திருவெம்பாவை - பாடல் 15

தாரை தாரையாக, இடைவிடாது கண்ணீர் வழிகின்றது

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்
                                                           பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்
                                                                 தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும்
                                                                      வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர்
                                                             எம்பாவாய்.

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்

விளக்கம்

வாய் ஓவாள் = வாய் ஒழியாமல் பேசுவாள். ஓவா = இடைவிடாத. தாரை = தீர்த்துளி. வார் = கச்சு. ஏர் = எழுச்சி. தங்களின் தோழி ஒருத்திக்கு நடந்த அனுபவங்களை விவரித்துக் கூறும் ஒரு பெண்மணி, அவ்வாறான மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்த இறைவனை பாடியவாறு நீராடலாம் என்று கூறுகின்றாள். வித்தகர் = சாமர்த்தியம் உடையவர். அரையன் = அரசன். பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட பெண்ணினைப் போன்று தாங்களும் மாற வேண்டும் என்ற விருப்பம் மற்ற பெண்களுக்கும் இருப்பது நமக்கு புலனாகின்றது,

பொருள்

ஒரு முறை எனது பெருமான் என்று தனது வாய் திறந்த சொன்ன எமது தோழி, அதன் பின்னர், வாய் ஒழியாமல் பெருமானின் சிறப்புகளைப் பேசுகின்றாள். பெருமானைப் பற்றிப் பேசுவதால், அவளின் சிந்தை களிப்புற்று, கண்களிலிருந்து தாரை தாரையாக, இடைவிடாது கண்ணீர் வழிகின்றது. மற்ற தேவர்களைப் பணியாத அவள், நிலத்தினில் விழுந்து சிவபெருமானைப் பணிந்த பின்னர், நிலத்திலிருந்து எழாமல் வெகுநேரம் கிடக்கின்றாள். இவ்வாறு, இந்த பெண்ணைத் தன் மீது பித்துக்கொள்ளச் செய்த சிவபெருமானை, சாமர்த்தியம் உடையவனை, மார்பினில் நகைகளையும் கச்சினையும் அணிந்த பெண்களாகிய நாம் அனைவரும், நமது வாயார பாடி, பொய்கையில் உள்ள நீரின் திவலைகள் மேலே எழுமாறு, பாய்ந்து நீராடுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com