நோய் மற்றும் தொழுநோயை போக்கும் ரத ஸப்தமி!

​நாம் பல பண்டிகைகளையும் விசேஷ தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காக செய்கிறோம் என பொருளுனர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
நோய் மற்றும் தொழுநோயை போக்கும் ரத ஸப்தமி!

நாம் பல பண்டிகைகளையும் விசேஷ தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காக செய்கிறோம் என பொருளுனர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில் ரத சப்தமியை எதற்காக கொண்டாடி வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

இன்று புதன் கிழமை. மேலும் ரத சப்தமி எனும் விசேஷ தினமாக கொண்டாடப்படுகிறது. ரத சப்தமி என்பது சூரியனுக்குரிய விசேஷ தினமாகும். இது பொங்கலை போன்றே சூரியனை வணங்கும் தினம் என்பதால் மறுபொங்கல் என்றும் கூறுவர். இன்று சூரிய ஜெயந்தியாகவும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

சூரியன் தனது தேரை தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கித் திருப்புவதால் இன்று ரதஸப்தமி என்று பெயர். இந்நாளில் சூரியனை வழிபடக் காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வார்கள். 

மிகப் பழங்காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் முக்காலமும் அறிந்த ஞானி. பலர் அவரிடம் வந்து தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு பணிவுடன் கேட்பார்கள். கேட்பவரை நேர் எதிரே நிறுத்தி அவரை ஒருமுறை நன்றாய் தீர்க்கமாய் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்பு கண்கள் மூடிச் சிறிது நேரத்தில் அவரது எதிர்காலத்தைப் பற்றிய விவரங்களை கடகடவென்று கூறிவிடுவார். இவரது புகழ் எங்கும் பரவ ஒருநாள் இளம் சந்நியாசி ஒருவர் வந்து, காலவ முனிவரைப் பணிந்து தன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டினார்.

காலவ முனிவரும் கண்கள் மூடி தியானித்து, தியானித்துப் பார்க்கிறார். அந்த இளம் சந்நியாசியின் எதிர்காலம் அவருக்குப் பிடிபடவில்லை. காலவ முனிவருக்கு அதிர்ச்சி. ”ஸ்வாமி… நீங்கள் யார்? உங்கள் எதிர்காலம் எனக்குப் பிடிபட மறுக்கிறதே?” என்று வினவினார். “நான் யார் என்பது இருக்கட்டும். எவ்வளவோ பேருக்கு எதிர்காலம் பற்றி ஞான திருஷ்டியில் கூறும் நீங்கள் உங்கள் எதிர்காலம் எப்படி என்று பார்த்திருக்கிறார்களா?” என்று கிண்டலாகக் கேட்டார். காலவ முனிவருக்கு அப்போதுதான் தனது எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணம் ஏற்பட்டது. கண்கள் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் திடுக்கிட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் அவரைத் தொழுநோய் பிடித்துத் துன்புறுத்தப் போவது ஞான திருஷ்டியில் அவருக்குப் புலப்பட்டது. கண்களைத் திறந்து பார்த்தபோது அந்த இளம் சந்நியாசியைக் காணவில்லை. மறைந்துவிட்டார்.

உண்மையில் இளம் சந்நியாசியாய் வந்தது யமதர்மராஜன். இதையும் ஓரளவு யூகித்துவிட்ட காலவ முனிவர் தனக்கு வரவிருக்கும் தொழு நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள நவக்கிரகங்களை நோக்கி கடும் தவமிருந்தார். முனிவரது தவத்தை மெச்சி நவக்கிரகங்களும் அவர் முன் தோன்ற காலவ முனிவர் தன்னைத் தொழு நோய் பீடிக்காமலிருக்க வரம் தருமாறு வேண்டினார். நவக்கிரகங்களும் அவ்வாறே வரமளித்துவிட்டன.

