபிராமி அந்தாதி. அதுமட்டுமல்ல, அதன் நிறைவுப் பாடலான 'ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை' பாடலில் 'முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே' எனக்கூறி நிறைவடைகிறது. 

அபிராமி அம்மனைத் தொழுவோர்க்கு எல்லாம் கிடைக்கும் என்று சிற்சில பயன்களைச் சொல்லாமல் ஒரேயடியாக ஒரு தீங்கும் இல்லை என்று சொல்லி, எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்கிறது அபிராமி அந்தாதி. இப்படிப்பட்ட மகிமை பொருந்திய அபிராமி அந்தாதி தோன்றிய நன்னாள் ஒரு 'தை அமாவாசை' ஆகும். அது தோன்றிய திருத்தலம் 'திருக்கடையூர்'. சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில் இங்குதான் எமனை காலால் எட்டி உதைத்து, சம்ஹாரம் செய்து காலசம்காரமூர்த்தியாக விளங்குகிறார் இத்தல ஈசன் அமிர்தகடேஸ்வரர். 

பாற்கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தக்கடத்தில் உருவான ஈசன் இவர் என்பதால் இத்தல ஈசன் அமிர்தகடேஸ்வரர் எனப்படுகிறார். மார்க்கண்டேயருக்கு எமனிடமிருந்து அபயம் அளித்து, அந்த எமனை அழித்து, மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறாய் சிரஞ்சீவியாய் இருக்கும் வரம் அளித்த திருத்தலம் இது என்பதால் திருக்கடவூர் என்று அழைக்கப்படுகிறது. ஆம்! எம பயத்தை கடக்க உதவும் ஊர் என்பதால் திருக்கடவூர் என்றாகி, தற்போது திருக்கடையூர் என்று வழங்கப்படுகிறது. மார்க்கண்டேயர் சாகாவரம் பெற்ற ஊர் இது என்பதால் சஷ்டியப்த பூர்த்தி, மணி விழா, பீமரத சாந்தி, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம் போன்றவை அனுதினமும் இங்குச் சிறப்பாக நடைபெறுகிறது. இதயநோய், பிற தீராத நோய் உள்ளவர்கள், ஆயுள்தோஷம் உள்ளவர்கள் இங்கு ஈசனை  வழிபட்டு நோய்கள் குணமாகி ஆயுள் விருத்தியும் பெறுகிறார்கள். இராஜகோபுரத்தில் இருக்கும் கோபுர முனீஸ்வரரை வழிபட்டு, இங்கு மேற்குபார்த்தவண்ணம் அருளும் அமிர்தகடேஸ்வரர் சன்னதி எதிரில் பக்கவாட்டில் அருளும் கள்ளவாரண பிள்ளையாரையும் வழிபட்டு வலம் வந்து, தம் அன்பர்களுக்கு 

கலையாத கல்வியும், குறையாத வயதும்,
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், 
குன்றாத இளமையும், கழுபிணியிலாத உடலும், 
சலியாத மனமும், அன்பகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்,
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும்,கோணாத கோலும்,
ஒரு துன்பமில்லாத வாழ்வும், துய்யநின் பாதத்தில் அன்பும் 

என பதினாறுவகை செல்வங்களையும் அள்ளித்தரும் அபிராமி அம்மன் ஆலயத்திற்குள் செல்வோம். இங்கு ஆலயத்தின் தென்மேற்கு மூலையின் முதற்பிரகாரத்தில் கிழிக்குப்பார்த்த வண்ணம்  நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் ஜெபமாலை, செந்தாமரை மலர், அபயம், வரதம் தாங்கி, கரும்பினையும் கைக்கொண்டு அழகுக்கொருவரும் ஒவ்வாத வல்லியாய் அன்பர்களுக்கு அருள்மழை பொழியும் அபிராமவல்லி அருள்பாலிக்கிறாள். அபிராமி அம்மன் கருவறை பிரகாரத்தைச் சுற்றி வலம் வருகையில் சரஸ்வதி அம்மன், விநாயகர், முருகர், நாகராஜா, சண்டேஸ்வரி, அபிராமி பட்டர் சன்னதிகளும் உள்ளன.

