கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 5 

கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 5 

திருப்பேரூரில் காலவ முனிவர் முதலானோர் சிவபிரானின் திருநடனத்தினைக் காண நினைந்து..

திருப்பேரூரில் காலவ முனிவர் முதலானோர் சிவபிரானின் திருநடனத்தினைக் காண நினைந்து அதற்குண்டான குறித்த காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படியான காலத்தை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கோவை திருப்பேரூர் காலவேசுரத்தில் அரசமரத்தடியில் வெள்ளியம்பலம் உள்ளதாகச் சிவபெருமான் அருளியபடி அதனைக் காணப்பெற கோமுனிவர் தியானித்தார். 

அத்தியானத்தின் போது ஒருநாள், காலையில் பழைய அம்பலத்தைப் பரமசிவன் மறைத்தபடியால், அவ்விடத்திலே ஒரு சபையையும் அதிலே நடராஜர் திருவுருவத்தையும் அமைத்து வழிபடுவாயாக" என்று அசரீரி வாக்கு ஒலித்தது. 

அக்கணத்திலேயே கோமுனிவர் விசுவ கம்மியனை வரவழைத்தார். சபையை நிருவகிக்கும் இடம் புலப்படாது திகைத்திருக்கும் பொழுது, சிவபிரான் சித்தராகத் திருவுரும் எடுத்துக்கொண்டு பற்பல அற்புதங்களைச் செய்தருளினார். 

அந்த சித்தரைக் கோமுனிவர் முதலிய மூவரும் அடுத்து வினவிச் சிவபெருமான் திருநடனஞ் செய்கின்ற திருச்சபையைத் தெரிவித்தீர் என்றால், வல்லீராயன் நீரே முற்று முணர்ந்த பெற்றவரெனச் சொல்ல............. 

சித்தேசர் ஆதிலிங்க மூர்த்திக்கு வடகிழக்கில், திரிமூர்த்தியுருவான அரசடி நிழலில் வந்து, "வெள்ளியம்பலம் எழுக" என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே வெள்ளியம்பலம் பொள்ளென எழுந்தது. அப்பொழுது தேவர்கள் கற்பகப் பூமாரி பொழிந்தனர். பூமாரி பொழிந்த வேளையில் கோமுனிவர் முதலியோர் சித்தமூர்த்தியை வணங்கி "தேவரீர் செய்தருளிய தெய்வ சபைக்கேற்பத் தேவர் பிரான் திருவுருவஞ் செய்தருளிவீராக" என்றதும், சித்தேசர் திருவுளமகிழ்ந்து திருச்சபையைச் சூழத் திரைகோலச் செய்து, அதனுள்ளே ஒரு முகூர்த்தமளவும் அமர்ந்து, இரண்டாம் முகூர்த்தத்திலே திரையோடும் சித்தேசர் மறைந்தருளினார். 

பின்பு நடராஜர் திருவுருவோடு சிவகாமியம்மை திருவுருவையும் அத்திருச் சபையிலே கோமுனிவர் முதலிய மூவருந்தேவர்கள் யாவரும் தரிசித்தார்கள். பின்னர் அம்முனிவர்கள் மூவருஞ் சிவாகம விதிப்படி உள்ள தூய்மைகள் செய்து, ஞான நடராஜரோடு சிவகாமியம்மையும் தினந்தோறும் ஆறு காலமும் வழிபாடு செய்து வந்தனர். இவ்விதம் நிகழுங்கால், விசுவகம்மியனால் ஆலயங்கள் அமைத்துப் பஞ்சமூர்த்திகளையும் பரிவார தேவதைகளையும் பிரதிட்டை பண்ணித் திருவிழாச் செய்யத் தொடங்கி, பங்குனி மாதத்து வளர்பிறைச் சஷ்டி திதியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றி, 
ஒன்பது நாள் தேர்விழா நடத்தினார்கள். 

