திருப்பாவை - பாடல் 23

மழைக் காலத்தில், குகையின் உள்ளே

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்

கண்ணபிரான் துயிலெழுந்து வெளியே வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் ஆயர் சிறுமிகள், கண்ணன் வரும் காட்சியினை தங்களுக்குள்ளே விவரித்துக்கொள்ளும் பாடல். வீரம் மிகுந்த ஆண் சிங்கம் எழுந்துவரும் காட்சியை ஒத்து இருப்பதாக ஆண்டாள் பிராட்டியார் கூறுகின்றார்.

பொழிப்புரை

மழைக் காலத்தில், குகையின் உள்ளே தனது துணையான பெண் சிங்கத்துடன் சேர்ந்து உறங்கிய, வீரம் மிகுந்த ஆண் சிங்கம், உறக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வரும்போது, கனல் போன்ற தனது கண்களிலிருந்து தீப்பொறி பறக்குமாறு விழித்து, பிடரி மயிர் சிலிர்க்க, நான்கு புறங்களிலும் திரும்பி திரும்பி பார்த்தவாறு சோம்பல் முறித்து, தனது உடலினை நீட்டி, கர்ஜனை செய்தவாறு புறப்படும்போது, காட்டில் உள்ள மற்ற விலங்குகள் அச்சம் கொள்ளும். அதே போன்று காயாம்பூ நிறத்தினை உடைய கண்ணபிரானே நீ, உறக்கத்திலிருந்து விழித்து, கம்பீரமாக நடந்து உனது மாளிகையிலிருந்து வெளியே வருவாயாக, பின்னர் உனக்காக அமைக்கப்பட்டுள்ள சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக உன்னைக் காண வந்தோம் என்பதை கேட்டறிந்து எங்களது தகுதியினை ஆராய்ந்து எங்களுக்கு அருள் புரிவாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com