ஆதரவற்ற முதிய பெண்களின் நலன் காக்கும் விஸ்ராந்தி காப்பகம் 

வளர்த்தெடுத்த பெற்றோர்களான தாய் - தந்தையர் வயதாகிவிட்டாலே அவர்களை சுமையாகத்தான் கருதுகிறார்கள்.
ஆதரவற்ற முதிய பெண்களின் நலன் காக்கும் விஸ்ராந்தி காப்பகம் 

வளர்த்தெடுத்த பெற்றோர்களான தாய் - தந்தையர் வயதாகிவிட்டாலே அவர்களை சுமையாகத்தான் கருதுகிறார்கள். இத்தகைய ஆதரவற்ற முதிய பெண்மணிகளின் நலன் காக்க சுமைதாங்கியாக விஸ்ராந்தி காப்பகம் விளங்குகிறது. 

சென்னை - கிழக்கு கடற்கரைச் சாலையில் பாலவாக்கத்தில் 'விஸ்ராந்தி' என்ற பெயர் கொண்ட ஆதரவற்ற முதியோர் பெண்கள் காப்பகம் உள்ளது இக்காப்பகம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 

பெண்ணினம் போற்றும் பெண்மணியாகத் திகழும் திருமதி. சாவித்திரி வைத்தியினால் இவ்வமைப்பு துவங்கப்பட்டது. திங்கள் charity club என்ற அமைப்பினை 1978-ல் துவங்கி சாதாரண மக்கள் வாழும் சேரிகுடியிருப்புகளுக்குச் சென்று உதவிகள் செய்தார். ஆதரவற்றவர்கள் இறந்தால் கூட இடுகாடு வரை சென்று அந்திக் காரியங்களைச் செய்தார். இக்காரியத்திற்கு 1000 அசுவமேதயாகம் செய்த பலன் உண்டு என்று காஞ்சி மாகபெரியவர் எடுத்துக்கூறி அவரது பணியினை போற்றினார் முதன்முதலில் குரோம்பேட்டையில் துவங்கப்பட்டது. 

பின்னர் தற்பொழுது பாலவாக்கத்தில் இயங்கும் இடம் புகழ்பெற்ற AVM திருமதி ராஜேஸ்வரியிடமிருந்து நிலம் பெற்ற காப்பகம் துவங்கப்பட்டது. மிகவும் குறைந்த விலைக்கு திருமதி ராஜேஸ்வரி அம்மையார் அளித்தார். அதனால் காப்பகம் இருக்கும் சாலை AVM ராஜேஸ்வரி தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது. இதனை 1980-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 

தற்பொழுது 160-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மகளிர் இக்காப்பகத்தில் தங்கியுள்ளனர். இவர்கள் தங்கள் குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள். அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இங்கு இருக்கும் மூத்த பெண்மணிகளில் வயது மூத்தவராகத் திரு.சீதாலட்சுமி பாட்டி என்பவர் ஆவர். இவருக்கு 103 வயது ஆகிறது. வைத்தீசுவரன் கோயிலைச் சேர்ந்தவர். அங்கு கோயிலில் கோலம்போடும் அறப்பணி தெய்வீகப் பணியினை செய்து வந்தார். அவரை இங்குச் சேர்த்துவிட்டார்கள். அவருக்குத் தெரிந்தவர்கள். சக்கர நாற்காலியில் வலம் வந்தாலும் நன்றாகப் பேசுகிறார். மனத்தெளிவுடன் உள்ளார். 

இக்காப்பகத்தில் இருக்கும் பெண்கள் பற்றிய அனைத்து விபரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோப்பு பராமரிக்கப்படுகிறது. ஆதார்கார்டும் உள்ளது. இக்காப்பகத்தில் மருத்துவ வசதியுள்ளது. செவிலியர்களும் பணியாற்றுகின்றனர். நோயாளிகளாக இருப்பர்கள் தனியாக வைத்து கவனம் செலுத்துகின்றனர். சென்னை VHS மருத்துவமனை இக்காப்பகத்திற்கு வேண்டிய மருத்துவ வசதிகளை அளிக்கிறது. 