பத்தாம் நாளான உத்திரத்தன்று வெள்ளியம்பலத்திற்கு எதிரிலுள்ள மண்டபத்திலே அனைவரும் நிற்க கோமுனிவர் முதலிய மூவரும் அருகே நிற்க, நாரதமுனிவரும் தும்புரு முனிவரும் வீணாகாணஞ் செய்தனர். அகத்திய மகாமுனிவரும் ஆனந்தமுனிவரும் தாளம் ஒத்தவும், மந்து நாதரும் நந்தி பெருமானும் மத்தளத்தை முழக்கினர். திருத்தொண்டர்கள் சிரமீது திருக்கைகளைக் கூப்பி அரகர முழக்கஞ் செய்து நடராஜப் பெருமானின் போற்றிப் பரவினர். அகத்தியர் முனிவர் மற்றும் முனிவர்கள் இசையெழுப்பினர். தொண்டர்கள் அரகர வென முழக்க காணமிட்டனர். 

தனது திருமேனியின் ஒரு பாகத்திலே உமா தேவியார் அமர்ந்திருக்கவும், ஒரு கையில் உடுக்கை ஒலிக்க, மற்றொரு கையில் அக்கினி விளங்க, வேறொரு கை வரதமாக, பிறிதொரு கை அபயமாக, திரோதனத் திருவடியை முயலகன் முதுகிற் பதித்து, அருத்திருவடியைக் குஞ்சிதமுற வீசி, திருக்கண்களாற் காளி தேவியின் முகத்தை நோக்கி, ஞான நடராஜர் வெள்ளியம்பலத்திலே "திருநிருத்தஞ்" செய்தருளினார். 

செய்தருளியும் திருவடிக் கண்ணதாகிய மறைச் சிலம்பொலியும், வாத்தியங்களின் ஒலியுஞ் செவிப் புலப்பட்டனவன்றி, திருநடனக் காட்சி கண்ணுக்குப் புலப்படாமையால், அங்கு நின்ற அனைவரும் ஏங்கி இரந்து துதித்தனர், போற்றினர் போற்றித் துதித்த மாத்திரத்தில், ஊன நடனஞ் செய்து எவ்வகையுயிர்க்கும் ஆணவமல வலியை மாற்றி ஞான நடனஞ் செய்தருளும் நணராஜர் ஞான நோக்கத்தைத் தந்தருளலும், அஞ்ஞான நீங்கி, மூன்று முனிவரர் முதலிய யாவரும் தாண்டவத்தின் ஆனந்தத்தைக் கண்களாற் கண்டு, மொண்டு மொண்டு உண்டு, கழித்து பேருவகையுற்று ஆனந்தக் கூத்தாடினார்கள். 

சிவபெருமான் செய்தருளிய நாடக வேகத்தினால், ஆபரணமாக அணிந்த பாம்புகள் விடத்தை உமிழ, அது புலித்தோல் போர்த்தாற்போலத் திருமேனி முழுவதும் வரிவரியாக ஒழுகியது. அவ்விடத்தின் வெப்பத்தினால், தேவர்கள் முதலிய யாவரும் அஞ்சி பசியோடு தாக சோகங்கள் அடைந்தனர். 

உமாதேவியார் அன்னபூரணியை உண்டாக்கிப் பசியைத் தணித்தார். முருகக் கடவுள் நீர் வேட்கையை கொண்டு வந்து தந்து ஒழித்தனர். விநாயகக் கடவுள் உடம்பிலுற்ற வெப்பத்தைத் துதிக்கையினால் நீர் துளிக்கும் வண்ணங் காற்றினை வீசித் துவைத்து ஆற்றியருளினார். பின்பு கூத்தப்பிரான் கருணை கூர்ந்து காலவ முனிவருக்கு அன்னார் விரும்பிய வண்ணம் விதேக முத்தியையளித்தனர். 

