திருப்பள்ளியெழுச்சி - பாடல் 9

திருப்பெருந்துறை தலத்தில் உறையும்

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே
            உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே
    வண்திருப்பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே கடலமுதே கரும்பே
                விரும்படியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய் எம்பெருமான்
                பள்ளி எழுந்தருளாயே.

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்


பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்

விழுப்பொருள் = மேலான பொருள். நண்ணுதல் = அணுகுதல். தொழும்பு = குற்றேவல், அடிமைத் தொழில். வண் = வளமையான.

பொருள்

திருப்பெருந்துறை தலத்தில் உறையும் இறைவனே, விண்ணுலகத்தில் வாழும் தேவர்கள் தங்களது அறிவினால் நெருங்க முடியாத மேம்பட்ட பொருளாக நீ விளங்குகின்றாய்: உடலாலும் மனத்தாலும் உனக்கு அடிமைகளாக வாழும் எங்களை வாழச் செய்வதற்காக, இந்த நிலவுலகுக்கு வந்த இறைவனே, வளமான திருப்பெருந்துறையில் உறையும் இறைவனே, வழி வழியாக உனது அடியார்களாக இருக்கும் எங்களது கண்ணின் உள்ளே இருக்கும் பாவையாகத் திகழ்ந்து எங்களுக்கு மகிழ்ச்சி தரும் இறைவனே, தேன்போன்று இனிப்பவனே, பாற்கடலில் எழுந்த அமுதம் போன்று அனைவராலும் விரும்பப் படுபவனே, கரும்பு போன்று இனிப்பவனே, உன்னை விரும்பும் அடியார்களின் எண்ணத்தில் உறைபவனே, அனைத்து உலகங்களுக்கும் உயிர் போன்றவனே, நீ பள்ளி எழுந்தருள வேண்டும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com