திருவெம்பாவை - பாடல் 14

பரஞ்சோதியாகத் திகழும் அவனது தன்மையையும்,

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருள் ஆமாபாடிச்
சோதி திறம் பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம் பாடி அந்தம் ஆமாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்

விளக்கம்

பேதித்தல் = வேறுபாடு செய்தல். தவறு செய்யும் குழந்தையை அடித்தும் கண்டித்தும் திருத்தும் ஒரு தாய், தவறு செய்யாத குழந்தையை கண்டிப்பதில்லை. ஏன், முன்னம் தவறு செய்து தண்டிக்கப்பட்ட அதே குழந்தை, தவறு செய்யாத தருணங்களில், தாயின் பாராட்டுதலைப் பெறுவதையும் நாம் காண்கின்றோம். ஒவ்வொரு உயிரும், இறைவனைப் பற்றி அறிந்துள்ள நிலையில், பாசங்களை அறுத்த நிலையில் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. எனவே அந்தந்த உயிரின் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப, இறைவனின் அருளின் திறம் மாறுபட வேண்டிய அவசியம் உள்ளது. பெண்கள் அணிந்துள்ள மலர்களில் உள்ள தேனைப் பருகுவதற்காக சூழும் வண்டுகள், பெண்கள் அமிழ்ந்து குளிக்கையில் மலர்கள் நனைவதால், கூந்தலை விட்டு அகலுகின்றன. நீர்நிலைக்கு மேல் கூந்தல் எழும்போது வண்டுகள் மலர்களைச் சூழ்கின்றன. இவ்வாறு அவை மேலும் கீழும் சென்று வருவது வண்டுகள் ஆடுவதுபோல் தோன்றுகின்றது. ரீங்காரமிட்டு எப்போதும் பாடும் வண்டுகள் ஆடுகின்றன, காதில் அணிந்துள்ள குழைகள், உடலில் அணிந்துள்ள ஆபரணங்கள் மற்றும் கூந்தலில் சூடியுள்ள மலர்கள் ஆகியவை ஆடும் ஆட்டத்தில் கலந்துகொண்டு வண்டுகளும் ஆடுகின்றன என்று நயமாக கூறுகின்றார். வண்டுகள் பாடுவதை குறிப்பிடும் பாடல்களையே அதிகமாக ரசித்துவந்த நாம், வண்டுகள் ஆடுவதை குறிப்பிடும் அபூர்வமான பாடலாக நாம் இந்த பாடலை காண்கின்றோம்.

பொருள்

காதுகளில் அணிந்துள்ள குழை ஆபரணங்கள் ஆடவும், உடலின் பல்வேறு இடங்களில் அணிந்துள்ள பசும்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆடவும், கூந்தலில் சூடியுள்ள மலர்மாலைகள் ஆடவும், மாலைகளைச் சூழுந்துள்ள வண்டுகள் ஆடவும், நாம் அனைவரும் இந்த குளிர்ந்த நீர்நிலையில் நீராடுவோம். அவ்வாறு நீராடும் போது, சிற்றம்பலத்தில் நடமாடும் கூத்தனைப் பாடுவோம், வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக இருக்கும் சிவபெருமானையும், பரஞ்சோதியாகத் திகழும் அவனது தன்மையையும், அவனது தலையில் சூடப்பட்டுள்ள கொன்றை மாலையையும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக அவன் திகழும் தன்மையையும், அனைத்து உயிர்களுக்கும் அந்தமாக அவன் திகழும் தன்மையையும், உயிர்களின் தன்மைக்கு ஏற்றவாறு வேறு வேறு விதங்களில் நமக்கு கருணை காட்டி நமது ஞானத்தினை வளர்க்கும் அம்மையின் திருவடிகளின் தன்மையையும் பாடி நாம் நீராடுவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com