திருப்பாவை - பாடல் 28

சிறுமியர்கள் தங்கள் தகுதியினை எடுத்துரைக்கும் பாடல்

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்


பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்

முந்தைய இரண்டு பாடல்கள் மூலம் தாங்கள் வேண்டுவது என்னென்ன என்று பெரிய பட்டியல் இட்ட, ஆயர் சிறுமிகளை நோக்கி கண்ணபிரான் கீழ்க்கண்டவாறு கூறினான் போலும். சிறுமிகளே நீங்கள் கோரியதை நான் தருகின்றேன். ஆனால் பெண்களே, நீங்கள் வேண்டுவனவற்றை பெறுவதற்கான தகுதி உங்களுக்கு உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதனைச் செவியுற்ற சிறுமியர்கள் தங்கள் தகுதியினை எடுத்துரைக்கும் பாடல் இது.

பொழிப்புரை

ஆநிரைகள் மேய்வதற்கான புல்வெளிகளைத் தேடி, பசுக்களின் பின்னே காட்டிற்கு சென்று, அங்கே கூடி கலந்து உண்ணும் வழக்கத்தினைக் கொண்ட, அறிவில்லாத ஆய்க்குலத்தில் பிறந்த நாங்கள், உன்னை எங்கள் குலத்துப் பிள்ளையாக பெறுவதற்கு உரிய புண்ணியத்தை செய்தவர்களாக உள்ளோம். குறை ஏதும் இல்லாத கோவிந்தனே, உன்னோடு நாங்கள் கொண்டுள்ள உறவினை, எவரும் அழிக்க முடியாது. நாங்கள் அறியாத பிள்ளைகளாய் இருப்பதால், உனது பெருமையினை முற்றிலும் உணராது, உன் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக, உன்னை சிறிய பெயர்களால் பலமுறை அழித்துள்ளோம். அவற்றை மனதில் வைத்துக்கொண்டு எங்கள் மீது கோபம் கொள்ளாமல், இறைவனே, நீ எங்களுக்கு பறைகள், மற்றும் நாங்க விரும்பிய பொருட்களை அருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com