திருப்பாவை - பாடல் 25

தேவகி பிராட்டிக்கு மகனாகப் பிறந்த

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்

கண்ணபிரானின் திருவடிகளின் சிறப்பினை மேற்கண்ட பாடல் மூலம் உணர்த்திய ஆயர் சிறுமிகளை நோக்கி கண்ணபிரான், மார்கழி மாத விடியற்காலை குளிரினில் உங்களது உடலினை வருத்திக்கொண்டு வந்துள்ள சிறுமிகளே நீங்கள் பறை ஒன்றினையே வேண்டி வந்தீர்களா, அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் விருப்பமும் உள்ளதா என்று கேட்டான் போலும். தங்களுக்கு உடல் வருத்தம் ஏதும் இல்லை என்று விடையளித்த சிறுமிகளுக்கு, தந்து உடல் வருத்தத்தினை பொருட்படுத்தாது, ஒரே இரவினில் மதுரையிலிருந்து ஆய்ப்பாடி வந்து, ஆங்கே வளர்ந்து தங்களை மகிழ்வித்த கண்ணின் கருணை நினைவுக்கு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு, கண்ணனைப் போற்றும் பாடல் இது.

பொழிப்புரை

தேவகி பிராட்டிக்கு மகனாகப் பிறந்த அதே இரவினில் மதுரையிலிருந்து ஆய்ப்பாடி நந்தகோபன் திருமாளிகை வந்தடைந்து, யசோதை பிராட்டியின் மகனாக நீ ஒளிந்து வளர்ந்ததை அறிந்த கம்சன், எவ்வாறேனும் உன்னைத் தொலைத்துவிட வேண்டும் என்று பல விதமான தீங்குகள் செய்த போதும், அவனது சூழ்சிகளை முறியடித்து அவனது வயிற்றினில் நெருப்பு நின்றது போன்று அவனை வருத்திய நாராயணனே, நாங்கள் உன் மீது கொண்ட விருப்பினால் உனது அருள் வேண்டி இங்கே வந்தோம்; நீ எங்களுக்கு பறை இசைக் கருவியும் தந்து உனது அருளினையும் எங்களுக்குத் தருவாயாகில் நாங்கள் உனது செல்வத்தையும் வீரத்தையும் புகழ்ந்து பாடுவோம். உன்னைப் பிரிந்திருந்த எங்களது வருத்தமும், உன்னைக் கண்டதால் மறைந்தது; எனவே நாங்கள் வருத்தம் ஏதுமின்றி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com