கணங்களின் தலைவன் கணபதி! 

எந்தக் காரியத்தை செய்யத் தொடங்கினாலும் விநாயகரை வேண்டிக் கொள்ளாமல்
கணங்களின் தலைவன் கணபதி! 

'விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான். 
விநாயகனே வேட்கை தணிவிப்பான். 
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் 
தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து’

என்று கபிலதேவநாயனார் பாடியிருக்கிறார். 

எந்தக் காரியத்தை செய்யத் தொடங்கினாலும் விநாயகரை வேண்டிக் கொள்ளாமல் ஆரம்பிக்க முடியாது. விக்னங்களைத் தீர்க்கும் விநாயகரை நினைத்துக்கொண்டு, விளையாட்டில் கூட முதல் ஆட்டத்தை, பிள்ளையார் ஆட்டம் என்று ஆடி விட்டு, கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். 

ஆவணி மாதத்தின் நான்காம் நாள் விநாயகர் சதுர்த்தி துவங்குகிறது. இந்துக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வாங்கி வணங்குவார்கள். இதனை பெரிய விழாவாக இந்தியா முழுவதும் கொண்டாடுவார்கள். இந்த விநாயகச் சதுர்த்தி தினத்தில் பலரின் இஷ்ட தெய்வமான பிள்ளையாரைப் பற்றிய சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

பிள்ளையாரின் பல வகைகளைப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு வகை பிள்ளையாருக்கும் ஒரு பெயர் கூறப்படுவதையும் அறிந்திருக்கிறோம். ஆனால் எந்த மாதிரி அமைப்புள்ள பிள்ளையார், என்ன பெயரில் போற்றப்படுகிறார் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கணேச புராணத்தில், விநாயகர் வகைகள் முப்பத்து இரண்டாகப் பிரித்துக் கூறப்பட்டுள்ளது. 

பதினாறு வகைகள்  'ஷோடச கணபதி’ வகைகள் என்றும், மீதி பதினாறு வகைகள், 'ஏக விம்சதி’என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. அவைகளைப் பார்ப்போம். 

1. பால கணபதி

குழந்தையைப் போன்ற திருமேனியை உடையவர். செங்கதிரைப் போன்ற நிறத்தினை உடையவர். வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு ஆகியவைகளைத் தாங்கிய நான்கு திருக்கரங்களை உடையவர். 

2. தருண கணபதி 

நல்ல சிவந்த திருமேனியைக் கொண்டவர். பாசம், அங்குசம், ஒடிந்த கொம்பு, கரும்புத்துண்டு, நெற்கதிர், மோதகம், விளாம்பழம், நாவற்பழம் ஆகியவைகளை அஷ்ட திருக்கரங்களில் ஏந்தியவர். 

3. பக்தி கணபதி 
வெண்மையான நிறத்தினை உடையவர். நான்கு திருக்கரங்களிலும், பாயஸக் கிண்ணம், தேங்காய், மாம்பழம், வாழைப்பழம் இவற்றைத் தாங்கியவர். 

5. சத்தி கணபதி 
அந்தி வானம் போன்ற நிறத்தை உடையவர், பச்சை நிறத்திலான தேவியை, இடுப்பில் ஒரு கை கொடுத்து தழுவுவது போல காட்சி கொடுக்கிறார். அபயஹஸ்தம், பாசம், பூமாலையைத் தாங்கியவர். 

6. துவிஜ கணபதி 
வெண்மையான நிறத்தினைக் கொண்ட இவருக்கு, நான்கு முகங்கள் உண்டு. புத்தகம், அட்சமாலை, கமண்டலம், தண்டம் இவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தியவர். 
 
7. சித்தி கணபதி 
பொன் நிறமும், பசுமை நிறமும் கலந்த நிறமுடைய இவர், தன் நான்கு திருக்கரங்களில், பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை, மாம்பழம் ஆகியவற்றுடன் துதிக்கையில் மோதகத்தையும் தாங்கியவர்.

8. உச்சிஷ்ட கணபதி 
நீல நிறத்தில் காட்சியளிக்கும் இவர், ஆறு திருக்கரங்களில், இரண்டில், நீலோத்பவ மலர்களும், மாதுளம் பழம், நெற்கதிர், அட்சமாலை, வீணை ஆகியவற்றை ஏந்தியவர். 