பெரும்பாலும் இங்கு உள்ளவர்கள் ஆதரவற்றவர்கள். சிலரைக் குடும்பத்தினரே இங்குத் தங்க வைத்துள்ளனர். அவரைப் போன்றவர்கள் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கிறார்கள். இச்சலுகை சென்னை நகரில் மட்டுமே தான். 

காப்பகத்தில் பெண்களே பொங்கல் பண்டிகை, நவராத்திரி கொலு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளின் போதும், குடியரசு நாள், சுதந்திர நாளின் போதும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். மேல்மருவத்தூர் போன்ற கோயில்களுக்கும் விருப்பம் உள்ளவர்கள் வழிபாட்டிற்காகச் சென்று வருகின்றனர்.

இக்காப்பகம் AVM charities, தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறை மற்றும் இந்திரா சிவசைலம் குடும்பத்தினர் மேலும் ரோட்டரி, அரிமா சங்கங்கள் பொதுமக்கள் அளிக்கும் நன்கொடையால் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

காலை 6.30 மணிக்கு காபி, 9.00 மணிக்கு காலை சிற்றுண்டி, மதியம் 12.00 மணிக்கு சாப்பாடு, மாலை 3.30 மணிக்கு டீ, இரவு 7.00 மணிக்கு இரவு சாப்பாடு என இவர்களது நாள்தோறும் உணவுமுறை செல்கிறது. காப்பகத்தில் உள்ள கிருஷ்ணர் வடிவத்தின் முன் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். பண்டிகை நாட்களில் புகழ்பெற்ற இசை வல்லுநர்கள் பாடி மகிழ்விக்கின்றனர். அந்த இசையால் அவர்கள் மணம் அமைதி அடைகிறது. பல நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றனர். 

தன்னார்வ தொண்டர்கள் பலர் இங்கு வந்து தொண்டு உள்ளத்துடன் காப்பகத்திற்கு வேண்டிய பணிகளை செய்து தருகின்றனர். Helpage India அமைப்பு கட்டம் கட்டித் தந்துள்ளது. காப்பகத்தில் உள்ள பெண்மணிகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் கண்மூடி தியானம் (இதய நிறைவு தியானம் (Heartfulness Mediatation) 1 மணி நேரம் பயிற்சி திரு.ஆர். ராதாகிருஷ்ணனால் அளிக்கப்படுகிறது. காலை மணி 10 - 11 வரை நடைபெறும். இந்நிகழ்வு இரண்டு வருடமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

பாலவாக்கம் சாய் சமிதி அமைப்பு இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து பஜனை செய்து மகிழ்விக்கின்றனர். காப்பகத்திற்கு வேண்டிய காய்கறிகளையும் அளிக்கின்றனர். இப்பணி 25 வருடமாக நடைபெற்று வருகிறது. 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4 - 5 மணி வரை ISKON TEMPLE சார்பில் இங்கு இசை வழிபாடு செய்யப்படுகிறது. பகவத்கீதையிலிருந்து நீதிபோதனை அளிக்கும் வகையில் கதைகள் கூறப்படும் பணி நடைபெற்று வருகிறது. 

காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள் அமைதியுடனும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர். திருமதி சாவித்திரி வைத்தி அவர்களால் பெருமுயற்சியால் துவங்கப்பட்டு, தற்போது அவரது மகள் திருமதி ஸ்ரீலேகா அவர்களால் நிர்வகிக்கப்படுகின்றது. 170 ஆதரவற்ற மகளிர், 30 பணியாளர்களுடன் காப்பகம் ஆலமரம் போல் தழைத்து, இன்னல்பட்ட ஆதரவற்ற பெண்மணிகளுக்கு இருப்பிடம் தந்து பாதுகாக்கும் அறப்பணியைச் செய்து வருவது பெருமை தான்!

விஸ்ராந்தி காப்பகம் ​தொடர்புக்கு - 24996634, 24994806

கட்டுரை தொகுப்பு - கி. ஸ்ரீதரன் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com