மார்கழியில் ஒரு மலைப்பயணம்! வெள்ளியங்கிரி!

வெள்ளியங்கிரி ஆண்டவரை வணங்கி இந்த கட்டுரையை தொடங்குகிறேன்
மார்கழியில் ஒரு மலைப்பயணம்! வெள்ளியங்கிரி!

கொங்கு நாட்டின் தலைநகரமான கோயம்பத்தூர் தொழில் நகரம் என்பதனை தாண்டி தமிழகத்தின் முக்கியமான திருக்கோயில்கள் அமைந்திருக்கும் நகரமாகவும் இருக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோயில், அவினாசியில் உள்ள அவிநாசியப்பர் திருக்கோயில், முருகனின் ஏழாம் படைவீடு என்று போற்றப்படும் மருதமலை முருகன் கோயில், மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோயில், கோனியம்மன் கோயில் போன்ற பழமையான ஆன்மீகத் தலங்கள் கோவையில் அமைந்திருக்கின்றன. இவ்வரிசையில் கோவையில் தமிழகத்தின் மிக முக்கியமான சைவ திருத்தளங்களில் ஒன்றான வெள்ளியங்கிரி மலை அமைந்திருக்கிறது. சில ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் புனித தென்கைலாய வெள்ளியங்கிரி மலை பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தாலும், இப்பொது தான் அந்த அனுபவத்தை கட்டுரையாக எழுத இறைவனால் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கடும் பனி.  டிசம்பர் இருபத்தைந்து ஞாயிறு அன்று காலை ஐந்தரை மணிக்கு கோவையில் இருந்து நாங்கள் ஒரு சிறு குழுவாகக் கிளம்பினோம். செல்லும் வழியில் எதிர்ப்பட்ட ஆலயங்களில் மார்கழி மாத காலை பூஜைகள் நடந்து கொண்டிருக்க, வழியில் பல இடங்களில் பஜனை ஊர்வலங்கள் சென்றுகொண்டிருக்க அதை பார்க்கும் போது ‘மாதங்களில் நான் மார்கழி’ என்ற கண்ணனின் வார்த்தை நினைவில் வந்தது.  ‘ஓம் சிவாய நம’ என்ற பஞ்சாச்சர மந்திரத்தை மனத்தால் உச்சரித்து வெள்ளியங்கிரி மலையை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.

கோவையில் இருந்து பூண்டி நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. சிறுவாணி செல்லும் வழியில் வலது புறம் இருட்டுப்பள்ளம் என்கிற ஊருக்கு ரோடு பிரிகிறது. செம்மேடு, ஈஷா யோக மையம் தாண்டி பூண்டி மலை அடிவாரம் வரவேற்கிறது. கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளியங்கிரி. சிவபெருமான் குடிகொண்டிருக்கும் கைலாயம் மூன்று. வடகையிலை என்பது வட துருவத்தில் கடலில் அமைந்துள்ளது. மத்திய கயிலை என்பது இமயமலையில் உள்ளது. தென்கையிலை என்பது தமிழகத்தில் தென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரியில் அமைந்துள்ளது. இதில் வட கயிலைக்கு செல்லவே முடியாது என்பர். மத்திய கயிலை அனைத்து மக்களும் சென்று தரிசனம் செய்வது என்பது சிரமமானது. இந்த குறையை போக்கும் வகையில்தான் வெள்ளியங்கிரி கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று ஈசனை தரிசித்தால் இமயமலையில் உள்ள கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கிறது. ஒரு முறை வெள்ளியங்கிரி மலை ஏறிவந்தால் ஆண்டு முழுவதும் உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது. மலை முழுவதும் மூலிகைகள் இருப்பதால் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை கிடைக்கிறது.

இந்த மலைபயணத்தில் நாங்கள் மொத்தம் நாற்பது பேர் கலந்து கொண்டோம் மூன்று பைக்கும் இரண்டு கார் மற்றும் ஒரு வேனில் சென்றோம், அனைவரும் காலை 6.45 க்கு மலை அடிவாரத்தை அடைந்தோம். முன்னர் அறிவித்தபடி அனைவரும் மதிய உணவு, குடிநீர், பழங்கள், குளிர் காலம் என்பதால் ஸ்வெட்டர், முதலுதவிப் பெட்டி, டார்ச் உடன் தயாராக இருந்தார்கள், மலை பயணத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் மற்றும் மொத்த நபர்கள் எண்ணிக்கை சரிபார்த்து விட்டு  அனைவரும் அடிவாரக் கோயிலை நோக்கிச் சென்றோம். இங்கு பூண்டி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் நாலு அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் திருவுருவச் சிலை மற்றும் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். கோவிலுக்கு முன்புறமாக முருக நாயனார் நந்தவனம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.

