திருப்பள்ளியெழுச்சி -  பாடல் 6

உமையம்மையின் கணவனாகிய இறைவனே

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் பந்தனை
        வந்தறுத்தார் அவர் பலரும்       
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
   வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும்
           எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்
 

விளக்கம்

பப்பு = பரப்பு என்ற சொல்லின் இடைக்குறை. மனம் எப்போதும் எங்கும் திரியும் இயல்பினை உடையது. இவ்வாறு எப்போதும் பரபரப்புடன் திரியும் மனத்தினை ஒரு நிலையில் அடக்கிவைத்தால், இறைவனை ஆழ்ந்து சிந்திக்க முடியும். அவ்வாறு சிந்திக்கும் அடியார்களை பப்பு அற வீட்டிருந்து உணரும் அடியார் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பந்தனை = உயிர்களைப் பிணைத்து நிற்கும் ஆணவ மலம், வினையின் பயன்களை துய்ப்பதற்காக உண்டாக்கப்பட்ட மாயாமலம், வினைகளாகிய கன்ம மலம் ஆகிய மும்மலங்கள்.

பொருள்

உமையம்மையின் கணவனாகிய இறைவனே, மனதில் பரபரப்பு ஏதுமின்றி, சிந்தனையை ஒருமுகப்படுத்தி உன்னை உணரும் அடியார்கள், தங்களைப் பிணித்துள்ள மூன்று மலங்களையும் அறுத்து உய்வினை அடைகின்றார்கள். மற்ற மானிடர்கள், தங்களைப் பெண்களாக பாவித்துக்கொண்டு உன்னை வந்தடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் உன்னை வணங்குகின்றார்கள்: செப்புக் கிண்ணங்கள் போன்று சீரான வடிவில் மலரும் தாமரைத் தடாகங்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை தலத்தில் உறையும் இறைவனே, எங்களது பிறவிப் பிணியினை அறுத்து, எங்களை ஆட்கொண்டு அருளுவதர்காக, நீ பள்ளி எழுந்தருள வேண்டும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com