இன்னொரு வகையில், காம மோகிதராக, பெண்ணின் மேனியில் துதிக்கையை வைத்தவராகக் காணப்படுகிறார். 

9.  விக்ன கணபதி 
ஸ்வர்ண நிறத்தைக்கொண்ட இவர், பத்து திருக்கரங்களில், சங்கு, சக்கரம், கோடரி, ஒடிந்த கொம்பு, கரும்பு வில், பாணம், புஷ்ப பாணம்,  பூங்கொத்து, பாசம், மாலை ஆகியவற்றோடு காணப்படுகிறார். 

10. ஷிப்ர கணபதி 
செந்நிறத்தை உடையவர். ஒடிந்த தந்தம், கற்பகக் கொடி, பாசம், அங்குசம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும், ரத்ன கும்பத்தை துதிக்கையிலும் கொண்டவர். 

11. ஹேரம்ப கணபதி 
இவர் ஐந்து முகங்களை உடையவர். பத்து திருக்கரங்களில், இரண்டு அபய, வரத முத்திரைகளைத் தாங்குவதோடு, இதர கரங்களில், பாசம், பரசு, சம்மட்டி, தந்தம், மாலை, அட்சமாலை, மோதகம், பழம் இவர்களைத் தாக்கியுள்ளார். 

12. லட்சுமி கணபதி 
வெண்மையான நிறத்தினை உடையவர். நீல நிறத்தில் தாமரைப்பூவை ஏந்திய இரு தேவிமாருடன் காணப்படுபவர். அஷ்ட திருக்கரங்களிலும், கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்கம், வரதம், கிளி மாதுளம் பழம் ஆகியவைகளோடு திகழ்பவர். 

13. மகா கணபதி 
செம்மையான நிறத்தினையும், பத்து திருக்கரங்களையும்,  மூன்று கண்களையும்,  முடியில்  பிறைச்சந்திரனும்    உடையவர். தாமரை மலரை ஏந்திய தேவியை இடது துடையில் இருத்தி, ஒரு கையால் அணைத்தும், இதர கரங்களில், கதை, கரும்பு, வில், சக்கரம், பாசம், தந்தம், ரத்ன கலசம், நெற்கதிர், நீலோத்பலம், மாதுளம் பழம் ஆகியவற்றைத் தாங்கியவர். 

14. விஜய கணபதி 
பெருச்சாளி வாகனத்தில் ஏறியிருப்பவராகக் காணப்படும் இவர், செந்நிறத்தவர். பாசம், அங்குசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் இவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தியவர். 

15. நிருத்த கணபதி 
பொன் போன்ற மேனியை உடையவர். ஆறு திருக்கரங்களை உடையவர். மோதிரங்கள் அணிந்த கரங்களில்,  பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் ஆகியவற்றைத் தாங்கி, கற்பக விருட்சத்தின் கீழ் எழுந்தருளி இருப்பவர். இவரை கூத்தாடும் பிள்ளையார் என்றும் கூறுவதுண்டு. 

16. ஊர்த்துவ கணபதி 
தங்க நிறத்தில் காணப்படும் இவருக்கு ஆறு திருக்கரங்கள் உண்டு. தாமரை மலரை தாங்கிய கரத்தால், பச்சை நிற மேனியளான   தேவியை அணைத்தவண்ணம், தந்தம், பாணம், தாமரை, கரும்பு வில், நீல புஷ்பம் ஆகியவற்றை ஏனைய கரங்களில் கொண்டவர். 

17. ஏகாட்சர கணபதி 
செந்நிறத்தை உடையவரும், செந்நிற ஆடையை தரித்தவரும், செம்மலர் மாலையை  அணிந்தவருமான இவர், பத்மாசனத்தில் காணப்படுகிறார். பெருச்சாளி வாகனத்தில் ஏறிய இவருக்கு   மூன்று கண்களும்,  முடியில் பிறைச்சந்திரனும் உண்டு. 

18. வர கணபதி 
சிவந்த நிறத்தை உடைய இவர், நான்கு திருக்கரங்களில், பாசம், அங்குசம், அமுதக்கிண்ணம் மற்றும் கொடியைத் தாங்கியவராகக் காட்சி தருகிறார். பிறை முடியராக இருக்கும் இவருக்கு மூன்று நேத்திரங்களுண்டு. 

19. திரயாக்ஷர கணபதி 
பொன்னிற மேனியனான இவர், பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும், மோதகத்தை தும்பிக்கையிலும் தாங்கியிருக்கிறார். 

