திருவெம்பாவை - பாடல் 12

உலகத்தையும் படைத்தும், காத்தும், மறைத்தும்

ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேல் ஓர் எம்பாவாய்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - மயிலாடுதுறை சிவகுமார்

விளக்கம்

ஆர்த்த = பிணைத்துள்ள. ஆர்த்து ஆடும் = ஆரவாரம் செய்தவாறு நீராடும். புனித தீர்த்தங்கள், அவைகளில் முழுகிக் குளிக்கும் மனிதர்களின் பாவங்களைக் களைவது போன்று, நமது மாசுகளைக் களைந்து, மலங்களின் பிடியிலிருந்து நம்மை மீட்பவன் என்பதால் இறைவனை தீர்த்தன் என்று இங்கே கூறுகின்றார். பெருமானின் புகழினை ஆரவாரத்துடன் உரைத்தவாறு நீராடும் இந்த பெண்களின் நீரியல் உடல் நனைய, அவர்களது மனதும் சொற்களும் இறைவனின் அருள் மழையில் நனைகின்றன. முந்தைய பாடலில் தாங்கள் நீராடும் வகையினை உணர்த்திய பெண்கள், இந்த பாடலில் மற்ற பெண்களையும் தங்களுடன் நீராட அழைக்கின்றார்கள்.
 
பொருள்

பெருமானே, எங்களுடன் இறுக்கமாக பிணைந்துள்ள பிறவிப் பிணி எங்களை விட்டு நீங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் உன்னைக் குறித்த சிந்தைனையில் மூழ்கிக் குளிக்கின்றோம். பல நலங்கள் உடைய சிற்றம்பலத்தில், தனது கையினில் தீப்பிழம்பினை ஏந்தியவாறு நடமாடும் கூத்த பிரான், இந்த வானத்தையும் உலகத்தையும் படைத்தும், காத்தும், மறைத்தும் திருவிளையாடல்கள் புரிகின்றான். அவனது சிறப்புகளையே பேசியவாறு நாங்கள், எங்களது கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் அணிந்துள்ள மேகலை முதலிய அணிகலன்கள் ஆரவாரம் செய்யவும், கூந்தலில் அணிந்துள்ள மலர்களைச் சூழும் வண்டுகள் ரீங்காரம் செய்யவும், பூக்கள் நிறைந்துள்ள இந்த பொய்கையில் நீராடுகின்றோம். எங்களை அடிமையாக உடைய சிவபெருமானின் பொன்னான பாதங்களை புகழ்ந்தவாறு, இங்குள்ள பெரிய சுனையில் நீராடலாம், அனைவரும் வாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com