இங்கு அபிராமி பட்டர்அபிராமி அன்னையை வணங்கிய திருக்கோலத்தில் நின்றவண்ணம் உள்ளார். இந்த அபிராமிபட்டர், அபிராமி அம்மன் மேல் அபிராமி அந்தாதி பாடியது ஒரு தை அமாவாசை நாளில் தான். திருக்கடையூரில் அமாவாசை வானில் பௌர்ணமியாய் நிலவினை ஒளிரச்செய்தார். 'அமாவாசை இரவில் வானில் பௌர்ணமி எப்படி?!'. இதே திகைப்புடன் வாருங்கள் அந்தப் புண்ணிய வரலாற்றினை அறிவோம். இன்றைக்கு சுமார் 330 வருடங்களுக்கு முன்பு திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தின் தலைமை பட்டராக இருந்தவர் அமிர்தலிங்க ஐயர். இவரது தவப்புதல்வனாக அவதரித்தவர்  மகான் சுப்பிரமணியன். இளவயதிலேயே வடமொழியிலும், தமிழிலும் தேர்ந்து, சங்கீதத்திலும் பயிற்சி பெற்று, தேவி உபாசனையும் கொண்டிருந்தார் சுப்ரமணியன்.

திருமணமாகியும் இல்லறத்தில் பற்றற்ற நிலையில் வாழ்ந்துவந்தார். திருக்கடையூர் அபிராமி அம்மன் மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் சுப்ரமணியன். அபிராமி அம்மனிடம் கொண்ட அளவற்ற பக்தியினால் தாம் காணும் பெண்களையெல்லாம் அன்னை அபிராமியின் உருவமாகவே கண்டு தொழுதார். இதனால் ஊரார் இவரைப் பித்தன், கிறுக்கன் எனக்கூறி பரிகாசித்து வந்தனர். ஆனால், சுப்ரமண்யனோ அவைபற்றி சிறிதும் கவலைப்படாமல் அபிராமி அம்மையின் பாதமே சரணம் என்றிருந்தார். அம்பிகையை ஒளி வடிவில் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், அவரின் தெய்வீக நிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

அக்காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு இரண்டாம் சரபோஜிராவ் போன்ஸ்லே எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தார். ஒரு தை அமாவாசை நாளில் பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக்கடையூர் கோயிலுக்குத் தரிசனம் செய்யவந்தார். அங்கே இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர். ஆனால், அங்கே அன்னை அபிராமி சன்னதி எதிரில் அமர்ந்திருந்த சுப்ரமணியன் மட்டும் இவ்வுலக நினைவு ஏதுமின்றி யோக நிஷ்டையில் அபிராமியின் பூரண சந்திர முக மண்டலத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்கவில்லை சுப்ரமண்யன். சுற்றியிருந்தவர்கள் மன்னரிடம், 'மன்னா! தங்களுக்குத் தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார். 

எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், கிறுக்கன்' என்று புகார் கூறினர். ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. இருந்தாலும் சுப்ரமணியத்தின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், 'சுப்ரமண்யம், இன்று என்ன திதி?' என்று கேட்டார். அப்போது கண் திறந்த சுப்பிரமணியன், தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய அபிராமி அம்பிகையை ஏறிட்டுப் பார்த்தார். அவளது முகம் பிரகாசித்தது. அந்த அருள் முகத்தில் லயித்தவராக, இன்று 'பௌர்ணமி' என்றார். ஏதோ நினைவில் அப்படிச் சொல்கிறார் என நினைத்த மன்னர், அதே கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போதும் அதே பதில் வந்தது. அன்று தை அமாவாசை. அந்த எதிர்மறையான பதிலைக் கேட்ட மன்னனின் கோபம் மிக அதிகமானது. மன்னர் உடனே, 'அப்படியென்றால், இன்று இரவு நீர் முழு நிலவைக் காட்ட வேண்டும், இரவு முழு நிலவு தோன்றாவிட்டால் நீர் அக்னி குண்டத்தில் ஏற்றப்படுவீர்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார். 