பிரமாவை நோக்கி, "நீ பழைய வடிவோடு படைப்பினைச் செய்து பட்டிமுனி அம்சத்தால் நமது நிருத்தத்தைத் தரிசிப்பாயாக" என்றும், விட்டுணுவை நோக்கி, "நீயும் பண்டையுருக்கொடு பாற்கடலிற் பள்ளிகொண்டு காத்தற் றொழில் செய்து கோமுனி யம்சத்தால், நிருத்த தரிசனஞ் செய்வாயாக" என்றும், மற்றோயோரை நோக்கி, "இத்திருப்பேரூரிலே வசிப்போர்க்கும், இத்தலத்தைத் தரிசித்தோர்க்கும், நமது திருக்கூத்தைக் கண்டோர்க்கும் அறம் பொருள் இன்பம் வீடென்னும் நால்வகை உறுதிப் பொருள்களுஞ் சிந்திக்கக் கடவன" என்றும் திருவாய் மலர்ந்தருளினார். 

பின்பு வெள்ளியங்கிரிமீதுள்ள வெள்ளியம்பலத்திலும், உமா தேவியார் வேணவாவோடு காணும் வண்ணம் சிவபெருமான் திருநடனஞ் செய்தருளினார். 

அழகிய சிற்றம்பலமுடையான் படலம்: (திருப்பேரூர், 36 படலங்களுள் ஒன்று) 

சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பேரூரை வணங்கிச் சென்று, தில்லைச் சிற்றம்பலத்திலே திருநடராசரைப் பாடும் திருப்பதிகத்தில் "பேரூர்ப் பெருமானைப் பெற்றோம்" என்று அருளிச் செய்த தேவாரத்தைத் தில்லைவாழந்தணர் கேட்டு நாயனாரை நோக்கி, இத்தில்லைத் தலம்போல் இவ்வுலகத்திலே ஒரு தலம் உண்டோவென வினவியதற்கு....

"இக்கனகசபையிலே, தாண்டவஞ் செய்தது போலத் திருப்பேரூர் 
வெள்ளியம்பலத்திலே சிவபிரான் திருநடனஞ் செய்தருளுகின்றார். 

அத்தலத்தில், முத்தி தருவதன்றி, தருமார்த்த காமங்களைத் தருவதில்லை" என்று நாயனார் நவின்றார். 

உடனே தில்லைவாழந்தணர் திருப்பேரூரைச் சேர்ந்து, காஞ்சிமா நதியில் மூழ்கியெழுந்து திருமேனியிலே, சிவசின்னங்களாகிய திருநீறும் கண்டிகையும் பூண்டு, சுவாமியையும் அம்மையையும் தரிசித்து, அரசம்பலவாணரை வணங்கி, மறுநாள், காலவனீச்சரத்திற்கு அக்கினித்திக்கிலே சிவலிங்கந் தாபித்துப் பூசித்து அங்கே வசித்தார்கள். அப்பொழுது வெள்ளியம்பலத்திலே, சிவபிரான் திருநடனஞ் செய்ய அதனை தில்லைவாழந்தணர்கள் தரிசித்து, ஆன்மாவுஞ் சிவமும் அத்துவிதமாய், மனம் அழிந்து அவசமாய் நின்று துதித்து விடைபெற்றுக் கீழைச் சிதம்பரஞ் சேர்ந்து பண்டைக்காலம் போல் வாழ்ந்திருந்தனர். 

அவ்வந்தணர் பூசித்த ஆலயத்திற்கு "அழகிய திருச்சிற்றம்பலமென்றும்," சுவாமிக்கு "அழகிய திருச்சிற்றம்பல முடையாரென்றும்" பெயர். இக்கோயில் காலவேசுவரத்திற்குத் தென் கீழ்த்திசையில் உள்ளன. இக்கோயிலில் எழுந்தருளிய பெருமானுக்கு "இடங்கை நாயகேசுவர முடையார்" என்ற பெயரும் உண்டெங்கின்றது கச்சியப்பர் தலபுராணம். 

-கோவை கு. கருப்புசாமி

படங்கள் உதவி: ச. பாலகிருஷ்ணன், கோவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com