ஸ்ரீ ஆதிசங்கரர்

தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, பூமியில், பகவான், அவ்வப்பொழுது, அவதாரம்

தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, பூமியில், பகவான், அவ்வப்பொழுது, அவதாரம் செய்து வருகிறார் என்பது நிதர்சனமான உண்மை. 

கலியுகத்தில், பகவான், ஸ்ரீ ஆதிசங்கரராக அவதாரம் செய்தார் என்றால் அது மிகையாகாது. 

ஸ்ரீ பரசுராமர் க்ஷேத்திரம் என வழங்கப்படும் கேரள  மாநிலத்தில், காலடி என்னும் புண்ணிய ஸ்தலத்தில்,  ஸ்ரீ சிவகுருவிற்கும், ஸ்ரீ ஆர்யாம்பிகைக்கும் புத்திரராக  ஆதிசங்கரர் அவதாரம் செய்தார். 

பாரதப் பூமியில் அத்வைத சிந்தாந்தத்தை நிலை நாட்டுவதற்காக  காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை மூன்று முறை வலம் வந்து இருக்கிறார் என்று அறியப்படுகிறது. 

மக்களின் அக்ஞான இருளைப் போக்கி, அவர்களை, ஞான மார்க்கத்திற்கு ஏக வைக்க 'ஷண்மத ஸ்தாபனம்'  என்கிற ஆறு வகையான வழி பாட்டு முறைகளை வகைபடுத்திக் கொடுத்தார். 

அவைகள், 'காணாபத்யம்' (கணபதி),  'சாக்தம்' (சக்தி),  'சைவம்' (சிவன்), 'வைஷ்ணவம்'  (விஷ்ணு), 'கௌமாரம்' (முருகன்),  'சௌரம்' (சூரியன்) ஆகியவை ஆகும். 

இவர் ஆறு வகையான வழி பாட்டு முறைகளை வகைபடுத்திக் கொடுத்ததால் 'ஷண்மத ஸ்தாபனாச்சாரியார்'  என்றும் அழைக்கப்படுகிறார். 

ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் அம்சமாகத் தோன்றிய, ஸ்ரீ ஆதிசங்கரர்,  ஸ்ரீ சிவபெருமானிடம் இருந்து ஐந்து சிவலிங்கங்களை ஸ்வீகரித்தார். 

அவற்றை,  திக்கிற்கு  ஒன்றாக, பத்ரிகாஸ்ரமம், புரீ,  துவாரகா,  சிருங்கேரி ஆகிய இடங்களில் ஸ்தாபித்து, காஞ்சிபுரத்தில்,  'சர்வக்ஞ'  பீடமேறி,  காஞ்சி மடத்தையும்  ஸ்தாபித்தார். 

அவர், முப்பத்து இரண்டு பிராயம் வரைதான் ஜீவித்திருந்தார். அந்த குறுகிய அவகாசத்திற்குள், அவர் அத்வைதத்திற்கு ஆற்றிய தொண்டு, அளவிடமுடியாதது. 

பிரம்ம சூத்ரம், உபநிஷத்துக்கள், விஷ்ணு சகஸ்ரநாமம்,  பகவத் கீதை போன்றவற்றிற்கு பாஷ்யம் எழுதினார்.  கனகதாரா ஸ்தோத்திரம், சௌந்தரயலஹரி, சிவானந்தலஹரி, ஆத்மபோதம், நிர்வாண ஷட்கம்,  

விவேகசூடாமணி, பஜகோவிந்தம், லலிதா பஞ்சரத்னம் போன்ற அநேக ஸ்லோகங்களை இயற்றி நமக்கு அளித்திருக்கிறார். 

மேலேகூறப்பட்டதெல்லாம் உதாரணங்கள்தாம். அவர், சுமார், நூற்று பதினான்கு அற்புத படைப்புக்களை நமக்கு அளித்திருக்கிறார். 

இந்த மாயா லோகத்தில், சம்சார சாகரத்தில் உழலும் நாம், அவர் அருளித்தந்திருக்கும், அற்புத விஷயங்களைப் புறக்கணிக்காமல், அனுதினமும் பின்பற்றி,  நல்வாழ்விற்கும், நல் அனுபூதிக்கும் வழிவகுத்துக்கொள்வோம். 

 " ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் 

   ஆலயம் கருணாலயம் 

   நமாமி பகவத் பாதம் 

   சங்கரம் லோக சங்கரம்." 

ஸ்ருதி எனப்படும் வேதங்களுக்கும், ஸ்ம்ருதி எனப்படும் புராணங்களுக்கும் ஆதாரமாக இருப்பவரும், எல்லாருக்கும், எப்பொழுதும் மங்களங்களை அருள்பவரும், கருணாமூர்த்தியுமான சங்கரரின் பாதாரவிந்தங்களைப் பணிகிறேன். 

மேற்கண்ட துதியை அன்றாடம் கூறி வருதல் நன்மையைப் பயக்கும். 

ஜெய ஜெய சங்கரா 

ஹர ஹர சங்கரா. 

- மாலதி சந்திரசேகரன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com