திருவெம்பாவை - பாடல் 17

நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே, திருமால், நான்முகன் மற்றுள்ள

செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்


பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - பொன் முத்துக்குமரன்
 

விளக்கம்

செங்கணவன் = திருமால். திசைமுகன் = நான்முகன். கொங்குண் = நறுமணத்தினை உடைய. ஒரு பெண்மணி தனது தோழிக்கு கூறுவதாக அமைந்த பாடல். பிரமன் திருமால் மற்றுமுள்ள தேவர்கள் ஆகியோரிடத்தில் வைத்துள்ள அன்பினைவிடவும் நம் மீது அதிகமான அன்பினை வைத்து, நம்மிடம் உள்ள குற்றங்களைக் களைந்து நமது மனதினில் எழுந்தருளும் இறைவனின் புகழினை பாடுமாறு ஒருத்தி மற்றவளை ஊக்குவிக்கும் பாடல் .சேவகன் = வீரன்.

பொருள்

நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே, திருமால், நான்முகன் மற்றுள்ள தேவர்கள் ஆகியோரிடத்தில் இல்லாத அன்பும் இன்பமும் எம்மிடம் வைத்துள்ள இறைவன், எங்களது குற்றங்களை நீக்கி, எமது இல்லங்களில் எழுந்தருளி, தனது பொன் போன்ற திருப்பாதங்களை எங்களது தலையில் சூட்டி அருள் புரிந்து, எங்களை பெருமைப்படுத்துகின்றான். அத்தகைய வீரனை, அழகிய கண்களை உடைய அரசினை, அடியார்களுக்கு ஆரமுதமாகத் திகழ்பவனை, எங்கள் பெருமானை, நமக்கு எல்லா நலங்களும் வாய்க்குமாறு, புகழ்ந்து பாடி, தாமரைப் பூக்கள் நிறைந்த குளத்தில் பாய்ந்து நீராடுவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com