மன்னர் சென்ற பிறகுதான், அவருக்கு அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்தது. அன்னை அபிராமவல்லியின் அழகு பொங்கும் பொன் முகத்தை நீண்டநேரம் பார்த்த மதி மயக்கத்தில் தவறாக கூறி விட்டோமே என்று எண்ணி வருந்திய அவர், தனக்காக அந்த அபிராமவல்லியே முழுநிலவை வரவழைப்பாள் என்று நம்பினார். ஆனால், அமாவாசை அன்று எப்படியும் முழு நிலவு தோன்றாது என்பதால், சுப்பிரமணியத்தை அக்னிக்குண்டத்தில் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான குழியை வெட்டினார். சுப்பிரமணியன் அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டினார். அதன்மேல் ஏறி நின்றார். அந்தாதியின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் உறியில் உள்ள ஒரு ஒரு கயிறாக அறுத்து, நூறாவது பாடல் வரும் போதும் வானில் முழுநிலா தோன்றாவிடில் அப்படியே அந்தக் கடைசி நூறாவது கயிற்றையும் அறுத்து தீயில் விழுவதாக முடிவு செய்து, அன்னை அபிராமியைத் தொழுதவண்ணம் அந்த அந்திப்பொழுதில் 'உதிக்கின்ற செங்கதிர்' என்று பாடத் தொடங்கினார்.

ஒவ்வொரு பாடல் முடிந்ததும் உறியின் ஒவ்வொரு கயிற்றையும் அறுத்துக் கொண்டே வந்தார். பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிட்டவில்லை. அந்தாதியில் 78 பாடல்கள் பாடி முடித்து விட்டார். உறியிலும் 78 கயிறுகள் அறுக்கப்பட்டுவிட்டன. 78–வது பாடலின் நிறைவில் ‘துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே’ என்று உறுதிபட அபிராமியிடம் வேண்டினார். இதற்கு மேலும், தன் பக்தனை தவிக்க விடுவாளா அந்த அன்னை. சுப்பிரமணியம் 79–வது பாடலாக ‘விழிக்கே அருளுண்டு’ என்று பாடத் தொடங்கியதுதான் தாமதம், அன்னை அபிராமி சுப்பிரமணியத்துக்கு காட்சி தந்து, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச, அது பல கோடி நிலவின் ஒளியை அந்த அமாவாசை வானில் திருக்கடையூரில் உமிழ்ந்தது. ஆம்! அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது. அவள் சுப்பிரமணியத்திடம், 'நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடி நிறைவு செய்க' என அபிராமி அன்னை கூற, சுப்ரமண்யமும் அந்தாதியை தொடர்ந்து பாடி,‘ஆத்தாளை எங்கள்அபிராம வல்லியை’ என நூற்பயனாக ஒரு பாடலையும் பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார். மன்னன் உள்பட அங்குக் கூடியிருந்த அனைவரும் அன்னை அபிராமியின் அருள்திறத்தையும், சுப்பிரமணியத்தின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர்.