20. க்ஷிப்ரபிரசாத கணபதி 
பேழை வயிற்றினைக் கொண்டு, ஆபரணங்கள் சூடி ஆறு திருக்கரங்களோடு காணப்படுகிறார். பாசம், அங்குசம், தாமரை, தர்ப்பை,  ஆகியவற்றையும் ஒரு கரம் ஹஸ்த முத்திரையையும், துதிக்கையில் மாதுளம் பழத்தையும் கொண்டவர். 

21.ஹரித்ரா கணபதி 
மஞ்சள் நிறம் கொண்ட இவர், பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை, நான்கு திருக்கரங்களில் ஏந்தியவராக விளங்குகிறார். 

22. ஏகதந்தி கணபதி 
நீல மேனியரான இவருக்கு, பேழை வயிறு காணப்படுகிறது. கோடரி, அட்சமாலை, தந்தம், லட்டு இவைகளை, நான்கு திருக்கரங்களில் தாங்கியவராகக் காணப்படுகிறார். 

23. சிருஷ்டி கணபதி 
சிவந்த மேனியை உடைய இவர், நான்கு திருக்கரங்களில், பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைத் தாங்கியவர். பெருச்சாளி வாகனத்தில் ஏறியவராகக் காட்சி கொடுக்கிறார். 

24. உத்தண்ட கணபதி 
பத்து திருக்கரங்களில், பாசம், நீல புஷ்பம், தாமரை, தந்தம், கரும்பு வில், கதை, ரத்ன கலசம், நெற்கதிர், மாதுளம் பழம், மாலை ஆகியவைகளை ஏந்தியவர். இவரின் இடது துடையில், பச்சை நிற மேனியளான  தேவியை ஏற்றிருப்பவர். 

25. ரணமோசன கணபதி 
வெண்பளிங்கு போன்ற மேனியை உடையவராய், செந்நிறப் பட்டாடை உடுத்தியவராய் தோற்றமளிக்கும் இவர், பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தாங்கியவராகக் காணப்படுகிறார். 

26. துண்டி கணபதி 
நான்கு திருக்கரங்களில், அட்சமாலை, கோடரி, ரத்ன கலசம், ஒடிந்த தந்தம் இவைகளோடு அருள் பாலிக்கிறார். காசி க்ஷேத்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர்.  

27. துவிமுக கணபதி 
இவருக்கு இரு முகங்கள் உண்டு. பசுமையான நீலநிறத்தவர். செம்பட்டாடை உடுத்தியவராய், தந்தம், பாசம், அங்குசம், ரத்ன பாத்திரத்தை, நான்கு திருக்கரங்களில் ஏந்தியவர். 

28. மும்முக கணபதி 
பொற்றாமரை ஆசனத்தில் மூன்று முகங்களோடு காணப்படுபவர். சிவந்த மேனியை உடையவர். பாசம், அங்குசம், அட்சமாலை, அமுத கலசம்,  அபய, ஹஸ்த முத்திரைகளைத் தாங்கியவராகக் காட்சி தருகிறார். 

29. சிங்க கணபதி 
வெண்மையான நிறத்தினை உடையவர். சிங்க வாகனத்தில் எழுந்தருளி இருப்பவர்.இரண்டு        திருக்கரங்களில் வரதம், அபயம் முத்திரைகளையும், ஆறு திருக்கரங்களில், வீணை, கற்பகக் கொடி, சிங்கம், தாமரை, பூங்கொத்து, ரத்ன கலசத்தைத் தாங்கியவர். 

30. யோக கணபதி 
இளஞ்சூரியன் நிறத்தில், இந்திரநீல நிற ஆடையை தரித்தவரான இவர், பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு ஆகியவைகளைத் தாங்கி, யோக நிலையில் இருப்பவராகத் தோற்றமளிக்கிறார். 

31. துர்க்கா கணபதி 
பசும் பொன் நிறத்தவரான இவருக்கு எட்டு திருக்கரங்கள் உண்டு. அவைகளில், அங்குசம், பாசம், பாணம், அட்சமாலை, தந்தம், வில், கொடி, நாவற்பழம் ஆகியவற்றைத் தாங்கிய பெரிய உருவத்துடன் காணப்படுபவர். 

