திருப்பள்ளியெழுச்சி - பாடல் 8

நீ பள்ளி எழுந்தருள வேண்டும்

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர்
                                 யாவர் மற்று அறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில்
                          தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப்பெருந்துறை
                           உறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆரமுதே
                         பள்ளி எழுந்தருளாயே.  

பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்

பழங்குடில் = பழமையான குடிசை. பழமையான குடிசை அதன் கூரையில் உள்ள மூங்கில்களைக் கட்டிய கயிறுகள் இற்றுப்போய், கூரையின் மேல் வேய்ந்த இலைகள் மங்கிக்போய் காணப்படும். அதுபோன்று அடியார்களின் மனங்கள், அவர்களை அந்நாள் வரை பிணைத்திருந்த மலக் கட்டுக்கள் அற்றுப்போய், அவர்களின் மனதில் உலகப் பொருட்களின் மீது வைத்த ஆசை உலர்ந்துபோய் காணப்படுவதால் பழங்குடில் என்று அவர்களது மனதினை குறிப்பிடுகின்றார். அத்தகைய உள்ளங்கள் இறைவன் உறைவதற்கு ஏற்றதாக உள்ளதால், இறைவன் தனது மனைவியுடன் அங்கே உறைவதாக கூறுகின்றார்.

பொருள்    

தோற்றத்திற்கு முந்தியவனாகவும், ஊழியின் போது ஏற்படும் இறுதிக்கு பிந்தியவனாகவும், தோற்றத்திற்கும் இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இருப்பவனாகவும் உள்ள இறைவனே, உன்னை திருமால், பிரமன், உருத்திரன் ஆகிய மூவரும் அறிய முடியவில்லை. எனவே மற்றவர்கள் உன்னை எப்படி அறிய முடியும். அடியார்களின் மனங்கள், பழைய குடிசைகள் போன்று, மலக் கட்டுகள் அற்று, உள்ளம் உலகப் பொருட்களின் மீது கொண்டுள்ள ஆசைகள் உலர்ந்து, இற்றுப் போன கொம்புகளையும் உலர்ந்த இலைகளையும் உடைய பழைய குடிசை போன்று காணப்படும் அனைத்து அடியார்களின் உள்ளங்களில், பந்து வந்து அணையும் விரல்களைக் கொண்ட உனது மனைவியுடன், இறைவனே நீ உறைகின்றாய். கொழுந்து விட்டு எரியும் தீயின் நிறத்தினை உடைய உனது திருமேனியையும், நீ உறையும் திருப்பெருந்துறை கோயிலையும் எனக்கு காட்டியதும் அன்றி, குருந்த மரத்தின் நிழலில் அந்தணன் வடிவத்தில் வந்து குருவாக என்னை ஆட்கொண்டாய். கிடைத்தற்கு அறிய அமுது போன்றவனும் திருப்பெருந்துறை தலத்தில் உறைபவனும் ஆகிய  இறைவனே, நீ பள்ளி எழுந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com