திருப்பள்ளியெழுச்சி  - பாடல் 1

அரசனைத் துயில் எழுப்புவது பற்றி பண்டைய

முன்னுரை

அரசனைத் துயில் எழுப்புவது பற்றி பண்டைய இலக்கியங்களில் கூறப்படுகின்றன. காலையில் துயில் எழுந்திருக்கும் அரசனின் காதுகளில் நல்ல சொற்கள் விழ வேண்டும் என்ற நோக்கத்துடன், அவனது புகழினையும், வெற்றிகளையும், நற்செயல்களையும் பாடி வந்தார்கள். அதே பாணியை பின்பற்றி, இறைவனை தங்களுக்கு நெருங்கிய ஒருவனாக கருதி, அவனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுவதாக அமைந்த பதிகம். நம்மில் ஒருவனாக கருதி, அவனை நீராட்டி, மலர்களும் அணிகலன்களும் சூட்டி அழகு பார்த்து, உடைகள் உடுத்தி, வணங்கி வழிபடுவது போன்று, பள்ளியெழுச்சி பாடி அவனை வணங்கும் பதிகம். இந்த பதிகம் திருப்பெருந்துறையில் அருளியது.  

பாடல் 1

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே புலர்ந்தது
    பூங்கழற்கு இணைதுணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்  எழில்நகை
        கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
       திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனை உடையாய்
            எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்

வாழ் முதல் = வாழ்வுக்கு அடிப்படை. ஏற்றி = தூவி. ஏறு = இடபம். எந்த ஒரு தொழிலைச் செய்வதற்கும் அடிப்படையாக மூலதனம் தேவைப்படுகின்றது. நமது வாழ்வும் அவ்வாறுதான். நமது வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் அளிக்கும் சிவபெருமானை வாழ்முதல் என்று மிகவும் பெருமையாக மணிவாசகர் அழைக்கின்றார்.

பொருள்

அடியேனது வாழ்வின் அடிப்படையாக விளங்கும் பொருளே, உன்னை போற்றி வணங்குகின்றேன். மலர் போன்று மலர்ந்து அழகாக காணப்படும் உனது திருவடிகளை, இணையான மலர்களை சாத்தி வழிபடும் நாங்கள், உமது திருமுகத்தில் மலரும் அழகிய புன்முறுவலை எண்ணி, உனது திருவடிகளை வழிபடுவோம். தாமரை மலர்கள் மலரும் சேற்றினைக் கொண்டு நீர்வளம் உடையதாக விளங்கும் வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் தலத்தில் உறையும் சிவபெருமானே, உயர்த்திப் பிடிக்கப் பெற்ற கொடியினில் எருதினை இலச்சினையாக உடையவனே, எம்மை ஆட்கொண்ட பெருமானே, நீ பள்ளி எழுந்தருள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com