அட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும்

'அட்சயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு 'அள்ள அள்ளக் குறையாது’ என்பது தான்
அட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும்

'அட்சயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு 'அள்ள அள்ளக் குறையாது’ என்பது தான் பொருள். 

சித்திரை மாதம், அமாவாசையைத் தொடர்ந்து வரும் திரிதியை அன்று அட்சய த்ரிதியை அனுசரிக்கப்படுகிறது. 

இந்தப் புண்ணிய தினமான, திரிதியை நாள்,  நமக்குத் தெரிந்ததும், தெரியாததுமான அநேக விஷயங்களை நாம் அறிந்து கொள்ள உதவும் உன்னத நாளாகத் திகழ்கிறது. 

இன்றைய தினத்தில்தான்... 

ஸ்ரீ வேதவியாசர், மகாபாரதம் என்னும் அற்புதமான காவியத்தை எழுதத்தொடங்கினார். 

ஸ்ரீ மகாவிஷ்ணுவின், ஆறாவது அவதாரமான, ஸ்ரீ பரசுராமரின் அவதாரம் நிகழ்ந்தது. 

குபேரன், தான் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்றார். 

ஒரு பிடி அவலுடன், குசேலர், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்த நாள். 

ஸ்ரீ கங்காமாதா, பூமியைத் தொட்ட நாள். 

ஸ்ரீ ஆதிசங்கரர், கனகதாரா ஸ்தோத்திரத்தை நமக்கு அருளிய நாள். 

இப்படி பல அம்சங்கள் இந்த நன்னாளில் அமைந்திருந்தாலும், முக்கியமான ஒரு தேவ நிகழ்வை, நாம் மறந்துவிடக்கூடாது. 

அதுதான்,  நம்முடைய அத்யாவசியத் தேவையான உணவை அதாவது அன்னத்தை, நமக்குக் குறைவில்லாமல் அன்றாடம் வழங்கி அருளும் ஸ்ரீ அன்னபூரணி மாதா அவதாரம் செய்த நாள்தான் அது. 

காரியம் என்று ஒன்று இருந்தால், அதற்குக் காரணம் இல்லாமல் இருக்காது அல்லவா? 

ஒருமுறை, கைலாயத்தில், ஸ்ரீ சிவபெருமானும், ஸ்ரீ பார்வதியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆடும்பொழுது, பந்தயத்தில், தன்னுடைய சூலாயுதம் முதற்கொண்டு அனைத்தையும், உமாதேவியிடம், மகேசன் இழந்தார். 

செய்வதறியாது, மகேசன், ஸ்ரீ விஷ்ணுவை, அணுகி, உபாயம் கேட்டார். 

மீண்டும் ஒரு முறை சொக்கட்டான் ஆடினால், இழந்ததைப் பெறலாம் என்று பரமாத்மா கூறினார். 

அதன்படி, கங்காதரன், அன்னையுடன், மீண்டும்,  விளையாடத் தொடங்கினார். 

ஸ்ரீ கேசவன் கூறியது போல், கேட்ட விருத்தம் விளையாட்டில் விழ, ஸ்ரீ சிவபெருமானும் இழந்ததை மீட்டுக் கொண்டார். 

ஸ்ரீ பார்வதி தேவி, கணவர் தப்பாட்டம் ஆடி, தன்னை ஏமாற்றி, வெற்றி கண்டார் என்று கோபப்பட்டார். 

அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அந்த சமயத்தில், அங்கு, ஸ்ரீ விஷ்ணு வருகை புரிந்தார். 

நடந்தது எல்லாமே மாயைதான் என்பதைக்கூறி இருவரையும் சமாதானப்படுத்தினார். 

ஆனால், எல்லாமே மாயை என்பதில் அன்னைக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது.

'பூலோகத்தில், ஒரு ஜீவனின் வாழ்வாதாரத்திற்கு ஆகாரம் என்பது அத்யாவசியமாகிறது. அது கூட மாயை ஆகுமா?’ என்று தன் பதியிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார், ஸ்ரீ பார்வதி. 

பதியின் 'இதிலென்ன சந்தேகம்?’ என்னும் பதிலைக் கேட்டதும், 'நான் மாயை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்’ என்று கூறி, சட்டென்று மறைந்து போனார், உமை. 

அவ்வளவுதான். சக்தியின் தயை இல்லாமல், உணவு பொருட்களின் விளைச்சல், உற்பத்தி நின்றது. 

ஆகாரம் இன்றி ஜீவராசிகள் அவதிப்படுவதை,  அன்னை, கண்ணுற்றார்.  

லோகமாதாவிற்கு, தன் குழந்தைகள் பசியால்வாடுவதை காணப்பொறுக்கவில்லை. 

காசி என்னும் மகா புண்ணிய பூமியில், அட்சய திருதியை அன்று, ஸ்ரீ அன்னபூரணியாக, அவதாரம் செய்தார். 

அங்கு, தானே தன் கைப்பட அன்னம் தயார் செய்து, எல்லாருக்கும் வயிறு நிறைய ஆகாரம் அளித்தார். 

ஸ்ரீ சிவபெருமானும், கப்பரையைக் கையில் ஏந்தி, ஸ்ரீ பார்வதியிடம் பிக்ஷை பெற்றார். 

பகவானின் லீலை எல்லாமே ஒரு நன்மைக்காகத்தான் என்பதை நாம் உணரவே, நாடகம் அரங்கேற்றப்படுகிறது. எல்லாமே தேவ கைங்கர்யம். 

அட்சய திருதியை அன்று நகைக் கடைக்குப் படையெடுப்பதைத் தவிர்த்து,  ஸ்ரீ லக்ஷ்மி குடியிருக்கும், மஞ்சள், பச்சரிசி, கல் உப்பு ஆகியவைகளை வாங்க வேண்டும். 

அன்றைய தினம், தன்னால் இயன்ற தானத்தைச் செய்ய வேண்டும். 

அன்றைய தினம் சொல்ல வேண்டிய ஸ்லோகம். 

சங்க சக்ர கதாபாணே 
த்வாரகா நிலையாச்யுத 
கோவிந்த புண்டரீகாட்ஷ 
ரக்ஷமாம் சரணாகதம். 

எந்த இக்கட்டான நிலையிருந்தாலும், இந்த ஸ்லோகத்தைக் கூறினால், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்கிரகம் கிடைக்கும். 

அட்சய திருதியை அன்று,  அன்ன  தானம், வஸ்திர தானம் செய்து  அட்சயமாக வளத்தைப் பெருக்கிக் கொள்வோம். 

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com