சந்திர கிரகணத்தால் எந்த நட்சத்திரக்காரர்களுக்கு தோஷம்?

சந்திர கிரகணம் எப்போது தொடங்குகிறது, எந்த நட்சத்திரக்காரர்கள் சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும், கிரகணம் தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டியவை....
சந்திர கிரகணத்தால் எந்த நட்சத்திரக்காரர்களுக்கு தோஷம்?

சந்திர கிரகணம் எப்போது தொடங்குகிறது, எந்த நட்சத்திரக்காரர்கள் சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும், கிரகணம் தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டியவை, கிரகணம் முடிந்த பிறகு செய்ய வேண்டியவை என்னென்ன என்று தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் விரிவாக நமக்கு விளக்கியுள்ளார். 

சந்திர கிரகணம் என்பது மனக்காரகனான சந்திரன் நவக்கிரகங்களில் முதன்மையான சூரிய ஒளியில் இருந்து பூமியால் மறைக்கப்படுவதால் ஏற்படுவதாகும். சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்த முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இது, இந்த மாதத்தின் 2-வது பௌர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது 'ப்ளு மூன்" என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும்.

நிகழும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 18ம் நாளான புதன்கிழமை (31.01.2018) அன்று ஆயில்ய நட்சத்திரத்தில் ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் உண்டாகிறது. ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் என்பது ராகுவின் வசம் மனக்காரகனான சந்திரன் இருப்பதாகும்.

சந்திர கிரகண நேரம்

ஸ்பரிசம் - நாழிகை 28.10-க்கு தொடங்கி 37.5-க்கு முடிவடைகின்றது. அதாவது, 

ஆரம்பம் - மாலை 5.16

மத்யமம் - இரவு 7.03 

முடிவு - இரவு 8.50 

சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் 

புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி இந்த ஐந்து நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று சாந்தி பரிகாரம் செய்து கொள்வது நல்லது. 


கிரகணம் தொடங்கும் முன் செய்ய வேண்டியவை

• கிரகணம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு எவ்வித உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

• கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லுதல் கூடாது.

• கிரகண காலங்களில் ஆலய தரிசனத்தை தவிர்க்க வேண்டும்.

• கிரகண காலத்திற்கு முன் செய்த உணவுப் பொருள்கள் மீதம் இருப்பின் அந்த உணவில் தர்ப்பை புல்லைப் போட்டு வைக்க வேண்டும்.

• வீட்டில் உள்ள குடிக்கும் தண்ணீரிலும் தர்ப்பை புல்லைப் போட்டு வைக்க வேண்டும்.

• கிரகண பட்டை (நெற்றியில்) அணிய வேண்டும். 

• ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் சரியாக மாலை 5.16 முதல் 8.50 முடியும் வரை குழந்தைகளை வெளியில் அழைத்துவரக்கூடாது. குழந்தைகள் அருகில் தர்ப்பை புல் போடலாம் அல்லது கையில் கட்டி விடலாம். 

• கிரகண காலகட்டத்தில் கூடுமானவரைத் தண்ணீர் குடிப்பதையும் தவிர்ப்பது நல்லது. 

கிரகணம் முடிந்த பின்பு செய்ய வேண்டியவை 

• கிரகணம் முடிந்த பின்பு ஆலய வழிபாடு செய்ய வேண்டும்.

• கிரகணம் முடிந்த பின்பு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

• கிரகணம் முடிந்த பின்பு வீட்டை சுத்தம் செய்து புதிய உணவைச் சமைத்து உண்ண வேண்டும்.

• மீதமுள்ள உணவில் உள்ள தர்ப்பை புல்லை எடுத்து விட்டு இறைவனை எண்ணி போஜனம் உண்ணலாம். மத்தியமான பலனே கிட்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com