இதில் பிரச்னை என்னவென்றால் இந்த நவக்கிரகங்களுக்கும் சுயமாக எவருக்கும் வரம் தரும் அந்தஸ்து கிடையாது. ஆண்டவன் கட்டளைப்படி தங்களுடைய கடமைகளை அவை செய்து வர வேண்டுமே தவிர மற்றபடி வரங்கள் அருளும் தகுதி கிடையாது. இவர்களுக்கு அதிபதியான பிரம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே கடுங்கோபத்துடன் அவற்றை வரவழைத்து விசாரணை நடத்தினார். பாவம் நவக்கிரகங்கள்… தங்களையும் மதித்து ஒருவன் தவம் செய்து வரம் கேட்கிறானே என்ற மகிழ்ச்சியில் தங்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி வரமளித்துவிட்டன. பிரம்ம தேவனுக்குப் புரிந்தது. இருந்தும் என்ன? செய்த தவற்றுக்கு தண்டனை உண்டே. அதனால் ”காலவ முனிவருக்கு வரவேண்டிய தொழுநோய் உங்களைப் பீடிக்கும். அதுதான் உங்களின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கான தண்டனை” என்றார் பிரம்மா.

வரும் 30/1/2018 அன்று உலக தொழுநோய் தினமாக உலக சுகாதார நிறுவனம் அனுசரிப்பதை முன்னிட்டு தொழுநோய் பற்றியும் அதற்கான ஜோதிட காரணங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்தும் பார்க்கலாம்.

தொழு நோய் அல்லது குஷ்ட ரோகம்
ஹேன்சென் நோய் எனப்படும் தொழுநோய், மைக்கோபேக்டீரியம் லெப்ரேயாவால் ஏற்படும் நீடித்தத் தொற்று நோயாகும். இது குறிப்பாக தோலையும், நுனி நரம்புகளையும் பாதிக்கிறது. முடிச்சுகளும் புள்ளிகளும் ஏற்பட்டு, பெரிதாகிப் பரந்து, உணர்விழந்து, பக்கவாதம் ஏற்படுத்துவது இந்நோய்த் தன்மை. தசை இழப்பு ஏற்பட்டு இறுதியாக ஹேன்சென் நோய் எனும் உறுப்புகளின் உருக்குலைவு உண்டாகும். இத்தொற்று மைக்கோபேக்டீரியம் லெப்ரே மற்றும் மைக்கோபேக்டீரியம் லெப்ரோமெட்டோசிஸ் எனப்படும் பாக்டீரியாக்களால் உண்டாகிறது. நுனி நரம்புகள் அல்லது மேல் மூச்சுமண்டல சளிச்சவ்வுகளில் உண்டாகும் திசுக்கட்டி நோயாகும். தோல் புண்களே இதன் வெளிப்படையான அறிகுறி. சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், தொழு நோய் வளர்ச்சி அடைந்து, தோல், நரம்புகள், அவயவங்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர சேதத்தை உண்டாக்கும்.

இதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச்சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கூட்டுக்கள் இழப்பு ஏற்படுதலால் இவை விரல்கள் உதிர்ந்தது போலக்காட்சி தரும். இவையே முற்றும் நிலையில் உயிர் துரக்கும் நிலையை அடைவதும் உண்டு. இது பெரும்பாலும் நோயெதிர்ப்பாற்றல் குன்றியவரையே இது தாக்குகிறது. இது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளது என்பதற்கு இதற்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அறியலாம். தொழுநோயை குட்டம், குஷ்ட நோய், பெருவியாதி, மேகநீர், மேகநோய் எனப் பரவலாக அழைக்கப்படுகிறது.

தொழுநோய்க்கான ஜோதிட காரணங்களும் கிரக நிலையும்

தொழுநோய்கான காரக கிரகம் புதன் மற்றும் ஆறாம் பாவம் ஆகியவற்றின் நிலையை கொண்டு அறியலாம். தொழுநோய் தோல் நோய் வகையைச் சார்ந்தது என்பதால் புதனை காரக கிரகமாக கருதினாலும் தொழுநோய்க்கு முக்கிய காரக கிரகமாக கூறப்படுவது ராஜ கிரகமான சூரியனே ஆகும். என்றாலும் தொழுநோயின் அடிப்படை காரணங்கள், அறிகுறிகள் விளைவுகள் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அனைத்துக் கிரகங்களுமே காரகமாகிவிடுகின்றனர்.