மன்னன் சுப்பிரமணியத்தின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டி, ‘அபிராமி பட்டர்’  என்னும் திருப்பெயரை அவருக்குச் சூட்டினார். மன்னரும், மக்களும் சுப்பிரமணியத்தை பணிந்தனர். அபிராமிபட்டர் மறுத்தாலும் அவரது சந்ததியினருக்காக மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர்சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறதாம். இங்குதான் சிலப்பதிகார மாதவியின் வீடும் தேரோடும் வீதியில் உள்ளதாம். திருக்கடையூரில் இன்றும் அபிராமி பட்டர் வாழ்ந்த வீடு இருக்கிறது. திருக்கடையூர் மேல் வளாகத் தெருவில் உள்ள மூன்றாவது வீடு அபிராமிபட்டர் வீடு ஆகும். இருபது அடி அகலம் கொண்ட ஓட்டு வீடு. வீட்டின் சுவரில்,‘அருளாளர் ஸ்ரீ அபிராமி பட்டர் அவதார இல்லம். தோற்றம் 18-ம் நூற்றாண்டு. புதுப்பிக்கப்பட்ட தேதி 16–8–1978’ என்று கறுப்புக் கல்லில் பொறித்து பதித்திருக்கிறார்கள். 

ஆண்டுதோறும் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில், தை அமாவாசை அன்று இரவு 8 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் மற்றும் இளைய சன்னிதானம் பங்கேற்க 'அபிராமி பட்டர் விழா' சிறப்பாக நடைபெறும்.

அப்போது ஆயிரக்கணக்கான அடியவர்கள் முன்னிலையில் அபிராமி அந்தாதி பாடப்படும். அந்தச் சமயத்தில் அபிராமி அம்மன் நவரத்தின அங்கி அணிந்து வீற்றிருப்பார். ஒவ்வொரு பாட்டின் நிறைவிலும் அபிராமி அம்மனுக்கு தங்கக் காசு சமர்ப்பித்து, தீபாராதனை செய்யப்படும். 79-வது பாடலின்போது ஆலய கொடி மரத்தின் அருகில் பௌர்ணமி தோன்றும் ஐதீக நிகழ்வு நடத்திக் காட்டப்படும். அப்போது ஆலயத்தில் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, கொடிமரம் அருகில் நிலவினை ஒளிரச் செய்வார்கள். இதுவெறும் ஐதீகப் பெருவிழா மட்டுமன்று, பக்தர்களுக்கு அம்பிகையின் மேல் நம்பிக்கையின் அவசியத்தையும், அம்பிகையிடம் நம்பிக்கையுடன் இருந்தால் அதற்கான பலன் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கும் தெய்வீகப் பெருவிழாவாகும். 

தன்னை முழுவதும் நம்புபவர்களுக்கு அன்னை அபிராமி எதுவும் செய்வாள் என்பதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டிய விழா இந்த 'அபிராமிபட்டர் விழா'. அபிராமி பட்டர், அபிராமியின் மீது வைத்த நம்பிக்கையில் சிறிதளவு நமக்கு இருந்தாலும், இந்த கலியுகத்தில் கனிவான வாழ்க்கையை வளமாக வாழலாம். தொடர்ந்து 48 நாட்கள் அதிகாலையிலும், இரவிலும் அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வர திருக்கடையூர் அபிராமி அன்னையின் அருளால் நம் வாழ்வின் இருண்டநிலை விலகி, கர்மவினைகள், நோய்கள், தடைகள் விலகி நம் வாழ்க்கை பௌர்ணமி நாளின் பூரண சந்திரன் போல ஒளி வீசும். 

அமாவாசை நாட்களில் விரதமிருந்து அபிராமி அந்தாதி பாராயணம் செய்து அபிராமி அன்னையை வழிபட்டு வருவதால் வாழ்வில் பிணிகள்,வறுமை அகன்று நல்வாழ்க்கை அமைகிறதாம். சீர்காழியில் இருந்து கருவிழுந்த நாதபுரம் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து செம்பொனார் கோயில் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தூரத்திலும் திருக்கடையூர் அமைந்து அன்னை அபிராமியின் அருளால் அருளொளி வீசுகிறது.

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அம்மை பதிகம் மற்றும் அபிராமி அந்தாதி - பாடியவர்கள் மயிலாடுதுறை சிவகுமார், பாலசந்திரன்

கட்டுரையாக்கம்: சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்

தொலைப்பேசி: 9787443462

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com