திருவெம்பாவை - பாடல் 13

நீராட இருக்கும் பொய்கை கருங்குவளை மலர்களையும்

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - மயிலாடுதுறை சிவகுமார்

விளக்கம்

சிவபெருமானைப் பற்றி சிந்தித்த வண்ணம், பேசிய வண்ணம் நீராடச் சென்ற பெண்களுக்கு, குளத்தினைக் கண்டவுடன், பெருமானின் தோற்றமும் அம்மையின் தோற்றமும் நினைவுக்கு வருகின்றன. குளத்தில் உள்ள கருங்குவளை மலர்கள் அன்னையின் நிறத்தையும், பறவைகள் கூட்டம் கூட்டமாக இருக்கும் நிலை அன்னையின் கையில் இருக்கும் வளையல்களையும், செங்கமலப் பூக்கள் பெருமானின் நிறத்தையும் பொய்கையின் அருகில் இருக்கும் பாம்புகள் பெருமானின் உடலில் பின்னியிருக்கும் பாம்புகளையும் நினைவுபடுத்தவே, பொய்கையினை பெருமானும் பிராட்டியும் கலந்து இருக்கும் நிலையினை உணர்த்துவதாக கூறுகின்றார்கள். குருகு என்பதற்கு பறவைகள் என்றும் வளையல்கள் என்று இரண்டு விதமான பொருள்கள் கொள்ளலாம். எதனைக் கண்டாலும் அதில் சிவத்தைக் காணும் பக்குவம் அடைந்த பெண்களாக அவர்கள் வளர்ச்சி அடைந்ததை நாம் இந்த பாடலில் காண்கின்றோம்.

பொருள்

நீராட இருக்கும் பொய்கை கருங்குவளை மலர்களையும், செந்தாமரை மலர்களையும் உடையதாய், கூட்டங் கூட்டமாக பறவைகளை உடைத்ததாக விளங்குகின்றது. மேலும் அருகில் பாம்புகள் ஒன்றுகொன்று பிணைந்தவாறு காணப்படுகின்றன. இவ்வாறு இருக்கும் நிலை குளிக்கச்சென்ற பெண்களுக்கு, குவளை மலர்கள் அம்மையின் நிறத்தையும், பறவையினங்கள் அம்மையின் கையில் அணிந்துள்ள வளையல்களையும், செங்கமல மலர்கள் பெருமானின் நிறத்தையும், அருகில் உள்ள பாம்புகள் பெருமானது திருமேனியில் தவழும் பாம்புகளையும் நினைவூட்டவே, பெருமானும் பிராட்டியும் இணைந்து நிற்கும் நிலை போன்று பொய்கையில் உள்ள பல பொருட்கள் இணைந்துள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும் தங்களது அக அழுக்குகளை நீக்கிக்கொள்ள விரும்புவோர் பெருமானையும் பிராட்டியையும் நாடுவது போன்று, புற அழுக்குகளை நீக்கிக்கொள்ள விரும்பும் மனிதர்கள் குளத்தினை நாடுகின்றார்கள்; இந்த தன்மையிலும் இங்குள்ள குளம், பெருமானும் பிராட்டியும் இணைந்திருக்கும் நிலையை ஒத்துள்ளது. இவ்வாறு உள்ள குளத்தில் பொங்கி வருகின்ற நீரினில் பாய்ந்து, நமது கையில் அணிந்துள்ள வெண்சங்கு வளையல்களும், காலில் அணிந்துள்ள சிலம்புகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒலிகளை எழுப்ப, மகிழ்ச்சியால் நமது மார்பகங்கள் விம்மிப் புடைக்க, குடைந்து நீராடுவதால் குளத்தில் உள்ள நீர் மேலே பொங்கி எழும்புமாறு, தாமரைப் பூக்கள் நிறைந்த குளத்தினில் நாம் நீராடுவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com