தொழுநோய்க்கான காரக கிரகங்கள்:

சூரியன்
கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். மேலும் வைட்டமின் D குறைபாடும் தோல் நோயிற்கு காரணம் என்கின்றனர் அறிவியலார். வைட்டமின் D-க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்குத் தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரன்
நமது ஜாதகத்தில் லக்கினத்தை உயிராகவும் ராசியை உடலாகவும் கூறுவர். ராசி என்பது சந்திரன் இருக்கும் இடம்தான். ஆக உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரன் காரகனாகிறார். மேலும் தொழுநாய் சளி மற்றும் நீர், காற்றினால் பரவுவதால் சந்திரன் காரகனாகிறார்.

செவ்வாய்
காலபுருஷனுக்கு லக்னாதிபதி என்பதாலும் தோலுக்கு செவ்வாய் காரகத்துவம் வகிப்பதால் தோல் நோயான தொழுநாய்க்கு செவ்வாய் எனப்படும் அங்காரகனின் நிலையும் முக்கியமாகும்.

புதன்
அனைத்து தோல் மற்றும் நரம்பு கோளாறுகளுக்கு புதனே காரகமாவார். தொழுநோயாளிகளுக்கு தோலில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் நரம்பு செயலிழப்பது மற்றும் மரத்துப்போகும் தன்மை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. 

குரு
குருவினால் நேரடியாகப் பாதிப்புகள் இல்லையென்றாலும் தொழுநோயை கர்ம வினையினால் ஏற்படும் நோய் என்றே ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எனவே ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலையை கொண்டு கர்ம வினையை அறிந்துகொள்ள முடியும். மேலும் லக்ன பாவம் மற்றும் குருவின் நிலை ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை தெரிவிக்கிறது. நோய் எதிர்ப்பு குறைந்தவர்களையே தொழுநோய் பீடிக்கிறது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

சுக்கிரன்
தொழுநோய் சளி மற்றும் நீரினால் பரவுவதால் சுக்கிரனும் காரகமாகிறார். மேலும் உடலிலுள்ள அசுத்தங்கள் வேர்வை மூலமாகவோ அல்லது சிறுநீர் மூலமாகவோ வெளியேறவில்லை என்றால் அது சரும நோயாக உருவெடுத்து தோல் அழுகுதல், சீழ் பிடித்தல் சிரங்கு, கொப்புளங்கள் எனப் பலவித சரும வியாதிகள் தோன்றுகின்றன. உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேற சிறுநீரகத்தின் பங்கு முக்கியமானதாகும். சிறுநீரகத்திற்கு சுக்கிரன் காரகனாவதால் தொழுநோய் மற்றும் அனைத்து சரும நோய்களுக்கும் சுக்கிரன் காரகமாகின்றார்.

சனி
உடம்பின் கட்டமைப்பின் காரகர் சனியாவார். மேலும் தொழுநோய் ஏற்படும்போது உடலுருப்புகள் செயலிழப்பு, வாதத்தன்மை, அங்கஹீனம் ஆகியவை ஏற்படுவது சனியின் காரகத்தன்மை ஆகும்.

ராகு/கேது
சூரியன் புதனுக்கு அடுத்தபடியாக தொழுநோய்க்கு முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ராகு மற்றும் கேது ஆவர். உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றுவது, தோலின் அடுக்குகளிலுள்ள அனஸ்தீஷியாவை செயலிழக்க செய்வதால் தொழுநொய் ஏற்பட்டவர்களுக்கு உடல் மரத்து வலி மற்றும் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். மேலும் அங்கஹீனம், உருவ மாற்றம், நுண்ணுயிர் கிருமியினால் காற்றில் பரவுதல் போன்றவற்றிற்கு ஸர்ப கிரகங்களே காரகர் ஆவர். மேலும் ஒருவரின் கர்ம வினைகளை ஜாதகத்தில் தெரிவித்து அதை அனுபவிக்கச் செய்பவர்களும் இவர்களே!

தொழுநோய் மற்றும் தோல் நோய்க்கான கிரக சேர்க்கைகள்

1.  சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவு பெறுவது.

2. சந்திரன் மிதுன கடக மீன நவாம்சத்தில் இருந்து சனி மற்றும் செவ்வாயுடன் தொடர்பு கொள்வது.