32. சங்கட ஹர கணபதி 
இளஞ்சூரியன் நிறத்தில், இடப்பாகத் துடையில், நீல நிற பூவை ஏந்திய தேவியை ஏந்தியவர். நீல நிற ஆடை அணிந்து, செந்தாமரைப் பீடத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிப்பவர். வரத முத்திரையுடன், அங்குசம், பாசம், பாயசக் கிண்ணத்தினைத் தாங்கியவர். 

இவர்களைத் தவிர விநாயகருக்கு அநேக திருநாமங்களுண்டு. 

விநாயகரின் வாகனமாக இருப்பது எலி (மூஞ்சூர் வாகனம்) என்பது எல்லாருக்கும் தெரியும். சரி. ஏன் விநாயகர், எலியை வாகனமாகத் தேர்ந்தெடுத்தார்? 

காரணம் இல்லாமல் காரியம் இல்லை அல்லவா? 

தேவேந்திரனின் சபை என்றால் சொல்ல வேண்டுமா? எப்பொழுதும் போல் ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் தான் அன்றைய தினமும் இந்திர சபை காணப்பட்டது.

ஊர்வசியும்,  ரம்பையும் எல்லோர் கவனத்தையும்  தங்களின் பக்கம் திசை திருப்பும் வகையில் நடனம் புரிந்துகொண்டு இருந்தார்கள்.

கந்தர்வனான, 'கிரௌஞ்சன்’ என்பவன் தன்னுடைய நிலைமையை மறந்து, அவர்களின் தாளத்திற்கேற்ப தானும் நடனம் ஆடத்துவங்கினான். அவன் ஆடிக்கொண்டிருந்த தருணத்தில், முனிவரான வாமதேவர், அந்த சபைக்குள் நுழைந்தார். அனைவரும் அவரை  எதிர்கொள்ள  எத்தனித்த சமயத்தில், க்ரௌஞ்சனானவன், தன் நிலை தடுமாறி, முனிவரின் கால் விரல்களை வேகமாக மிதித்து விட்டான்.

முனிவருக்கு அசாத்திய கோபம் வந்து விட்டது. தன்னுடைய வருகைக்கு மரியாதை கொடுக்காமல் இருந்தது மட்டும் அல்லாது, தன்னை கிரௌஞ்சன் அவமானப்படுத்தி விட்டதாக எண்ணினார்.

'பூலோகத்தில் நீ எலியாகப் பிறவி எடுக்க வேண்டும். இனி நீ யாருடைய காலையும் மிதிக்காமல் இருக்க வேண்டுமானால், உன் காலையே தூக்க முடியாத வண்ணம் ஒரு பாரம் உன் மீது எப்பொழுதும்  இருக்க வேண்டும்’ என்று சாபம் கொடுத்தார். அடுத்த கணமே கந்தர்வன், எலியாக மாறினான். நிலை கொள்ளாமல் அங்கும், இங்கும் ஓடினான். தேவரிஷி நாரதரை அணுகினான். அவர், ஸ்ரீ  விநாயகரை வழிபட்டால் உபாயம் கிடைக்கும் என்று கூறினார்,

விண்ணிற்கும், மண்ணிற்கும் நாதனாகத் திகழும் விநாயகர், அவனுக்கு உதவாமலா இருப்பார்? க்ரௌஞ்சன், அந்த விநாடி முதல் முழுமுதற் கடவுளை அல்லும் பகலும் துதிக்கலானான். அவனது சிந்தனை வேறு எதிலுமே செல்லவில்லை. கந்தர்வனின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த சாமரகர்ணன், 'முனிவரின் கூற்றுப் படியே ஒரு மிகப் பெரிய  பாரத்தை நீ  எப்பொழுதுமே சுமக்கத்தான்  போகிறாய். ஆம். நான் உன்னை, என்னுடைய வாகனமாக ஸ்வீகரிக்கப் போகிறேன்’ என்று கூறி ஆசி வழங்கினார்.

அப்பொழுது முதல் மூஷிகத்தினை வாகனமாகக் கொண்டார்.

உண்மையான பக்தனுக்கு உத்தமமான உயர்வைக் கொடுப்பவர், மூஷிக வாகனர்.என்பது இதிலிருந்து புரிகிறது அல்லவா? கணங்களின் தலைவரான கணபதியை, ஆவணி மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தியன்று வழிபட்டு, வாழ்வில் எல்லா சுகங்களையும்  விக்னமின்றி பெறுவோம் .

விநாயகர் காயத்ரி :
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com