திருப்பள்ளியெழுச்சி  - பாடல் 3

வீரம் செறிந்த கழல்கள் அணிந்த சேவடிகளை

கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின
                 இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து ஒருப்படுகின்றது
            விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
          திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான்
            பள்ளி எழுந்தருளாயே.  

பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்

குருகுகள் = பறவைகள். தாரகை = நட்சத்திரம். ஓவின = ஒழிந்தன, நீங்கின.

பொருள்

பொழுது புலர்ந்ததை உணர்த்தும் வண்ணம், குயில்கள் கூவின, கோழிகள் கூவின, பறவைகளும் ஒலி எழுப்பின, வெண் சங்குகள் ஒலித்தன. சூரியனின் ஒளி பரவவே வானத்தில் அதுவரை ஒளி வீசிக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் மறைந்தன. உதய காலத்தில் பரவும் ஒளி ஒருங்கு திரண்டு மிளிர்கின்றது. இறைவனே, நீ மிகுந்த விருப்பத்தோடு, வீரம் செறிந்த கழல்கள் அணிந்த சேவடிகளை எங்களுக்கு காட்டி அருள்வாயாக. திருப்பெருந்துறை தலத்தில் உறையும் இறைவனே, யாவரும் அறிவதற்கு அரியவனாக இருப்பவனே, எங்கள் மீது கருணை கொண்டு எங்களுக்கு எளியவனாக காட்சி தருபவனே, எம்பெருமானே நீ பள்ளி எழுந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com