3. லக்னாதிபதி, சந்திரன் மற்றும் புதன் ராகு கேதுவுடன் சேர்க்கை பெறுவது.

4. செவ்வாய் லக்னத்தில் நின்று சூரியனும் சனியும் முறையே எட்டு மற்றும் நான்காம் வீடுகளில் நிற்பது.

5. சனி, செவ்வாய் மற்றும் சந்திரன் பாப கிரக சேர்க்கை பெறுவது.

6. ஆறாம் வீட்டதிபதி லக்னத்தில் நிற்கும் சூரியன், செவ்வாய் மற்றும் சனியுடன் தொடர்பு கொள்வது.

7. சந்திரன் காரகாம்சத்தில் நான்கில் நின்று கேது/செவ்வாய்/சுக்கிரன் ஆகியவர்களுடன் தொடர்பு கொள்வது.

8.லக்னாதிபதி எந்த ராசியில் ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/சந்திரனும் செவ்வாயும் இணைந்து எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/ லக்னாதிபதியும் புதனுமோ அல்லது  சந்திரனும் செவ்வாயுமோ எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும் ஜாதகருக்கு வெண்குஷ்டம் எனப்படும் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்

9. சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் சாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்.

10, லக்னாதிபதி, செவ்வாய் மற்றும் புதன் இணைந்து நான்கு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் நிற்பது.

11. குருவும் சனியும் சந்திரனுடன் இணைந்து 6ம் வீட்டில் நிற்பது.

12. சனியும் சந்திரனும் ஆறாம் வீட்டில் நிற்பது.

13. ஆறாம் வீட்டதிபதியும் எட்டாம் வீட்டதிபதியும் 6ம் வீட்டில் இனைந்து நிற்பது.

14. பலமான சனி மூன்றாம் வீட்டில் நின்று செவ்வாயுடன் சேர்க்கை பெறுவது.

15. சஷ்டியாம்சத்தில் மூன்றாம் வீட்டில் மாந்தியுடன் ராகுவோ அல்லது செவ்வாயோ சேர்க்கை பெற்று காலகரண யோகம் பெறுவது

16. பலமிழந்த குருவும் சனியும் முறையே மூன்று ஒன்பது ஆகிய இடங்களில் நின்று சஷ்டியாம்சத்தில் கரசேத யோகம் பெறுவது.

குறிப்பு: மேலே குறிப்பிட்ட கிரக சேர்க்கைகளில் ஒன்றிரண்டு பெற்றிருந்தால் சாதாரண தோல் நோய் ஏற்படும். தொழுநோய் ஏற்பட இந்தக் கிரக சேர்க்கைகளில் அதிகப்படியாற சேர்க்கைகளுடன் லக்னம், லக்னாதிபதி, ஆத்ம காரகன், சந்திரன் குருவின் நிலை, கேந்திர திரிகோணங்களில் பாவர்கள், பஞ்சாம்சம், சஷ்டியாம்சம் போன்ற இடங்கள் கெட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

தொழுநோய் தீர ஜோதிட பரிகாரங்கள்
அருள்மிகு சிவசூரியப் பெருமான் திருக்கோவில் சூரியனார் கோயில், திருவிடைமருதூர். பிரம்மாவின் சாபத்தால் தொழுநோய் ஏற்பட்ட நவக்கிரகங்கள் பிரம்மனின் காலடியில் விழுந்து சாப விமோசனம் வேண்டினார்கள். கொஞ்ச நேரம் அவர்களை அலற விட்டு வேடிக்கை பார்த்த பிரம்மன் கடைசியாக அவர்களை பூலோகத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அங்கே அர்க்கவனம் என்னும் தலத்தில் உள்ள பிராணேசுவரரை கார்த்திகை மாதம் துவங்கி 78 நாட்களுக்கு வழிபட்டு தவம் செய்யவும் உத்தரவிட்டார்.

பிரம்மனின் சாபப்படி தொழுநோய் உடனே நவக்கிரகங்களைப் பீடித்தது. பூலோகம் வரும் வழியில் அகத்திய முனிவரை சந்தித்து நடந்த விஷயங்களை அவருக்குத் தெரிவித்தன. அகத்தியர் அவர்களுக்கு சில வழிபாட்டு முறைகளை உபதேசித்தார்.