கோவிலைச் சுற்றி பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் சத்திரங்கள் உள்ளன. கோயிலின் வடக்குப் பகுதியில் ஐந்து விநாயகர் சிலைகள் அமைந்த பஞ்ச விநாயக மண்டபம் உள்ளது. அடுத்து கல்லினால் ஆன ராசித் தூண். வேறு எந்த கோயிலிலும் காணப்படாத ஒன்று. விரிந்த தாமரை மலரின் நடுவில் உள்ள தண்டில் ஒன்பது தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கி உள்ளனர். மேல் பகுதியில் ஒரு குடையும் அதன்மேல் ஓர் அழகிய அன்னப்பட்சியின் திருவுருவத்தை அமைத்துள்ளனர். விரிந்த தாமரை மலரின் கீழ்பகுதியில் பன்னிரண்டு ராசிகளை சிற்பமாக நேர்த்தியாக செதுக்கி உள்ளனர். அனைவரையும் வழிபட்டு மலையேற அனுமதி வாங்கினோம்.

கோவிலின் பின்புறம் வடக்கு பகுதியில் மலை மீது செல்வதற்கான படிகள் உள்ளன. வெள்ளிங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அன்று. மலையின் மேல் செருப்பு அணியாமல் தான் ஏறவேண்டும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதயம் பலவீனமானவர்கள், குறைந்த, அதிக ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மற்றும் நாற்பது வயதுக்கும் மேலானவர்கள் ஆகியோர் மலை ஏறுவது உயிருக்கு மிக ஆபத்தானதாகும். பத்து வயதிற்கு மேலும் நாற்பது வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் மலை ஏறக்கூடாது.  ஆனால் நம்முடன் மன உறுதியும், தன்னம்பிக்கையும் கொண்ட சுரேந்திரன்-51, லோகநாதன்-47 இருவரும் கலந்து கொண்டனர். மற்றும் எங்களுடன் சிறுமி ரித்திகா, சிறுவர்கள் நவீன், பிரசன்னா ஆகியோரும் பயணித்தார்கள். சென்னையில் இருந்து பிரகாஷ் மற்றும் அவர் நண்பர்கள் மூன்று பேரும் எங்களுடன் மலை ஏறினார்கள்.,

மலைப்பாதை படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் நாகத்துடன் கூடிய சிவலிங்கம், நந்தியம் பெருமான் மற்றும் மனோன்மணி அம்மனின் திருவுருவ சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். மலை ஏறும் முன்பு ஈசன், அன்னை மற்றும் நாகரை வணங்கி அவர்களின் அருட்துணையோடு பத்திரமாக சென்று திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதலோடு மலை பயணத்தைத் தொடங்கினோம். மலை அடிவாரத்தில் இருக்கும் சாமியார்கள் பலர் இல்வாழ்க்கையை ஒதுக்கி, துறவறம் பூண்டவர்கள். அவர்களில் சிலர் நிறையப் படித்தவர்கள், நல்ல வேலைகளில் இருந்தவர்கள். அங்குள்ள சாமியார்கள் யாரிடமும் கையேந்த மாட்டார்கள். அவர்கள் கூட்டமாக அமர்ந்து தேவாரம், திருமுறைகள் போன்ற பாசுரங்களைப் பாடிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் முன்னர் ஒரு திருவோடும், கற்பூரத் தட்டும் இருக்கும். பக்தர்கள் தாங்கள் விரும்பும் காணிக்கையை இட்டு நமஸ்காராம் செய்தால் ஆசிர்வாதம் செய்வார்கள். காணிக்கை இடாவிட்டாலும் அவர்கள் ஒரே நிலையில் தான் இருப்பார்கள். குடும்பம் மற்றும் சொந்த பந்தங்களுடன் வருவோர் அங்கு சமைத்து இவர்களுக்கு அன்னதானம் இடுவார்கள். இவர்களும் அவர்களுடன் பூஜைகள் செய்து அவர்களை ஆசிர்வாதம் செய்வார்கள். அவர்கள் மலைப் பயணத்தின் போது கடைப்பிடிக்கும் சில அறிவுரைகள் கூறுவார்கள். மலையில் பனி, மழை,குளிர் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் போன்ற பயனனுள்ள தகவல்கள் மற்றும் தங்கும் இடங்களைப் பற்றியும் கூறுவார்கள். ஆனால் நாங்கள் அதிகாலையில் புறப்பட்டதால் அவர்களை தரிசனம் செய்ய முடியவில்லை..

