திருப்பாவை - பாடல் 29

உன்னை தரிசனம் செய்து வணங்கி

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்


பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்

முந்தைய பல பாடல்களில் பறை வேண்டும் என்று கேட்ட ஆயர் குலத்துச் சிறுமிகள் இந்த பாடலில் தங்களது வேண்டுகோளை மாற்றிவிட்டதை நாம் உணரலாம். உலகத்தவரின் கண்களுக்கு தாங்கள் நோன்பு நோற்பது போன்று தோற்றம் அளித்தாலும், எங்களது உண்மையான நோக்கம், நோன்பு நோற்பதோ, அல்லது அந்த நோன்பிற்காக உன்னிடமிருந்து பறை கொள்வதோ அல்ல என்பதை தெளிவுபடுத்தி, தங்களது உண்மையான வேண்டுகோளை சமர்ப்பிக்கும் பாடல் இது. காமம் = விருப்பம் கன்னபிரானுடன் உறவு கொண்டு அவனுக்கு ஆட்பட்டு அவனுக்குப் பணி செய்வதுதான் தங்களது உண்மையான விருப்பம் என்றும் இந்த விருப்பம் இந்த பிறப்பிலும் மற்றும் எடுக்கவிருக்கும் அனைத்து பிறவிகளிலும் தொடர்ந்து ஈடேற வேண்டும் என்பதே ஆயப்படி சிறுமியர்களின் உண்மையான நோக்கம் என்று ஆண்டாள் பிராட்டியார் கூறுகின்றார்.

பொழிப்புரை

இந்த விடியற்காலை வேலையில், நாங்கள் அனைவரும் கூடி வந்து உன்னை தரிசனம் செய்து வணங்கி, உனது பொன்னான திருவடிகளை போற்றுவதின் நோக்கத்தினை கூறுகின்றோம் நீ கேட்பாயாக. பசுக்கள் மேய்த்து பராமரித்து பசுக்களிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் ஆயர் குலத்தில் பிறந்த கண்ணபிரானே, நாங்கள் உனக்குச் செய்யவிருக்கும் அடிமைத் தொழிலை, நீ மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும், இன்று நீ எங்களுக்கு கொடுக்கவிருக்கும் பறையினைப் பெறுவதற்காக நாங்கள் இங்கே வரவில்லை. கோவிந்தனே, இந்த பிறவியில் மட்டுமன்றி இனி நாங்கள் எடுக்கவிருக்கும் ஏழேழ் பிறவிகளிலும் நாங்கள் உன்னுடன் உறவு கொண்டவர்களாக இருக்க வேண்டும், மேலும் உனக்கே நாங்கள் அடிமையாகத் தொண்டுகள் புரியவேண்டும். இந்த இரண்டு விருப்பங்களைத் தவிர, எங்களது வாழ்க்கையில் வேறு எந்த விருப்பங்களும் இல்லாதவாறு நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com