“திருமங்கலக்குடியின் அருகில் இருக்கும் அர்க்கவனத்தில் தங்கி, நீராடி, 78 நாள்கள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமை தோறும் எருக்கு இலையில் தயிர் அன்னத்தை வைத்து விடிவதற்கு முன்பு புசியுங்கள். மற்ற நாள்களில் விரதமிருங்கள். இப்படிச் செய்தால் சாப விமோசனம் பெறுவீர்கள்” என்றார் அகத்தியர். நவக்கிரகங்களுக்கு ஓர் ஆவல். எத்தனையோ இலைகள் இருக்க, எருக்க இலையில் வைத்து ஏன் தயிர் அன்னத்தைப் புசிக்க வேண்டும்? காரணத்தை அவரிடமே கேட்க, “”அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? அதெல்லாம் தேவ ரகசியம். இருந்தாலும் சொல்கிறேன். எருக்க இலையின் சாரத்தில் ஒரு சிறு துளி அந்த தயிரன்னத்தில் சேரும். தொடர்ந்து 78 நாட்களுக்கு இப்படி புசித்து வந்தால் தொழுநோய் குணமாகும்” என்றார் அவர். அகத்திய முனிவர் குறிப்பிட்ட தேவ ரகசியம் இதுதான். 

வெள்ளெருக்கு இலையில் வைத்து தயிர்ச்சாதம் சாப்பிட்டால் தொழுநோய் குணமாகும் என்ற பண்டைய மருத்துவ முறைதான் அது. அவ்வளவு சக்தி வாய்ந்தது எருக்கன் இலை. ரத ஸப்தமி (தை மாதம்) நாளில் ஏழு எருக்க இலைகள், எள், அட்சதை ஆகியவற்றை தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்ற நம்பிக்கையும் பிறந்ததுதான் இன்றும் நம்மை ரத ஸப்தமி அன்று எருக்க இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வது. அதற்காக, தொழுநோய் உள்ளவர்கள்தானே அப்படிச் செய்ய வேண்டும், மற்றவர்கள் எதற்காக அப்படி ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சிலர் கேட்கலாம். தொழுநோய் என்பது ஒரு குறியீடு. நம்மை அறியாமல் செய்யும் எவ்வளவோ தீமைகளால் ஏற்படும் நவக்கிரக தோஷங்களை இது போக்கும் என்பதே அதன் தாத்பர்யம்.

ரத ஸப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும். அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, “அர்க்க பத்ரம்’ என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது. பாபங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று “அர்க்க பத்ர ஸ்நானம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

“ஸப்த ஸப்த ப்ரியே தேவி

ஸப்த லோக ப்ரதீயிகே

ஸப்த அர்க்கபத்ர ஸ்நானேன

மம பாபம் வ்யபோஹய”

என்ற ஸ்லோகத்தைக் கூறியபடி ஸ்நானம் செய்ய வேண்டும்.

அதன் பின் சூரியனைப் பார்த்தபடியோ அல்லது கிழக்கு திசை நோக்கியோ “திவாக்ராய நம: இதமர்க்யம்” என்று மும்முறை சொல்லி சூரிய பகவானுக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும்.

வைத்தீஸ்வரர் கோயில்
செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு   தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களைப் போக்கும் கோவிலாகவும் உள்ளது.

செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான "தொழுநோய் " வந்ததாகவும் அதனைப் போக்க சிவ பெருமானே தானாகத் தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச  பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.

சீர்காழி
சீர்காழி திருக்கோலக்கா தெரு தாளபுரீஸ்வரர், ஓசைநாயகி உடனாகிய கோயில் உள்ளது. தேவார பாடல்களை இரண்டாவதாக பாடப்பெற்ற ஸ்தலம். முனிவர் சாபத்தால் சூரிய பகவானுக்கு தொழுநோய் ஏற்பட்டு இக்கோயிலில் உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் கார்த்திகை ஞாயிறன்று நீராடி சாபவிமோசனம் பெற்றார். திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவதலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம். சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன. படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.


-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com