திருவெம்பாவை - பாடல் 16

கடலில் இருக்கும் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாக மாறி

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம் பிராட்டி திருவடி மேல்
பொன்னம் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - பொன் முத்துக்குமரன்

விளக்கம்

மகளிர் அனைவரும் ஒன்று கூடி மழை பொழிய வேண்டி பாடும் பாடல் இது. இட்டிடை = மிகவும் சிறிய இடை. சுருக்கி = வற்றச் செய்து. சிலம்பி = ஒலித்து. சிலை குலவி = வில்லினை வளைத்து. முன்னி = முதலில். பொய்கையில் பெருமானும் பிராட்டியும் இணைந்து இருப்பதுபோல் கண்டு மகிழ்ந்த பெண்கள், மழையுடன் தொடர்புகொண்டுள்ள, மேகம், இடி, மின்னல், மழை அனைத்தும் எவ்வாறு இறைவியின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றன என்று உருவகிக்கும் பாடல். தாங்கள் நீராடிய குளத்தினை, அம்மையப்பனின் உருவமாகக் கண்டுகளித்த பெண்களுக்கு, அந்த குளம் எப்போதும் அவ்வாறு நீர் நிறைந்து காணப்பட வேண்டும் என்ற கவலை எழுந்தது போலும். அவ்வாறு நீர் நிறைந்து இருப்பதற்கு மழை பொய்க்காமல் பொழிய வேண்டும் அல்லவா. எனவே மழை பொழிய வேண்டும் என்று இறைவியை வேண்டுகின்றனர்.

பொருள்

கடலில் இருக்கும் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாக மாறி, கருநிற மேகங்களாக மாறுகின்றன, அவ்வாறு மாறிய மேகங்கள், எம்மை உடையவளாகிய தேவியின் நிறத்தை ஒத்து விளங்குகின்றன. அத்தகைய மேகங்கள் ஒன்றுக்கொன்று உராய்ந்து, தேவியின் சிறுத்த இடை போன்று மின்ன, பிராட்டியின் காலில் அணிந்துள்ள சிலம்புகள் இடித்து ஏற்படுத்தும் ஓசையினை ஒத்த இடிகள் முழங்க; தேவியின் புருவத்தினைப் போன்று வளைந்த வானவில் ஆகாயத்தில் தோன்ற, தான் பிரியாது இருக்கும் பெருமானின் அன்பர்களுக்கு, உமையம்மை தானே முன்வந்து அருளுவதைப் போன்று, மழை பொழிந்து உலகம் செழிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com