மலையேறும் வேகத்திற்கு தகுந்தவாறு நாங்கள் நான்கு குழுக்களாக பிரிந்தோம் கார்த்திகேயன் முதல் குழுவை வழிநடத்திச் சென்றார், தொடர்ந்தது மோகனசுந்தரம், கிருஷ்ணகுமார், தனசேகரன், ஆகியோர் மற்ற குழுக்களை வழிநடத்தினர். மலை ஏறும் போது பனிப்புயல், மழை ஏற்பட்டால் தொடர்ந்து மலை ஏறாமல் உடனே அடிவாரம் திரும்ப வேண்டும் என்று குழுவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மலை ஏறும்போதும் இறங்கும் போதும் நமக்கு உயிர்த்துணையாக விளங்குவது ஊன்று கோலாய் பயன்படும் மூங்கில் தடி ஆகும். இது சீசன் அல்லாத தினம் என்பதால் இத்தடிகள்  விற்பனைக்கு இல்லை. நாங்கள் மலை ஏறும் போது கோபால்சாமி மூங்கில்தடி தேவைப்படும் நண்பர்களுக்கு அவர் கொண்டு வந்த கத்தியின் உதவியால் மூங்கில் தடியை வேட்டிக்கொடுத்தார், இத்தடி வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று வந்ததற்கான அடையாள சின்னமாக விளங்குவதுடன் அதைப் பத்திரமாக பாதுகாத்து வைக்கின்றனர்.

குரல் மற்றும் தொண்டை சரியில்லாததால் சுரேஷ் அவர்களை அதிகமாக நீர்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும் என கூறினோம். இவர் கடும் மன உறுதி உடன் இந்த தடைகளை எல்லாம் தவிர்த்து வெள்ளிங்கிரி ஆண்டவனை தரிசிக்க வேண்டும் என்று வைராக்கியமுடன் மலை ஏறத்தொடங்கினார். முதல் மலையில் அமைந்துள்ள பாதை முழுவதும் சீரான படிகள் என்றாலும் படியின் உயரம் அரை அடி முதல் ஒரு அடி வரை செங்குத்தானவை. இம்மலையில் மூங்கில், தேக்கு வேங்கை மற்றும் மூலிகைச் செடிகள், மரங்கள் அதிக அளவில் உள்ளன. மலை ஏறத் தொடங்கும் போது லேசாக வியர்க்கத் தொடங்கி பாதி மலைக்கு மேல் பயணிக்கும் போது அந்த காலை நேரத்திலும் வியர்வை கொட்டும். மலை ஏறும் போது மிகக் கடினமான சூழலில் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைத் சொல்லிக் கொண்டு சென்றால் எந்த வித சலிப்பும் தெரிவதில்லை. மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்றும், சோலைகளின் நடுவே பயணிக்கும் ரம்மியமான சூழல், பறவை மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலி என உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படும் இனிய அனுபவத்தை உணரத்தான் முடியுமே தவிர வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மூலிகை தாவரங்களின் மணம், பூக்களின் நறுமண வாசனை, மாசற்ற தூய காற்றை சுவாசிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.

நாங்கள் மலை ஏறும் போது ஒரு பத்து பேர் மட்டும் தான் மலையில் இருந்து இறங்கிக்  கொண்டு இருந்தார்கள் அவர்கள் சனிக்கிழமை ஏறியவர்களாம் விசாரித்த போது தெரிந்தது அவர்களிடம் கேட்ட போது இரவு நேரத்தில் குளிர் அதிகமாக இருந்தது என்றார்கள். நாங்கள் மலை ஏறும் போது பக்தர்கள் எங்களுடன் ஒருசிலர் மட்டுமே ஏறினார்கள். ஏனெனில் இம்மலைக்கு வருடத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி 15ம் தேதி வரை மட்டும் தான் பக்தர்கள் வருகின்றனர். இந்த மாதங்களில் நிலவும் சீதோஷ்ண நிலை உகந்ததாக இருக்கின்றது. குறிப்பாக சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது சிறப்பாகும். பொதுவாக இரவு நேரத்தில் மலை ஏறி தரிசனம் செய்வது நல்லது, வெயில் கடுமை அதிகரிக்கும் முன் அடிவாரத்தை அடைவது நல்லது. கோடை காலத்தில் நீர்நிலைகளை நாடி பெரும்பாலான வன விலங்குகள் கீழ் பகுதிக்கும் சென்றுவிடும். அச்சமயத்தில் பக்தர்கள் பயணிப்பதால் வன விலங்குகளின் தொந்தரவு ஏதும் இருக்காது. மழை காலங்களில் மலை ஏறுவது பாதுகாப்பானது அல்ல  சறுக்கி, வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. அதனால் தான் நாங்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் மலை ஏறினோம்.

பல புதுமையான அனுபவங்களுடன் முதல் மலையை கடந்தோம், இம் மலைபயணத்தில் முதல் மலையும், ஏழாவது மலையும்தான் ஏறுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். முதல் மலை முடிந்து இரண்டாவது மலை தொடக்கத்தில் வெள்ளை விநாயகர் சன்னதி உள்ளது. இங்கு இருக்கும் விநாயகர் கோவில் வெள்ளை வர்ணம் உடையதாலும், பிள்ளையார் முழுக்க விபூதி பூசப்பட்டு, வெள்ளையாக காட்சி தருவதால் வெள்ளை விநாயகர் கோவில் என்று அழைக்கப் படுகின்றது. இந்தக் கோவிலை அடைவதுதான் நம் பயணத்தில் மிகவும் கடினமான பகுதி. நாங்கள் விநாயகர் கோவிலை அடைந்தோம் அங்குள்ள வெள்ளைவிநாயகருக்கு நெய்தீபம் இட்டு வணங்கினோம்.

சிறிது நேரம் ஓய்விற்குப் பின் இரண்டாம் மலை பயணத்தை ஆரம்பித்தோம். இந்த மலையில் ஒருசில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. அடர்ந்த மரங்கள் நிறைந்திருக்கும் பகுதி,  இம்மலையில் மிளகு திப்பிலி மூங்கில் வேங்கை போன்ற தாவர மர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சித்தர் குகை மற்றும் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.

நாங்கள் பாம்பாட்டி சித்தர் குகையை அடைந்தோம், அங்கு குகையினுல் இருந்த சிவலிங்கத்தை வணங்கிய பின்பு சுனையில் வரும் மூலிகை நீரை நாங்கள் கொண்டு வந்த பாட்டிலில் பிடித்து குடித்தோம் அப்போது வலுவிழந்த நிலையில் உள்ள எங்கள் உடல் வலிமை பெற்றது.. சுனையில் தண்ணீர் வரும் பாறையின் அருகில் காதை வைத்துக் கேட்டால் பாம்பு சீறுவதைப் போல உஷ், உஷ் என்ற சத்தம் கேக்கும். ஆதலால் இதுக்கு பாம்பாட்டி சுனை என்ற பெயர் வந்ததாக கூறுகிறார்கள். செல்லும் வழியில் இந்த இயற்கையான ஊற்றுக்கள் மூலம் வரும் நீர் மூங்கில் தப்பைகள் கொண்டு வடிந்து கொண்டிருக்கும். அந்த நீர் தேன் அமிர்தம் போல இருக்கும். அருவிகள், பறவைகளின் ஒலிகள், வனச்சூழல் நம்முள் இனம்புரியாத மாற்றத்தை ஏற்படுத்தும். செல்லச் செல்ல வனங்களின் அழகு, குரங்குகளின் விளையாட்டு மனதை கொள்ளை கொள்ளும். மலை ஏறும் போது உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையுடன் கலந்து வெளியேறுகிறது. சுவாசக் குழாயும், சுவாசப் பையும், மார்பு எலும்புகள் விரிந்து சுருங்குவதால் உடற்பிணி நீங்குகிறது.

ச. பாலகிருஷ்ணன், கோவை

(இரண்டாம் பகுதி அடுத்த வாரம் பதிவேற்றப்படும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com